Featured Posts
NYT2010060911170928C

தொழும் போது முன்னால் தடுப்பு

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக்குரல் ஆசிரியர்-
ஒவ்வொரு வணக்கங்களும் எவ்வாறு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு வழிக் காட்டியுள்ளார்கள்.அந்த வரிசையில் நாம் தொழும் போது முன்னால் சுத்ரா ( தடுப்பு ) வைப்பதன் முக்கியத்துவத்தை ஹதீஸ்களில் காணலாம். சுத்ரா இல்லாமல் கவனயீனமாக தொழுதால் அதற்கான தண்டனை கடுமையானது என்பதையும் இஸ்லாம் நமக்கு கடுமையாக எச்சரிக்கின்றது.

தொழுகையும், தடுப்பும்
” இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தன்று (தொழுவிப்பதற்காகத் தொழுகைத் திடலுக்குப்) புறப்படும் போது (முனை அகலமான) ஈட்டியை எடுத்து வருமாறு உத்தரவிடுவார்கள். (தொழுகைத் திடலில்) அவர்களுக்கு முன்னால் அந்த ஈட்டி (தடுப்பாக நட்டு) வைக்கப்படும். பிறகு அதை நோக்கித் தொழுவிப்பார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் இருப்பார்கள். பொதுவாகப் பயணத்திலும் இவ்வாறே செய்வார்கள். இதனால் தான் (நம்) தலைவர்களும் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். (
முஸ்லிம் 862 )

மேலும்
” இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (கைப்பிடி உள்ள) கைத்தடியை நட்டு வைத்து அதை நோக்கித் தொழுவார்கள். (முஸ்லிம் 863 )

மேலும் ”அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஹஜ்ஜின்போது) தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரமொன்றில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தேன். பிலால் (ரலி) அவர்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூச் செய்து) மிச்சம் வைத்த தண்ணீரை வெளியே எடுத்துவருவதையும் பார்த்தேன். அந்த மிச்சத் தண்ணீருக்காக மக்கள் போட்டியிட்டுக் கொள்வதையும் நான் பார்த்தேன். அந்தத் தண்ணீரில் சிறிதளவைப் பெற்றவர் அதைத் (தம் மேனியில்) தடவிக்கொண்டார். அதில் சிறிதும் கிடைக்காதவர் (தண்ணீர் கிடைத்த) தம் தோழரின் கையிலுள்ள ஈரத்தைத் தொட்டு(த் தடவி)க்கொண்டார். பிறகு பிலால் (ரலி) அவர்கள் ஒரு கைத்தடியை எடுத்து வந்து நட்டுவைப்பதை நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிவப்பு நிற அங்கியொன்றை அணிந்தவர்களாக (தம் கணைக்கால்கள் தெரியுமளவுக்கு அங்கியை) உயர்த்திப் பிடித்தபடி வெளியில் வந்தார்கள். பிறகு அந்தக் கைத்தடியை நோக்கி (நின்று) மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அந்தக் கைத்தடிக்கு அப்பால் மனிதர்களும் கால்நடைகளும் கடந்துசெல்வதை நான் பார்த்தேன். ( முஸ்லிம் 867 )

எனவே மேற்ச் சென்ற ஹதீஸ்கள் மூலம் நாம் தொழும்போது முன்னால் ஏதாவது பொருள் ஒன்றை தடுப்பாக வைப்பது வலியுறுத்தப்பட்ட நபிவழி யாகும்.

குறுக்கே செல்பவர் ஷைத்தான்
தொழுது கொண்டிருக்கும் போது எவராவது குறுக்கே செல்ல முற்ப்பட்டால், நாம் தொழுத நிலையிலே கையை நீட்டிஅவரை தடுக்க வேண்டும்.அதையும் மீறி குறுக்கே செல்ல முற்ப்பட்டால் அவரை தள்ளி விட வேண்டும் . ஏன் என்றால் அவன் ஷைத்தானின் துாண்டுதலால் தொழுகையின் குறுக்கே செல்ல முற்ப்படுகிறான் என்பதை பின் வரும் ஹதீஸ் உறுதிப் படுத்துகிறது.

” ஹுமைத் பின் ஹிலால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் என் தோழர் ஒருவரும் ஒரு ஹதீஸ் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது (அங்கு வந்த) சாலிஹ் அஸ்ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்து செவியேற்ற ஒரு ஹதீஸையும் அவர்களிடம் நான் கண்ட ஒரு நிகழ்ச்சியையும் உமக்குக் கூறுகிறேன்:

நான் ஒரு வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தினத்தன்று அபூசயீத் (ரலி) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் மக்களில் யாரும் தமக்கு குறுக்கே சென்று விடாமலிருக்கத் தடுப்பொன்றை வைத்து அதை நோக்கித் தொழுதுகொண்டிருந்தார்கள். அப்போது பனூ அபீமுஐத் குலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அபூசயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் குறுக்கே கடந்துசெல்ல முற்பட்டார். உடனே அபூசயீத் (ரலி) அவர்கள் தமது கையால் அவரது நெஞ்சில் (கை வைத்துத்) தள்ளினார்கள். அந்த இளைஞர் பார்த்தார். அபூசயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் கடந்துசெல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைக் கண்ட அவர், மீண்டும் அவர்களைக் கடந்து செல்லப்பார்த்தார். அபூசயீத் (ரலி) அவர்கள் முன்னைவிடக் கடுமையாக அவரது நெஞ்சில் (கை வைத்துத்) தள்ளினார்கள். அந்த இளைஞர் அப்படியே நின்றுகொண்டு அபூசயீத் (ரலி) அவர்களைச் சாடினார்.
பிறகு மக்களை விலக்கிக்கொண்டு (மதீனாவின் ஆளுநராயிருந்த) மர்வான் பின் ஹகமிடம் சென்று நடந்ததை அந்த இளைஞர் முறையிட்டார். அபூசயீத் (ரலி) அவர்களும் மர்வானிடம் சென்றார்கள். அப்போது மர்வான், அபூசயீத் (ரலி) அவர்களிடம், உங்களுக்கும் உங்கள் சகோதரர் புதல்வருக்கும் (இடையே) என்ன நேர்ந்தது? அவர் உங்களைப் பற்றி முறையிடுகிறாரே! என்று கேட்டார். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள், மக்களில் எவரும் குறுக்கே செல்லாமலிருக்கத் தமக்கு முன்னே ஒரு தடுப்பை வைத்துக்கொண்டு உங்களில் ஒருவர் தொழும்போது, அவருக்கு முன்னால் குறுக்கே செல்ல யாரும் முற்பட்டால் அவரது நெஞ்சில் (கை வைத்துத்) தள்ளட்டும். அவர் (விலகிச் செல்ல) மறுக்கும்போது அவருடன் சண்டையிட(நேர்ந்தால் சண்டையிட்டுத் தடுக்க)ட்டும்! ஏனெனில், அவன்தான் ஷைத்தான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் (எனவே தான், அந்த இளைஞரை அவ்வாறு நான் தடுத்தேன்) என்று கூறினார்கள். ( முஸ்லிம் 876 )

மேலும்
” அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழும்போது எவரையும் தமக்கு முன்னே கடந்து செல்ல அவர் அனுமதிக்க வேண்டாம். (அவரைத் தடுக்கட்டும்.) அவர் (விலகிக்கொள்ள) மறுக்கும் போது சண்டையிட(நேர்ந்தால் சண்டையிட்டுத் தடுக்க)ட்டும் ! ஏனெனில்,அவருடன் கூட்டாளி (ஷைத்தான்) உள்ளான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம் 877 ) எனவே தொழும் போது கட்டாயம் தடுப்பு வைத்து தொழ பழகிக் கொள்ள வேண்டும். யாராவது அவசரத்தில் தொழுகைக்கு குறுக்கே செல்ல முற்ப்படும் போது அவரை தடுக்க முயற்ச்சி செய்ய வேண்டும். மீறி குறுக்கே செல்ல முற்ப்பட்டால் கையால் தடுக்க வேண்டும், அதையும் மீறி செல்ல முற்ப்பட்டால் அவரை தள்ளி விட வேண்டும் என்பதாக ஹதீஸ் நமக்கு பாடம் சொல்லித் தருகிறது்.

தொழுகைக்கு குறுக்கே செல்வது பாவம்
தொழுகைக்கு குறுக்கே ஒருவர் செல்வாரேயானால் அது மிகப் பெரிய பாவம் என்பதை பின் வரும் ஹதீஸ் எச்சரிகின்றது.

”புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னை ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் அபூஜுஹைம் பின் அல்ஹாரிஸ் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் அனுப்பி, தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்பவர் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்ன செவியேற்றார்கள் என்று கேட்டுவருமாறு சொன்னார்கள். (நான் சென்று கேட்டேன்.) அப்போது அபூஜுஹைம் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்பவர் அதனால் எத்தகைய பாவம் தம்மீது ஏற்படும் என்பதை அறிந்திருப்பாரானால் அவருக்கு முன்னால் கடந்துசெல்வதைவிட நாற்பது (நாட்கள்/மாதங்கள்/வருடங்கள் அப்படியே காத்து) நிற்பது அவருக்கு நல்லதாக இருந்திருக்கும்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபுந்நள்ர் சாலிம் பின் அபீஉமய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் நாட்களில் நாற்பது என்று சொன்னார்களா, அல்லது மாதங்களில் நாற்பது என்று சொன்னார்களா, அல்லது வருடங்களில் நாற்பது என்று சொன்னார்களா என்று எனக்குத் தெரியவில்லை. என்று கூறினார்கள். ( முஸ்லிம் 878

மேலும் ” அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள், உங்களில் ஒருவர் (திறந்தவெளியில்) தொழ நிற்கும் போது தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது இருந்தால் அதுவே அவருக்குத் தடுப்பாக அமைந்துவிடும். சாய்வுக்கட்டை போன்றது இல்லாவிட்டால் கழுதை, பெண் மற்றும் கறுப்புநாய் ஆகியன அவரது (கவனத்தை ஈர்த்து) தொழுகையை முறித்துவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். உடனே நான், அபூதர் (ரலி) அவர்களே! சிவப்பு நிற நாய், மஞ்சள் நிற நாய் ஆகியவற்றை விட்டுவிட்டுக் கறுப்பு நிற நாயை மட்டுமே குறிப்பிடக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், என் சகோதரரின் புதல்வரே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கறுப்பு நாய் ஷைத்தான் ஆகும் என்று கூறினார்கள் என்றார்கள். ( முஸ்லிம் 882 )

தொழுகையாளியும், சுத்ராவின் நெருக்கமும்.
தொழும் போது வைக்கப்படும் சுத்ராவின் நெருக்கம் எந்த அளவு துாரம் இருக்க வேண்டும் என்பதை பின் வுரும் ஹதீஸிகளில் காணலாம்.

” சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழ நிற்கும் இடத்திற்கும் (பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் அமைந்த) சுவருக்கும் இடையே ஓர் ஆடு கடந்து செல்லும் அளவுக்கு இடைவெளி இருந்தது. முஸ்லிம் 879 )

880. மேலும் ”யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) குர்ஆன் வைக்கப்படும் இடத்திற்கு அருகில் (உள்ள தூண் அருகே) கூடுதலான (நஃபில்) தொழுகையைத் தொழுவார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து (இந்தத் தூணை முன்னோக்கி நின்று) தொழுவார்கள். சொற்பொழிவு மேடைக்கும் (மிம்பர்) கிப்லாவுக்கும் இடையே ஓர் ஆடு கடந்துசெல்லும் அளவுக்கு இடைவெளி இருந்தது என்றும் குறிப்பிட்டார்கள்.
( முஸ்லிம் 880 ) மேலும் ”சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) குர்ஆன் வைக்கப்படும் இடத்திற்குப் பக்கத்திலிருந்த தூணருகில் தொழுவதைத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். அவர்களிடம் நான், அபூ முஸ்லிம்! தாங்கள் இந்தத் தூணுக்கு அருகில் தொழுவதையே தேர்ந்தெடுத்துக் கொள்வதை நான் காண்கிறேனே (என்ன காரணம்)? என்று கேட்டேன். அதற்கு சலமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் இந்தத் தூணுக்கு அருகில் தொழுவதைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதை நான் பார்த்திருக்கிறேன் (ஆகவேதான், நானும் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்) என்று பதிலளித்தார்கள்.
(முஸ்லிம் 881)
எனவே நமது தொழுகைக்கும் சுத்ரா வைக்கப்படும் இடமும் மிக நெருக்கமானதாக இருக்க வேண்டும் என்பதை தான் இந்த ஹதீஸ்களில் காணலாம்.அதாவது ஸஜ்தாவிற்கு நெற்றி வைக்கும் இடத்தில் சுத்ரா வைக்க வேண்டும்.என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்,

பெண்கள் சுத்ரா
” உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள் (எங்களிடம்), தொழுகையை முறிக்கக் கூடியவை எவை? என்று கேட்டார்கள். நாங்கள், பெண்களும் கழுதைகளும் (குறுக்கே செல்வது) என்று பதிலளித்தோம். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்கள் என்ன தீய பிராணிகளா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும் போது அவர்களுக்கு முன்னால் நான் ஜனாஸாவைப் போன்று குறுக்குவாக்கில் படுத்துக் கொண்டிருப்பேன் என்று கூறினார்கள். ( முஸ்லிம் 886)

மேலும் ” நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போது அவர்களுக்கு எதிரில் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் நான் இருந்துகொண்டிருப்பேன். சில நேரங்களில் அவர்கள் சஜ்தாச் செய்யும்போது அவர்களது ஆடை என்மீது படும். (முஸ்லிம் 890)

எனவே தொழக் கூடியவர்கள் சுத்ரா விடயத்தில் அதி கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அதிகமான பள்ளிகளில் இந்த சுத்ரா அமைப்பு பேணுவது கிடையாது. நபியவர்களின் சுன்னத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறார்கள் ஆனால் நடைமுறையில் இல்லை ? சுத்ராவைப் பற்றி சரியான தெளிவு இல்லாததினால் தான் இதன் முக்கியத்துவமும்,பாரதுாரமும் தெரியவில்லை ? பெண்கள் தனியாக வீட்டில் தொழுதாலும், வீட்டில் யாரும் இல்லாவிட்டாலும் கூட தனக்கு முன்னால் சுத்ரா என்ற ஏதாவது ஓரு பொருளை முன்னால் தடையாக வைத்து தொழ வேண்டும். ஹதீஸ்களை விளங்கி அதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவோமாக !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *