-ஜோதிர்லதா கிரிஜா
நன்றி: திண்ணை.காம். (http://puthu.thinnai.com/?p=25769 – நீங்காத நினைவுகள் – 51 முரசொலி அடியார்)
10-11-1980 நாளிட்ட நீரோட்டம் எனும் நாளிதழில் அதன் ஆசிரியராக இருந்த அமரர் முரசொலி அடியார் அவர்களின் கட்டுரை ஒன்றைப் பல நாள் முன் வாசிக்க வாய்த்தது. நீரோட்டம் நாளிதழ் வாங்கும் வழக்கம் இல்லாத போதிலும் அது தற்செயலாக என் கைக்குக் கிடைத்தது. நான் தேடிப் போகாமலே, சில அரிய விஷயங்கள் இது போன்று தற்செயலாக எனக்குக் கிடைப்பதுண்டு. அதன் மூன்றாம் பக்கத்தில் வெளியாகியிருந்த அவரது கட்டுரை அடக்கியிருந்த பிரமிக்கத்தக்க செய்தியை இன்றளவும் மறக்கவே முடியவில்லை.
பத்திரப்படுத்தியிருந்த அதை இன்றுதான் தேடி எடுக்க முடிந்தது. அதன் சில பகுதிகளை அப்படியே இதில் தருகிறேன்.
அவரது கட்டுரை:
“ எங்கோ அரேபிய நாட்டில் நபிகள் நாயகம் தோன்றியிருப்பினும், அவரது வருகை பற்றி இந்து மத வேதங்களில் முன்னறிக்கை செய்யப்பட்டிருக்கிறது என்று பெரியவர் ஒருவர் கூறிய போது அதை ஆராய வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது.
குறிப்புகளைப் பார்க்கிற போது பெருமளவு உண்மை இருப்பதைக் கண்டு நானே வியப்புற்றேன். மகரிஷி வியாச முனிவரால் எழுதப் பட்ட பதினெட்டுப் புராணங்களில் ஒன்றான பவிஷ்ய புராணத்தில் கீழ்க்காணும் சூத்திரம் வருகிறது:
“ஏதஸ் மின்னந்தரே மிலேச்ச
ஆச்சார்யண ஸமன்வித
மஹாமத் இதிக்கியாத
சிஷ்ய சாகா ஸமன்வித
நிரூபஷ்சேவ மஹாதேவ
மருஸ்தல நிவாஸினம் “
(பவிஷ்ய புராணம் – பாகம் 3, சுலோகம் 3, சூத்திரம் 5.8)
ஒரு மிலேச்ச – அதாவது அந்நிய – நாட்டிலே ஒரு ஆச்சாரியர் தன் சீடர்களுடன் வருவார். அவரது பெயர் மஹாமத். அவர் பாலைவனத்தைச் சேர்ந்தவராக இருப்பார்.
மஹாமத் – முஹம்மது
மிக மிகத் தெளிவாகப் பெயரும் இடமும் குறிக்கப்பட்டிருப்பது வியப்பிலும் வியப்பாக இருக்கிறது.
அந்த ஆச்சாரியரின் இனம் அவர்களுடைய தோற்றம், பற்றியும் அதே புராணம் கூறுகிறது.
“ லிங்க சேதி சிகாஹீன
சுமச்சுறுதாரி ஸதாஷக
உச்சலாபி ஸர்வபக்ஷி
பனிஷ்யகி ஆனோமம
முசலை நைஸ்மஸ்கார
(பாகம் 3, சுலோகம் 25, சூத்திரம் 3)
“அவர்கள் – லிங்க சேதி – அதாவது, சுன்னத்து -செய்துகொண்டிருப்பார்கள். தலையில் குடுமி இருக்காது. தாடி வைத்திருப்பார்கள். சப்தம் போட்டு அழைப்பார்கள். முசலை என்று அறியப்படுவார்கள்.” என்று அந்தப் புராணம் கூறுகிறது.
மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். மிகத் தெளிவான ஒரு காட்சி புலப்படும்!
லிங்க சேதி – சுன்னத் – என்பது இந்து மதத்தில் இல்லாதது. குடுமி என்பது இனந்து மதத்துக்குத் தேவையானது. ஆனால், சிகாஹீனம் – மயிரைக் களைவது – என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இதை விட வியப்புத் தருவது முசலை என்ற சொல்.
முஸ்லிம் – முசல்மான் என்பவற்றோடு “முஸலை” என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள்!
இம்மட்டோ? நபிகள் நாயகத்தின் வாழ்க்கையைப் பற்றியது கூறப்பட்டதோ என நினைக்கும் வண்ணம் வேதத்திலேயே கூறப்பட்டிருக்கிறது.
“ இதம் ஜன இபக்ருத
நாரா சம் ஸஸத விஷியதே
ஷஷ்பீம் சஹஸ்ர நவனீதம்
சசௌரம் அருவ மேஷு தன்மஹே
உஷடி ருயங்லம் பிறவாஹிணோ
வநூ மந்தோஹிர் தசா
வத மர ரத் தஸாயனீ
ஜீ ஹிவுதே திவ
ஈஷ்மான உபஸ்மிறுத
ஏவந் தர்ஷயே மாமஹே
சதம் நிஷ்காந்த சஸரஜ
ஸ்ரீ ணி சதான்னியவதாம்
ஸ்ஹஸ்ரா தசகோ நாம்
(அதர்வ வேதம், 20 ஆம் காண்டம்)
“ ஏ, பக்தர்களே! இதைக் கவுரவத்துடன் கேட்பீர்களாக! புகழக் கூடிய, புகழ் பெறக்கூடிய அந்த மா மஹரிஷி 60,090 மக்கள் மத்தியிலே தோன்றுவார். (முகம்மது என்றாலே, புகழப்பட்டவர், புகழுக்குரியவர் என்று பொருள். அவர் தோன்றிய போது, மக்கா மாநகரின் மக்கள் தொகை 60,000!)
அவர் 20 ஆண்-பெண் ஒட்டகங்களில் சவாரி செய்வார். அவரது மகத்துவம் சுவர்க்க லோகம் வரை செல்லும். அந்த மகரிஷிக்கு 100 தங்க நாணயங்கள் இருக்கும்,-
(ஒட்டகத்தில் தோன்றும் மகரிஷியை நாம் இந்தியாவில் காணவில்லை. ஆகவே இது நபிகளைப் பற்றிக் குறிப்பதே ஆகும்.)
10 முத்து மாலைகளும் 100 தங்க நாணயங்களும் அரேபியாவைத் துறந்து அபிசீனியா சென்ற 100 நபி தோழர்களைக் கூறும்.
10 முத்து மாலைகளும், 300 அரபிக் குதிரைகளும், 10 ஆயிரம் பசுமாடுகளும் இருக்கும்.
(நபிகள் நாயகத்தால் சொர்க்கத்தின் வாரிசுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட 10 பக்தர்களைக் குறிக்கும் சொல்தான் 10 முத்து மாலை. நபிப் பெருமானாருடன் முதற் போர்க்களத்தில் இருந்த 313 பேர் குதிரைகளாகவும் மக்கா வரை சென்ற போது அவருடன் இருந்த 10 ஆயிரம் பேர் 10 ஆயிரம் பசுமாடுகள் எனும் செல்வங்களாகச் சித்திரிக்கப்பட்டதாகவும் மவுல்வி முகம்மது உமர் கூறுவார்.)
நபிகள் நாயகத்தை உலகத்தின் அருட்கொடை என்றே அல்குர் ஆன் ஷரீபு கூறும்.
ரிக்வேதத்தில் உலக அருட்கொடையாக 10 ஆயிரம் பேருடன் தோன்றிப் புகழ் பெறுவார் என்று கூறப்பட்டிருக்கிறது.
“அன ஸவந்தா ஸக்பதிர் மாமஹே
மேகாவா சேதிஷ்ஷடா
அசுரோ பகோன
திரை விஷ்னோ அஞேத காப்பி
ஸஹஸ்னரா வைச்சுவாரை
திறையம் ருணாஷிகேத
(ரிக்வேதம் மந்திரம் 5, சூக்தம் 28)
ஆக, வேத மொழியிலும் “மாமஹே” என்றும், மஹாமத் என்றும் கூறப்பட்டிருப்பதும் தொடர்புடைய செய்திகள். சரியாகவே சொல்லப்பட்டிருப்பதும் பெரிய வியப்புக்குரியவையாக இருக்கின்றன.
அதுத்து வரும் கட்டுரைகளில் இஸ்லாம் பற்றிய தவறான கருத்துகளைப் போக்குவதற்கு முயல்கிறேன். (தொடரும்)
…….. மேலே உள்ளது முரசொலி அடியாரின் கட்டுரையாகும். “நான் காதலிக்கும் இஸ்லாம்” என்கிற தலைப்பில் நீரோட்டம் நாளிதழில் அவர் எழுதிவந்த தொடரின் ஓர் அத்தியாயமே மேற்காணும் கட்டுரை. இந்த அத்தியாயத்துக்கு அவர் கொடுத்திருந்த தலைப்பு “வியப்பு: ஆனால் உண்மை! – இந்து மத வேதங்களால் முன் கூட்டிச் சொல்லப்பட்டவர் நபிகள் நாயகம்” என்பதாகும். இந்தக் கட்டுரையைப் படித்து நான் அடைந்த வியப்பை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொருட்டே நினைவில் நின்ற இதை இங்கே எழுதியுள்ளேன்.
வியப்படைபவர்கள் வியப்படையலாம். இந்திய மூதாதையர்கள் சொன்னது எதுவானாலும் அதைத் துளியேனும் ஆராயத் தயாராக இல்லாமல், எள்ளி நகையாடுவதையே இயல்பாகக் கொண்டவர்கள் கேலி செய்யலாம். இது அவர்களுக்காக எழுதப்படவில்லை! அவர்கள் எள்ளி நகையாடிக்கொண்டே இருக்கட்டும். அதனால் யாருக்கும் இழப்பு இல்லை! எது ஒன்றையும் சிறிதளவேனும் ஆராயாமல் அப்படியே நம்புவதும் சரி, நம்பாமல் கேலிசெய்வதும் சரி, இரண்டுமே தவறு என்பதே நமது கருத்தாகும்.-ஜோதிர்லதா கிரிஜா
………