பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1120
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் ‘இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி அவற்றிலுள்ளவை அனைத்தையும் நிர்வம்ப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி அவற்றிலுள்ளவற்றின் உரிமை உனக்கே உரியது. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒளி நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமிக்கு அரசன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். நீ உண்மையாளன். உன் வாக்குறுதி உண்மை. உன்னுடைய சந்திப்பு உண்மை. உன்னுடைய கூற்று உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் உண்மையாளர்கள். முஹம்மது உண்மையாளர். மறுமை நாள் உண்மை. இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன்னையே நம்பினேன். உன்மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பம்ரங்கமாகச் செய்த பாவங்களை மன்னித்துவிடு. நீயே (சிலரை) முற்படுத்துபவன், (சிலரை) பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. உன்னுடைய உதவியின்றி நமை செய்யும் ஆற்றலோ தீமையிலிருந்து விடுபடும் ஆற்றலோ இல்லை’ என்று கூறிவார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1121-1122
இப்னு உமர்(ரலி) கூறியதவாது. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். நானும் ஒரு கனவு கண்டு அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது நான் இளைஞனாகவும் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாகவும் இருந்தேன். இரண்டு வானவர்கள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணறுக்குச் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது போல் அந்த நரகத்திற்கும் கட்டப்பட்டிருந்தது அதற்கு இரண்டு கொம்புகளும் இருந்தன. அதில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் கிடந்தனர். அப்போது நான் நரகத்தைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறினேன். அப்போது வேறு ஒரு வானவர் என்னைச் சந்தித்து நீர் பயப்படாதீர் என்று கூறினார். இவ்வாறு நான் கனவு கண்டேன். இக்கனவை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் நபி(ஸல்) அவக்hள் ‘அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் அவர் மனிதர்களிலே மிகவும் நல்லவர்’ என்று கூறினார்கள். அதன் பின்னர் இரவில் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1123
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுவார்கள். அதுவே அவர்களின் (வழக்கமான) தொழுகையாக இருந்தது. அத்தொழுகையில் உங்களில் ஒருவர் ஐம்பது வசனங்கள் ஓதக் கூடிய நேரம் ஒரு ஸஜ்தாச் செய்வார்கள். ஃபஜ்ருத் தொழுகைக்கு முன்னால் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு ஃபஜ்ருத் தொழுகைக்காக முஅத்தின் அழைக்கும் வரை வலப்புறம் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1124
ஜுன்துப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோயுற்றபோது ஓர் இரவோ, இரண்டு இரவுகளோ தொழவில்லை.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1125
ஜுன்துப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) சில நாள்கள் வரவில்லை. அப்போது குறைஷீக் கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி ‘இவரின் ஷைத்தான் இவரைவிட்டுவிட்டான்’ என்று கூறினாள். அப்போது ‘முற்பகல் மீதும் இரவின் மீதும் ஆணையாக உம்முடைய இறைவன் உம்மைவிட்டு விடவுமில்லை; உம்மீது கோபம் கொள்ளவுமில்லை” (திருக்குர்ஆன் 93:1,2,3) என்ற வசனம் அருளப்பட்டது.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1126
உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவு விழித்ததும், ‘ஸுப்ஹானல்லாஹ்! இந்த இரவில்தான் எத்தனை சோதனைகள் இறக்கப்பட்டுள்ளன? எத்தனை பொக்கிஷங்கள் திறக்கப்பட்டுள்ளன. அறைகளில் உள்ள பெண்களை எழுப்பி விடுவோர் யார்? இவ்வுலகில் ஆடை அணிந்திருந்த எத்தனையோ பேர் மறுமையில் நிர்வாணிகளாக இருப்பார்கள்’ என்று குறிப்பிட்டார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1127
அலீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவில் என்னிடமும் ஃபாத்திமா(ரலி) அவர்களிடமும் வந்தார்கள். ‘நீங்கள் இருவரும் தொழவில்லையா? என்று கேட்டார்கள். அப்போது நான் இறைத்தூதர் அவர்களே! எங்களின் உயிர்கள் அல்லாஹ்வின் கையிலுள்ளன. அவன் எழும்பும்போதே நாங்கள் எழ முடியும் என்று கூறினேன். இதை நான் கூறியபோது எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் செல்லலானார்கள். பின்னர் தம் தொடையில் அடித்து ‘மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்’ (திருக்குர்ஆன் 18:54) என்று கூறிக் கொண்டே திரும்பிச் சென்றார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1128
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சில அமல்களைச் செய்ய விரும்புவார்கள். (ஆனால்) சில சமயம் அவற்றைச் செய்ய மாட்டார்கள். மக்களும் அதைச் செய்து அவர்களின் மீது அது அச்சமே இதற்கு காரணம். நபி(ஸல்) அவர்கள் ஒருபோதும் லுஹாத் தொழுததில்லை. நான் லுஹாத் தொழுது வருகிறேன்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1129
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவில் பள்ளிவாயிலில் தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். மறுநாள் நபி(ஸல்) அவர்கள் தொழதபோது மக்கள் அதிகமானார்கள். மூன்றாவது இரவிலோ நான்காவது இரவிலோ மக்கள் திரண்டபோது நபி(ஸல்) அவர்கள் வரவில்லை. ஸுப்ஹு நேரம் வந்ததும் ‘நீங்கள் செய்ததை நிச்சயமாக நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். உங்கள்மீது இத்தொழுகை கடமையாக்கப் பட்டு விடுமோ என்று நான் அஞ்சியதுதான் உங்களிடம் வராமல் என்னைத் தடுத்துவிட்டது’ என்று கூறினார்கள். இது ஒரு ரமலான் மாதத்தில் நடந்ததாகும்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1130
முகீரா(ரலி) அறிவித்தார். சில சமயம் நபி(ஸல்) அவர்கள் கால்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது ‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?’ என்று கேட்பார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1131
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்விற்கு மிகவிருப்பமான தொழுகை தாவூது(அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ் விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூது(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரை தூங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பைவிட்டு விடுவார்கள்’. இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1132
மஸ்ரூக் அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கு விருப்பமான அமல் எது என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘தொடர்ந்து செய்யும் அமல்’ என்று விடையளித்தார்கள். (இரவில்) நபி(ஸல்) அவர்கள் எப்போது எழுவார்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள் ‘சேவல் கூவும்போது எழுவார்கள்’ என்று விடையளித்தார்கள்.
மற்றோர் அறிவிப்பில் சேவல் கூவும்போது எழுந்து தொழுவார்கள் என்று காணப்படுகிறது.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1133
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் (இருக்கும்போது) ஸஹர் நேரம் வரும் வரை உறங்காமல் இருந்ததில்லை.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1134
அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறியவதாவது: நபி(ஸல்) அவர்களும் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) வும் ஸஹர் செய்தனர். ஸஹர் செய்து முடித்ததும், நபி(ஸல்) அவர்கள் (ஃபஜர்) தொழுகைக்கு தயாராகித் தொழுதார்கள்.
அவர்கள் ஸஹர் செய்ததற்கும் தொழுததற்கும் இடையே எவ்வளவு நேரம் இருந்தது என்று அனஸ்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள் ‘ஒருவர் ஜம்பது வசனங்கள் ஓதக்கூடிய நேரம்’ என்று விடையளித்தார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1135
அபூ வாயில் அறிவித்தார். ‘நாள் ஓர் இரவு நபி(ஸல்) அவர்களுடன் தொழுதேன். நான் தவறான ஒரு முடிவுக்கு வருமளவுக்கு அவர்கள் நின்று கொண்டே இருந்தார்கள்’ என்று இப்னு மஸ்வூத்(ரலி) கூறியபோது அந்தத் தவறான முடிவு எது? என்று கேட்டேன். அதற்கவர்கள் ‘நபி(ஸல்) அவர்களுடன் தொழுவதைவிட்டுத் தொழுகையை முறித்து விடலாம் என்று எண்ணினேன்’ என்று விடையளித்தார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1136
ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழும்போது பல் துலக்குவார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1137
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் ‘இறைத்தூதர் அவர்களே! இரவுத் தொழுகை எவ்வாறு?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஸுப்ஹை (நேரம் வந்துவிடுமென) நீர் அஞ்சினால் ஒரு ரக்அத் வித்ருத் தொழுவீராக’ என்று விடையளித்தார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1138
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இரவில் பதின்மூன்று ரக்அத்கள் தொழுது வந்தனர்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1139
மஸ்ரூக் கூறியதாது: நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் (சில பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், சில சமயம் ஏழு ரக்அத்கள், (நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள் என்று விடையளித்தார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1140
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய முன் ஸுன்னத் வித்ரு ஆகியவற்றைச் சேர்த்து இரவில் பதின்மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1141
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோன்பு தோற்கமாட்டார்களோ என்று நாங்கள் நினைக்குமளவுக்கு நோன்பைத் தொடர்ந்துவிட்டு விடுவார்கள். நோன்பை விட மாட்டார்களோ என்று நாங்கள் நினைக்குமளவுக்குத் தொடர்ந்து நோன்பு நோற்பார்கள். நீர் அவர்களைத் தொழக் கூடியவர்களாகப் பார்க்க விரும்பினால் அவ்வாறே பார்ப்பீர். அவர்களைத் தூங்கக் கூடியவர்களாகப் பார்க்க விரும்பினால் அவ்வாறே பார்ப்பீர்!
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1142
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “உங்களில் ஒருவர் உறங்கும்போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது, உறங்கு என்று கூறுகிறான். அவர் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மற்றொரு முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்’. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1143
ஸமுரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கனவில் கண்ட தலை நசுக்கப்படும் மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டு ‘அவர் குர்ஆனைக் கற்று தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்” என்று விளக்கமளித்தார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1144
அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். ஒருவர் விடியும் வரை தூங்கி கொண்டே இருக்கிறார். தொழுகைக்கு எழுவதில்லை என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்துவிட்டான்’ என்று விடையளித்தார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1145
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான்’. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1146
அஸ்வத் அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள்,இரவின் ஆரம்ப நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் உறங்குவார்கள். இரவின் கடைசியில்எழுந்து தொழுவார்கள். பிறகு படுக்கைக்குச் செல்வார்கள். முஅத்தின் பாங்கு சொன்னதும் விழித்துக் குளிக்க வேண்டிய அவசியம் இருந்தால் குளிப்பார்கள். இல்லாவிட்டால் உளூச் செய்துவிட்டு (தொழுகைக்காகப்) புறப்படுவார்கள்’ என்று விடையளித்தார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1147
அபூ ஸலமா அறிவித்தார். ரமலானில் நபி(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘நபி(ஸல்) அவர்கள் ரமலானிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்’ என்று விடையளித்தார்கள்.
‘இறைத்தூதர் அவர்களே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஆயிஷாவே! என் கண்கள் தாம் உறங்குகின்றன. என் உள்ளம் உறங்குவதில்லை’ என்று விடையளித்தார்கள்’ என்றும் ஆயிஷா(ரலி) கூறினார்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1148
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையில் உட்கார்ந்த நிலையில் ஓதியதை நான் பார்த்ததில்லை. அவர்கள் முதுமையடைந்தபோது உட்கார்ந்த நிலையில் ஒதினார்கள். முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும்போது எழுந்து நின்று அதை ஓதிவிட்டுப் பிறகு ருகூவு செய்தார்கள்
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1149
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒரு ஃபஜ்ருத் தொழுகையின்போது பிலால்(ரலி) அவர்களிடம் ‘பிலாலேஸ இஸ்லாத்தில் இணைந்த பின் நிர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறும்! ஏனெனில் உம்முடைய செருப்போசையை சொர்க்கத்தில் கேட்டேன்’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரலி) ‘இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அவ்வுளூவின் மூலம் நான் தொழ வேண்டுமென்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய செயல்களில் சிறந்த செயல்’ என்று விடையளித்தார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1150
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (பள்ளிக்கு) வந்தபோது இரண்டு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. ‘இந்தக் கயிறு ஏன்?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்க. அதற்கு மக்கள், ‘இது ஸைனபு(ரலி)க்கு உரியதாகும்; அவர் (நின்று தொழும் போது) சோர்வடைந்தால் இந்தக் கயிற்றில் சாய்ந்து கொள்வார்’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘கூடாது. இதை அவிழ்த்து விடுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகத்துடன் இருக்கும்போது தொழ வேண்டும். சோர்வடைந்தால் உட்கர்ந்து விட வேண்டும்’ என்று கூறினார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1151
ஆயிஷா(ரலி) அறிவித்தார். பனூ அஸத் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி என்னிடம் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் வந்து ‘யார் இவர்?’ என்று கேட்டார்கள். அதற்கு நான் இவர் இரவெல்லாம் உறங்க மாட்டார். தொழுது கொண்டே இருப்பார் என்று கூறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘நிறுத்து! அமல்களில் உங்களால் இயன்றதையே செய்யுங்கள். நிச்சயமாக இறைவன் நீங்கள் சலிப்படையும் வரை சலிப்படைய மாட்டான்’ என்று கூறினார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1152
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அப்துல்லாஹ்வே! இரவில் தொழும் வழக்கமுடையவர் திடீரென அதைவிட்டதைப் போன்று நீர் ஆம்விடாதீர்’ என்று கூறினார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1153
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என்னிடம் ‘நீர் இரவெல்லாம் நின்று வணங்குவதாகவும் பகலெல்லாம் நோன்பு நோற்பதாகவும் எனக்குத் தெரிய வருகிறதே’ என்று கேட்டார்கள். அதற்கு நான் அப்படித்தான் செய்கிறேன் என்று விடையளித்தேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நீர் இவ்வாறு செய்தால் உம்முடைய கண்கள் பலவீனப்படும். உடல் நலியும் – உம்முடைய குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. எனவே நீர் (சில நாள்கள்)விட்டு விடுவீராக! (சிறிது நேரம்) தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக! என்று கூறினார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1154
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘யார் இரவில் விழித்து வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு நிகரானவர் இல்லை; ஆட்சியும் அவனுக்குரியது; புகழும் அவனுக்குரியது; அவன் அனைத்தப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவன் தூயவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தூயவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் மிகப்பெரியவன் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையில் இருந்து விடுபடுவதும் அவனைக் கொண்டே இருக்கிறது என்று கூறிவிட்டு இறைவா! என்னை மன்னித்துவிடு என்றோ, வேறு பிரார்த்தனைகளையோ செய்தால் அவை அங்கீகரிக்கப்படும். உளூச் செய்து தொழுதால் அத்தொழுகைஒப்புக் கொள்ளப்படும். என உபதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1155
ஹைஸம் இப்னு அபீ ஸினான் அறிவித்தார். அபூ ஹுரைரா(ரலி) தம் உரையின்போது நபி(ஸல்) அவர்கள் பற்றி அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) இயற்றிய பின்வரும் கவிதையை எடுத்துக் கூறினார்கள்.
‘எங்களிடம் இறைத்தூதர் இருக்கிறார்கள். ஃபஜ்ரு நேரம் வந்ததும் அவனுடைய வேதத்தை அவர்கள் ஓதுகிறார்கள். நாங்கள் வழிகேட்டில் இருந்த பின் எங்களுக்கு அவர்கள் நேர்வழி காட்டினார்கள். அவர்கள் கூறியது நடந்தேறும் என்று எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன. இணை வைப்பவர்கள் படுக்கையில் அழுந்திக் கிடக்கும்போது அவர்கள் படுக்கையிலிருந்து எழுந்து தொழுவார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1156-1157-1158
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நான் கண்ட ஒரு கனவில் என்னுடைய கையில் பட்டுத் துணி ஒன்று இருந்தது. நான் சொர்க்கத்தில் எந்த இடத்திற்குச் செல்ல விரும்பினாலும் அது என்னைக் கொண்டு செல்லும்போது என்னிடம் இருவர் வந்து என்னை நரகத்திற்குக் கொண்டு செல்ல முயன்றார்கள். அப்போது அவர்களை ஒரு வானவர் சந்தித்து ‘இவரைவிட்டு விடுங்கள் என்று கூறிவிட்டு என்னிடம் ‘பயப்படாதீர்!’ என்று கூறினார்கள். என்னுடைய கனவ ஹஃப்ஸா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கூறியபோது ‘அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் மனிதர்களில் அவர் மிக நல்லவர்” என்று கூறினார்கள். அதன் பிறகு நான் இரவில் தொழுபவனாம் விட்டேன்.
நபித்தோழர்கள் லைலத்துல் கத்ர் இரவு இருபத்தி ஏழாம் இரவு என்று கனவு கண்டு நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘உங்கள் கனவைப் போல் கனவு கண்டேன். அது கடைசிப் பத்து நாள்களில்தான் அமைந்துள்ளது. லைலத்துல் கத்ர் இரவை அடைய முயல்கிறவர் கடைசிப் பத்தில் தேடட்டும்’ என்று கூறினார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1159
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுதுவிட்டுப் பின்னர் எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் உட்கார்ந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். ஸுப்ஹுடைய பாங்குக்கும் இகாமத்துக்குமிடையே இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவற்றை நபி(ஸல்) அவர்கள் ஒருபோதும்விட்டது இல்லை.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1160
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் தொழுததும் வலப்புறம் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1161
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் தொழுததும் நான் விழித்திருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். இல்லாவிடில் தொழுகைக்கு அழைக்கும் வரை படுத்துக் கொள்வார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1162
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் குர்ஆனுடைய அத்தியாயங்களை எங்களுக்குக் கற்றுத் தந்தது போல் எல்லாக் காரியங்களிலும் நல்லதைத் தேர்வு செய்யும் முறையையும் கற்றுத் தந்தார்கள். அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் ஒருவருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கடமையல்லாத இரண்டு ரக்அத்களை அவர் தொழட்டும். பின்னர் ‘இறைவா! உனக்கு ஞானம் இருப்பதால் உன்னிடம் நல்லதை வேண்டுகிறேன். உனக்கு வல்லமை இருப்பதால் உன்னிடம் வல்லமையை வேண்டுகிறேன். உன்னுடைய மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ அனைத்திற்கும் அறிகிறாய். நான் அறிய மாட்டேன். மறைவான என்னுடைய இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் என்னுடைய மறுமைக்கும் சிறந்தது என்று நீ அறிந்தால் அதற்குரிய ஆற்றலை எனக்குத் தா! அதை எனக்கு பரக்கத் செய்! இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் கெட்டது என்று நீ அறிந்தால் என்னைவிட்டு இந்தக் காரியத்தையும் இந்தக் காரியத்தையும்விட்டு என்னையும் திருப்பி விடு. எங்கிருந்தாலும் எனக்கு நல்லவற்றிற்கு ஆற்றலைத் தா! திருப்தியைத் தா! என்று கூறட்டும். அதன் பிறகு தம் தேவையைக் குறிப்பிடட்டும்.”
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1163
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “உங்களில் ஒருவர் பள்ளியில் நுழைந்ததும் இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம்’. என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1164
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தி முடித்தார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1165
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்களையும் லுஹருக்குப் பின இரண்டு ரக்அத்களையும் ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்த்களையும் மஃரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் தொழுதிருக்கிறேன்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1166
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். “உங்களில் ஒருவர் இமாம் உரை நிகழ்த்தும்போது வந்தால் இரண்டு ரக்அத்கள் தொழட்டும்’ என்று தம் சொற்பொழிவின்போது நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1167
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். என்னுடைய வீட்டிற்குச் சிலர் வந்து நபி(ஸல்) அவர்கள் கஅபாவுக்குள் நுழைந்துவிட்டனர். என்று கூறினார்கள். உடன் நான் புறப்பட்டுச் சென்றபோது நபி(ஸல்) அவர்கள் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். பிலால்(ரலி) கஅபாவின் வாசலில் நின்றார்கள். நான் பிலாலிடம், பிலாலே! நபி(ஸல்) அவர்கள் கஅபாவில் தொழுதார்களா? என்று கேட்டேன். அதற்கவர்கள் ‘ஆம்’ என்றனர். எந்த இடத்தில் என்று கேட்டேன். ‘இந்த இரண்டு தூண்களுக்கிடையே தொழுதுவிட்டுப் பின்னர் வெளியே வந்து கஅபாவை நோக்கி இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்’ என்று விடையளித்தார்கள்.
‘லுஹாவுடைய இரண்டு ரக்அத்களைத் தொழுமாறு நபி(ஸல்) அவர்கள் என்னை வலியுறுத்தினார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) குறிப்பிட்டார்கள். நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் நண்பகலில் என்னுடைய இல்லம் வந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் நாங்கள் அணி வகுத்தோம். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்’ என்று இத்பான்(ரலி) குறிப்பிட்டார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1168
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்)அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் தொழுததும் நாண் விழித்திருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். இல்லாவிடில் தொழுகைக்கு அழைக்கும் படி படுத்தக் கொள்வார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1169
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரித் தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1170
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இரவில் பதின்மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்.ஃபஜ்ருடைய பாங்கைக் கேட்டதும் சுருக்கமாக இண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1171
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து ஓதினார்களா? என்று நான் நினைக்குமளவுக்குச் சுருக்கமாகத் தொழுவார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1172
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்களையும் லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் மஃரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் தொழுதிருக்கிறேன். மக்ரிப், இஷா (உடைய ஸுன்னத்) தொழுகைககைள அவர்களின் வீட்டில் தொழுதிருக்கிறேன்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1173
ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ர் நேரம் வந்ததும் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். அந்நேரம் நான் நபி(ஸல்) அவர்களிடம் செல்லாத நேரமாக இருந்தது.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1174
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் (லுஹர், அஸர் தொழுகைகளை) சேர்ந்தார்ப்போல் எட்டு ரக்அத்களும் (மக்ரிப், இஷாத் தொழுகைகளை) சேர்ந்தார்ப்போல் ஏழு ரக்அத்களும் தொழுதிருக்கிறேன்.
அபூ ஷஹ்ஸாவிடம் நபி(ஸல்) அவர்கள் லுஹரை அதன் கடைசி நேரத்திலும் அஸரை அதன் கடைசி நரத்திலும் இஷாவை அதன் ஆரம்பத்திலும் தொழுதிருப்பார்கள் என்றே கருதுகிறேன் எனக் கூறினேன். அதற்கவர் ‘நானும் அவ்வாறே கருதுகிறேன்’ என்றார் என அம்ர் குறிப்பிடுகிறார்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1175
முவர்ரிக் அறிவித்தார். நீங்கள் லுஹாத் தொழுவது உண்டா? என்று இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘இல்லை’ என்றார்கள். உமர் தொழுவார்களா? என்று கேட்டேன். அதற்கவர்கள் ‘இல்லை’ என்றார்கள். அபூ பக்ர்(ரலிமூ தொழுவார்களா? என்று கேட்டேன். அதற்கும் ‘இல்லை’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுவார்களா? என்று கேட்டேன். ‘அது தெரியவில்லை’ என்றார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1176
அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழுதாக உம்முஹானி(ரலி)யைத் தவிர வேறு எவரும் அறிவிக்கவில்லை ‘நபி(ஸல்) அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு மக்கா வெற்றியின்போது வந்து குளித்துவிட்டு எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதை விடச் சுருக்கமாக வேறு எந்தத் தொழுகைகளையும் அவர்கள் தொழ தொழுகைகளையும் அவர்கள் தொh நான் பார்த்ததில்லை. ஆயினும் அவர்கள் ருகூவையும் ஸுஜூதையும் முழுமையாகச் செய்தார்கள்’ என்று உம்முஹானி(ரலி) அறிவித்தார்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1177
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழ நான் பார்த்ததில்லை. ஆனால் தொழுவேன்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1178
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறும் லுஹாத் தொழுமாறும் வித்ருத் தொழுதுவிட்டு உறங்குமாறும் மூன்று விஷயங்களை நபி(ஸல்) அவர்கள் எனக்கு வலியுறுத்தினார்கள். நான் மரணிக்கும் வரை அவற்றை விடமாட்டேன்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1179
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். உடல் பருமனாக இருந்த ஓர் அன்ஸாரித் தோழர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘உங்களுடன் நின்று என்னால் தொழ முடிவதில்லை’ என்று கூறினார். மேலும் அவர்களுக்காக உணவு சமைத்துத் தம் இல்லத்திற்கு அழைத்தார். அவர்கள் தொழுவதற்காகப் பாயனி ஓர் ஒரத்தில் தண்ணீர் தெளித்து பதப்படுத்தினார். நபி(ஸல்) அவர்கள் அதன் மீது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
நபி(ஸல்) அவர்கள் லஹாத் தொழுவார்களா? என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘அன்றைய தினம் தவிர வேறு எப்போதும் அவர்கள் தொழ நான் பார்த்ததில்லை’ என விடையளித்தார்கள் என்று இப்னுல் ஜாரூத் குறிப்பிட்டார்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1180
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்கள் லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்கள் மஃரிபிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்கள் இஷாவிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்கள் ஸுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்கள் ஆகிய பத்து ரக்அத்களைத் தொழுததை நான் நினைவில் வைத்திருக்கிறேன். ஸுப்ஹுக்கு முன் உள்ள அந்த நேரம் நபி(ஸல்) அவர்களிடம் யாரும் செல்ல முடியாத நேரமாகும்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1181
ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார். முஅத்தின் பாங்கு சொல்லி ஸுப்ஹு நேரம் வந்ததும் நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1182
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களையும் ஸுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்களையும்விட்டதில்லை.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1183
அப்துல்லாஹ் அல் முஸ்னி(ரலி) அறிவித்தார். மஃரிபுக்கு முன் நீங்கள் தொழுங்கள். மஃரிபுக்கு முன் தொழுங்கள். மஃரிபுக்கு முன் விரும்புயவர்கள் தொழுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அதை ஒரு ஸுன்னத்தாகக் கருதக்கூடாது. என்பதற்காகவே இவ்வாறு குறிப்பிட்டார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1184
மர்ஸத் இப்னு அப்தில்லாஹ் அறிவித்தார். நான் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அவர்களிடம் சென்று அபூ தமீம் மஃரிபுக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுகிறார்களே, உங்களுக்கு இத ஆச்சரியமாக இல்லையா? என்று கேட்டேன். அதற்கவர்கள் ‘நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நாங்கள் அவ்வாறு செய்து வந்தோம்’ என்று விடையளித்தார்கள். இப்போது ஏன்விட்டுவிட்டீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள் ‘அலுவல்களே காரணம்’ என்றார்கள்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1185-1186
இத்பான் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, நான் பனூ ஸாலிம் என்ற என் சமூகத்தினருக்குத் தொழுகை நடத்துபவனாக இருக்கிறேன். என் பார்வை குறைந்துவிட்டது. மழைக் காலங்களில் எனக்கும் என் சமூகத்தினரின் பள்ளிவாசலுக்கும் இடையே தண்ணீர் ஓடுகிறது. அதைக் கடந்து அவர்களின் பள்ளிக்கு வருவது சிரமமாக உள்ளது. எனவே தாங்கள் என் இல்லத்திற்கு வந்து ஒரு இடத்தில் தொழ வேண்டும். அவ்விடத்தை (என்னுடைய) தொழுமிடமாக ஆக்கிக் கொள்ள விரும்புகிறேன் என்றேன். ‘செய்கிறேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டுமறுநாள் நண்பகலில் கூறிவிட்டு மறுநாள் நண்பகலில் அபூ பக்ர்(ரலி) உடன் வந்து (வீட்டின் உள்ளே வர) அனுமதி கோரினார். அனுமதித்தேன்.. விட்டில் நுழைந்ததும் உட்காராமலேயே நுழைந்தததும் உட்காராமலேயே ‘உம்முடைய வீட்டில் எந்த இடத்தில் நான் தொழ வேண்டுமென விரும்புகிறீர்?’ என்று கேட்டார்கள். வீட்டில் நான் விரும்பிய ஒரு பகுதியை அவர்களுக்குக் காட்டினேன். நபி(ஸல்) அவர்கள் அவ்விடத்தில் நின்று தக்பீர் கூறினார்கள். நாங்கள் வரிசையாக நின்றோம். இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தியப் பின்னர் ஸலாம் கொடுத்தார்கள். அவர்கள் ஸலாம் கொடுத்தபோது நாங்களும் ஸலாம் கொடுத்தோம். அவர்களுக்காக விருந்து சமைத்து அவர்களை வற்புறுத்தினேன். என்னுடைய வீட்டிற்கு நபி(ஸல்) அவர்கள் வந்ததைக் கேள்விப்பட்ட மக்கள் என்னுடைய வீட்டில் குழுமினார்கள். அவர்கள் ஒருவர் ‘மாலிக் ஏன் வரவில்லை’ என்று கேட்டார். மற்றொரு மனிதர் ‘அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்காத ஒரு முனாபிக் என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அவ்வாறு கூறாதே! அவர் அல்லாஹ்வின் திருப்தியை நாடி லாயிலாஹ இல்லல்லாஹு என்று கூறியதை நீர் அறிய மாட்டீரா? என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையாக அவரின் நேசமும் அவரின் உரையாடலும் முனாபிக்களிடமே இருப்பதை நாங்கள் பார்க்கிறோம்’ என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் திருப்தியை நாடி லாயிலாஹ இல்லல்லாஹு சொல்கிறவருக்கு நரகை அல்லாஹ் ஹராமாக்கிவிட்டான்” என்று குறிப்பிட்டார்கள்.
இச்செய்தியை அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கூறியபோது அதை ஆட்சேபித்தார்கள். ‘நீ கூறிய செய்தியை நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன்’ என்றும் கூறினார்கள். இது எனக்குப் பெரும் கவலையளித்தது. இந்தப் போரிலிருந்து அல்லாஹ் என்னை உயிரோடு திரும்பச் செய்தால், இத்பான்(ரலி) அவரின் பள்ளியில் உயிரோடு இருந்தால் இது பற்றி அவரிடம் கேட்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன். ஊர் திரும்பி ஹஜ்ஜுக்கோ உம்ராவுக்கோ இஹ்ராம் அணிந்து மதீனாவிற்கு வந்தபோது பனூ ஸாலிம் இத்பான்(ரலி) பார்வையிழந்தவராகத் தம் சமுதாயத்திற்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார். தொழுது ஸலாம் சொல்லி நான் யார் என்பதையும் கூறினேன். பிறகு இச்செய்தியைப் பற்றியும் திரும்ப விசாரித்தேன். முதலில் எனக்குக்க் கூறியவாறே இப்போதும் எனக்கு இச்செய்தியைக் கூறினார் என்று மஃமூத் இப்னு ரபீஉ கூறினார்.
பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1187
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “உங்களின் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள். அவறைக் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள்.” என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.