பாகம் 1, அத்தியாயம் 9, எண் 521
ஸுஹ்ரி அறிவித்தார். உமர் இப்னு அப்தில அஸீஸ் ஒரு நாள் தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது உர்வா இப்னு ஸுபைர் அவரிடம் வந்து பின்வரும் நிகழ்ச்சியைக் கூறி (அவரின் செயலைக் கண்டிக்கலா)னார்கள்.
இராக்கில் இருக்கும்போது ஒரு நாள் முகீரா இப்னு ஷுஅபா(ரலி) தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது அபூ மஸ்வூத் அல் அன்ஸாரி(ரலி), அவரிடம் வந்து, ‘முகீராவே! இது என்ன? ஜிப்ரீல்(அலை) அவர்கள் இறங்கி (ஃபஜ்ருத்) தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (லுஹர்) தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (அஸர்) தொழ நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (மக்ரிப்) தொழ நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின் இஷா தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்னர் நபியிடம் “இந்நேரங்களில் தொழ வேண்டும் என்றே உமக்குக் கட்டளையிடப் பட்டுள்ளது’ என்றும் ஜிப்ரீல்(அலை) அவர்கள் கூறினார்கள். இதை நீர் அறியவில்லையா?’ என்று கேட்டார்கள்.
(இந்த நிகழ்ச்சியை உர்வா இப்னு ஸுபைர், உமர் இப்னு அப்தில் அஸீஸ் அவர்களிடம் கூறிய போது) ‘உர்வாவே நீர் கூறுவது என்னவென்பதைக் கவனித்துப் பாரும்! நபி(ஸல்) அவர்களுக்குத் தொழுகையின் நேரத்தை ஜிப்ரீல்(அலை) அவர்கள் நிர்ணயித்தார்களா?’ என்று உமர் இப்னு அப்தில் அஸீஸ் கேட்டார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 522
ஆயிஷா(ரலி) அறிவித்தார். சூரிய(னி)ன் (ஒளி) என் அறையில் (மறையாமல்) விழுந்து கொண்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுவார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 523
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். அப்துல் கைஸ் குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘நாங்கள் ரபீஆ எனும் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். (போரிடுதல்) விலக்கப்பட்ட மாதத்தில் தவிர (ஏனைய மாதங்களில்) உங்களிடம் நாங்கள் வர இயலாது. எனவே உங்களிடமிருந்து பெற்றுச் சென்று எங்களுக்குப் பின்னாலுள்ளவர்களையும் அதன் பால் அழைக்கக்கூடிய விஷயங்களை எங்களுக்குக் கட்டளையிடுங்கள்!’ என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நான்கு காரியங்களை உங்களுக்கு ஏவுகிறேன். அவையாவன: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று உறுதியாக நம்புவது தொழுகையை நிலைநாட்டுவது, ஸகாத் கொடுத்து வருவது, கனீமத் (போரில் வென்ற பின் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட) பொருட்களில் ஐந்தில் ஒரு பகுதியை பொதுமக்கள் நன்மைக்காக) என்னிடம் ஒப்படைத்து விடுதல், நான்கு காரியங்களைவிட்டு உங்களை நான் தடுக்கிறேன். அவையாவன: (மது பானங்கள் வைத்திருந்த) சுரைக்குடுக்கை, வாய் குறுகலான சுட்ட மண் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம், பேரீச்ச மரத்தின் அடிப்பகுதியைக் குடைந்து செய்யப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை(ப் பயன்படுத்துவதை)விட்டும் உங்களைத் தடுக்கிறேன்’ என்று கூறினார்கள்.
குறிப்பு: போதைப் பொருள்களுக்காகப் பயன்படுத்தப் பட்ட இப்பாத்திரங்களைப் பயன்படுத்தலாகாது என்ற தடை, பின்னர் நபி(ஸல்) அவர்களால் விலக்கிக் கொள்ளப்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்க!)
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 524
ஜரீர்பின் அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். தொழுகையை நிலைநாட்டுவது ஸகாத் கொடுப்பது, முஸ்லிம்கள் அனைவருக்கும் நல்லதையே நாடுவது ஆகிய காரியங்களுக்காக நான் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிப் பிரமாணம் எடுத்தேன்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 525
ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். நாங்கள் உமர்(ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது, ‘நபி(ஸல்) அவர்கள் ஃபித்னாவைப் பற்றிக் கூறியதை உங்களில் அறிந்திருப்பவர் யார்? என்று கேட்டார்கள். (ஃபித்னா என்ற வார்த்தைக்குச் சோதனைகள், துன்பங்கள் என்று பொருளும் குழப்பங்கள் என்ற பொருளும் உண்டு.) நபி(ஸல்) அவர்கள் கூறிய மாதிரியே நான் அதை அறிந்திருக்கிறேன் என்றேன். அதற்கு உமர்(ரலி) ‘நீர் அதற்குத் தகுதியானவர் தாம்’ என்றனர். ஒரு மனிதன் தம் குடும்பத்தினரிடமும் தம் சொத்துக்களிலும் தம் குழந்தைகளிடமும் தம் அண்டை வீட்டாரிடமும் (அளவு கடந்த நேசம் வைப்பதன் மூலம்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும்போது, தொழுகை, நோன்பு, தர்மம், (நல்லதை) ஏவுதல், (தீமையை) விலக்குதல் ஆகிய காரியங்கள் அதற்குப் பரிகாரமாகும் என்றும் நான் விடையளித்தேன்.
அதற்கு உமர்(ரலி), ‘நான் இதைக் கருதவில்லை’ என்றனர். ‘கடலலை போல் அடுக்கடுக்காக ஏற்படும் (நபிகளால் முன்னறிவிக்கப்பட்ட) ஃபித்னா (குழப்பங்கள்) பற்றியே கேட்கிறேன்’ என்று கூறினார்கள். இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அந்தக் குழப்பங்களுக்கும் உங்களுக்கும் யாதொரு சம்மந்தமுமில்லை. உங்களுக்கும் அந்தக் குழப்பங்களுக்கு மிடையே மூடப்பட்ட கதவு உள்ளது என கூறினேன். ‘அக்கதவு திறக்கப்படுமா? உடைக்கப்படுமா?’ என உமர்(ரலி) கேட்டார்கள். நான் உடைக்கப்படும் என்றேன். ‘அப்படியாயின் அது ஒருக்காலும் மூடப்படாது’ என்று உமர்(ரலி) கூறினார்.
ஷகீக் கூறினார். அந்தக் கதவு எதுவென உமர்(ரலி) அறிவார்களா? என்று ஹுதைஃபா(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். ‘ஆம்! பகலுக்குப் பின்னர் இரவு என்பதை அறிவது போல் அதை உமர்(ரலி) அறிவார்கள். பொய்கள் கலவாத செய்தியையே நான் அவர்களுக்கு அறிவித்தேன்’ என்று ஹுதைஃபா(ரலி) கூறினார். அந்தக் கதவு எதுவென ஹுதைஃபா(ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சி, மஸ்ரூக்கைக் கேட்கச் செய்தோம். அதற்கு ஹுதைஃபா(ரலி) ‘அந்தக் கதவு உமர்(ரலி) தாம்’ என்றார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 526
இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ஒருவர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு) இந்த விபரத்தைக் கூறினார். ‘பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நல்ல காரியங்கள் தீய காரியங்களை அகற்றிவிடும்” (திருக்குர்ஆன் 11:114) என்ற வசனத்தை இறைவன் அருளினான். அப்போது அந்த மனிதர் ‘இறைத்தூதர் அவர்களே! இது எனக்கு மட்டுமா?’ என்று கேட்டதற்கு ‘என் சமுதாயம் முழுமைக்கும்” என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 527
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்” என்று பதில் கூறினார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். ‘பெற்றோருக்கு நன்மை செய்தல்” என்றார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். ‘இறைவழியில் அறப்போர் புரிதல்” என்றனர். எனக்கு இவற்றை நபி(ஸல்) அவர்கள் அறிவித்தனர். (கேள்வியை) மேலும் நான் அதிகப்படுத்தியிருந்தால் நபி(ஸல்) அவர்களும் மேலும் சொல்லியிருப்பார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 528
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். “உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்” என்று தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 529
கைலான் அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தவற்றில் எதனையும் (இன்று) என்னால் காண முடியவில்லை’ என்று அனஸ்(ரலி) குறிப்பிட்டார்கள். ‘தொழுகை இருக்கிறதே’ என்று அவர்களிடம் கேட்கப் பட்டது. ‘அதில் கூட செய்வதையெல்லாம் நீங்கள் (கூடக் குறைய) செய்து விடவில்லையோ? எனத் திருப்பிக் கேட்டார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 530
ஸுஹ்ரீ அறிவித்தார். அனஸ் இப்னு மாலிக்(ரலி) ‘டமாஸ்கஸ்’ நகரிலிருக்கும்போது நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் அழுது கொண்டிருந்தனர். ‘ஏன் அழுகிறீர்கள்?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நான் கண்டவைகளில் இந்தத் தொழுகையைத் தவிர வேறு எதனையும் என்னால் (இன்றைய சமூகத்தில்) காண முடியவில்லை. அந்தத் தொழுகையும் கூட பாழ்படுத்தப் பட்ட நிலையிலுள்ளது’ என அனஸ்(ரலி) கூறினார்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 531
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ஒருவர் தொழும்போது தம் இறைவனிடம் தனிமையில் உரையாடுகிறார். எனவே தம் வலப்புறம் துப்ப வேண்டாம். எனினும் தம் இடது பாதத்திற்குக் கீழே துப்பிக் கொள்ளலாம்.” என அனஸ்(ரலி) அறிவித்தார்.
“தமக்கு முன் புறமாகத் துப்பலாகாது; எனினும் தம் இடது புறமாகவோ, தம் பாதங்களுக்குக் கீழேயோ, துப்பிக் கொள்ளலாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என கதாதா குறிப்பிட்டார்கள்.
“தமக்கு முன்புறமோ தம் வலப்புறமோ துப்ப வேண்டாம். எனினும் இடப்புறமோ தம் பாதத்தின் கீழேயோ துப்பிக் கொள்ளலாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஷஃபா குறிப்பிடுகிறார்.
“கிப்லாத் திசையிலோ தம் வலப்புறமோ துப்பலாகாது; எனினும் தம் இடப்புறமோ, தம் பாதத்தின் கீழேயோ துப்பிக் கொள்ளலாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) வழியாக ஹுமைத் அறிவித்தார்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 532
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைப்பிடியுங்கள்! கைகளை நாய் விரிப்பது போல் விரிக்கலாகாது! துப்பும்போது தமக்கு முன்புறமோ தம் வலப்புறமோ துப்பலாகாது! ஏனெனில் அவர் தம் இறைவனுடன் தனிமையில் உரையாடிக் கொண்டிருக்கிறார்.” என அனஸ்(ரலி) அறிவித்தார்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 533
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “வெப்பம் கடுமையாகும்போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப் படுத்துங்கள்! ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும்.” என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 534
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “வெப்பம் கடுமையாகும்போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப் படுத்துங்கள்! ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 535
அபூ தர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் முஅத்தின், லுஹருக்கு பாங்கு சொல்ல முற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் ‘கொஞ்சம் பொறு; கொஞ்சம் பொறு” என்று கூறிவிட்டு, ‘கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்படாகும். எனவே வெப்பம் கடுமையாகும்போது (லுஹர்) தொழுகையைத் தாமதப் படுத்துங்கள்!” என்றார்கள். மணல் திட்டுகளின் நிழலை நாங்கள் பார்க்கும் வரை நபி(ஸல்) அவர்கள் தாமதப் படுத்துங்கள்!” என்றார்கள். மணல் திட்டுகளின் நிழலை நாங்கள் பார்க்கும் வரை நபி(ஸல்) அவர்கள் தாமதப் படுத்துவார்கள். (சூரியன் நன்றாகச் சாய்ந்து அஸருக்குச் சற்று முன்பாகத்தான் மணல் திட்டுகளின் நிழல் தென்படும்.)
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 536
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “வெப்பம் கடுமையாகும்போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப் படுத்துங்கள்! ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்படாகும்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 537
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “இறைவா! என்னுடைய ஒரு பகுதி, மறுபகுதியைச் சாப்பிட்டுவிட்டது என்று நரகம் இறைவனிடம் முறையிட்டது. கோடையில் ஒரு மூச்சு விடுவதற்கும் குளிரில் ஒரு மூச்சு விடுவதற்கும் இறைவன் அதற்கு அனுமதி வழங்கினான். கோடை காலத்தில் நீங்கள் காணும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் நீங்கள் உணரும் கடும் குளிரும் அதன் வெளிப்பாடுகள் தாம்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 538
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “வெப்பம் கடுமையாகும்போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப்படுத்துங்கள்! ஏனெனில், கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்படாகும்.” என அபூ ஸயீது(ரலி) அறிவித்தார்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 539
அபூ தர்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். முஅத்தின் லுஹருக்கு பாங்கு சொல்ல முனைந்தபோது, ‘கொஞ்சம் பொறு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் மீண்டும் பாங்கு சொல்ல அவர் முனைந்தபோது ‘கொஞ்சம் பொறு’ என்றனர். மணல் திட்டுகளின் நிழலை நாங்கள் பார்க்கும் வரை தாமதப்படுத்தினார்கள். ‘கடுமையான வெப்பம், நரக வெப்பத்தின் வெளிப்பாடாகும். எனவே வெப்பம் கடுமையாகும்போது (லுஹர்) தொழுகையைத் தாமதப் படுத்துங்கள்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 540
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சூரியன் சாய்ந்தபோது வெளியே வந்து லுஹர் தொழுதார்கள். மிம்பர் (மேடை) மீது ஏறி உலக முடிவு நாள் பற்றியும் குறிப்பிட்டார்கள். அந்நாளில் பயங்கரமான பல காரியங்கள் நிகழும் என்றும் குறிப்பிட்டார்கள். ‘எதைப் பற்றியேனும் எவரேனும் கேட்க விரும்பினால் அவர் என்னிடம் கேட்கலாம். இந்த இடத்தில் நான் இருக்கும் வரை நீங்கள் எதைப் பற்றிக் கேட்டாலும் உங்களுக்கு அறிவிக்காதிருக்க மாட்டேன்” என்றும் குறிப்பிட்டார்கள். மக்கள் மிகுதியாக அழலானார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘என்னிடம் கேளுங்கள்” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஹுதாபா’ என்பவரின் மகன் அப்துல்லாஹ் என்பவர் எழுந்து ‘என் தந்தை யார்?’ என்று கேட்டார். ‘உன் தந்தை ஹுதாபா” என்று நபி(ஸல்) கூறிவிட்டு ‘என்னிடம் கேளுங்கள்” என்று மிகுதியாகக் குறிப்பிட்டார்கள். (இந்நிலையைக் கண்ட) உமர்(ரலி) மண்டியிட்டமர்ந்து ‘அல்லாஹ்வை இரட்சகனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத்(ஸல்) அவர்களை நபி என்றும் நாங்கள் திருப்தியுடன் ஏற்றோம்’ என்று கூறியதும் நபி(ஸல்) அவர்கள் மவுனமானார்கள். பின்னர் ‘சற்று முன் இந்தச் சுவற்றின் நடுவில் சுவர்க்கமும் நரகமும் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன. (அவ்விடத்தில் கண்டது போல்) நல்லதையும் கெட்டதையும் நான் கண்டிருக்கவில்லை” என்றார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 541
அபூ பர்ஸா(ரலி) அறிவித்தார். எங்களில் ஒருவர் தம் அருகிலிருப்பவரை அறிந்து கொள்ளும் (அளவில் வெளிச்சம் ஏற்படும்) சமயத்தில் நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுபவர்களாக இருந்தனர். அறுபது (வசனங்கள்) முதல் நூறு வரை ஸுப்ஹில் ஓதுவார்கள். சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது லுஹர் தொழுபவர்களாக இருந்தனர். அஸரையும் தொழுவார்கள். (அஸர் தொழுகையை நிறைவேற்றிய) எங்களில் ஒருவர் மதீனாவின் கடைக் கோடிக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வந்தால் சூரியன் உயிரிடன் (அதாவது ஒளி குன்றாமல்) இருந்து கொண்டிருக்கும்.
இந்த ஹதீஸை அபூ பர்ஸாவிடமிருந்து அறிவிக்கும் அபுல் மின்ஹால், ‘மக்ரிப் பற்றி அபூ பர்ஸா(ரலி) கூறியதை நான் மறந்து விட்டேன். இஷாவை இரவின் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் வரை அல்லது இரவின் பாதி வரை தாமதப் படுததுவது பற்றிப் பெருட்படுத்த மாட்டார்கள் என அபூ பர்ஸா(ரலி) குறிப்பிட்டார்கள்’ என்கிறார்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 542
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நாங்கள் நண்பகலில் நபி(ஸல்) அவர்களின் பின்னே தொழும்போது வெப்பத்தைத் தவிர்ப்பதற்காக எங்கள் ஆடைகளின் மீது ஸஜ்தாச் செய்பவர்களாக இருந்தோம்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 543
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கன் மதீனாவில் மக்ரிப், இஷாவை ஏழு ரக்அத்களாகவும் லுஹர் அஸரை எட்டு ரக்அத்களாகவும் தொழுகை நடத்தினார்கள்.
(இப்னு அப்பாஸ்(ரலி) வழியாக இதை அறிவிக்கும்) ஜாபிர் இப்னு ஸைதிடம் இது மழை நாளின்போது நடந்திருக்கலாமோ? என்று அய்யூப் கேட்டபோது இருக்கலாம்” என்று பதிலளித்தார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 544
ஆயிஷா(ரலி) அறிவித்தார். சூரியன் (ஒளி) என் அறையிலிருந்து விலகாத நிலையில் நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுபவர்களாக இருந்தனர்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 545
ஆயிஷா(ரலி) அறிவித்தார். சூரிய(னி)ன் (ஒளி) என்னுடைய அறையில் விழுந்து கொண்டிருக்கும்போது நிழல் என் அறையைவிட்டும் உயராதபோது நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுதார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 546
ஆயிஷா(ரலி) அறிவித்தார். சூரிய(னி)ன் (ஒளி) என்னுடைய அறையில் விழுந்து கொண்டிருக்கும்போது நிழல் என் அறையை விட்டும் உயராதபோது நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுதார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 547
ஸய்யார் இப்னு ஸலாமா கூறினார். நானும் என்னுடைய தந்தையும் அபூ பர்ஸா(ரலி) அவர்களிடம் சென்றோம். ‘கடமையான தொழுகையை நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுவார்கள்?’ என்று என் தந்தை கேட்டார். நீங்கள் முதல் தொழுகை என்று கூறக்கூடிய நண்பகல் தொழுகையை (நடுவானிலிருந்து) சூரியன் சாயும்போது நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள். எங்களில் ஒருவர் (அஸர் தொழுதுவிட்டு) மதீனாவின் கடைக் கோடியிலுள்ள தம் இடத்திற்குத் திரும்பும்போது சூரியன் உயிருடன் (ஒளி குன்றாமல்) இருந்து கொண்டிருக்கும்’ என்றார்கள் மக்ரிப் பற்றி அபூ பர்ஸா(ரலி) கூறியதை நான் மறந்துவிட்டேன். ‘கடைசித் தொழுகை என்று நீங்கள் குறிப்பிடக் கூடிய இஷாவைப் பிற்படுத்துவதை விரும்புபவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தனர். இஷாவுக்குப் இப்னு பேசிக் கொண்டிருப்பதையும் நபி(ஸல்) அவர்கள் வெறுப்பவர்களாக இருந்தனர். அறுபது முதல் நூறு வசனங்கள் வரை ஓதி நபி(ஸல்) அவர்ள வைகறைத் தொழுகையைத் தொழுது முடிக்கும்போது ஒருவர் தம் அருகில் அமர்ந்திருப்பவரை அறிந்து கொள்ள முடியும்’ என அபூ பர்ஸா(ரலி) கூறினார்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 548
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நாங்கள் அஸர் தொழுதுவிட்டு,மதீனாவிலுள்ள (குபா-பகுதியில் இருந்த) பனூ அம்ர் இப்னு அவ்வு குலத்தாரிடம் சென்றால் அவர்கள் அஸர் தொழுது கொண்டிருப்பதைக் காண்போம்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 549
அபூ உமாமா அறிவித்தார். நாங்கள் உமர்பின் அப்துல அஸீஸுடன் லுஹர் தொழுதோம். பின்னர் (அங்கிருந்து) புறப்பட்டு அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்றபோது அவர்கள் அஸர் தொழுது கொண்டிருக்கக் கண்டோம். என் தந்தையின் உடன் பிறந்தவரே! இப்போது நீங்கள் தொழுதது என்ன தொழுகை? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘அஸர் தொழுகை! நபி(ஸல்) அவர்களுடன் இவ்வாறே நாங்கள் தொழுபவர்களாக இருந்தோம்’ என்றார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 550
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். சூரியன் உயரத்தில் ஒளி வீசிக் கொண்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுபவர்களாக இருந்தனர். மேட்டுப பாங்கான பகுதிக்குச் செல்பவர் அங்கே சென்றடையும்போது சூரியன் உயரத்திலேயே இருக்கும். சில மேட்டுப் பாங்கான பகுதிகள் மதீனாவிலிருந்து நான்கு மைல் அல்லது கிட்டததட்ட அந்த அளவு தூரத்தில் அமைந்திருந்தன.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 551
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நாங்கள் அஸர் தொழுது முடித்த பின் எங்களில் ‘குபா’ என்ற இடத்திற்குச் செல்பவர்கள் அங்கே சென்றடையும்போது சூரியன் உயரத்திலேயே இருக்கும்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 552
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “யாருக்கு அஸர் தொழுகை தவறிவிட்டதோ அவன் குடும்பமும் சொத்துக்களும் அழிக்கப் பட்டவனைப்போன்று இருக்கிறான்.” என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 553
அபுல் மலீஹ் அறிவித்தார். மேகம் சூழ்ந்த ஒரு நாளில் புரைதா(ரலி)வுடன் ஒரு போரில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். அப்போது அவர்கள், ‘அஸர் தொழுகையை முன் வேளையில் நிறைவேற்றுங்கள். ஏனெனில் ‘அஸர் தொழுகையைவிட்டு விடுகிறவரின் செயல்கள் நிச்சயமாக அழிந்து விடுகின்றன” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்’ என்று குறிப்பிட்டார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 554
ஜரீர்(ரலி) அறிவித்தார். நாங்கள் முழு நிலவுள்ள இரவில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலவை நோக்கி ‘இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பது போல் நிச்சயமாக உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்! சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்!” என்று கூறிவிட்டு, ‘சூரியன் உதிக்கும் முன்னரும் மறையும் முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைத் துதிப்பீராக!” (திருக்குர்ஆன் 50:39) என்ற இறைவசனத்தையும் ஓதிக் காண்பித்தார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 555
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “இரவு நேரத்து வானவர்களும் பகல் நேரத்து வானவாக்ளும் தொடர்ந்து உங்களிடம் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருப்பார்கள். பஜ்ருத் தொழுகையிலும் அஸர் தொழுகையிலும் இரண்டு சாராரும் சந்திக்கின்றனர். பின்னர் உங்களடன் இரவு தங்கியவர்கள் மேலேறிச் செல்கின்றனர். ‘என் அடியார்களை எந்த நிலையில்விட்டு வந்தீர்கள்?’ என்று அவர்களிடம் இறைவன் இது பற்றி தெரிந்து கொண்டே விசாரிப்பான். ‘அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களிடம் சென்றோம். அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களைவிட்டுவிட்டு வருகிறோம்” என்று அவர்கள் விடையளிப்பார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 557
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்துடன் நீங்கள் வாழும் காலத்தை ஒப்பிடும்போது நீங்கள் (இவ்வுலகில்) வாழ்ந்து அஸரிலிருந்து சூரியன் மறையும் வரை உள்ள நேரம் போன்றதேயாகும். தவ்ராத்திற்குரியவர்கள் தவ்ராத் வழங்கப்பட்டார்கள். நடுப்பகல் வரை அவர்கள் வேலை செய்து ஓய்ந்தார்கள். (ஒவ்வொருவரும்) ஒவ்வொரு ‘கீராத்’ கூலி கொடுக்கப்பட்டார்கள். பின்னர் இஞ்ஜீல் உடையவர்கள் இஞ்ஜீல் வழங்கப்பட்டார்கள். அவர்கள் (நண்பகலிலிருந்து) அஸர் வரை வேலை அவர்களும் ஓய்ந்தார்கள். அவர்களும் ஒவ்வொரு ‘கீராத்’ கூலி வழங்கப்பட்டார்கள். பின்னர் நாம் குர்ஆன் வழங்கப்பட்டோம். (அஸரிலிருந்து) சூரியன் மறையும் வரை நாம் வேலை செய்தோம். இரண்டிரண்டு ‘கீராத்’ வழங்கப்பட்டோம்.
‘எங்கள் இறைவா! இவர்களுக்கு மாத்திரம் இரண்டிரண்டு ‘கீராத்’கள் வழங்கியுள்ளாய். எங்களுக்கோ ஒவ்வொரு ‘கீராத்’ வழங்கி இருக்கிறாய். நாங்கள் அவர்களை விடவும் அதிக அளவு அமல் செய்திருக்கிறோமே! என்று இரண்டு வேதக்காரர்களும் கேட்பார்கள். அதற்கு இறைவன் ‘உங்களின் கூலியில் எதையும் நான் குறைத்திருக்கிறேனா?’ என்று கேட்பான். அவர்கள் ‘இல்லை’ என்பர். ‘அது என்னுடைய அருட்கொடை! நான் விரும்பியவர்களுக்கு அதனை வழங்குவேன்’ என்று இறைவன் விடையளிப்பான். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
(குறிப்பு: கீராத்’ என்பது உஹது மலையளவு தங்கள் என்று வேறு ஹதீஸ்களில் விளக்கம் கூறப்படுகிறது.)
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 558
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “யூதர்கள், கிறித்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்குரிய உவமையாவது. கீழ்காணும் உவமையைப் போன்றதாகும். ஒருவர் ஒரு கூட்டத்தினரை (காலையிலிருந்து) இரவு வரை வேலை செய்ய வேண்டும் என்று வேலைக்கு அமர்த்தினார். அவர்கள் நண்பகல் வரை வேலை செய்துவிட்டு, ‘எங்களுக்கு உம்முடைய கூலி தேவையில்லை என்று கூறிவிட்டனர். பிறகு அந்த மனிதர் மற்றும் ஒரு கூட்டத்தினரைக் கூலிக்கு அமர்த்தி இந்த எஞ்சிய நாளின் கூலியை) நான் முன்பு கூறியவாறு தருகிறேன்’ என்றார். அவர்கள் அஸர் தொழுகையின் நேரம் வரை வேலை செய்தார்கள். ‘நாங்கள் செய்த வேலை உமக்கே இருக்கட்டும்! (கூலி எதுவும் எங்களுக்குத் தேவையில்லை) என்றனர். இதன் பின்னர் மற்றொரு கூட்டத்தினரை அவர் கூலிக்கு அமர்த்தினார். அவர்கள் அந்த நாளின் எஞ்சீய பகுதியில் சூரியன் மறையும் வரை வேலை செய்தனர். அந்த இரண்டு கூட்டத்தினரின் கூலியையும் அவர்கள் பெற்றார்கள்.” என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 559
ராபிவு இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுடன் மஃரிபைத் தொழுதுவிட்டு எங்களல் ஒருவர் திரும்பி அம்பு எய்தால் அவர் அம்பு விழும் இடத்தைப் பார்க்க முடியும். (அதாவது அந்த அளவு வெளிச்சம் இருக்கும்.)
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 560
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார். “நபி(ஸல்) அவர்கள் நண்பகலில் லுஹர் தொழுவார்கள. சூரியன் தெளிவாக இருக்கும்போது அஸர் தொழுவார்கள். சூரியன் மறைந்ததும் மக்ரிப் தொழுவார்கள். இஷாவை சில நேரம் முன்னேரத்திலும் சில நேரம் பின்னேரத்திலும் தொழுவார்கள். அதாவது மக்கள் ஒன்று சேர்ந்துவிட்டால் முற்படுத்துவார்கள். மக்கள் வருவதற்கு தாமதமானால் தாமதப் படுத்துவார்கள். ஸுப்ஹைக் காலை வெளிச்சம் வருவதற்கு முன்னால் தொழுபவர்களாக இருந்தனர்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 561
ஸலமா(ரலி) அறிவித்தார். சூரியன் அடிவானத்தில் மறைந்ததும் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் மக்ரிப் தொழுபவர்களாக இருந்தோம்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 562
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (மக்ரிப் இஷாவை) ஏழு ரக்அத்களாக ஒரே நேரத்திலும் (லுஹர் அஸரை) எட்டு ரக்அத்களாக ஒரே நேரத்திலும் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 563
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார். ‘மக்ரிப் தொழுகையை இஷா (இரவுத் தொழுகை) என நாட்டுப்புற அரபிய்கள் குறிப்பிடுகின்றனர். நீங்கள் மக்ரிப் எனக் கூறும் விஷயத்தில் உங்களை அவர்கள் வென்று விட வேண்டாம்..” என அப்துல்லாஹ் அல்முஸ்னீ(ரலி) அறிவித்தார்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 564
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள், மக்களால் ‘அதமா’ எனக் கூறப்பட்டு வந்த இஷாத் தொழுகையை எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்து எங்களை நோக்கி ‘இந்த இரவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? பூமியின் மேற்பரப்பில் இருக்கும் எவரும் இந்த இரவிலிருந்து நூறாவது ஆண்டின் துவக்கத்தில் வாழ மாட்டார்கள்’ எனக் குறிப்பிட்டார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 565
முஹம்மத் இப்னு அம்ர் அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் தொழுகை பற்றி ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள் ‘நபி(ஸல்) அவர்கள் லுஹர்த் தொழுகையை நண்பகலிலும் அஸர்த் தொழுகையைச் சூரியன் ஒளி வீசிக் கொண்டிருக்கும் போதும் மக்ரிப் தொழுகையைச் சூரியன் மறைந்தவுடனும் தொழுவார்கள். மக்கள் கூடிவிட்டால் இஷாவை முன்னேரத்திலும் மக்கள் குறைவாக இருந்தால் தாமதப் படுத்தியும் தொழுவார்கள். ஸுப்ஹை இருளில் தொழுவார்கள்’ என விடையளித்தார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 566
ஆயிஷா(ரலி) அறிவித்தார். இஸ்லாம் நன்கு பரவுவதற்கு முன்னர் நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவு இஷாவைப் பிற்படுத்தினார்கள். ‘பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்’ என உமர்(ரலி) தெரிவிக்கும் வரை நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்த வரவில்லை. அதன்பின்னர் வந்து பள்ளியிலுள்ளவர்களை நோக்கி ‘இப்பூமியிலுள்ளவர்களில் உங்களைத் தவிர வேறு எவரும் இதை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை” என்றார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 567
அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நானும் என்னுடன் கப்பலில் வந்த என் தோழர்களும் ‘புத்ஹான்’ எனும் தோட்டத்தில் தங்கினோம். நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்தனர். ஒவ்வொரு இரவும் இஷாத் தொழுகைக்கு எங்களில் ஒரு (சிறு) கூட்டத்தினர் முறை வைத்து நபி(ஸல்) அவர்களிடம் செல்பவர்களாக இருந்தோம். நானும் என் தோழர்களும் (எங்கள் முறையின் போது) நபி(ஸல்) அவர்களைச் சந்தித்தோம். அவர்கள் தங்களின் காரியத்தில் ஈடுபட்டிருந்ததால் நள்ளிரவு நேரம் வரும் வரை இஷாவைத் தாமதப் படுத்தினார்கள். பின்னர் புறப்பட்டு வந்து மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் வந்திருந்தோரை நோக்கி ‘அப்டியே இருங்கள்! இந்த நேரத்தில் உங்களைத் தவிர வேறு எவரும் தொழவில்லை. இது அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடைகளில் ஒன்றாகும்’ எனக் குறிப்பிட்டார்கள். நபி(ஸல்) அவாகளிடமிருந்து இதைக் கேட்டதனால் நாங்கள் மகிழ்வுற்றோம்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 568
அபூ பர்ஸா(ரலி) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசுவதையும் வெறுப்பவர்களாக இருந்தனர்.”
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 569
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இஷாவைத் தாமதப் படுத்தினார்கள். ‘சிறுவர்களும் பெண்களும் உறங்கிவிட்டனர்; தொழுகை நடத்த வாருங்கள்!ங் என்று உமர்(ரலி) அழைக்கும் வரை நபி(ஸல்) அவர்கள் வரவில்லை. பிறகு வந்து ‘உங்களைத் தவிர இப்பூமியிலுள்ளவர்களில் வேறு எவரும் இந்தத் தொழுகைக்காகக் காத்துக் கொண்டிருக்கவில்லை’ எனக்குறிப்பிட்டார்கள். அன்றைய தினத்தில் மதீனாவைத் தவிர வேறு எங்கும் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கவில்லை. செம்மேகம் மறைந்தது முதல் இரவின் மூன்று பாகத்தில் முந்திய பகுதி முடியும் வரை இஷாத் தொழுபவர்களாக இருந்தனர்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 570
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம் அலுவல் காரணமாக ஓர் இரவு இஷாவைப் பிற்படுத்தினார்கள். நாங்கள் பள்ளியிலேயே உறங்கிப் பின்னர் விழித்தோம் பிறகு எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்து ‘உங்களைத் தவிர பூமியிலுள்ளவர்களில் வேறு எவரும் இத்தொழுகைக்காகக் காத்திருக்கவில்லை” என்றார்கள். தூக்கம் தம்மை மீறிப் போய் விடும் என்று அச்சமில்லாதபோது இஷாவை முன்னேரம் தொழுவதையோ பின்னேரம் தொழுவதையோ ஒரு பொருட்டாக இப்னு உமர்(ரலி) கொள்ளமாட்டார்கள். (அதாவது இரண்டையும் சமமாகக் கருதுவார்கள்) மேலும் இஷாவுக்கு முன் உறங்குபவர்களாகவும் இருந்தனர் என்று நாஃபிவு கூறுகிறார்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 571
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவு இஷாவைத் தாமதப் படுத்தினார்கள். மக்கள் எல்லாம் உறங்குவதும் விழிப்பதும் மீண்டும் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தனர். அப்போது உமர்(ரலி) எழுந்து ‘தொழுகை’ எனக் கூறினார்கள். உடன் நபி(ஸல்) அவர்கள் தலையிலிருந்து நீர் சொட்டத் தம் கையைத் தலையில் வைத்தவர்களாகப் புறப்பட்டதை இன்று பார்ப்பது போலுள்ளது. ‘என் சமுதாயத்திற்குச் சிரமமாகாது என்றால் அவர்களை இந்த நேரத்த்ல தொழுமாறு கட்டளையிட்டிருப்பேன்” என்று அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தம் கைகளைத் தலையில் வைத்தார்கள் என்று நான் ‘அதா’ அவர்களிடம் விளக்கம் கேட்டபோது அவர்கள் தம் விரல்களைச் சற்று விரித்து, விரல்களின் முனைகளைத் தலை உச்சியில் வைத்து அவர்களின் பெருவிரல், காது ஓரங்கள், நெற்றிப் பொட்டு, தாடியின் ஓரங்கள் ஆகியவற்றில் படுமாறு அழுத்தித் தடவி, இப்னு அப்பாஸ்(ரலி) செய்து காட்டியது போல் செய்து காட்டினார்கள் என்று இப்னு ஜுரைஜ் குறிப்பிடுகிறார்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 572
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையைப் பாதி இரவு வரை பிற்படுத்தினார்கள். பின்பு தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். தொழுகைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் வரை நீங்கள் தொழுகையிலேயே இருக்கிறீர்கள்!” என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அன்றிரவு அவர்கள் அணிந்திருந்த மோதிரத்தின் பிரகாசத்தை இப்போது பார்ப்பது போலுள்ளது.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 573
ஜரீர்(ரலி) அறிவித்தார். நாங்கள் முழு நிலவுள்ள இரவில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலவை நோக்கி ‘இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பது போல் நிச்சயமாக உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்! சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப் படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்!” என்று கூறிவிட்டு, ‘சூரியன் உதிக்கும் முன்னரும் மறையும் முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைத் துதிப்பீராக!” (திருக்குர்ஆன் 50:39) என்ற இறைவசனத்தையும் ஓதிக் காண்பித்தார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 574
‘பகலின் வெப்பம் குறைந்த இரண்டு நேரத் தொழுகைகளை (அதாவது பஜ்ருத், அஸர் தொழுகைகளை முறையாகத்) தொழுகிறவர் சுவர்க்கத்தில் நுழைவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 575
ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் ஸஹர் செய்துவிட்டுப் பின்னர் (ஃபஜ்ர்) தொழுகைக்குத் தயாரானோம்.)
‘ஸஹருக்கும் தொழுகைக்குமிடையே எவ்வளவு இடைவெளி இருக்கும்?’ என்று கேட்டேன். அதற்கு ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஐம்பது அல்லது அறுபது வசனங்கள் (ஓதும்) நேரம்’ என்று பதிலளித்தார்கள் என அனஸ்(ரலி) கூறினார்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 576
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) ஸைத் இப்னு ஸாபித்(ரலி) இருவரும் ஸஹ்ர் செய்தனர். நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்குத் தயாராகித் தொழுதார்கள்.
ஸஹர் முடிப்பதற்கும் தொழுகையைத் துவக்குவதற்கும் எவ்வளவு இடைவெளி இருக்கும்? என்று நாங்கள் அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டோம். ‘ஒரு மனிதா ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு நேரம்’ என்று கூறினார்கள் என கதாதா கூறுகிறார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 577
ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார். நான் என் இல்லத்தில் ஸஹர் செய்துவிட்டு, நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் கலந்து கொள்வதற்காக அவசரமாகப் புறப்படுபவனாக இருந்தேன்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 578
ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைநம்பிக்கையுள்ள பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ளமுடியாது.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 579
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார். “சூரியன் உதிப்பதற்கு முன் ஸுப்ஹுடைய ஒரு ரக்அத்தை அடைந்து கொள்பவர் ஸுப்ஹை அடைந்து கொள்கிறார். சூரியன் மறைவதற்கு முன் அஸருடைய ஒரு ரக்அத்தை அடைந்து கொள்பவர் அஸர் தொழுகையை அடைந்து கொள்கிறார்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 580
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற்குரிய நேரத்தில்) அடைந்து கொள்பவர் அந்தத் தொழுகையை அடைந்து கொள்கிறார்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 581
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரை தொழுவதையும் அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரை தொழுவதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என நம்பிக்கைக்குரிய பலர் என்னிடம் கூறியுள்ளனர். அவர்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர் உமர்(ரலி) ஆவார்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 582
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள: “சூரியன் உதிக்கும் நேரத்தையோ மறையும் நேரத்தையோ உங்கள் தொழுகைக்காக நாடாதீர்கள்.” என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 583
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “சூரியன் உதிக்கத் துவங்கும்போது அது (முழுமையாக) உயரும் வரை தொழுவதைத் தாமதப்படுத்துங்கள்! சூரியன் மறையத் துவங்கும்போது அது முழுமையாக மறையும் வரை தொழுகையைப் பிற்படுத்துங்கள்!” என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 584
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இரண்டு வியாபாரங்களைவிட்டும் ஆடை அணியும் இரண்டு முறைகளைவிட்டும் இரண்டு தொழுகைகளைவிட்டும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (இரண்டு தொழுகைகளாவன) ஃபஜ்ருக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரை தொழுவதையும் அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரை தொழுவதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (ஆடை அணியும் இரண்டு முறைகளாவன) ஓர் ஆடை மட்டும் உள்ளபோது தம் கைகள் உள்ளே இருக்குமாறு சுற்றி அதை அணிந்து கொள்வதையும் மர்ம உறுப்பு வானுக்குத் தெரியுமாறு ஓர் ஆடையை முழங்காலைச் சுற்றிக் கட்டிக் கொள்வதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். ‘முனாபதா’, ‘முலாமஸா’ என்ற இரண்டு வியாபாரங்களைவிட்டும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
(குறிப்பு: இந்தக் கல் எந்தப் பொருளின் மீது விழுகிறதோ அந்தப் பொருளை இவ்வளவு விலைக்குத் தருகிறேன் என்று கூறி விற்பது முனாபதா எனப்படும். குவிக்கப்பட்ட பொருட்களைப் பிரித்துப் பார்க்கவிடாமல் அதைத் தொட்டுப் பார்க்க மட்டுமே அனுமதிக்கும் வியாபாரம் முலாமஸா எனப்படும்)
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 585
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “சூரியன் உதிக்கும் போதும் சூரியன் மறையும் போதும் உங்களில் ஒருவர் தொழுவதை (வேண்டுமென்றே) நாட வேண்டாம்!” என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 586
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உயரும் மறையும் வரை எந்தத் தொழுகையும் இல்லை.” என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 587
முஆவியா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் தோழமை கொண்டிருந்தோம். அவர்கள் தொழுது நாங்கள் பார்க்காத ஒரு தொழுகையை நீங்கள் தொழுகிறீர்கள். நபி(ஸல்) அவர்கள் அதைத் தடுத்துமிருக்கிறார்கள். அதுதான் அஸருக்குப் பின் இரண்டு ரக்அத்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 588
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஃபஜ்ருக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரை அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரை ஆகிய இரண்டு தொழுகைகளைவிட்டும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 589
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். என் தோழர்களை தொழக்கண்டது போன்றே நான் தொழுகிறேன். இரவிலும் பகலிலும் விரும்பியதைத் தொழும் எவரையம் தடுக்க மாட்டேன். எனினும் சூரியன் உதிக்கும் நேரத்தையோ மறையும் நேரத்தையோ (தொழுகைக்காக) வேண்டுமென்றே நாடாதீர்கள்!
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 590
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களைக் கொண்டு சென்றவன் மேல் ஆணையாக! அஸருக்குப் பின் இரண்டு ரக்அத்களை இறைவனைச் சந்திக்கும் வரை நபி(ஸல்) அவர்கள்விட்டு விடவில்லை. தொழுவதற்குச் சிரமப்படும் நிலையை அடைந்த பிறகே மரணம் அடைந்தார்கள். அஸருக்கு பின்னுள்ள இரண்டு ரக்அத்களை பெரும்பாலும் உட்கார்ந்தே தொழுபவர்களாக இருந்தனர். தம் உம்மத்தினருக்குச் சிரமத்தை ஏற்படுத்துவதை அஞ்சிப் பள்ளியில் அந்த இரண்டு ரக்அத்களை தொழ மாட்டார்கள். தம் உம்மத்தினருக்கு இலேசானதையே நபி(ஸல்) அவர்கள் விரும்புவார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 591
ஆயிஷா(ரலி) அறிவித்தார். என் சகோதரியின் மகனே! அஸருக்குப் பின் இரண்டு ரக்அத்களை நபி(ஸல்) அவர்கள் என்னிடம் (தங்கும் போது) ஒருபோதும்விட்டதில்லை.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 592
ஆயிஷா(ரலி) அறிவித்தார். இரண்டு தொழுகைகளை இரகசியமாகவோ பம்ரங்கமாகவோ நபி(ஸல்) அவர்கள்விட்டதேயில்லை. அவை ஸுப்ஹுத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள், அஸர் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 593
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அஸருக்குப் பின் எந்த நாளில் என்னிடம் வந்தாலும் இரண்டு ரக்அத்கள் தொழாமல் இருந்ததில்லை.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 594
அபுல் மலீஹ் அறிவித்தார். மேகம் சூழ்ந்த ஒரு நாளில் புரைதா(ரலி)வுடன் ஒரு போரில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். அப்போது அவர்கள், ‘அஸர் தொழுகையை முன்வேளையில் நிறைவேற்றுங்கள். ஏனெனில் ‘அஸர் தொழுகையைவிட்டு விடுகிறவரின் செயல்கள் நிச்சயமாக அழிந்து விடுகின்றன” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளானர்’ என்று குறிப்பிட்டார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 595
அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நாங்கள் இரண்டு இரவு நபி(ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது சிலர் ‘இறைத்தூதர் அவர்களே! எங்களைச் சற்று இளைப்பாறச் செய்யலமே!” என்று கேட்டனர். ‘நீங்கள் தொழுகையைவிட்டும் உறங்கி விடுவீர்களோ என அஞ்சுகிறேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது பிலால் ‘நான் உங்களை எழுப்பி விடுகிறேன்’ என்று கூறியதும் அனைவரும் படுத்தனர். பிலால்(ரலி) தம் முதுகைத் தம் கூடாரத்தின் பால் சாய்த்தார். அவரையும் மீறி உறங்கிவிட்டார். சூரியனின் ஒரு பகுதி உதித்த பின்பே நபி(ஸல்) அவர்கள் விழித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘பிலாலே! நீர் சொன்னது என்னவாயிற்று?’ என்று கேட்டார்கள். ‘இது போன்ற தூக்கம் எனக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை’ என்று பிலால்(ரலி) கூறினார். ‘நிச்சயமாக இறைவன் உங்கள் உயிர்களை அவன் விரும்பியபோது கைப்பற்றிக் கொள்கிறான்; அவன் விரும்பியபோது திரும்பவும் ஒப்படைக்கிறான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு (பிலாலை நோக்கி) ‘பிலாலே! எழுந்து தொகைக்கு பாங்கு சொல்வீராக!” என்றார்கள். (பின்னர்) உளூச் செய்துவிட்டுச் சூரியன் உயர்ந்து பிரகாசம் ஏற்பட்டபோது தொழுதார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 596
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். அகழ்ப்போரின்போது சூரியன் மறைந்த பின் உமர்(ரலி) குரைஷிக் இறைமறுப்பாளர்களை ஏசிக் கொண்டே வந்து ‘இறைத்தூதர் அவர்களே! சூரியன் மறையும் வரை நான் அஸர் தொழவில்லையே’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக நானும் அஸர் தொழவில்லை” என்று கூறினார்கள். நாங்கள் ‘புத்ஹான்’ எனும் பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றோம். நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுகைக்காக உளூச் செய்தார்கள். நாங்களும் அதற்காக உளூச் செய்தோம். சூரியன் மறைந்த பின் அஸர் தொழுதார்கள். அதன்பின்னர் மக்ரிப் தொழுதார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 597
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “யாரேனும் ஒரு தொழுகையை மறந்துவிட்டால் நினைவு வந்ததும் அவர் அதைத் தொழட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் எதுவுமில்லை.”
“என்னைத் தியானிப்பதற்காகத் தொழுகையை நிலை நிறுத்துவீராக” (திருக்குர்ஆன் 20:14) என்ற வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள். என அனஸ்(ரலி) அறிவித்தார்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 598
ஜாபிர்(ரலி) அறிவித்தார். அகழ்ப்போர் தினத்தில் நிராகரிப்பவர்களை உமர்(ரலி) ஏசிக் கொண்டே வந்து ‘சூரியன் மறையும் வரை நான் அஸர் தொழ இயலவில்லை’ என்று கூறினார்கள். நாங்கள் ‘புத்ஹான்’ எனும் பள்ளத்தாக்கில் இறங்கினோம். சூரியன் மறைந்த பின் நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுதுவிட்டுப் பின்னர் மக்ரிப் தொழுதார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 599
அபுல் மின்ஹால் அறிவித்தார். நானும் என்னுடைய தந்தையும் அபூ பர்ஸா(ரலி) அவர்களிடம் சென்றோம். ‘கடமையான தொழுகைகளை நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுவார்கள்?’ என்று என் தந்தை கேட்டார்கள். ‘நீங்கள் முதல் தொழுகை என்று கூறக் கூடிய நண்பகல் தொழுகையை (நடுவானிலிருந்து) சூரியன் சாயும்போது நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள். (பின்னர்) அஸர் தொழுவார்கள். எங்களில் ஒருவர் (அஸர் தொழுதுவிட்டு) மதீனாவின் கடைக் கோடியிலுள்ள தம் இடத்திற்குத் திரும்பும்போது சூரியன் உயிருடன் (ஒளி குன்றாமல்) இருந்து கொண்டிருக்கும்’ என்றார்கள் – மக்ரிப் பற்றி அபூ பர்ஸா(ரலி) கூறியதை நான் மறந்து விட்டேன்.. ‘கடைசித் தொழுகை என்று நீங்கள் குறிப்பிடக் கூடிய இஷாவைப் பிற்படுத்துவதை விரும்புபவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தனர். இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசிக் கொண்டிருப்பதையும் நபி(ஸல்) அவர்கள் வெறுப்பவர்களாக இருந்தனர். அறுபது முதல் நூறு வசனங்கள் வரை ஓதி நபி(ஸல்) அவர்கள் வைகறைத் தொழுகையைத் தொழுது முடிக்கும்போது ஒருவர் தம் அருகில் அமர்ந்திருப்பவரை அறிந்து கொள்ள முடியும்’ என அபூ பர்ஸா(ரலி) கூறினார்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 600
குர்ரா இப்னு காலித் அறிவித்தார். நாங்கள் ஹஸனை (ஹஸன் பஸரீ) எதிர்பார்த்துக் காத்திருந்தோம். அவர் எங்களிடம் தாமதமாக வந்தார். (அவர் வழக்கம் போல் எங்களுடன் அமர்ந்துவிட்டுப் பிறகு) எழுந்து செல்வதற்கான நேரமும் நெருங்கியது. அப்போது அவர் வந்து ‘நம்முடைய அண்டை வீட்டார் நம்மை அழைத்தனர். (அதுதான் தாமதத்தின் காரணம்)’ என்றார். ‘நாங்கள் ஓர் இரவு நபி(ஸல்) அவர்களை எதிர்பார்த்துக கொண்டிருந்தோம். பாதி இரவாகும்போது நபி(ஸல்) அவர்கள் வந்து எங்களுக்கு (இஷா) தொழுகை நடத்தினார்கள். பிறகு எங்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். ‘அறிந்து கொள்க! மக்களெல்லாம் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். தொழுகையை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் வரை நீங்கள் தொழுகையிலே இருக்கிறீர்கள்” என்றும் குறிப்பிட்டார்கள். இதை அனஸ்(ரலி) அறிவித்ததாக ஹஸன் குறிப்பிட்டார். ‘நன்மையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் மக்கள் நன்மையிலே இருக்கின்றனர்’ என்றும் ஹஸன் குறிப்பிட்டார்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 601
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம் கடைசிக் காலத்தில் இஷாத் தொழுகை நடத்தினார்கள். ஸலாம் கொடுத்ததும் நபி(ஸல்) அவர்கள் எழுந்து ‘இந்த இரவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? (இன்றிலிருந்து) நூறாம் ஆண்டின் துவக்கத்தில் இன்று பூமியில் இருக்கும் எவரும் எஞ்சியிருக்க மாட்டார்கள்” என்று குறிப்பிட்டார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பின் நடப்பது பற்றி (உலகம் அழிந்து விடுமோ என்று) தவறான முறையில் மக்கள் விளங்கினர். நபி(ஸல்) அவர்கள் கூறியது இன்று பூமியில் இருப்பவர்களில் எவரும் நூறு ஆண்டுகளுக்குப் பின் இருக்க மாட்டார்கள் என்பதைத் தான். இதன் மூலம் அன்று இருந்த சமுதாயம் நூறு ஆண்டுகளுக்குள் முடிந்து போவர் என்பதையே நபி(ஸல்) அவர்கள் கருதினார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 9, எண் 602
அப்துர்ரஹ்மான் இப்னு அபீ பக்ரு(ரலி) அறிவித்தார். திண்ணைத் தோழர்கள் ஏழ்மை வயப்பட்ட மனிதர்களாக இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் ‘இருவருக்குரிய உணவு யாரிடம் உள்ளதோ அவர் மூன்றாமவ(ராக திண்ணைத் தோழர் ஒருவ)ரை அழைத்துச செல்லட்டும்! நான்கு பேருக்குரிய உணவு இருந்தால் ஐந்தாவது, ஆறாவது நபர்களாக திண்ணைத் தோழர்களை அழைத்துச் செல்லட்டும்!’ எனக் கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) மூன்று நபர்களை அழைத்துச் சென்றனர். நபி(ஸல்) அவர்கள் பத்து நபர்களை அழைத்துச் சென்றனர். (வீட்டில்) நானும் என் தந்தை (அபூ பக்ரும்) தாயும் என்னுடைய வீட்டிற்கும் (என் தந்தை) அபூ பக்ருடைய வீட்டிற்கும் கூட்டாகப் பணி செய்து வரும் வேலையாளும இருந்தோம் என் மனைவியும் என்று அவர் குறிப்பிட்டாரா இல்லையா என்று அடுத்த அறிவிப்பாளர் சந்தேகம் தெரிவிக்கிறார்.
அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் இரவு உணவு அருந்திவிட்டு, இஷாத் தொழும் வரை அங்கேயே தங்கிவிட்டு இரவில் அல்லாஹ் நாடிய அளவு கழிந்த பின் (வீட்டிற்கு) வந்தனர்.
‘உங்கள் விருந்தினரைவிட்டுவிட்டு எங்கே தங்கி விட்டீர்?’ என்று அவர்களின் மனைவி கேட்டனர். அதற்கு அபூ பக்ர்(ரலி), ‘அவர்களுக்கு இன்னும் நீ இரவு உணவு அளிக்கவில்லையா?’ என்று திருப்பிக் கேட்டார்கள். ‘உணவை முன் வைத்த பின்பும் நீங்கள் வருவது வரை அவர்கள் உண்ண மறுத்துவிட்டனர்’ என்று மனைவி கூறினார். (என் தந்தை கோபிப்பார் என்பதை அறிந்த) நான் சென்று ஒளிந்து கொண்டேன்.
‘அறிவிலியே!’ ‘மூக்கறுபடுவாய்!’ என ஏசினார்கள். பிறகு மகிழ்வற்ற நிலையில் ‘சாப்பிடுங்கள்! அல்லாஹ்வின் மேல் ஆணையாக ஒருபோதும் நான் சாப்பிட மாட்டோம்’ என்று (தம் குடும்பத்தினரை நோக்கிக்) கூறினார்கள்.
நாங்கள் உணவின் ஒவ்வொரு கவளத்தையும் எடுத்துச் சாப்பிடும்போது அதன் அடிப்புறத்திலிருந்து அதை விட அதிகமாக வளர்ந்து கொண்டே இருந்தது. அனைவரும் வயிறு நிரம்ப உண்டார்கள். அதற்கு முன்னிருந்ததை விட உணவு அதிகமாக இருந்தது. முன்பிருந்த அளவு அல்லது அதை விட அதிகமாக உணவு இருப்பதைக் கண்ட அபூ பக்ரு(ரலி) ‘பன} ஃபிராஸ் சகோதரியே! இது என்ன?’ என்று (தம் மனைவியிடம்) வினவினார்கள்.
அதற்கவர் ‘என் கண் குளிர்ச்சியின் மேல் ஆணை! இதன் காரணம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் முன்பிருந்ததை விட மூன்று மடங்கு இப்போது அதிகமாக உணவு உள்ளது என்றார். பிறகு அபூ பக்ரும் சாப்பிட்டார்கள். சாப்பிட மாட்டேன் என்று சத்தியம் செய்தது ஷைத்தானிடமிருந்து ஏற்பட்டுவிட்டது ஒரு கவளத்தை எடுத்து உண்டார்கள். பின்பு நபி(ஸல்) அவர்களிடம் எஞ்சிய உணவை எடுத்துச் சென்றார்கள். காலை வரை அது அங்கேயே இருந்தது.
எங்களுக்கும் ஒரு கூட்டத்தினருக்குமிடையே உடன் படிக்கை ஒன்று இருந்தது. அந்தக் கெடு முடிந்துவிட்டது. (அது சம்பந்தமாக நபி(ஸல்) அவர்களிடம் வந்திருந்தவர்களை) பன்னிரெண்டு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு தலைவரின் கீழ் அமைத்தோம். அவர்களில் ஒவ்வொருவருடனும் எத்தனை பேர் இருந்தனர் என்பதை அல்லாஹ்வே அறிவான். அவர்கள் அனைவரும் அந்த உணவிலிருந்து சாப்பிட்டார்கள்.