விசேட தினங்களில் மீறப்படும் இறைக் கட்டளை
-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக்குரல் ஆசிரியர்-
இஸ்லாம் ஆண்களுக்கு என்று சில சட்டங்களையும், பெண்களுக்கு என்று சில சட்டங்களையும் ஏற்ப்படுத்தியுள்ளன. அவற்றில் ஆண்கள் ஆண்களின் அவ்ரத்துகளையும், பெண்கள் பெண்களின் அவ்ரத்துகளையும், பார்க்க கூடாது என்று கண்டிப்பாக கட்டளையிட்டுள்ளது.
பெண்கள், பெண்களின் அவ்ரத்துகளை பார்க்க கூடாது என்றால், ஆண்கள் பெண்களின் அவ்ரத்துகளை அறவே பார்க்க கூடாது என்பதை மிகத் தெளிவாக நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஆண்கள் பெண்கள் பகுதிக்கு செல்லத் தடை:
ஹதீஸ்…
“உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள். (புகாரி 5232)
சாதாரண நாட்களிலே ஆண்கள் பெண்களின் பகுதிக்கு போக கூடாது என்றால், மற்ற எந்த விசேட தினங்களிலும் ஆண்கள் பெண்களின் பகுதிக்கு அறவே போகக் கூடாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
விசேட தினங்களில் தான் அதிகமாக இந்த கட்டளை மீறப்படுகிறது. எல்லா ஆண்களும் தனது மனைவியை விசேஷம் நடக்கும் இடத்தில் விட்டு விட்டு வெளியே இருப்பார்கள். இப்போது நேரம் செல்ல, செல்ல தனது மனைவியை அழைப்பதற்காக பெண்கள் பகுதிக்கு ஒவ்வொரு ஆண்களாக செல்ல ஆரம்பிப்பார்கள். இந்த இடத்தில் மேற்ச் சுடிக்காட்டிய ஹதீஸை மறந்து எல்லை மீறப்படுவதை காணலாம்.
அல்லது எங்களை தான் வேலைக்கு போட்டுள்ளார்கள் என்று ஆண்கள் சர்வ சாதாரணமாக பெண்கள் பகுதிற்குள் அடிக்கடி போய் வருவதை காணலாம்.
பெண்களே பெண்களிடம் பார்க்க கூடாத பகுதி
“ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் ஆண் மற்றோர் ஆணின் மறைக்க வேண்டிய உறுப்பைப் பார்க்க வேண்டாம்;
ஒரு பெண் மற்றோர் பெண்ணின் மறைக்க வேண்டிய உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரே ஆடைக்குள் இரு ஆண்கள் சேர்ந்து படுக்க வேண்டாம்; ஒரே ஆடைக்குள் இரு பெண்கள் சேர்ந்து படுக்க வேண்டாம்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 565)
முஸ்லிம் பெண்களும் கட்டாயம் மறைக்கப்பட வேண்டிய உடல் பகுதிகளை பிறர் பார்க்கும் வண்ணம் சேலை அணிந்து கொண்டும், ஏனைய அரை குறை ஆடைகளை சர்வசாதரணமாக அணிந்து கொண்டும், தன்னையும் பாவத்தில் ஆழ்த்தி, பிறரையும் பாவத்தை துாண்ட செய்யும் நிலையை நாம் கண்டு வருகிறோம்.
அதிகமாக திருமணம் நடக்கும் இடங்களில் அனைவரின் ஆசிர்வாதத்துடன் இந்த ஹதீஸின் எச்சரிக்கை மீறப்படுவதை காணலாம். சர்வ சாதாரணமாக ஆண்களும், பெண்களும் இரண்டரக் கலந்து திருமண வைபவங்கள் அரங்கேற்றப் படுவதை அவதானித்து வருகிறோம்.
திருமண நிகழ்வின் போது பெண்கள் பகுதிக்கு முதல், முதல் வரும் ஆண்கள் யார் என்றால் வீடியோ, மற்றும் கெமரா எடுக்கும் ஆண்களாகும். பெண்கள் பகுதிற்குள் நின்று கொண்டு பெண்கள் மண்டபத்திற்குள் வர, வர ஒன்றன் பின் ஒன்றாக பல வடிவத்தில் வீடியோவும், போட்களும் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக மணப் பெண்ணை சுற்றிச் சுற்றி எடுக்க வேண்டும்.
இதில் வேடிக்கை என்ன வென்றால் மணப்பெண் திருமணத்திற்கு என்று அணியும் சாரியை அணிந்து மணமேடையில் இருப்பாள் அணிந்து இருக்கும் அந்த ஆடையால் இடுப்பு பகுதியை மறைத்திருக்க மாட்டார்கள். அந்த பகுதி வரக் கூடிய அனைவருக்கும் காட்சிப் பொருளாகவே விட்டு இருப்பார்கள்.
அந்த பகுதியை கடைசி வரை இந்த வீடியோகாரர்களின் பார்வைகள் மூலம் பல தடவைகள் காட்சிப் படுத்தி இருப்பார்கள். மேலும் அங்கு வந்திருக்கும் இளம் பெண்களை குறி வைத்து பல வடிவத்தில் வீடியோவின் மூலம் காட்சிப் படுத்தி இருப்பார்கள்.
திருமணத்திற்கு வருகை தந்த உற்றார் உறவினர்கள்,ஏனைய நண்பர்கள் மணமக்களுக்கு மிக அருகில் நின்று பல விதமான போட்டோக்களை எடுப்பார்கள். மணப் பெண்ணின் அருகில் மணமகனின் நண்பர்களும். மணமகன் அருகில் மணமகளின் நண்பிகளும் உரசிக் கொண்ட நிலையில் மாறி, மாறி வீடியோவும், போட்டோகளும் எடுப்பார்கள்.
இவைகள் மணமகளின் பெற்றோர்கள் முன்னிலையிலேயே நடக்கும். இந்த அசிங்கத்தை அந்த பெற்றோர்களும் சேர்ந்தே அரங்கேற்றுவார்கள்.?
மறுபக்கத்தில் திருமணம் முடித்த மணமகன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சுவார்யஷ்யமாக இந்த காட்சிகள் துாள் பறக்கும். யாரும் இதை பாவமாக கண்டு கொள்ளவே மாட்டார்கள்.
சில இளைஞர்கள் திருமண மண்டபத்திற்கு வரும் இளசுகளை கண் ஜாடை காட்டுவதற்காகவே பெண்கள் பகுதிற்குள் அடிக்கடி வருவார்கள்.? இன்னும் சிலர் மணப்பெண்ணின் மறைக்கப்படாத பகுதிகளை கண்டு களிப்பதற்காவே அடிக்கடி மணமேடைக்கு அருகில் வந்து போவார்கள்.?
இப்படி பலவிதமான முறைகளில் பெண்களின் மறைவிடங்களை காண்பதற்கு அனைவருடைய சம்மதத்துடன் இந்த காட்சிகள் நடைமுறையில் உள்ளன.?
இதில் அதிகமானவர்களுக்கு தெரியாத இன்னும் ஒரு பகுதியும் உள்ளது.? அதாவது இந்த வீடியோ மற்றும் கெமரா எடுப்பவர்கள் மணப்பெண்ணின் பல பகுதிகளை zoom பண்ணி எடுத்து அதை எடிட் செய்து அவர்கள் அந்த காட்சிகளை மட்டும் வெளியே விற்று விடுவார்கள், அல்லது அசிங்கத்தில் அரங்கேற்றி விடுவார்கள்.? இது உங்களுக்கு தெரியாது.? உங்கள் மகளின் மானம் உங்களின் அனுமதியுடனே கப்பல் ஏறுவதை காணலாம்.?
சிந்தியுங்கள்! இனி வரும் காலங்களில் ஒவ்வொருவரும் தத்தமது குடும்ப விடயத்தில் மிக கவனமாக நடந்து கொள்ளுங்கள். உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் நரகத்தை விட்டும் பாதுகாத்துக் கொள்வது ஆண்கள் ஆகிய உங்கள் மீது கட்டாய கடமையாகும்.
நரகத்தின் பெண்களும், ஆண்களும்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு,மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள்.
(இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும்.
அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 4316)
உலகத்தில் வைத்தே இவர்கள் நரகவாசிகள் என்று நபியவர்களால் சொல்லப்பட்டு விட்டன. இந்த ஹதீஸை வைத்து ஆண்களும் பெண்களும் நான் சுவனத்திற்கு உரியவரா? அல்லது நரகத்திற்கு உரியவரா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ள முடியும்.