Featured Posts

நபியின் மீது எப்படி நேசம் வைப்பது?

– யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்

இந்த உலகத்தில் நேசம் வைப்பதற்கு தகுதியான முதன்மையானவர் நபி (ஸல்) அவர்கள் ஆகும்.தனது தாய், தந்தை, ஏனைய அனைவர்களை விடவும், உலகத்தில் உள்ள அனைத்து படைப்புகளை விடவும் நபியவர்கள் மீது நேசம் வைக்க வேண்டும். ஒரு நபித் தோழர், யா ரஸூலுல்லாஹ் ! மறுமை நாள் எப்போது வரும் என்று நபியிடம் கேட்ட போது, அந்த மறுமைக்கு என்ன தயார் பண்ணி வைத்துள்ளீர்கள் என்று நபியவர்கள் திரும்ப கேட்டார்கள் . அதற்கு நான் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நேசிக்கிறேன் என்று கூறினார். உடனே நபியவர்கள் நீங்கள் யாரை நேசிக்கிறீர்களோ அவர்களுடன் மறுமையில் இருப்பீர்கள் என்று நற்செய்தி கூறினார்கள்.

நேசம் என்றால் நபியவர்கள் காட்டித் தந்த கொள்கையை நமது வாழ் நாளில் நடை முறைப்படுத்துவதாகும். இன்று நபியவர்கள் இல்லை, அப்படி என்றால் நபியவர்கள் மீது எப்படி உண்மையான நேசத்தை நாம் வெளிப்படுத்துவது. நான் நபியை நேசிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருப்பது நேசமாகி விடுமா? அல்லது நபிக்காக கவிதை படிக்க போகிறேன் என்றால் நேசமாகி விடுமா? அல்லது நபிக்காக அன்னதானம் வழங்கப் போகிறேன் என்றால் நேசமாகி விடுமா?

இந்த உலகத்தில் நபியை நேசித்த உண்மையான முதல் சமுதாயம் அந்த ஸஹாபாக்களாகும். அந்த ஸஹாபாக்கள் நபியின் மீது எப்படி நேசத்தை வெளிப்படுத்தினார்கள். ஒவ்வொரு வருடமும் பாடல், கவிதைகளை படித்து நேசத்தை வெளிப்படுத்தினார்களா? அல்லது நபிக்காக ஊர்வலங்கள் போய் நேசத்தை வெளிப்படுத்தினார்களா? மௌலூது என்ற பெயரில் நபியின் மீது சினிமா பாட்டு மெட்டில் பாடல்கள் படிப்பவர்கள் மட்டும் தான் நபியின் மீது நேசம் வைக்கிறார்கள் என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்? ஆனால் அந்த கண்ணீர் பொய்யானதாகும். நபியின் மீது நேசம் என்ற பெயரில் அந்நிய கலாசாரங்களை இஸ்லாத்திற்குள் நுழைக்கும் வேசதாரிகள். நபியின் மீது நேசிக்கிறோம் என்று சொல்லும் ஒரு கூட்டம் கேக் வெட்டி HAPPY BIRTH DAY MOHAMED என்று அப்படியே யூத, நஸாரா கொள்கையை நடை முறைப்படுத்துகிறார்கள். கேட்டால் நாங்கள் சரியாக நபியை நேசிக்கிறோம் என்கிறார்கள்.

இன்னொரு கூட்டம் புலி வேசம், கரடி வேசம் என்று பல மிருக வேசங்களை போட்டுக் கொண்டு இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா நாரே தக்பீர் அல்லாஹூ அக்பர், கிரிகட் மைதானத்தில் கத்துவதை போல ரோட்டில கத்திக் கொண்டு ஊர்வலம் போகிறார்கள் கேட்டால் இது தான் நபியின் மீது உண்மையான நேசம் என்கிறார்கள்? ரபியுள் அவ்வல் பன்னிரெண்டு அன்று பைத் படித்துக் கொண்டு ஊர், ஊராக ஊர்வலம் போகிறார்கள். என்ன ஊர்வலம் என்றால், இன்று நபியவர்கள் பிறந்த தினம், நபிக்காக நாங்கள் நேசத்தை வெளிப்படுத்துகிறோம் என்று கூறகிறார்கள். கிறிஸ்தவர்கள் இயேசு பிறந்த தின விழாவுக்காக ஆண்கள் பெண்கள் இரவு பன்னிரெண்டு மணிக்கு ஊர்வலம் போகிறார்கள். பௌத்தர்கள் புத்தர் பிறந்த தினம் அல்லது ஞானம் பெற்ற நாள் என்று ஆண்களும், பெண்களும், ஊர்வலம் போகிறார்கள்.

ஒவ்வொரு அரசியல் தலைவர்களுக்கும், மற்றும் நடிகை, நடிகர்களுக்கும் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், என்று ஆண்களும் பெண்களும் வீதியிலே ஊர்வலம் போகிறார்கள், அன்னதானம் வழங்குகிறார்கள், அதே பாணியில் நம்மவர்களும் நபிக்காக ஊர்வலம் என்ற பெயரில் அந்நிய கலாசாரத்தை அப்படியே செய்கிறார்கள். அந்நியர்கள் வீடுகளையும், வீதிகளையும் கலர் பல்புகளால் அலங்கரித்து விழா கொண்டாடுகிறார்கள். நம்மவர்களும் அப்படியே செய்கிறார்கள். யூத, நஸராக்களை சாணுக்கு, சாண், முலத்திற்கு முலம் பின் பற்றுவார்கள் என்று நபியவர்கள் எச்சரித்த கூட்டத்தை நாம் நேரடியாக காணக் கூடியதாக உள்ளது. அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்.

இது ஒரு புறம் இருக்க, நபியவர்களின் மீது நேசம் வைக்கிறோம் என்று சொல்லக் கூடியவர்கள் நபியவர்கள் காட்டிய சுன்னாக்களை நடை முறைப்படுத்துவது கிடையாது. எடுத்துக் காட்டினாலும் அது எங்களுக்கு தேவை இல்லை என்ற அடிப்படையில் புறக்கணித்து நடப்பதை காணலாம். சுன்னாக்களை புறக்கணித்து அந்நிய கலாசாரங்களை நடை முறைப்படுத்துகிறார்கள் என்றால் இவர்கள் உண்மையான நேசர்களா? மௌலூது ஓதுக் கூடிய அதிகமானவர்களிடம் நபியவர்களால் வலியுறுத்தி சொல்லப்பட்ட தாடி இல்லை. நபியவர்களை நேசிக்கிறோம் என்று சொல்லக் கூடியவர்கள் தனது முகத்தாலே நபியவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? கரண்டைக் காலுக்கு கீழாக ஆடை அணிந்து மௌலூதும், ஊர்வலமும், ஆனால் நபியின் மீது நேசம் என்று சொல்வார்கள். இப்படி ஒவ்வொரு சுன்னத்துகளையும் பட்டியல் போட்டால் அதிகமான நடை முறை சுன்னத்துகளை விரும்பியோ, விரும்பாமலோ இவர்கள் புறக்கணிக்கிறார்கள்.

எனவே நபிவர்களின் சுன்னாக்களை அமல்களில் நடை முறைப்படுத்துவோர்கள் தான் உண்மையாக நபியை நேசிப்பவர்கள். மற்றவர்கள் மழைக்கு பெய்யும் காளாண்களை போல காலத்துக்கு காலம் மட்டும் பாட்டு பாடி நேசம் என்று கோஷம் எழுப்புவர்கள்.

சிந்தியுங்கள், உண்மையான நேசத்தை வெளிப்படுத்துங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *