8. இறைவழிப்போரும் இலட்சியமும்
அபூமூஸா அப்துல்லாஹ் இப்னு கைஸ் அல்-அன்ஸாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: ‘ஒருவன் வீரத்திற்காகப் போர் புரிகிறான். இன்னொருவன் மனமாச்சரியத்திற்காகப் போர் புரிகிறான்., வேறொருவன் முகஸ்துதிக்காகப் போர் புரிகிறான். இவர்களில் இறைவழியில் போர் புரிபவர் யார்? அதற்கு நபி(ஸல்) அவர்கள் இறைமார்க்கம் மேலோங்கித் திகழ்வதற்காகப் போர் புரிபவர் யாரோ அவர்தான் இறைவழியில் உள்ளவர்’ (நூல்: புகாரி, முஸ்லிம் )
தெளிவுரை
இறைமார்க்கம் மேலோங்கித் திகழ்வதற்காக… எனும் வார்த்தை அல்லாஹ்வுக்காகப் போரிடும் எண்ணத் தூய்மையைச் சுட்டிக் காட்டுகிறது. இதனடிப்படையில் தான் இமாம் நவவி (ரஹ்) அவர்கள் இந்த நபிமொழியை இங்கு பதிவு செய்துள்ளார்கள்.
வீரம், மனமாச்சரியம், முகஸ்துதி ஆகிய மூன்று நோக்கங்களில் ஒன்றுக்காகப் போர் செய்வது பற்றி வினவப்பட்டது.
வீரத்திற்காகப் போர் செய்வதன் கருத்து: மாவீரன் ஒருவன் போர்க்களம் புக வேண்டும். தன் வீர சாகசங்களை வெளிப்படுத்த வேண்டும் எனப் பெரிதும் விரும்புகிறான். அதற்கொரு களம் அவனுக்குத் தேவைப்படுகிறது. போர்ச் சூழலை யாரேனும் தோற்றுவிக்க மாட்டார்களா என ஓயாது விரும்புகிறது அவனது உள் மனம்! இந்த மனநிலையே போர் செய்யுமாறு அவனைத் தூண்டுகிறது!
மனமாச்சரியத்திற்காகப் போர் செய்வதென்பது, மொழி, இனம், நாடு போன்ற குறுகிய மனப்பான்மையின் அடிப்படையில் போர் செய்வதாகும்.
முகஸ்துதிக்காகப் போர் செய்வதென்பது, ஒருவன் தன்னை வீரனென்று எல்லா மக்களும் புகழ்ந்துரைக்க வேண்டும். தனது வீரத்தைக் கண்டு எல்லோரும் திகைத்திட வேண்டும் என்பதற்காகப் போர் செய்வதாகும்.
இந்த மூன்று மனிதர்களையும் வரிசையாகக் குறிப்பிட்டு நபி(ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. காரணம், போர் செய்வதற்கு இன்னும் பலகாரணங்கள் இருக்கலாம். மண்ணாசை. பெண்ணாசை, பொன்னாசை போன்ற பேராசைகளினால் போர்கள் நடைபெற்ற வரலாறுகள் பல உண்டு. இன்றைய இணைய தள யுகத்திலும் பேராசையினாலும் ஆதிக்க வெறியினாலும் ஆங்காங்கே பயங்கரப் போர்களும் பேரழிவுகளும் நிகழ்ந்து கொண்டிருப்பதை நாம் காண்கிறோம்.
இவ்வாறாகப் போரில் குதித்திடத் தூண்டுகோலாக அமையும் எண்ணங்கள் ஏராளமுண்டு. ஆனால் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வது என்பதென்ன? அதற்கான அளவுகோல் என்ன? இந்தக் கேள்விக்கு நபி(ஸல்) அவர்கள் ஒரே வரியில் விளக்கம் அளித்தார்கள். அதுதான் – இறை மார்க்கம் உலகில் மேலோங்கிட வேண்டும் எனும் இலட்சியத்திற்காகப் போர் செய்வது! இந்த இலட்சியத்தின் அடிப்படையிலான போர்தான் ஜிஹாத் ஃபீ ஸபீலில்லாஹ் எனும் இறைவழிப்போர்! இந்தப்போரில் இறங்குபவன் தான் இறைவழிப்போர் செய்பவன்!
ஆனால் இந்த உண்மையைப் புரியாத காரணத்தால் ஜிஹாத் தொடர்பாக மக்களிடையே பல தவறான கருத்துகள் நிலவுகின்றன. அவற்றைச் சுட்டிக்காட்டுவது நமது கடமையாகும்.
சிலர் நாங்கள் சமுதாயத்திற்காக ஜிஹாத் செய்கிறோம் என்று வீரம் பேசுகிறார்கள். இங்கே நாம் கவனிக்கவேண்டியது, அந்தச் சமுதாயம் தனது வாழ்க்கை முறையை இஸ்லாத்தின் அடிப்படையில் அமைத்துள்ளதா? இல்லையா? என்பதுதான்! இஸ்லாத்தின் வழிகாட்டலை விட்டும் சமுதாயம் விலகிச் செல்கிறதெனில், தீமைகளிலும் பாவங்களிலும் மூழ்கிக் கிடக்கிறதெனில், அந்தச் சமுதாயத்திற்காகப் போர்புரிவது அல்லாஹ்வின் பாதையில் எனும் இலக்கணத்தின் கீழ் வராது! இனவாதத்தின் அடிப்படையிலான அறியாமைக் காலத்துப் போராகவே அது கருதப்படும்!
அரேபிய நாடுகளைச் சேர்ந்த சிலர், நாங்கள் அரேபிய சமுதாயத்திற்காக- அரபிமொழி சகோதரத்துவத்திற்காகப் போர் செய்கிறோம் என்கின்றனர். இதுவும் இனவாதத்தின் அடிப்படையிலான போர்தான்! இஸ்லாம் மார்க்கம், ஏகத்துவக் கொள்கை ரீதியான சகோதரத்துவத்தைப் போதிக்கிறதே தவிர, மொழி, இன, பிரதேச ரீதியான சகோதரத்துவத்தை அல்ல!
இன்னும் சிலர் நாங்கள் தாய் நாட்டிற்காக ஜிஹாத் செய்கிறோம் என்று முழக்கமிடுகின்றனர். இதில் – ஏகத்துவக் கலிமாவை ஏற்றுக்கொண்ட ஒரு முஸ்லிமுக்கும் நிராகரிப்பாளனுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்? ஒருமுஸ்லிம் தனது தாய் நாட்டிற்காகப் போர் புரிந்தால் நிராகரிப்பாளன், அவனது தாய்நாட்டிற்காகப் போர் புரிகிறான். என்ன வித்தியாசம் இருவருக்கும்? தாய்நாட்டை நேசிப்பது ஈமானின் ஓர் அம்சமாகும் எனச் சொல்லப்படுவது நபியவர்களின் பெயரில் இட்டுக்கட்டப்பட்ட பொய்ச் செய்தியாகும்.
எனவே இறைமார்க்கத்தை மேலோங்கச் செய்யவேண்டும் எனும் இலட்சியத்தை விடுத்து இதர நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும் போர்கள் புனிதப் போர்கள் அல்ல. அவற்றில் கலந்துகொண்டு கொல்லப்படுபவன் இறைவனுக்காக உயிர் நீத்த ஷஹீத் -தியாகி அல்லன். இவ்வுலக வாழ்வையும் இழந்தவன். மறுவுலக வாழ்வையும் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாக்கியவன் என்றே அவன் கருதப்படுவான்!
தற்காப்புப் போரின் நிலை என்ன என்று இங்கு ஒரு கேள்வி எழலாம். அதாவது, உங்களை ஒருவன் கொலை செய்ய வருகிறான். அல்லது உங்கள் நாட்டை விட்டு உங்களை வெளியேற்றிடப் போர் தொடுத்து வருகிறான். அல்லது உங்கள் வீட்டில் புகுந்து சொத்துக்களைக் கொள்ளையடித்துச் செல்ல வருகிறான்., அல்லது உங்கள் மனைவி – மக்களை மானபங்கப்படுத்தும் தீய எண்ணத்துடன் நுழைகிறான் என்றால் நீங்கள் அவனை எதிர்த்துப்போர் புரியத்தான் வேண்டும். தாக்கிடத்தான் வேண்டும்!
‘ஒருதடவை நபியவர்களிடம், ஒருவன் என் வீடு புகுந்து தாக்குதல் தொடுத்தால் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், நீ அவனை எதிர்த்து பதில் தாக்குதல் தொடுத்திடு என்றார்கள்”
‘அப்பொழுது அவன் என்னைக் கொன்றால்?”
‘அவன் உன்னைக் கொன்றால் நீ ஷஹீத் எனும் வீரத் தியாகி”
‘நான் அவனைக் கொன்றால்? ”
‘நீ அவனைக் கொன்றால், அவன் நரகத்தில் வீழ்வான்”
எனப் பதில் அளித்தார்கள் நபி(ஸல்) அவர்கள் (நூல்: முஸ்லிம்)
– ஏனெனில் அவன் அட்டூழியக்காரன். அநியாயக்காரன்! அவன் முஸ்லிமாக இருந்தாலும் சரியே! அதற்கான தண்டனை நரகமே!
உங்களை உங்கள் நாட்டைவிட்டு – வீட்டைவிட்டு வெளியேற்ற வருபவனை எதிர்த்து நீங்கள் போர்புரிவதும் அவனைக் கொல்வதும் அனுமதிக்கப்பட்ட ஒன்றே! அவன் ஒருமுஸ்லிமாக இருந்தாலும் சரியே என்று சொல்கிற பொழுது, ஒருமுஸ்லிமைக் கொல்வது எப்படி அனுமதிக்கப்பட்டதாகும்? என்று கேட்காதீர்கள். அவன் ஒரு முஸ்லிம் – இறைநம்பிக்கை உடையவன் என்பது உண்மையெனில் பிறிதொரு முஸ்லிமின் உடைமைகளைக் கொள்ளை அடித்திடவும் அவன் வீட்டுப் பெண்களை மானபங்கப் படுத்திடவும் எப்படித் துணிந்தான்? ஈமான் எனும் இறைநம்பிக்கையும் இத்தகைய மாபாதகச் செயலும் ஓரிடத்தில் ஒன்றிணைவது சாத்தியமானதல்லவே!
நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: ‘ஒரு முஸ்லிமைத் திட்டுவது தீய செயலாகும். அவனோடு போர்புரிவது குஃப்ர்- இறைநிராகரிப்பாகும் ” (புகாரி)
மட்டுமல்ல, இப்படி ஒரு முஸ்லிம் மீது கொடுமையிழைக்க வரும் கொடியவனைத் தடுத்து நிறுத்தாமல்- அவனை எதிர்த்துப் போரிடாமல் கை கட்டி -வாய் பொத்தி மௌனமாக இருந்தோமானால் கொடுமையாளர்களின் கை மேலோங்கி விடும். பூமியெங்கும் அராஜகமும் குழப்பமும்தான் தலை விரித்தாடும்!
ஆக தற்காப்புப் போரின் நிலை வேறு! வேறுவகையான போர் எனில் அதில் இறைவனுக்காக, அவனது மார்க்கத்திற்காக எனும் எண்ணத்தூய்மை இருக்க வேண்டும். எண்ணத் தூய்மையே எல்லாவற்றிற்கும் அடிப்படை!
அறிவிப்பாளர் அறிமுகம் : அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்கள்
இவர்களின் இயற்பெயர் அப்துல்லாஹ். கைபர் வெற்றியின் பொழுது நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றார்கள். அபீஸீனியாவுக்கு ஹிஜ்ரத்தை மேற்கொண்டவர்களில் இவரும் ஒருவர். இவரை நபிகளார்(ஸல்) அவர்கள் யமன் தேசத்தின் சில பகுதிகளுக்கு ஆளுநராக நியமித்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் பஸராவுக்கு ஆளுநராக அவரையே நியமித்தார்கள். அபூ மூஸா (ரலி) அவர்களின் மூலமே இஸ்பஹான் மற்றும் அஹ்வாஸ் ஆகிய தேசங்கள் வெற்றி கொள்ளப்பட்டன. பிறகு உஸ்மான் (ரலி) அவர்களால் கூஃபா நகருக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார்கள். பிறகு அலீ (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அலீ (ரலி) மற்றும் முஅவியா (ரலி) இருசாராருக்கும் சமரசம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட இரு பிரமுகர்களில் இவர்கள் ஒருவர்! பிறகு எந்த அணியிலும் சேராமல் இவர் ஒதுங்கிக் கொண்டார்!
ஃபிக்ஹு சட்டங்களை அதிகம் தெரிந்தவர். குர்ஆனை கற்றறிந்ததுடன் அழகிய ராகத்துடன் அதை ஓதுபவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்கள். இவர்களிடம் இருந்து 360 நபிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அல்அஹ் நகரை வெற்றிகொண்ட பிறகு மக்கா திரும்பிய இவர்கள் ஹிஜ்ரி 50 ஆம் ஆண்டு மரணமார்கள்.
கேள்விகள்
1) வீரத்திற்காக, மனமாச்சரியத்திற்காக, முகஸ்துதிக்காக போர் புரிவதன் கருத்துக்களை விவரிக்கவும்.
2) இறைவழிப்போர் குறித்து மக்களிடையே உள்ள தவறான கருத்தை விளக்கவும். இறைவழிப்போரின் இலக்கணத்தின் கீழ் வராத போர்கள் சிலவற்றைக் கூறவும்.
3) தற்காப்புப் போரின் சட்டநிலை என்ன? அதன் ஆதாரத்தை விளக்கவும்.