Featured Posts

[பாகம்-15] முஸ்லிமின் வழிமுறை.

மனைவி மீது கணவனுக்குரிய கடமைகள்

கணவன் விஷயத்தில் பின்வரும் ஒழுக்கங்களையும் மேற்கொள்வது மனைவியின் மீது கடமையாகும்.

1. பாவமல்லாத காரியங்களில் அவனுக்கு அவள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

“அவர்கள் (மனைவியர்) உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் பிறகு அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள். (4:34)

ஒருவர் தன் மனைவியை படுக்கைக்கு அழைத்து அவள் செல்லவில்லையென்றால் அவன் அவள் மீது கோபம் கொண்டவனாக அன்றிரவைக் கழித்தால் காலையில் அவள் விழிக்கும்வரை வானவர்கள் அவளை சபிக்கின்றார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்

ஒருவர் மற்றவரின் காலில் விழுவதற்கு நான் அனுமதிப்பதாக இருந்தால் கணவனின் காலில் மனைவி விழுவதற்கு அனுமதித்திருப்பேன் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்:புகாரி, முஸ்லிம்

2. அவள் தனது கண்ணியத்தையும் தன் கணவனது மான மரியாதையையும் பாதுகாப்பதோடு கணவனது பொருள் அவனது பிள்ளைகள் மற்றும் வீட்டிலுள்ள அனைத்து காரியங்களையும் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: ஒழுக்கமான பெண்கள் (தம் கணவன்மார்களுக்கும்) கீழ்படிந்தே நடப்பார்கள். மேலும் தம் கணவன்மார்கள் வீட்டில் இல்லாத காலங்களில் பாதுகாக்கப்பட வேண்டியவற்றை அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு பேணிக் காத்து வருவார்கள். (4:34)

ஒரு பெண் தன் கணவன் வீட்டிற்குப் பொறுப்பாவாள். அவள் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவாள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: புகாரி,முஸ்லிம்.

3. கணவனின் வீட்டிற்குள்ளேயே அவள் இருக்க வேண்டும். அவனது அனுமதியும் திருப்தியும் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது. தன் பார்வையைத் தாழ்த்திக் கொள்வதுடன் தன் குரலையும் தாழ்த்திக் கொள்ள வேண்டும். மேலும் யாருக்கும் அவள் கெடுதி இழைக்கக் கூடாது. கணவனின் உறவினர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முந்தைய அஞ்ஞான காலத்தைப் போன்று ஒப்பனையையும் ஒய்யாரத்தையும் காட்டிக் கொண்டு வெளியே திரியாதீர்கள். (33:33) மேலும் கூறுகிறான்: மென்மையாகப் பேசாதீர்கள். ஏனெனில் உள்ளத்தில் கெட்ட எண்ணம் கொண்டிருப்பவன் சபலம் கொள்ளக் கூடும். (33:32)

தீய சொற்களை வெளிப்படையாகப் பேசுவதை அல்லாஹ் விரும்புவதில்லை. (4:148)

(நபியே!) ஈமான் கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தம் வெட்கத்தலங்களைப் பாதுகாக்கட்டும். தம் அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும். அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர. (24:31)

எந்தப் பெண் தன் கணவன் தன்னைப் பார்க்கும்போது மகிழ்விப்பாளோ, அவன் கட்டளையிட்டால் அவனுக்குக் கீழ்படிந்து நடப்பாளோ, அவன் இல்லாத காலங்களில் தனது கற்பையும் தனது பொருளையும் பாதுகாத்துக் கொள்வாளோ அத்தகையவளே பெண்களில் சிறந்தவள் என நபி(ஸல்) அவகள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்:நஸயி.

நூல்: முஸ்லிமின் வழிமுறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *