தகவல் மூலம்: www.islam-qa.com
‘ஸூஃபியிஸம்’ (Sufyism) என்ற சொல் நபி (ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது, நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் காலத்திலோ அல்லது தாபியீன்கள், தபஅ தாபியீன்கள் காலத்திலோ அல்லது கண்ணியத்திற்குரிய நாற்பெரும் இமாம்களின் காலத்திலோ இருந்ததில்லை. ‘ஸூஃபியிஸம்’ எங்கிருந்து இஸ்லாத்திற்கு வந்தது என்று ஆராய்ந்தவர்கள் இந்தப்பெயர் வந்ததற்கான இரண்டு காரணங்களைக் கூறுகின்றனர்.
* ‘ஸூஃப்’ (Soof) என்ற கம்பளி அணிந்து திரிந்தவர்களிடமிருந்து வந்ததே ‘Sufyism’ என்ற ஸூஃபித்துவம் என்கின்றனர் சிலர்.
* ‘ஸோஃபியா’ (Sophia) என்ற கிரேக்க சொல்லிலிருந்து தழுவி வந்ததே இந்த ஸூஃபியிஸம் என்கின்றனர் மற்றும் சிலர்.
இந்த ஸூஃபித்துவம் தஸவ்வுஃப், மறைவான ஞானம் அறியும் வழி, ஆன்மீகப்பாதை என்றெல்லாம் பல வழிகளில் அறியப்படுகிறது. இதைப்பின்பற்றிய ஸூஃபிகள் இஸ்லாத்தில் தரீக்காக்கள் என்ற பெயர்களில் பல பிரிவுகளை ஏற்படுத்தி விட்டனர். ஸூஃபியிஸம் தோன்றிய ஆரம்பக்காலத்தில் வாழ்ந்த ஸூஃபிகளுக்கும், பிற்காலத்தில் வாழ்ந்த ஸூஃபிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. பிற்காலத்தில் வந்தவர்களே அமல்கள் என்ற பெயரில் இஸ்லாத்தில் பித்அத்துகளை உருவாக்கி அவற்றில் ஷிர்க்கையும் கலந்து விட்டனர். தரீக்கா என்ற அரபுச் சொல்லுக்கு ‘வழி’ என்றும் ‘பாதை’ என்றும் பொருள்படுகிறது. ஸூஃபிகள் இதற்கு ‘இறைவனை அடையும் வழி’ என்று கூறுகிறார்கள். மேலும் இந்த ஸூஃபிகள் இறைவனை அடைவதற்கு அல்லாஹ் ஸுப்ஹானஹு வத்த ஆலா, ரஸூல் (ஸல்) அவர்கள் மூலம் அருளிய ‘ஷரீஅத்’ என்ற தெளிவான சட்டங்கள் போதாது என்றும் இதைத்தவிர இவர்களின் புதிய கண்டுபிடிப்பான ‘தரீக்கத்’ ‘ஹகீக்கத்’ ‘மஃரிஃபத்’ போன்ற படித்தரங்களையும் கடந்து வரவேண்டும் எனக் கூறுகின்றனர். மேலும், இந்த ஸூஃபிகள் கூறுகிறார்கள். ஒருவன் இந்த படித்தரங்களை ஒரு ‘குரு’ (ஷெய்கு அல்லது பீர்) துணையின்றி தானாகவே கடந்து வரமுடியாது என்றும் கூறுகின்றனர். ஷெய்கு உடைய பைஅத் பெற்றால் தவிர ஒருவன் மோட்சம் பெற முடியாது என்பதும் இவர்களின் வாதமாகும்.
இந்த ஸூஃபித்துவத்திற்கும் இவை மூலம் உருவான ஸாதுலிய்யா தரீக்கா, காதிரிய்யா தரீக்கா, நகஷபந்தியா தரீக்கா, நூரிய்யா தரீக்கா இதுபோன்ற இன்னும் இருநூறுக்கும் மேற்பட்ட தரீக்காக்களுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லை. இவைகள் எல்லாம் இவர்களின் வெறும் கற்பனைகளாகும். நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையான ‘மார்க்கத்தில் புதிதாக உருவாகும் அமல்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்; புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொன்றும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்திற்கு உரியவை’ இன்னும் இதுபோன்ற எண்ணற்ற ஹதீஸ்களின்படி இவைகள் அனைத்திலிருந்தும் ஒரு முஸ்லிம் ஒதுங்கியிருக்க வேண்டும்.
இனி இந்த ஆய்வு கட்டுரையில், ஸூஃபியிஸம் என்பது குர்ஆன் மற்றும் ஹதீஸ்களுக்கு எவ்வாறு முரண்படுகிறது என்பதை ஆராய்வோம்.