Featured Posts

தலாக் – இடைக்காலத்திற்கான உத்தரவும் இணக்கத்திற்கான வழிகாட்டலும்

-இம்தியாஸ் யூசுப் ஸலபி-
இல்லற வாழ்க்கையில் இணைந்து செல்ல முடியாது என கணவன் மனைவி; முடிவு செய்திடும் போது விவாகரத்து பண்ணுவதற்கு அவ்விரு இரு உள்ளங்களுக்கும் இஸ்லாம் அனுமதிவழங்கியுள்ளது. அதுவும் அழகிய ஒழுக்க நடைமுறையை கடைப்பிடித்து பிரிந்து செல்ல வழிகாட்டியுள்ளது. இருவரினதும் வாழ்வு அஸ்தமனமாகிவிடாது காப்பாற்றிடும் முதலுதவிக்கான வழிகளுடன் அந்நடைமுறை முறையினை காட்டித்தந்துள்ளது. அதனை கண்டிப்பாக பின்பற்றியே ஆகவேண்டும்.

துரதிஷ்டவசமாக அந்த நடைமுறையினை எவரும் கடைபிடிப்பதில்லை.தலாக்கிற்கான விண்ணப்பத்தை காழி நீதிமன்றத்தில் முன்வைத்ததும் அதற்கான விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வரும் முன் கணவனும் மனைவியும் தங்களது தாய் வீட்டுக்கு போய்விடுகின்றனர். வழக்கு நடைபெறும் திகதிக்கு மட்டும் நீதிமன்றத்திற்கு வருகின்றனர். இந்த இடைப்பட்ட காலத்திற்கு மனைவிக்கான பராமரிப்பு மற்றும் செலவுகள் கணவனால் வழங்கப்படுவதுமில்லை.

காழியார் ஒவ்வொரு மாதமும் தம்பதியினரை குறிப்பிட்ட திகதிக்கு வருமாறு அழைப்புவிடுப்பார். கணவன் வந்தால் மனைவி வந்திருக்கமாட்டாள். மனைவி வந்தாள் கணவன் வந்திருக்க மாட்டார். பெரும்பாலும் கணவன் வருவதில்லை. மூன்று முறை இவ்வாறு வரழைத்து விட்டு காழியார் விவாகரத்துக்கான தீரப்பை வழங்கி விடுவார். அத்தோடு இரண்டு பேரும் சட்டப்பூர்வமாக பிரிந்து விடுவதாக எழுதி கொடுக்கப்படும்;.

சில நேரம் வெளிநாட்டில் தொழில் புரிவதற்காக தயாராக இருக்கின்ற கணவன் ஒருமாதத்திலேயே தலாக்கிற்கான தீர்ப்பை காழியாரிடம் எழுத்துப்பூர்வமாக பெற்று விட்டு வெளிநாடு சென்று விடுவார். இவ்வாறான நடைமுறைகளும் செய்திகளும் அன்றாடம் பார்க்கிறோம். நிச்சயமாக இவ்வாறான நிகழ்வுகள் இஸ்லாத்திற்கு புறம்பானது அனீதியானது.

தகுந்த இரண்டு சாட்சிகளுக்கு முன்னிலையில் கணவன் தனது மனைவியை கூறியதும் மனைவி தன்னுடைய மூன்று மாதவிடாய்க்காலத்திலிருந்து சுத்தமடைகிறவரை காத்திருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறும் சட்டத்தின் யதார்த்தத்தை எவரும் புரிந்து செயற்படுத்த தூண்டுவதில்லை.

தலாக் சொன்ன பின் மனைவிக்கு காத்திருருக்கும் காலத்தை இஸ்லாம் ஏன்விதித்தது? கணவன் மனைவியாக வாழ்ந்த வீட்டிலே காத்திருக்குமாறு ஏன் கட்டளையிட்டது? இதன் ரகசியம் என்ன?என்பதை விளங்கிருந்தால் தலாக்கின் தீர்ப்புக்கள் பிரிந்து போக வேண்டும் என்பதை விட சேர்ந்து வாழவேண்டும் என்ற முடிவினை தந்திருக்கும். கணவன் மார் சட்டத்தை தெரியாமல் துஷ்பிரயோகம் பண்ணுவதை விட சட்டத்திற்கு காவலர்களாக இருக்கும் காழி மார்கள் சட்டத்துடன் விளையாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அல்லாஹ் ஏற்படுத்தித் தந்திருக்கும் ஒழுங்கு முறை வீணானவையல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். தலாக்குடைய சட்டத்தை அல்லாஹ் விபரப்படுத்தி விட்டு கடுமையான இரண்டு செய்திகளைச் சொல்கிறான். “இவை அல்லாஹ்வின் வரம்புகள் இவைகளை மீறாதீர்கள்”, “அல்லாஹ்வின் வசனங்களை கேலியாக எடுத் துக் கொள்ளாதீர்கள்.” இவ்வரண்டு செய்திகளையும் நிதானமாகவும் அமைதியாகவும் சிந்திக்கவேண்டும். அப்படி சிந்தித்திருந்தால் அல்லாஹ்வை பற்றிய பயமும் பக்குவமும் வந்திருக்கும்.

கணவன் மனைவியை பார்த்து தலாக் என்று சொன்னவுடன் கணவன் மனைவி உறவு உடனே அறுந்துவிடுவதில்லை.

தலாக் சொல்லப்பட்ட பெண்ணை பொறுத்தவரையில் அவள் மீண்டும் கணவனோடு சேர்ந்து வாழ்வதற்கான அத்தனை வாய்ப்புக் களையும் எதிர்பார்த்து வாழ்பவள். தலாக் சொல்லப்பட்டவுடன் மூன்று மாதவிடாய்களிலிருந்து சுத்தமடையும் காலம் முடிவுரும் வரை காத்திருக்கும் காலமெல்லாம் கணவனுடன் இல்லற வாழ்வில் இணைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

இத்தாவுடைய இக்காலத்தில் அவள் கணவனது பார்வையிலும் பராமரிப்பிலும் வாழ்ந்து கொண்டிருப்பாள். அந்த காலகட்டத்தில் இருவரது உள்ளங்கள் ஏங்குவதற்கும் இணங்குவதற்கும் சந்தர்ப்பங்கள் உண்டு. அந்த ஏக்கமும் ஊக்கமும் ஊசலாட்டங்களும் வரவேண்டும் உள்ளாந்தமாக உளப்பூர்வமாக தங்களது நிலை மைகளை உணர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த இடைவெளியின் நோக்கமாகும்..

விவாகரத்து பண்ணும் உரிமையை இஸ்லாம் கணவனுக்கு வழங்கியிருந்தாலும் அது குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வாகாமல் இடைக்கால உத்தரவாக அமைத்துக் கொள்ள ஒருசந்தர்ப்பமாக மூன்று மாதவிடாய்களிலிருந்து துப்பரவு அடைவதற்கான கால எல்லையை இஸ்லாம் வழங்கியுள்ளது. அக்கால எல்லையில் இடைக்கால உத்தரவை வாபஸ் பெறவோ அல்லது முடிவுக்கு கொண்டுவரவோ அனுமதி வழங்கியுள்ளது.

அப்பெண் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் கணவனது மனமாற்றத்தை ஏற்படுத்தும் காரியங்களை அல்லது நடந்து விட்ட தவறுகளை திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக இக்குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் மாற்றிக் கொள்ளலாம்.

முன்பு இருந்ததை விட மிகவும் அலங்காரமாக தன்னை அலங்கரித்துக் கொண்டு ஆடை ஆபரணங்களை அணிந்து கொண்டு கணவனை சுண்டி இழுக்கும் விதத்தில் இருந்து கொண்டு பரிவை ஏற்படுத்தும் முறையில் மனமாற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளலாம்.

தலாக் சொல்லப்பட முன் மனைவி எவ்வாறான அலங்காரங்களோடு வாழ்ந்து வந்தாளோ அதனையே தலாக் சொல்லப்பட்ட பின்பு இத்தாவுடைய காலத்திலும் மேற்கொள்ளலாம். தலாக் சொல்லப்படுவதற்கு முன் அலங்காரங்களில் அக்கறை காட்டாமலிருந்தாலும் இத்தாவுடைய காலப்பகுதியில் அந்த அலங்காரங்கள்; அவசியம் தேவைப்படுகின்றன. இதற்கு முன்பு இருந்ததைவிட அன்பாலும் பண்பாலும் நடத்தைகளாலும் கணவனை கட்டிப்போடலாம்.

சில நேரம் மனைவியினது போக்கில் கணவன் மனமாறி இடை நடுவில் தலாக்கை நீக்கிக் கொண்டு மீண்டும் சேர்ந்து வாழலாம். கணவன் தான் விட்ட தவறை எண்ணி கணவன் மனம் வருந்திடலாம். பிரிவினால் ஏற்படும் விபரீதங்களை உணர்ந்து -பிள்ளைகளின் எதிர்கால வாழ்வை எண்ணி- கவலை கொள்ளலாம்.

இருவரது குற்றங்களையும்; உணர்ந்து மனக்கசப்புகளையும் மறந்து மகிழ்ச்சியாக வாழ வழியாகவும் அது அமையலாம். நன் நடத்தைகளை மீள்பார்வை செய்வதற்கான பாசறையாகவும் இருக்கலாம.; அந்நிலையை ஏற்படுத்துவதே இக்குறிப்பிட்ட கால இடைவெளியின் நோக்கம்.

எந்தபெற்றோரும் தங்களது பிள்ளையின் வாழ்வு விவாகரத்தின்மூலம் முடிவுக்கு வருவதை விரும்பாமல் முடிந்தளவு தடுத்துக்கொள்ளவும் அதற்கான அவகாசத்தை பெற்றுக் கொள்ளவும் முயற்சிப்பர். அதனையே இஸ்லாம் இங்கே பெற்றுக் கொடுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *