Featured Posts

ஜின் ஷைத்தான்களின் ஆள்மாறாட்டம்

முக்கியமாக ஒன்றை கவனிக்க வேண்டும். ஜின் வர்க்கம் மனித வர்க்கத்தைப் போன்றதாகும். ஜின்களில் காஃபிர்கள் உண்டு. இறைவனை மறுத்துப் பேசுகின்றோரும் உண்டு. முஸ்லிம்களும் உண்டு. ஜின்களில் பாவிகள், குற்றவாளிகள், அறிவீலிகள் மூடத்தனமாக இறைவனுக்கு வழிப்படுகிறவர்கள் மனிதர்களில் சிலர்களைப் போன்று குரு (ஷைகு)மார்களை விரும்புகிறவர்கள் இப்படி பலதரப்பட்ட அமைப்பிலும் ஜின்கள் இருக்கிறார்கள். (இது ஸூரத்துல் ஜின் பதினொன்றாம் ஆயத்திலும் சுட்டிக்காட்டப்படுகிறது) சந்தர்ப்பங்களில் ஜின்கள் குரு (ஷைகு)மார்களின் வேடங்களை அணிந்து மனிதனிடம் காட்சியளிக்கிறார்கள். இத்தகைய சம்பவங்கள் பெரும்பாலும் காடு வனாந்திரங்களிலும், மக்கள் நடமாட்டமில்லாப் பகுதிகளிலும் நடக்கின்றன. மனிதனுக்கு முன்னால் ஜின்கள் ஆஜராகி ஏதோ ஆகாரத்தையும், நீரையும் கொடுத்து சாதாரணமாக நடக்கும் சில தூரமான சம்பவங்களைக் குறித்து மனிதனிடம் கூறிவிட்டுப் போய் விடுகிறார்கள். இதைக்கண்ட மனிதன் அறிவின்மையால் தனக்குரிய குரு (ஷைகு) ஆஜரானார். இறந்து போன அல்லது உயிரோடிக்கின்ற தன் குரு விஜயம் செய்தார் என்று நம்புகிறான். கிடைத்த உணவும், தண்ணீரும் தன்னுடைய குருவிடமிருந்து கிடைத்தவை என்றெண்ணி ஜின்னிடமிருந்து கேட்ட செய்திகளை குரு (ஷைகு)வின் பொன்மொழியாக ஏற்கிறான். அதற்கொப்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான்.

குருவின் பொக்கிஷங்கள் அந்தரங்க விவகாரங்கள் அனைத்தும் தமக்குக் கிடைத்ததாக ஒரு மகிழ்ச்சியும், குதூகலமும் எங்கிருந்தோ இவனுக்கு உண்டாகிறது. இதனால் சில நேரங்களில் இந்தக் குருவை(ஷைகை)ப் பற்றி அவர் மலக்கு வர்க்கத்தைச் சார்ந்தவரென எண்ணி மதிப்பதுண்டு. ‘மலக்கு வடிவில் குருநாதரைப் பார்த்தேன்’ என்று இந்த ஏமாளி புலம்புகிறான். இவனுக்கு இணைகற்பித்தல், பொய்-பித்தலாட்டங்கள், பாவச்செயல்கள், அத்துமீறல்கள் போன்ற எந்தப் பாவச்செயல்களுக்கும் மலக்குகள் துணை நிற்க மாட்டார்கள் என்பதை இந்த மனிதன் விளங்கவில்லை.

மேலே குறிப்பிட்ட செய்கைகள் அத்தனையும் ஜின்களின் ஜாலவித்தைகள் என்ற உண்மையைக் கூட இந்த அப்பாவியால் புரிய முடியவில்லை. இறைவன் கூறுகிறான்: “நபியே! இணைவைத்து வணங்குவோரை நோக்கி நீர் கூறும்! அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்வங்கள் இருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே அவைகளை நீங்கள் அழைத்துப் பாருங்கள். அவ்வாறு அழைத்தீர்களென்றால் அவை உங்களுக்கு யாதொரு கஷ்டத்தையும் நீக்கி வைக்கவோ, அதனைத் தட்டி விடவோ சக்தியற்றவை என்பதை அறிந்து கொள்வீர்கள். இவர்கள் ஆண்டவர்களென எவற்றை அழைக்கிறார்களோ அவையும் தங்களுக்காக இறை நெருக்கத்தை வேண்டுகின்றன. தங்களையும் இறைவனோடு நெருங்க வைக்கும் வழிகள் எவை என்பதைத் தேடி கொண்டிருக்கின்றன. அவனுடைய அருளை எதிர்பார்த்து அவனுடைய வேதனைக்கும் பயப்படுகின்றன. ஏனென்றால் உம் இறைவனின் வேதனை நிச்சயமாக மிக (மிக) பயப்படக் கூடியதே”. (17:56-57).

முன்னோர்களில் ஒரு சாரார் கீழ்வருமாறு விளக்கியுள்ளனர்: உஸைர், ஈஸா போன்ற நபிமார்களையும், மலக்குகளையும் சில மக்கள் வணங்கி வந்தனர். இவர்களுக்கு இறைவன் விளக்கம் கொடுக்கும் போது: நபிமார்கள்,மலக்குகள் அனைவரும் இறைவனின் அடிமைகள்தாம். இவர்கள் யாவரும் அல்லாஹ்வின் அருளை வேண்டி நிற்கின்றனர். அவனின் வேதனையை பயப்படுகின்றனர். பல்வேறு வழிபாடுகளைச் செய்து தம் இறைவனின் திருப்தியைக் கைப்பற்றுவதற்காக ஒவ்வொருவரும் பிரயாசைப்படுகின்றனர் என்று கூறினான்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *