ஒரு நல்ல மனிதரின் அடக்கத்தலத்தில் செய்யும் செயல் எல்லை மீறும் போது அது மரித்தவரை விக்கிரகத்திற்கு சமமாக்கும்.
‘யா அல்லாஹ்! என்னுடைய அடக்கத்தலத்தை காஃபிர்களின் விக்கிரகத்தைப் போன்று செய்து விடாதே. தங்கள் நபிமார்களின் அடக்கத்தலத்தை மஸ்ஜிதுகளாக மாற்றியமைத்த மக்கள் மீது அல்லாஹ்வின் கோபம் கடுமையானது.’ என நபி முஹம்மத் (ஸல்) கூறியதாக இமாம் மாலிக் தன் முவத்தா என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்கள்.
‘நீங்கள் (வணங்கும்) லாத்தையும், உஜ்ஜாவையும் கண்டீர்களா?’ (53:19) என்ற வசனத்திற்கு முஜாஹித். மன்சூர். சுபியான் மூலம் இப்னு ஜரீர் (அத்-தப்பாரி) பின்வரும் விளக்கம் கொடுக்கிறார்.
‘லாத் என்ற மனிதர் கோதுமை அல்லது பார்லி மாவும் நெய்யும், தண்ணீரும் கலந்து சவிக் என்ற உணவை செய்து மக்காவுக்கு யாத்திரை செய்யும் மக்களுக்கு பகிர்ந்து கொடுப்பார். லாத் இறந்த பிறகு அவரை அடக்கிய இடத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அவருடைய ஆசிவாதம் தேடி உட்கார்ந்து இருப்பார்கள்.’
இதே கருத்தை இப்னு அப்பாஸ் (ரலி) இடமிருந்து அபுல் ஜவ்ஸா (ரலி) அறிவிக்கிறார்கள்.
‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்ர் ஸ்தானங்களை தரிசிக்கும் பெண்களை சபித்தார்கள். அதோடு கப்ர் ஸ்தானங்களில் மஸ்ஜிதுகள் கட்டுபவர்களையும், விளக்குகள் எரித்து அவற்றை பிரகாசமாக வைப்பவர்களையும் சபித்தார்கள்.’ என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள். அபு தாவுத், அத்-திர்மிதி, இப்னு மாஜா, அன் நஸாய் ஆகிய அனைவரும் இந்த ஹதீஸை உறுதிப் படுத்துகிறார்கள்.
இப்பாடத்தின் முக்கிய் அம்சங்கள்:
* விக்கிரகங்களைப் பற்றிய விளக்கம்.
* வணக்கங்களைப் பற்றிய விளக்கம்.
* பிற்காலத்தில் ஏற்படக்கூடும் என்ன அஞ்சிய தீங்குகளைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினார்கள்.
* ‘யா அல்லாஹ்! என்னுடைய அடக்கத்தலத்தை விக்கிரகத்தைப் போன்று ஆக்கி விடாதே…’ என்ற துஆவுடன் சவக்குழிகளை தம் வணக்கத்தலமாக அமைத்துக் கொண்டமக்களையும் குறிப்பிட்டார்கள்.
* சவக்குழிகளின் மீது வணக்கம் புரியும் மக்கள் மேல் ஏற்படும் அல்லாஹ்வின் கடுமையான கோபம்.
* இஸ்லாத்திற்கு முன்பு மக்கள் மத்தியில் லாத் என்ற விக்கிரக ஆராதனை மக்காவில் எப்படி தொடங்கியது என்ற விளக்கம்.
* லாத் என்பவர் ஒரு நல்ல மனிதர். அவர் இறந்த பின் அவரை அடக்கிய இடத்தில் ஏற்பட்ட விளைவுகளும், லாத் என்ற பெயரில் விக்கிரக ஆராதனை ஏற்பட்ட காரணமும்.
* கப்ர் ஸ்தானங்களை தரிசிக்கும் பெண்களையும், கப்ருகளை விளக்குகள் போட்டு அலங்கரிப்பவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சாபம் செய்த முறை.
“ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்” என்ற நூலில் இருந்து.
அரபி மூலம்: அப்துல் அஸீஸ் அல் ஸோமர்.
தமிழ் மொழி பெயர்ப்பு: ஜாஸிம் பின் தய்யான்.
இன்னும் வரும்.