இரண்டாம் பகுதி
அறிய வேண்டிய நான்கு முக்கியமான விசயங்கள்.
ஒவ்வொரு முஸ்லிமும் பின்வரும் நான்கு அம்சங்களை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.
1. அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய துாதரைப் பற்றியும் அவனுடைய மார்க்கத்தைப் பற்றியும் அறிய வேண்டும்.
2. அறிந்த அடிப்படையில் செயல்பட வேண்டும்.
3. அறிந்து செயல்படுவதை நோக்கி மக்களை அழைக்க வேண்டும்.
4. இந்த அழைப்புப் பணியின் போது ஏற்படும் துன்பங்களையும் துயரங்களையும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த நான்கு அம்சங்களையும் கடைபிடிப்பவர்கள் வெற்றியாளர்கள். இவ்விளக்கத்தை பின்வரும் சிறிய அத்தியாயத்தில் அல்லாஹ் உள்ளக்கியுள்ளான்.
بسم الله الرحمن الرحيم .وَالْعَصْرِ (1) إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ (2) إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ (3)
அளவற்ற அருளாளனும் நிகரில்லா பேரன்புடையோனுமான அல்லாஹ்வின் பெயரால்….
காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.
1. நம்பிக்கைக்கொண்டு
2. நற்காரியங்களைச் செய்து
3. தங்களுக்கிடையே சத்தியத்தை போதித்து
4. தங்களுக்கிடையே பொறுமையை மேற்கொண்டவர்களைத் தவிர. (இவர்கள் நஷ்டத்தில் இல்லை.)
அல்குா்ஆன் (103)
அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய துாதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றியும் அறிந்தவர்களே அல்லாஹ்விடத்தில் நம்பிக்கைக்கொண்டவர்கள் ஆவார்கள். எனவே நம்பிக்கைக்கொண்டு என்ற சொல் முதலாவது அம்சமான கல்வி அவசியம் என்பதை உணர்த்துகின்றது.
நற்காரியங்களைச் செய்து என்ற சொல் அறிந்த அடிப்படையில் செயல்பட வேண்டும் என்ற இரண்டாவது விசயத்தை குறிப்பிடுகின்றது.
தங்களுக்கிடையே சத்தியத்தை போதித்து என்ற சொல் பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற மூன்றாவது விசயத்தைக் குறிப்பிடுகின்றது.
தங்களுக்கிடையே பொறுமையை மேற்கொள்ள வேண்டும் என்ற சொல் அழைப்புப் பணியின் போது ஏற்படும் துன்பங்களை சகித்துக்கொள்ள வேண்டும் என்ற போதனையைத் தருகின்றது.
இந்த நான்கு விசயங்களையும் ஒரு மனிதன் மிகச் சரியாக கடைபிடித்து வந்தால் அவன் ஈருலகிலும் வெற்றி பெறுவது நிச்சயம். இது வல்ல ரஹ்மானின் வாக்குறுதியாகும்.