நித்திய ஜீவனும், இணை-துணை அற்றவனுமான ஏக இறைவன் ஒருவன் மீதே முஸ்லிம்கள் நம்பிக்கைக் கொள்கின்றனர். மேலும், அவனால் படைக்கப்பட்ட வானவர்கள், மனித குலத்துக்கு அவனால் அனுப்பி வைக்கப்பட்ட தூதர்கள் ஆகியோரையும் நம்புகின்றார்கள். அது மட்டுமல்ல, இவ்வுலக அழிவுக்குப் பின்னால் ஏற்பட இருக்கும் மறுமைநாளின் மீதும் அவர்கள் பூரண நம்பிக்கைக் கொண்டிருக்கின்றார்கள். மேலும் இந்த உலகில் தாம் புரிந்த செயல்களுக்கு அப்போது கணக்கு வாங்கப்படும் என்பதிலும் அசைக்க முடியாத நம்பிக்கையை அவர்கள் கொண்டிருக்கின்றனர். அனைத்துக்கும் மேலாக, மனித இனம் முழுவதின் மீதும் இறை ஆதிக்கம் மேலோங்கி நிற்கின்றது; மேலும், இந்த உலக செயற்களம் தற்காலிகமானது; நிரந்தர வாழ்வு மரணத்துக்குப் பின்னால் உள்ள வாழ்வு தான் என்பதில் முஸ்லிம்கள் அசையாத நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
மேலும், உலகின் ஆதிமனிதரும், முதல் இறைத்தூதருமான ஆதம் (அலை) அவர்கள் துவங்கி, நூஹ், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், யூஸுஃப் அய்யூப், மூஸா, ஹாரூன், தாவூத் ஸுலைமான் இல்யால், யூனுஸ், யஹ்யா மற்றும் ஈஸா ஆகிய இறைத்தூதர்கள் அடங்கிய தூதுத்துவ சங்கிலித் தொடரை முஸ்லிம்கள் ஏற்றுப் போற்றுகின்றார்கள்!
இந்தத் தொடரைப் பூர்த்திச் செய்யும் வகையில் இறைவன் தனது இறுதித்தூதை மனிதக் குலத்துக்கு வழங்கினான். அதனைக் கொண்டு வந்தவர் தாம் முஹம்மத் (ஸல்) அவர்கள்! வானவர் தலைவர் ஜிப்ரயீல் அவர்கள் மூலம் இறைவன் வழங்கிய இந்த இறுதித்தூது முன்சென்ற இறைத்தூதர்களின் செய்தியை மெய்ப்படுத்திக் காட்டக்கூடியதாகவும், அவற்றை உறுதிப் படுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது.
நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் (IPC)- தமிழ் பிரிவு
குவைத்.