மறுமை நாள்
(Day Of Resurrection)
உஸ்தாத் எம்.ஏ.எம் மன்ஸூர் நழீமீ B.A. (Hon) Cey.
வெளியீடு:
இஸ்லாமிய நிலையம் (Islam Presentation Committee)
குவைத்
முன்னுரை
மறுமை நாள் நம்பிக்கை அல்குர்ஆனில் மிக அதிகமாக வலியுறுத்தப்படுகிறது. இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாக அது கொள்ளப்படுகின்றது. அல்லாஹ் நீதியாளன், யாருக்கும் அவன் அநியாயம் செய்வதில்லை என்ற இறை பண்பை விளக்குவதாக மறுமை வாழ்வு அமைகிறது. அத்தோடு அல்லாஹ் ஞானமும், அறிவும் கொண்டவன். அவன் செயல்களுக்கு அர்த்தமிருக்கும். வீணாக, விளையாட்டாக அவன் எதனையும் செய்வதில்லை என்ற கருத்தையும் மறுமை வாழ்வின் ஊடாகப் புரிந்து கொள்ள முடிகிறது. மறுமை வாழ்வு என்று ஒன்றில்லாவிட்டால் இந்த வாழ்வுக்குப் பொருள் இருக்காது. வீணானதாகவும், அர்த்தமற்றதாகவுமே இந்த வாழ்வைக் கொள்ள வேண்டி வரும். இந்த வகையில் தான் மறுமை நம்பிக்கை என்பது இறை நம்பிக்கையின் விளைவாக அமைகிறது.
நபிமார்களின் அடிப்படைப் பணி நன்மாராயம் கூறுவதும், எச்சரிக்கை செய்வதுமாகும் என அல்குர்ஆன் அடிக்கடி சொல்கிறது. நன்மாராயங்களில் முதன்மையானது மறுமை நாளில் சிறந்த வாழ்வு கிடைப்பதாக நன்மாராயம் சொல்வதாகும். எச்சரித்தலில் நரக வேதனை பற்றி எச்சரித்தல் முதன்மை பெறுகிறது. அந்த மகிழ்ச்சியான சுக வாழ்வு அல்லது பயங்கர வேதனைகள் நிறைந்த துயர வாழ்வு நிரந்தரமானதாகும். நன்மாராயமும், எச்சரித்தலும் இவ்வகையிலும் பாரிய முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த கருத்துப்படி மறுமை நம்பிக்கை ஈமானின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாக அமைகிறது. அந்த நம்பிக்கையை உள்ளத்தில் பலப்படுத்திக் கொள்ளலும், மறுமை வாழ்வை நினைவு கூர்ந்தவாறு உலக வாழ்வைக் கொண்டு செல்வதும் ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்.
இந்த வகையில் மறுஅமை நாளை விளக்கும் பல நூல்கள் குறிப்பாக, அல்குர்ஆனோடு (அரபு மொழி தெரியாததன் காரணமாக) நேரடித் தொடர்பு வைக்க முடியாத முஸ்லிம்களுக்கு மறுமை நாளின் பல்வேறு பகுதிகளையும் விளக்கும் வகையில் வெளிவருவது அவசியமாகும். அல்குர்ஆன் மறுமை நாள் குறித்து விளக்கும் வசனங்கள் ஊடாக மனித உள்ளத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மிகப் பாரியது. அல்குர்ஆனோடு நேரடி தொடர்புள்ளவன் மறுமை நாளின் காட்சிகளை விட்டு தன் உள்ளத்தை விலக்கிக் கொள்வது கடினம். அப்படியொரு கடும் மனத்தாக்கத்தை அல்குர்ஆன் மனித உள்ளத்தில் ஏற்படுத்தி, அன்றாட வாழ்வில் மறுமை நாளின் நினைவோடு முஸ்லிமை வாழ வைக்க முயல்கிறது.
ஸஹாபாக்களின் சமூகம் உன்னதமிக்க சமூகமாக மாறியமைக்கு இந்த மனத்தாக்கம் முக்கிய காரணிகளில் ஒன்று. மறுமை நாள் பற்றிய மிக ஆழ்ந்த எண்ணம் கொண்டவன் உலக வாழ்வு பற்றி பொறுப்புணர்வு மிகக் கொண்டவனாக மாறுகிறான். இந்த வாழ்வை அர்த்தமும், பொருளும் கொண்டதாக மாற்றிக் கொள்ள மிகுந்த முனைப்புடன் தொழிற்படுவான். ஒரு நிமிடத்தையேனும் வீணாகக் கழிக்க அவன் விரும்புவதில்லை. இத்தகைய தனி மனிதர்களைக் கொண்ட சமூகம் உன்னத சமூகமாக மாறுவதில் சந்தேகமில்லை. ஸஹாபாக்களின் சமூகத்தைப் பொறுத்தவரையில் நடந்தது இதுவேயாகும்.
இந்த வகையில் அல்குர்ஆன் மறுமை நாள் பற்றி விவரிக்கும் அமைப்பை ஓரளவுக்காவது அடுத்த மொழிகளில் கொண்டு வருவது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில் ஓர் எளிய ஆரம்ப முயற்சி இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மறுமை நாள் குறித்த ஓர் அறிமுகமாக மட்டுமே இது கொள்ளப்பட முடியும். இதனைத் தொடர்ந்து அதன் பல்வேறு அம்சங்களையும் விளக்கும் நூல்கள் வெளிவர வேண்டும்.
குவைத் இஸ்லாமிய நிலையம் (Islam Presentation Committee) நிர்வாகத்தினர் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியோரைக் கவனத்திற் கொண்டு மறுமை நாள் பற்றிய ஒரு நூலை ஆக்கும் பணியை என்னிடம் ஒப்படைத்தனர். அதனை வெளியிடும் பொறுப்பையும் அவர்கள் ஏற்றனர். அல்லாஹ் அவர்களுக்கு உரிய கூலியை வழங்குவானாக!
இந்த நூலை வாசித்து, தமது கருத்துக்களையும் சொல்லி, அதனை வெளியிடுவதற்குப் பொருத்தமாக அமையும் வரையிலான அனைத்து வேலைகளையும் சகோதரர்களான அஷ்ஷெய்க் ஏ.சீ. ஷாஜஹான் நளீமீ, அஷ்ஷெய்க் என்.எம்.எம். ஹுசைன் இஸ்லாஹி, மற்றும் (தமிழ் நாட்டைச் சேர்ந்த) மௌலவி அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., ஆகியோர் செய்தனர். இவர்களுடன் சகோதரர்களான அஷ்ஷெய்க் ஏ.பி.எம். அப்பாஸ் நளீமீ, அஷ்ஷெய்க் பீ.எம். ஸுல்பி இஸ்லாஹி மற்றும் எம்.ஏ. அப்துல் முஸவ்விர் Bsc., ஆகியோரும் இதற்குத் தூண்டுதலாக இருந்தனர். அனைவருக்கும் எனது ஆழ்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்! அல்லாஹ் அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக!!!
இறையருளை எதிர்பார்க்கும் சகோதரன்
எம்.ஏ.எம். மன்ஸூர்
இஸ்லாமிய நிலையம், குவைத்
assalamualikum
very nice for your website