Featured Posts

6. ஆலிம்கள் செய்வதெல்லாம் ஆகுமானதாகி விடுமா?

சிலர் இதைப்பற்றி எந்த ஒரு ஆலிமும் எதுவும் கூறியதில்லையே, நீங்கள் தானே புதிதாக கூறுகிறீர்கள்! அவர்களுக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்து விட்டது? என்று கேட்கின்றனர். இஸ்லாத்தின் அடிப்படையை நன்கு கற்றறிந்த அறிஞர் – ஆலிம் எவரும் இத்தீமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் இருந்ததில்லை. இறைவனுக்கு இணை வைக்கும் மாபாதக செயலாகிய நல்லடியார்களிடம் கையேந்துவதை ஆரம்பக்கால முதற்கொண்டே இறைவனுக்குப் பயந்த மார்க்க அறிஞர்கள் வன்மையாக கண்டித்து வந்திருக்கிறார்கள். இன்றளவும் கண்டித்து வருகிறார்கள். இஸ்லாத்தின் மற்ற சில அம்சங்களில் வேண்டுமானால் ஆலிம்களிடையே கருத்து வேறுபாடு இருக்கலாமே தவிர, ஈமானுக்கு வேட்டு வைக்கும் கப்று வணக்கத்தைப் பற்றிய தெளிவுகளில் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை நன்கு கற்றுணர்ந்த அறிஞர்களிடம் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அவர்கள் ஒருமித்த குரலாக இத்தீயச் செயல்களை எதிர்க்கவே செய்கின்றனர். ஆனால், கப்று வணக்கமுறைகளை ஆதரிப்போரின் கைகளில் அதிகாரமும், பொருளாதாரமும் இருப்பதால் அவர்கள், கப்று வணக்கமுறைகளுக்கு எதிரான ஆலிம்களின் குரல்கள் மக்களைச் சென்றடையாமல் தடுக்கின்றனர்.

ஆனால் ஆலிம்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் ஒரு சில சொற்பமானவர்களே, கப்று வணங்கிகளிடமிருந்து அற்ப உலக ஆதாயம் பெரும் பொருட்டு, நல்லடியார்களிடம் நேரடியாகக் கேட்டுப்பெறுவதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறி, நல்லடியார்களின் கப்றுகளில் நடைபெறும் மார்க்கத்திற்கு விரோதமான கூடு, கொடியேற்றம், சந்தனம் பூசுதல், மேளதாளம் போன்ற அனாச்சாரங்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். மேலும், இவர்களே முஸ்லிம்களிடையே புரையோடிப்போய் இருக்கும் இஸ்லாத்திற்கு எதிரான அனைத்து வகையான பித்அத்தான காரியங்களுக்கும், மூடப் பழக்கவழக்கங்களுக்கும் ஆதரவு தெரிவித்து தங்களின் வயிற்றைக் கழுவிக் கொள்கின்றனர். இத்தகையவர்கள் குர்ஆன், ஹதீஸை கூறுபவர்களைப் பார்த்து, இவர்களுக்கு என்ன தெரியும்? மார்க்கம் என்பது பெரும் கடலைப் போன்றது. இவர்கள் வெறும் மொழிப்பெயர்ப்புகளைப் பார்த்து விட்டு உளருகின்றனர் என்கின்றார்கள். நாம் கூறும் குர்ஆன், ஹதீஸ் போதனைகளில் தவறில்லாதபோது இத்தகைய வலுவற்ற வார்த்தை ஜாலங்கள் மூலம் மக்களை ஏன் திசைதிருப்ப வேண்டும்? உண்மையில் நாம் கூறுவதில் தவறு இருந்தால் அதை குர்ஆன், ஹதீஸைக் கொண்டே சுட்டிக்காட்டி நம்மை நேர்வழிப்படுத்துவது இத்தகைய ஆலிம்கள் மீது கடமையல்லவா? சிந்தித்துப்பாருங்கள்! மேலும் இந்த குர்ஆன், ஹதீஸ்களையெல்லாம் மொழிப்பெயர்த்து தந்தவர்கள் யார்? ஆலிம்கள் தானே! இவர்கள் குறை கூறுபவர்களை விடவும் தேர்ச்சி பெற்ற அறிஞர்களல்லவா? குர்ஆனையோ, ஹதீஸையோ மொழிப்பெயர்ப்புகளின் மூலம் புரிந்து கொள்ள முடியாது என்றால், நம்மிடையேயுள்ள குர்ஆன் மற்றும் ஹதீஸ் கிரந்தங்களின் பொழிபெயர்ப்பின் நிலை என்ன? அறிஞர்பெருமக்கள் ஏன் பல ஆண்டுகளாக அயராது உழைத்து நமக்கு மொழிபெயர்த்து தரவேண்டும்? அவை எல்லாம் விழலுக்கிறைத்த நீரா? இத்தகைய பசப்பு வார்த்தைகளைக் கூறி மக்களை திசைதிருப்பும் இவர்களைக் குறித்து அல்லாஹ் தன் திருமறையிலே கடுமையாக எச்சரிக்கின்றான்.

“நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்” (அல்குர்ஆன்: 2:42)

“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கி பின்னரும் – யார் மறைக்கிறார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். மேலும், சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்” (அல்குர்ஆன்: 2:159)

‘மார்க்கத்தின் மீது பொய்யை ஏற்றிச் சொல்வது தீமைகளில் மிக மோசமானதும், பொய்யின் வகைகளில் மிக கொடியதும் ஆகும். அதற்கு கூலி நரகமே’ என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ஆதாரநூல்: புகாரி.

மேலும், அல்லாஹ் தன் திருமறையில் (2:160)ல் கூறி இருப்பதைப் பார்த்து, தவறை உணர்ந்து, பாவமன்னிப்பு கோரி அவனின் பொருத்தத்தை பெற்றிட வேண்டும்.

எனவே சமுதாய மக்களுக்கு மார்க்க அறிவை புகட்டி சமுதாயத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பிலுள்ள சமுதாயத்தின் கண்களான உலமாபெருமக்கள் அல்லாஹ்வும், அவனது ரஸூலும் நமக்கு காட்டித்தந்த உண்மையான இஸ்லாத்தை எதற்கும், எவருக்கும் பயப்படாமல் துணிந்துக்கூறி, நாளை மறுமையில் அல்லாஹ் அளிக்கவிருக்கும் அளப்பரிய செல்வங்களைப் பெற்றிட வேண்டுகிறோம். அல்லாஹ் அவர்களுக்கு இத்தகைய ஆற்றலைத் தந்து மார்க்க சேவை செய்வதன் மூலம் ஈருலகிலும் நற்பேருகளைப் பெற வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போமாக!

ஆக்கம்
இஸ்லாமிய கல்வி மையம்
கூத்தாநல்லூர்

ஆய்வு இனிதே நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *