Featured Posts

இரவு தொழுகையை விட்டு விடாதீர்கள்..

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்-
நாம் அன்றாடம் செய்யும் வணக்கங்களில் முதன்மையான வணக்கம் தொழுகையாகும். அந்த தொழுகையை பர்ளு என்றும், சுன்னத் என்றும் நபில் என்றும் பல பெயர்களில் நமக்கு நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். பர்ளு தொழுகைக்கு அடுத்தபடியான உச்சக்கட்டமான பல சிறப்புகளை உள்வாங்கிய தொழுகை தான் இந்த இரவுத் தொழுகையாகும்.

இந்த இரவுத் தொழுகைக்கு நபியவர்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதை தொடர்ந்து கவனிப்போம்.

இந்த இரவுத் தொழுகையை தூங்குவதற்கு முன்னும் (முன்) இரவிலே தொழலாம். அல்லது கடைசி இரவிலும் தொழலாம். அல்லது முன் இரவில் குறிப்பிட்ட ரக்அத்துகளும் ஏனைய மீதி ரக்அத்துகளை பின் இரவிலும் தொழலாம் அனைத்திற்கும் நபியவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள். ஒவ்வொன்றாக விடை காண்போம்.

முன் இரவில், அல்லது பின் இரவில் தொழுவது:
“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யார் இரவின் இறுதியில் எழ முடியாது என அஞ்சுகிறாரோ அவர் (முதலில்) வித்ர் தொழுதுவிட்டுப் பிறகு உறங்கட்டும்! இரவில் தம்மால் எழ முடியும் என உறுதியாக நம்புகின்றவர் அதன் இறுதியில் வித்ர் தொழட்டும்! ஏனெனில், இரவின் இறுதி நேரத்தில் குர்ஆன் ஓதும்போது (வானவர்கள்) பங்கேற்கின்றனர். இதுவே சிறந்ததாகும்.(முஸ்லிம் 1381)

இந்த ஹதீஸின் படி ஒருவர் நோயாளியாக இருக்கிறார். அவருக்கு பின் இரவில் எழுந்து தொழ முடியாது. அல்லது ஒருவர் பாரமான வேலை செய்கிறார். அதனால் பின் இரவில் எழுந்து தொழுவது கஷ்டம் என்றால் தூங்குவதற்கு முன் இஷாவையும், அதனுடைய பின் சுன்னத்தையும் தொழுது விட்டு வித்ரை தொழுது விட்டு தூங்கும் படி நபியவர்கள் வழிக் காட்டுகிறார்கள். வித்ர் என்றால் ஒத்தப்படையாக தொழ வேண்டும். குறைந்தது ஒரு ரக்அதாகும். கூடியது பதினொரு ரக்அத்துகளாகும். அதாவது ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று என்று ஒத்தப்படையில் அமையக் கூடிய அளவிற்கு தொழுகையை அமைத்துக் கொள்ள வேண்டும். அதே நேரம் ஒருவருக்கு தூங்கி எழுந்து பஜ்ருக்கு முன் (இறுதி இரவில்) இந்த தொழுகையை தொழ முடியும் என்றால் அவர் அப்படியே செய்து கொள்ள வேண்டும். பின் இரவில் தொழுவதால் பலவிதமான சிறப்புகள் கிடைக்கும் என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த தொழுகையை பிரித்து தொழுவதற்கும் நபியவர்கள் பின் வரும் ஹதீஸின் மூலமாக நமக்கு வழிக் காட்டியுள்ளார்கள்

பிரித்து தொழுவது
‘என்னுடைய சிறிய தாயாரும் நபி(ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா பின்து அல் ஹாரிஸ்(ரலி) அவர்களின் வீட்டில் நபி(ஸல்) அவர்கள் தங்கியிருந்த இரவில் நானும் தங்கியிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் இஷா தொழுகை நடத்திவிட்டுப் பின்னர் தம் வீட்டிற்கு வந்து நான்கு ரக்அத்துகள் தொழுதுவிட்டு உறங்கினார்கள். பின்னர் எழுந்து ‘பையன் தூங்கிவிட்டானோ?’ அல்லது அது போன்ற ஒரு வார்த்தை கூறி விசாரித்துவிட்டு மீண்டும் தொழுகைக்காக நின்றார்கள். நானும் (அவர்களுடன்) அவர்களின் இடப் பக்கமாகச் சென்று நின்றேன். உடனே என்னை அவர்களின் வலப் பக்கத்தில் இழுத்து நிறுத்திவிட்டு (முதலில்) ஐந்து ரகஅத்துகளும், பின்னர் இரண்டு ரகஅத்துகளும் தொழுதுவிட்டு அவர்களின் குறட்டையொலியை நான் கேட்குமளவுக்கு ஆழ்ந்து உறங்கினார்கள். பிறகு (சுப்ஹுத்) தொழுகைக்குப் புறப்பட்டார்கள்’ இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (புகாரி 117)

இந்த ஹதீஸில் மூன்று முக்கியமான விடயங்களை நாம் கவனிக்க வேண்டும். முதலாவது நபியவர்கள் பகல் நேரத்து சுன்னத்தான தொழுகைகளாக இருந்தாலும் சரி, இரவு நேர சுன்னத்தான தொழுகைகளாக இருந்தாலும் சரி, தனது வீட்டில் தான் தொழுவார்கள். உங்களது தொழுகைகளில் சில (சுன்னத்தான) தொழுகைகளை வீட்டில் தொழுது கொள்ளுங்கள் என்று வழி காட்டியுள்ளார்கள்.

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் (ஃபர்ள்) தொழுது முடித்ததும் தமது தொழுகையில் சிலவற்றை (கூடுதல் தொழுகையை) தமது வீட்டிலும் தொழட்டும். ஏனெனில், அவ்வாறு அவர் தொழுவதால் அவரது வீட்டில் அல்லாஹ் நன்மையை உருவாக்குகிறான்.

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(முஸ்லிம் 1428)
நபியவர்கள் ஓரிரு சந்தர்ப்பங்களில் பள்ளியிலும், பயணத்திலும் சுன்னத்துகளை தொழுதுள்ளார்கள்.

இரண்டாவது அந்த இரவுத் தொழுகையை முன் இரவில் குறிப்பிட்ட சில ரக்அத்துகளை தொழுதுள்ளார்கள். மீதியை பின் இரவில் தொழுதுள்ளார்கள்.

மூன்றாவது இந்த பதினொரு ரக்அத்துகளை முன் இரவிலும், பின்னிரவிலும் பிரித்து, பிரித்து தொழலாம் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

எனவே எது எப்படியோ இந்த இரவுத் தொழுகையை முன் இரவிலோ, அல்லது பின் இரவிலோ தொழுதே ஆக வேண்டும் என்பதை தான் நபியவர்கள் நமக்கு எடுத்துக் காட்டுகிறார்கள். எனவே நாம் மரணிக்கின்ற வரை இந்த இரவு தொழுகை விடயத்தில் விடாமல் ஆர்வத்துடன் தொடர்ந்து தொழக் கூடிய பழக்கத்தை அமைத்துக் கொள்வோமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *