படித்ததில் சிந்தனைக்குரியவை… இது நிஜம் அல்ல கதை!
வீட்டில் கணவனும், மனைவியும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, திடீரென கதவு தட்டும் சப்தம் கேட்டது!
“யார் கதவை தட்டுவது” என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த கணவர் கேட்டார்.
“நான் ஒரு ஏழை (மிஸ்கீன்) வந்துள்ளேன்” என்ற சப்தம் வந்தது.
உடனே “இந்த கோழியிலிருந்து ஒரு துண்டை அந்த மிஸ்கீனுக்கு கொடுங்கள்” என்று மனைவி கணவரிடம் கூறினாள்.
“வேண்டாம், வேண்டாம்” என்று கணவர் கூறிவிட்டார்.
ஏமாற்றம் அடைந்த நிலையில் அந்த மிஸ்கீனும் திரும்பிவிட்டார். சிறிது காலம் சென்றதும் வறுமையின் காரணமாக கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் பிரச்சனை வந்தது. இறுதியில் அந்த பிரச்சனை தலாக்கில் முடிந்து விட்டது. மீண்டும் இன்னொரு ஆணை இரண்டாவது கணவராக இந்த பெண் திருமணம் முடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இந்த கணவரோடு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, கதவு தட்டப்படுகிறது.
“யார் கதவை தட்டுவது” என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த கணவர் கேட்டார்.
“நான் ஒரு ஏழை (மிஸ்கீன்) வந்துள்ளேன்” என்ற சப்தம் வந்தது.
உடனே “இந்த கோழி துண்டை அந்த மிஸ்கீனுக்கு கொடுங்கள்” என்று கணவர் மனைவிக்கு கூறினார்.
மனைவி கதவை திறந்து பார்த்தவுடன் அழுது கொண்டு திரும்பினார்.
“ஏன் அழுகிறாய்?” என்று கணவர் கேட்டதும் “யார் வந்திருப்பது தெரியுமா?” என்று மனைவி கேட்டார்.
“யார்?” என்று கணவர் கேட்டவுடன், “அவர் தான் எனது முதல் கணவர்” என்று மனைவி கூறினாள்.
அப்போது “நான் யாரென்று தெரியுமா?” என்று இந்த கணவர் கேட்டார், “தெரியாது” என்று மனைவி கூறினாள்.
“நான் இந்த வீட்டிற்கு முதலில் மிஸ்கீனாக யாசகம் கேட்டு வந்தவன்” என்று இந்த கணவர் கூறினார்.
நான் ஒரு செல்வந்தன் என்ற மமதை வந்து விடக் கூடாது. ஏழைகளை மதிக்கும் தன்மை இருக்க வேண்டும். எதுவும் எந்த நேரத்திலும் நடக்கலாம். நேற்று பரம ஏழையாக இருந்தவர் இன்று உச்சகட்ட செல்வந்தராகவும் நேற்று செல்வந்தராக இருந்தவர். இன்று ஏழையாக மாறக் கூடிய காட்சியை காண்கிறோம் என்றால் இறைவனின் நாட்டப்படி காலத்தின் சுழற்சியை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.