பாகம் 1, அத்தியாயம் 12, எண் 942
ஷுஜப் அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் போர்க்களத் தொழுகையைத் தொழுதுள்ளார்களா? என்று ஸுஹ்ரீ இடம் கேட்டேன். ‘நான் நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து நஜ்துப் பகுதியில் போரிட்டிருக்கிறேன். நாங்கள் எதிரிகளை நேருக்கு நேர் சந்தித்து அணிவகுத்தோம். நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஒரு பிரிவினர் அவர்களுடன் இணைந்து தொழலானார்கள். மற்றொரு கூட்டத்தினர் எதிரிகளைச் சந்தித்தனர். நபி(ஸல்) அவர்கள் தம்முடன் உள்ளவர்களுடன் ஒரு ருகூவும் இரண்டு ஸஜ்தாக்களும் செய்தனர். பிறகு தொழாத கூட்டத்தினரின் இடத்திற்கு நாங்கள் செல்ல, அந்தக் கூட்டத்தினர் வந்தனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு ருகூவும் இரண்டு ஸஜ்தாக்களும் செய்தனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தனர். உடனே இவர்களில் ஒவ்வொருவரும் எழுந்து தமக்காக ஒரு ருகூவும் இரண்டு ஸஜ்தாக்களும் செய்தனர்’ என்ற விபரத்தை அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூற அதை ஸாலிம் தமக்கு அறிவித்ததாக ஸுஹ்ரீ விடையளித்தார்.
பாகம் 1, அத்தியாயம் 12, எண் 943
நாஃபிவு அறிவித்தார். ‘(தனியாகப் பிரிந்து வர முடியாத அளவுக்கு எதிரிகளுடன்) கலந்துவிட்டால் நின்று கொண்டே ஸஹாபாக்கள் தொழுவார்கள்’ என்று இப்னு உமர்(ரலி) கூறினார்.
“எதிரிகள் இதை விடவும் அதிகமாக இருந்தால் அவர்கள் நின்று கொண்டோ வாகனத்தில் அமர்ந்து கொண்டோ தொழலாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) குறிப்பிடுகிறார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 12, எண் 944
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றார்கள். மக்களும் அவர்களுடன் நின்றனர். நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கூற அனைவரும் தக்பீர் கூறினர். நபி(ஸல்) அவர்கள் ருகூவு செய்தபோது அவர்களில் சிலர் (மட்டும்) ருகூவு செய்தனர். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்தபோது அவர்களுடன் ஸஜ்தாச் செய்தனர்.
பிறகு இரண்டாவது ரக்அத்துக்காக நபி(ஸல்) அவர்கள் எழுந்தபோது ஸஜ்தாச் செய்தவர்கள் எழுந்து தங்கள் சகோதரர்களைப பாதுகாக்கும் பணியில் ஈடுபட, மற்றொரு கூட்டத்தினர் வந்து ருகூவு செய்து ஸஜ்தாவும் செய்தனர். மக்கள் அனைவரும் தொழுகையில்தான் ஈடுபட்டிருந்தார்கள். ஆயினும் ஒருவர் மற்றவரைப் பாதுகாப்பவர்களாக இருந்தனர்.
பாகம் 1, அத்தியாயம் 12, எண் 945
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். அகழ்ப்போரின்போது குரைஷீ இறைமறுப்பாளர்களை ஏசிக் கொண்டே உமர்(ரலி) வந்து ‘இறைத்தூதர் அவர்களே! சூரியன் மறையத் துவங்கும் வரை நான் அஸர் தொழவில்லை’ என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்க ‘அல்லாஹ்வின் மீது அணையாக நானும் இது வரை அஸர் தொழ வில்லை” என்று கூறிவிட்டு, புத்ஹான் என்னுமிடத்திற்குச் சென்று உளூச் செய்துவிட்டு, சூரியன் மறைந்த பிறகு அஸரையும் அதன் பின்னர் மஃரிபையும் தொழுதனர்.
பாகம் 1, அத்தியாயம் 12, எண் 946
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.அஹ்ஸாப் யுத்தத்திலிருந்து திரும்பியபோது எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் ‘பனூ குரைலாக் கூட்டத்தினர் வசிக்கும் இடத்தை நீங்கள் அடையும் வரை அஸர் தொழ வேண்டாம்” என்று கூறினார்கள்.
வழியிலேயே அஸர் நேரத்தை அடைந்தோம். ‘பனூ குரைலாக் கூட்டத்தினர் வசிக்கும் இடத்தை அடையும் வரை நாம் அஸர் தொழவேண்டாம்’ என்று சிலர் கூறினர். வேறு சிலர் ‘இந்த அர்த்தத்தில் நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை; எனவே நாம் தொழுவோம்’ என்றனர். இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது அவர்களில் எவரையும் நபி(ஸல்) அவர்கள் குறை கூறவில்லை.
பாகம் 1, அத்தியாயம் 12, எண் 947
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இருட்டிலேயே ஸுப்ஹுத் தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறினார்கள். பிறகு ‘அல்லாஹ் மிகப் பெரியவன்! கைபர் வீழ்ந்தது! ஒரு கூட்டத்தினரின் மீது நாம் தாக்குதல் தொடுத்தால் அவர்களின் முடிவு கெட்டதாக அமையும்!” என்று கூறினார்கள்.
கைபர் வாசிகள் வீதிகளில் ஓடிக் கொண்டே ‘முஹம்மதும் அவரின் படையினரும் வந்துவிட்டனர்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், எதிரிகளின் மீது தாக்கதல் தொடுத்தார்கள். போரில் ஈடுபட்டவர்களைக் கொன்றார்கள். சிறுவர்களைக் கைதிகளாகப் பிடித்தார்கள். (கைதியாகப் பிடிபட்ட) ஸஃபிய்யா(ரலி) திஹ்யா அல்கல்பீக்குக் கிடைத்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைத்தார்கள். அவரை விடுதலை செய்ததையே மஹராக ஆக்கி அவரை நபி(ஸல்) அவர்கள் மணந்தார்கள்.
இச்செய்தியை ஸாபித் கூறுகையில் அவரிடம் ‘அபூ முஹம்மதே! நபி(ஸல்) அவர்கள் என்ன மஹர் கொடுத்தார்கள் என்பதை அனஸ்(ரலி) அவர்களிடம் நீங்கள் கேட்டீர்களா?’ என்று அப்துல் அஸீஸ் கேட்டபோது, ‘அவரின் விடுதலையையே மஹராக’ ஆக்கியதாகக் கூறிவிட்டுப் புன்முறுவல் புத்தார். இந்தத் தகவலை ஹம்மாத் அறிவித்தார்.