Featured Posts

நிய்யத்தின் ஒழுங்கு [ஹதீஸ் தெளிவுரை-01]

ஹதீஸ் தெளிவுரை

அரபு: அப்துர்ரஹ்மான் இப்னு பஹ்த் அல்வுத்ஆன் அத்தவ்ஸிரிய்

 தமிழில்: இம்தியாஸ் யூசுப் ஸலபி

நிய்யத்தின் ஒழுங்கு

(صحيح البخاري (6/1

عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى المِنْبَرِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ

நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் தான் எண்ணியதுண்டு. ஒருவரது ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவும் இருந்தால், அது அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவுமே இருக்கும். அவனது ஹிஜ்ரத் உலகத்தை அடைவதற்காக அல்லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காக என்றிருந்தால் அவரது ஹிஜ்ரத் அதற்காகவே அமையும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: உமர் (ரழி) | நூல்: புகாரி, முஸ்லிம்)

இந்த ஹதீஸின் வழிகாட்டல்கள்:

1.நிய்யத்து என்பது ஒரு விடயத்தை நாடுவதும், அதனைச் செய்வதும் என்று உறுதிக் கொள்வதுமாகும். இவை உள்ளங்களின் செயற்பாடுகளுடன் தொடர்பானவையாகும். ஒரு மனிதன் ஒருவிடயத்தை செய்வதாக உறுதிக் கொண்டால், அவர் அந்த விடயத்தில் நிய்யத் வைத்துவிட்டார் என்பதே மார்க்க ரீதியான விளக்கமாகும்.

“வுழூ செய்வதாக உறுதிக் கொண்டால், அவர் வுழூவுக்கான நிய்யத்தை வைத்தவராவார். குறித்த தொழுகையை நிறைவேற்றப் போவதாக உறுதிக் கொண்டால், அவர் அத்தொழுகைக்காக நிய்யத்தை வைத்தவராவார். இவ்வாறே ஒவ்வொரு விடயத்திலும் நிய்யத் கணிக்கப்படுகிறது.

2.”ஒரு முஸ்லிம் தனது ஏதேனும் ஒரு காரியத்தை நிறைவேற்றும்போது அது குறித்து நீய்யத்தை வாயால் மொழிவது என்பது மார்க்கமாக்கப்படவில்லை. இது அல்லாஹ்வுடைய தூதரிடமிருந்தோ ஸஹாபாக்களிடமிருந்தோ தாபியீன்களிடமிருந் தோ வந்ததாக அறியப்படவுமில்லை. எனவே, எவர் சப்தமிட்டு நிய்யத்தை மொழி கிறாரோ அவர் அல்லாஹ்வுடைய தூதரும் ஸஹாபாக்களும் செய்யாத ஒரு காரி யத்தை செய்தவராவார். இதனை பித்அத் என்று கூறப்படும்.

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறும்போது: “நான் லுஹர் தொழுகையை தொழுவதற்கு  நிய்யத்து வைக்கிறேன்” என்று எவர் சப்தமிட்டு கூறுகிறாரோ அவர், நூஹ் (அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆயுட்காலத்தின் அளவு உட்கார்ந்து ‘அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்களோ அவர்களது நபித்தோழர்களில் ஒருவரோ இவ்வாறு செய்திருப்பார்களா என்று ஆய்வு செய்து பார்த்தாலும் (அதற்கான ஆதாரத்தை) கண்டு கொள்ள மாட்டார். (எனவே இது) தெளிவான பொய்யைத் தவிர வேறில்லை.

நிய்யத்தை வாயால் மொழிவதில் நன்மை இருக்குமானால்  எங்களை விட ஸஹாபாக்கள் அதில் முந்தியிருப்பார்கள். அவ்வழியையும் எங்களுக்குக் காட்டியிருப்பார்கள்.

நிய்யத்தை வாயால் மொழிவது தான் சரி என்று இருக்குமானால், ஸஹாபாக்கள் அவ்வழியை பின்பற்றுவதில் வழிதவறி விட்டார்கள் என்பதாகிவிடும். ஸஹாபாக்கள் நேர்வழியிலும் சத்தியத்திலும் தான் இருந்திருந்தார்கள் (நிய்யத்தை வாயால் மொழியவில்லை) என்றால் ‘நேர்வழிக்குப்பின் வழிகேட்டைத் தவிர் வேறு என்ன இருக்கிறது.’ (அல்குர்ஆன் 11:32)  (நூல்: இகாஸதுல் லுஹ்பான் 1ஷ138, 139)

3.நிய்யத்தின் அடிப்படையான பயன்கள் ஆறு வகைப்படும்

பயன் ஒன்று: செய்கின்ற செயலின் நோக்கத்தை பிரித்துக் காட்டுவது
அதாவது அல்லாஹ்வின் திருப்திக்காக செயல்படுவது என்ற நோக்கமாக இருந்தால் அதுவே தவ்ஹீதும் இஹ்லாஸும் ஆகும்.

وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ

நேரியவழி நின்று கலப்படமற்றவர்களாக அல்லாஹ்வுக்காகக் கட்டுப்பட்டு அவனை வணங்குமாறும் தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தையும் கொடுத்து வருமாறே தவிர அவர்கள் ஏவப்படவில்லை. இதுதான் நேரிய மார்க்கமாகும். (98:5)

அல்லாஹ்வுக்காக என்ற நோக்கம் இல்லாவிட்டால் அது முகஸ்துதி (‘ரியா’) எனும் சிறிய இணைவைப்பைச் சார்ந்ததாகிவிடும். இபாதத்கள் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக இருக்குமானால் அது பெரிய இணைவைப்பாக ஆகிவிடும்.

உதாரணமாக:

  1. எவர் தனது தொழுகையை நபிகளாரின் ஸுன்னாவை பின்பற்றி சிறப்பாக நிறைவேற்றுகிறார்ரோ எவர் அல்லாஹ்வின் திருப்திக்காக தர்மம் செய்கிறாரோ அவர் கூலி கொடுக்கப்படக் கூடிய இஹ்லாஸ் உடையவராவார்.
  2. மக்களுக்கு காண்பிப்பதற்காக தொழுகிறவரும், மக்கள் தன்னை புகழ வேண்டும் என்பதற்காக தர்மம் செய்கின்றவரும் முகஸ்துதிக்குரியவராகவும் பாவம் புரிகின்றவருமாவார்.
  3. அல்லாஹ் அல்லாதவவைகளுக்காக ஸஜ்தா செய்கின்றவரும், அறுத்துப் பலியிடுபகின்றரும், நேர்ச்சை செய்கின்றவரும் பெரிய இணைவைப்பை செய்தவராவார்.

பயன் இரண்டு: அமலை சரியாகச் செய்தல்
சரியான நிய்யத் இல்லாமல் அமல் சீராகாது. எனவே நிய்யத் என்பது  அமல் சீராகுவதற்கான (ஏற்றுக்கொள்ளப் படு வதற்கான) நிபந்தனையாகும். அதனை பின்வருமாறு குறிப்பிடலாம்.

  1. வுழூவின் காரியங்களை செய்யக் கூடியவர் வுழுவுக்குரிய (சுத்தத்திற்குரிய) நிய்யத்தை மனதில் ஏற்படுத்தவில்லையானால் அவரது வுழூ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
  2. லுஹர் தொழுகின்றவர் அத்தொழுகையை அஸர் தொழுகை என எண்ணுவாராயின் அத்தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
  3. மஃரிப் தொழுகின்றவருக்கு தான் அஸர் தொழவில்லை என்று நினைவுக்கு வந்து மஃரிப் தொழுகையின் நிய்யத்தை விட்டு விட்டால் அவரது மஃரிப் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அஸர் தொழுகையை மனதில் வைத்துக் கொண்டு மஃரிப் தொழுதால் அஸர் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. நிய்யத்தில் ஏற்பட்ட மாற்றத்தினால் மஃரிப் தொழுகையையும் அவர் பூரணப்படுத்த முடியாது.
  4. தர்மம் செய்வது என்ற நிய்யத்துடன் பணத்தை கொடுக்கின்றவர் (அதன் மூலம்) கடமையாக்கப்பட்ட ஸகாத் கொடுத்த நன்மையை பெறமாட்டார்.
  5. ஒருவர் ஒரு மனிதனுக்கு பணத்தை நன்கொடையாகக் கொடுக்கிறார். அவர் நன்கொடை கேட்கவில்லை. கடனாகக் கேட்டிருக்கிறார் என்று பிறகுதான் அவருக்குத் தெரியவருகிறது. எனவே தான் கொடுத்த நன்கொடையை கடனில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினாலும் அது கடனில் சேரமாட்டாது.

பயன் மூன்று: நற்கூலி பெறுதல்
பிக்ஹு உடைய உலமாக்கள் மேலேயுள்ள ஹதீஸின் மூலம் வகுத்த சட்டங்களில் ஒன்று “நிய்யத்து இல்லாமல் கூலி இல்லை” என்பதாகும். நிய்யத்து இல்லாத எந்த அமலுக்கும் கூலி வழங்கப்படமாட்டாது.

உதாரணமாக:

  1. இஃதிகாபுடைய நிய்யத்துடன் பள்ளியில் தங்கிடும் போது அல்லது கடமையாக்கப்பட்ட தொழுகையை எதிர்பார்த்து பள்ளியில் இருந்திடும் போது அதற்கான கூலி வழங்கப்படும். எவ்வித நிய்யத்தும் இல்லாமல் பள்ளியில் தங்கியிருப்பதற்காக எந்த நன்மையும் கிடைக்கப் பெறமாட்டாது.
  2. மார்க்கம் வலியுறுத்தும் சுத்தத்தினை மேற்கொள்வதற்காக நன்மை வழங்கப்படும். வெறுமனே ஒரு குளிப்புக்காக அல்லது உடல் குளிர்ச்சியினை பெறுவதற்கு குளிப்பதற்காக நன்மை வழங்கப்பட மாட்டாது.

பயன் நான்கு: பழக்கம் வேறு வணக்கம் வேறு என்று பிரித்து காட்டுதல்

உதாரணமாக,

  1. சிகிச்சைக்காக இரத்தப் பரிசோதனை செய்து கொள்வது அல்லது பத்தியத்திற்காக உண்ணாமல் இருப்பது என்பது பழக்க வழக்கமாகும். நோன்பு காலத்தில் உண்ணாமல் இருப்பது என்பது பழக்க வழக்கமாகாது அது வணக்கமாகும்.
  2. கடமையான அல்லது ஸுன்னத்தான குளிப்பு என்பது வணக்கமாகும். சுத் தத்திற்காக அல்லது உடல் குளிர்ச்சியை பெறுவதற்காக குளிப்பது என்பது அன்றாட பழக்கவழக்கமாகும்.

பயன் ஐந்து: வணக்கங்களின் தோற்றத்தை வேறுபடுத்திக் காட்டல்.

  1. சுன்னத்தான நோன்பையும் கடமையான நோன்பையும் செயல்ரீதியில் வேறுப்படுத்திக் காண்பித்தல்.
  2. சுபஹ் தொழுகையும் (அதன்) ஸுன்னத்தான தொழுகையும் செயல்ரீதியில் வேறுப்படுத்திக் காண்பித்தல்.

பயன் ஆறு: ஆகுமான பழக்க வழக்கங்களை இபாதத்களாக மாற்றுதல்

ஒரு முஸ்லிம் அன்றாடம் (மார்க்கம் அனுமதித்த) ஆகுமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு காரியத்தை அல்லாஹ்வுடையதும் அவனது தூதருடையதுமான கட்டளைக்குக் கட்டுப்பட்டு செயல்படுத்தும் போது அல்லது மார்க்க ரீதியாக ஏவப்பட்டுள்ள விடயமொன்றுக்கு நடுநிலை வகித்து செயல்படுத்தும் போது அதில் நலவை (இறைதிருப்தியை) நாடுவதனால் அதற்கான கூலி அவருக்கு வழங்கப்படும்.

உதாரணமாக

  1. மனைவி மக்களுக்காக செலவு செய்யும் போது அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் கட்டளைக்குக் கட்டுப்பட்டு பதிலளிப்பதாக (செலவு செய்வதாக) எண்ணுகிறார்.
  2. உண்பதும் பருகுவதும் மூலமாக அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு பயந்து நடப்பதாக எண்ணி அவ்விரு விடயங்களையும் மேற்கொள்கிறார்.
  3. இரவில் உறங்கும் போது தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழவேண்டும். சுபஹ் தொழுகையை நிறைவேற்றவேண்டும் குர்ஆன் ஓதவேண்டும் என்ற எண்ணத்தில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு தக்வாவுடன் மேற்கொள்ள வேண்டும் என எண்ணுகிறார். (இவை “நன்மையை நாடி செய்தல்” என்கின்ற போது அவை இபாதத் களாக மாறிவிடுகின்றன)

இதற்கான ஆதாரங்கள் பல உள்ளன. அதில் ஒன்றை கவனியுங்கள்.
அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீ செலவு செய்கின்ற ஒவ்வொன்றுக்கும் கூலி வழங்கப்படும். எந்தளவுக்கெனில், உனது மனைவியின் வாயில் நீ போடுகின்ற ஒரு கவளத்திற்குக் கூட நன்மை வழங்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஃதிப்னு அபீ வக்காஸ் (ரழி) | நூல்: (புகாரி, முஸ்லிம்)

  1. ஸஹாபாக்கள் மற்றும் ஸலபுஸ் ஸாலிஹீன்கள் தாங்கள் மேற்கொள்கின்ற எக்காரியத்திலும் -அது உலக விவகாரங்களாக இருந்தாலும் சரியே- நிய்யத்தை ஒழுங்குபடுத்தி அக்காரியத்தை பலனுள்ள இபாதத்தாக மாற்றுவதில் கவனம் செலுத்தக்கூடியவர்களாக இருந்தார்கள்.

முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் அபூ மூஸல் அல் அஷ்அரி (ரழி) அவர்களைப் பார்த்து நீங்கள் எவ்வாறு குர்ஆன் ஓதுகிறீர்கள் என்று கேட்டார்கள். நான் நின்ற நிலையிலும் என் வாகனத்தில் உட்கார்ந்த நிலையிலும் குர்ஆன் ஓதுகிறேன் என அபூமூஸா (ரழி) பதிலளித்து விட்டு, முஆதே! நீங்கள் எவ்வாறு குர்ஆன் ஓதுகிறீர்கள் எனக் கேட்டார்கள். நான் இரவின் முதல் பகுதியில் உறங்கி விடுகிறேன். என் தூக்கத்தின் ஒரு பகுதியை முடித்து விட்டு எழுந்து அல்லாஹ் எனக்கு விதித்தளவு குர்ஆன் ஓதுகிறேன். என் தூக்கத்திலிருந்து எழுவதற்கு பிரதி பலனை அல்லாஹ்விடம் எதிர்பார்ப்பது போல் என் தூக்கத்திற்குமான நன்மையையும் (அவனிடம்) எதிர்பார்க்கிறேன் என்று முஆத் (ரழி) கூறினார்கள். (நூல்: புகாரி)

இப்னு அபீ ஷைபாவில் வரக்கூடிய இன்னுமொரு அறிவிப்பில், இரவின் இறுதியில் நின்று வணங்குவதற்கு இரவின் ஆரம்பப் பகுதியில் தூங்குவதை பலமாகக் கருது கிறேன். என் விழிப்பில் (நான் செய்யும் காரியங்களுக்கு) பிரதிபலனை அல்லாஹ் விடம் எதிர்பார்ப்பது போல் என் தூக்கத்திலும் எதிர்பார்க்கிறேன் என முஆத் (ரழி) கூறினார்கள்.

தாபிஈன்களில் ஒருவரான அல்ஜலீல் சுபைத் இப்னு அல் ஹாரிஸில் யாமிய் (ரஹ்) கூறும்போது, உண்ணுதல் பருகுதல் உட்பட எல்லா விவகாரங்களிலும் நீய்யத்து வைப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றார்கள்.
(நூல்: ஷூஅபுல் ஈமான் 5ஷ350 ஸிபதுஸ் ஸப்வா 3ஷ99)

  1. (இஹ்லாஸ்) உளத் தூய்மையுடன் பணியாற்றுவது முஸ்லிமின்மீதுள்ள கடமையாகும். அல்லாஹ்வுடைய திருப்தியையும் மறுமை வீட்டின் மீதுள்ள திருப்தி யையும் நாடி தன்னுடைய செயல்களை (அமல்களை) அமைத்துக் கொள்வது கட்டாயமாகும்.

وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ

நேரிய வழி நின்று, கலப்பற்றவர்களாக அல்லாஹ்வுக்குக் கட்டப்பட்டு அவனை வணங்குமாறு அவர்கள் ஏவப்பட்டுள்ளார்கள். (98:5)

‘அமல்’ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு  அல்லாஹ்வுக்கென்று  கலப்படமற்ற தூய உள்ளத்துடன் (இஹ்லாஸூடன்) செய்வதாக அந்த அமல் இருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனை. இரண்டாவது நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழி முறைக்கேற்பவும் அந்த அமல் இருக்க வேண்டும். எல்லா அமல்களும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இவ்விரு நிபந்தனைகளுமே அடிப்படையாகும்.

6. அமல்கள் புரியும்போது முகஸ்துதிக்கு இடம்கொடுப்பது ஹராமாகும். அது சிறிய இணை வைத்தல் என்ற பாவத்தைச் சாரும். (முகஸ்துதி (ரியா) என்பது மக்கள் பார்க்க வேண்டும், புகழ வேண்டும் என்பதற்காகச் செய்கின்ற காரியமாகும்.)

உதாரணமாக, மக்கள் பார்ப்பதற்காக தன்னுடைய தொழுகையை நேர்த்தியாக நிறைவேற்றுகிறார். அல்லது மக்கள் புகழ வேண்டும் என்பதற்காக தர்மம் செய்கிறார் எனில் அந்த முகஸ்துதி அந்த அமலை சீர்கெடுத்து விடும்.

ஹதீஸுல் குத்ஸியில் அல்லாஹ் கூறுவதாவது:
நான் இணைவைப்பாளர்களின் இணை வைத்தலை விட்டும் தேவையற்றவன். எவர் ஒருவர் (எனக்காக) ஒரு செயலை  செய்து, அதில் என்னுடன் வேறொருவனை இணையாக்கினால் நான் அவரை விட்டும் அவரது இணை வைத்தலை விட்டும் நீங்கி விடுகிறேன் என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி) | நூல்: முஸ்லிம்)

  1. முகஸ்துதிக்கு அஞ்சி நற்காரியங்களை விட்டு விடலாகாது.

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) கூறும்போது,
தொடர்ச்சியாக தொழுதுவந்த லுஹாத் தொழுகையையோ அல்லது இரவு வணக்கத்தையோ அல்லது அது போன்ற (சுன்னத்தான)அமல்களையோ எங்கிருந்தாலும்  நிறைவேற்ற வேண்டும். மக்கள் மத்தியில், தான் இருப்பதற்காக (அவைகளை செய்தால் முகஸ்துதியாகி விடுமோ என்று)அஞ்சி அந்த அமல்களை அவர் விட்டு விடலாகாது.

உள்ளத் தூய்மையினை பால்படுத்தக் கூடியவைகளிலிருந்தும், முகஸ்துதியிலிருந்து பாதுகாப்பு பெறுகின்ற முயற்ச்சிகளிலும் அவரது செயற்பாடுகள் அமையபெறு வதனால் -அல்லாஹ்வுக்கு இரகசியமாக  அக்கடமையினை செய்கிறார் என்ற  அவரது உள்ளத்தினை அல்லாஹ் அறிவான் என்பதால்-அவர் அவைகளை செய்திட வேண்டும்.

மேலும் கடமையாக்கப்பட்ட வணக்கங்களையும் முகஸ்துதிக்கு அஞ்சி அவர் விட்டு விடமுடியாது. அதனை உள்ளத் தூய்மையுடன் செயலாற்றுமாறு பணிக்கப்பட வேண்டும் என்கிறார்கள்.(நூல்: மஜ்முஊ பதாவா23ஷ 173.174)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *