ஷிர்க்கை நோக்கி இட்டுச்செல்லும் எல்லா வழிகளையும் முஸ்தபா (ஸல்) தடுத்தார்கள்.
‘(விசுவாசிகளே!) உங்களிடமிருந்தே திட்டமாக ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார்; (உங்களுக்கு யாதொரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் கஷ்டப்படுவது அவருக்கு மிக வருத்தமாக இருக்கும்; உங்கள் மீது மிக்க பேராசை கொண்டவர்; விசுவாசிகளோடு மிக இரக்கமுள்ளவர்; மிகக் கிருபையுடையவர். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் (உம்மை ஏற்காது) விலகிக் கொண்டால் (அவர்களிடம்) நீர் கூறுவீராக, அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன், அவனைத் தவிர வணக்கத்திற்குரிய (வேறு) நாயனில்லை, அவன் மீது என் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக நம்பிக்கை வைத்து உள்ளேன், அவனே மகத்தான அர்ஷின் அதிபதி (9:128-129)
‘உங்கள் வீடுகளை மையத் அடக்கும் தலமாக ஆக்க வேண்டாம். என்னுடைய அடக்கத்தலத்தை கொண்டாட்டம் நடத்தும் இடமாக ஆக்க வேண்டாம். என்மீது சலாம் கூறுங்கள். நீங்கள் எங்கிருந்து எனக்கு சலாம் கூறினாலும் அவை எனக்கு அறிவிக்கப்படும்.’ என முஹம்மது நபி (ஸல்) கூறியதாக அபு ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். ஆதாரம்: நேர்மையான அறிவிப்பாளர்கள் மூலம் அபுதாவுத்.
நபி (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்திற்குச் சென்று அங்கு துஆ செய்யும் ஒருவரைக் கண்ட அலி பின் ஹுசைன் அவரை அக்காரியத்திலிருந்து தடுத்து அவருக்கு பின்வருமாறு கூறினார். ‘நபி (ஸல்) அவர்களிடமிருந்து என் பாட்டனாரும் (அலி ரலி), அவரிடமிருந்து என் தந்தையும் கேட்டு எனக்கு அறிவித்த ஹதீஸ் ஒன்றை கூறவா? ‘என் அடக்கத்தலத்தை கொண்டாட்டம் நடத்து இடமாக ஆக்காதீர்கள். அதே போன்று உங்கள் வீடுகளையும் மையத் அடக்கும் இடமாக ஆக்காதீர்கள். என் மீது சலாம் கூறுங்கள். நீங்கள் எங்கிருந்து சலாம் கூறினும் அவை எனக்கு அறிவிக்கப்படும்.’ ஆதாரம்: இமாம் அல் மக்தஸ்ஸியின் அல் முஃஹ்தரா என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.
இப்பாடத்தின் முக்கிய அம்சங்கள்.
* ஷிர்க்கின் எல்லையிலிருந்து தன் உம்மாக்களை கூடியவரை தூர விலக்கி வைப்பதற்கு நபி (ஸல்) இயன்ற அளவு முயற்சி செய்தார்கள்.
* எங்களுடைய நல்வாழ்வுக்காகவும், வெற்றிக்காகவும் நபி (ஸல்) காட்டிய அக்கறையும், எங்கள் மீதுள்ள கருணையும்.
* கப்ரு ஸ்தானங்களை தரிசித்தல் நற்கருமங்களில் ஒன்றாக இருப்பினும் தன்னுடைய அடக்க ஸ்தலத்தை குறிப்பிட்ட முறையில் தரிசிப்பதை நபி (ஸல்) முற்றாகத் தடுத்தார்கள்.
* கப்ரு ஸ்தானங்களை அளவுக்கு மீறி தரிசிப்பதையும் நபி (ஸல்) தடுத்தார்கள்.
* வீடுகளில் நஃபிலான வணக்கங்களை செய்யுமாறு நபி (ஸல்) மக்களுக்கு ஊக்கம் கொடுத்தார்கள்.
* மையத் அடக்கும் ஸ்தானங்களில் வணக்கம் புரியக் கூடாது என்ற தடை ஸஹாபாக்களும் அறிந்த விஷயமாகும்.
* நபி (ஸல்) அவர்கள் மீது ஒருவர் எங்கிருந்து சலாம் கூறினாலும் அது அவர்களை சென்றடையும் என்ற விளக்கம். சிலருடைய பிழையான கருத்தின்படி நபி (ஸல்) அவர்களின் கப்ரின் அருகில் நெருங்கி நின்று சலாம் கூற வேண்டிய அவசியமில்லை என்பது தெளிவாகிறது.
* ‘அல்-பர்ஸஹ்’ என்ற நிலையில் இருக்கும் நபி (ஸல்) அவர்களுக்கு உம்மத்துக்கள் கூறும் சலவாத்தும் சலாமும் தெரிவிக்கப்படும்.
“ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்” என்ற நூலில் இருந்து.
அரபி மூலம்: அப்துல் அஸீஸ் அல் ஸோமர்.
தமிழ் மொழி பெயர்ப்பு: ஜாஸிம் பின் தய்யான்.
பாடம் முடிவுற்றது.