Featured Posts

படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யலாமா? (1)

இதுபோன்று தான் சிருஷ்டிகளைக்* கொண்டு ஆணையிட்டுத் தம் தேவையை வேண்டுவது. இதுவும் விலக்கப்பட்ட செய்கையாகும். படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்வதை எல்லா மத்ஹபுடைய இமாம்களும் வெறுத்திருக்கிறார்கள். சிருஷ்டிகளைக் கொண்டு சத்தியம் செய்து இன்னொரு சிருஷ்டியிடம் கேட்பது கூடாதெனின், அதே சிருஷ்டியைக் கொண்டு படைத்தவனிடம் ஆணையிட்டுக் கேட்க முடியுமா? அது எப்படி அனுமதிக்கப்படும்? அல்லாஹ்வுக்கு வேண்டுமானால் தம் சிருஷ்டிகளைக் கொண்டு சத்தியம் செய்யலாம். தன் சிருஷ்டிகளைக் கொண்டு ஆணையிட்டுச் சொல்வதில் தன் வல்லமையை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான். தன் ஒருமைப்பாட்டை நிரூபித்துக் காட்டுகின்ற பல திருஷ்டாந்தங்களை ஏகத்துவத்தின் தீர்க்கமான பல சைக்கினைகளை இறைவன் இந்த சத்தியத்தால் வெளிப்படுத்துகிறான். இறைவன் இரவு பகலைக் கொண்டு ஆணையிடுகிறான். ‘யாவையும் மறைத்துக் கொள்ளும் இருண்ட இரவின் மீது ஆணையாக! பிரகாசமுள்ள பகலின் மீது சத்தியமாக’ என்று கூறினான். ‘சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும், அது அஸ்தமித்ததற்குப்பின் அதைத் தொடர்ந்து உதயமாகும் சந்திரன் மீது சத்தியமாக, பாவிகளின் ஆத்மாவைப் பலமாக பறிப்பவர்கள் மீது (சத்தியமாக). இப்படியே திருமறையில் பற்பல இடங்களில் இறைவன் தன் சிருஷ்டிகளைக் கொண்டு ஆணையிட்டுத் தன் படைப்பினங்களின் மதிப்பை விளக்குகின்றான். இது இறைவனைப் பொருத்தவரையில் பொருந்துகின்ற ஒரு சத்தியமாகும்.

ஆனால் மனிதர்கள் தம்மைப் போன்ற இன்னொரு சிருஷ்டியைக் கொண்டு ஆணையிட்டுப் பிரார்த்தித்தால் அங்கே தான் ஷிர்க் தலை தூக்குகிறது. ஆகவே நபியவர்கள் கூறினார்கள்: ‘இறைவனல்லாத இதர சிருஷ்டிகளைக் கொண்டு எவர் சத்தியம் செய்கிறாரோ அவர் தம் இறைவனுக்கு இணை கற்பித்து விட்டார்’ (திர்மிதி). ஹாகிமில் மற்றொரு அறிவிப்பில் ‘அப்படிச் செய்பவர் காபிராகி விட்டார்’ என்று காணப்படுகிறது. எவராகிலும் சத்தியம் செய்ய விரும்பினால் அவர் அல்லாஹ்வைக் கொண்டு மட்டும் சத்தியம் செய்ய வேண்டும். இல்லையென்றால் வாயை மூடிக் கொண்டு மௌனமாக இருக்க வேண்டும் என்று இன்னுமொரு ஹதீஸில் நபியவர்கள் கூறினார்கள். (புகாரி-முஸ்லிம்)

‘உங்களின் பெற்றோர்களைக் கொண்டு சத்தியம் செய்யாதீர்கள். ஏனெனில் மாதா பிதாக்களைக் கொண்டு சத்தியம் செய்வதை அல்லாஹ் தடுத்திருக்கிறான்’ என்று மற்றோர் இடத்தில் வருகிறது. லாத், உஸ்ஸா போன்ற விக்கிரஹங்களைக் கொண்டு எவர் சத்தியம் செய்தாலும் அவன் உடனே கலிமாச் சொல்லி இஸ்லாத்தில் நுழைய வேண்டுமென்று நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி-முஸ்லிம்)

அல்லாஹ்வின் அர்ஷ், புனித கஃபா, பைத்துல் முகத்தஸ் பள்ளி, மஸ்ஜிதுன் நபவி (மதீனாப் பள்ளிவாசல்), மலக்குகள், ஸாலிஹீன்கள், அரசர்கள், முஜாஹிதுகளின் ஆயுதங்கள், அன்பியாக்கள், இவர்களின் கப்றுகள், மற்றும் மதிப்பிற்குரிய பொருட்கள் இவற்றையெல்லாம் கொண்டு சத்தியம் செய்தால் அந்த சத்தியம் நிறைவேறாது என்று அறிஞர்கள் அனைவரும் அபிப்பிராயப் பட்டிருக்கிறார்கள். இத்தகைய சத்தியத்துக்கு மாறு செய்கிறவன் குற்றப்பரிகாரமும் (கப்பாரா) கொடுக்க வேண்டியதில்லை.

சிருஷ்டிகளைக் கொண்டு சத்தியம் செய்வதையும், சப்தமிடுவதையும் பெரும்பாலான அறிஞர்கள் விலக்கிக் (ஹராமாக) கருதியிருக்கிறார்கள். இமாம் அபூ ஹனிபா அவர்கள் இப்படி அபிப்பிராயப் படுகிறார்கள். இமாம் அஹ்மத் பின் ஹன்பல், இமாம் ஷாபிஈ போன்றவர்களின் ஓர் அபிப்பிராயமும் இதை ஹராம் என விலக்குகிறது. ஸஹாபாக்களின் ஏகோபித்த முடிவும் அப்படியே. ஹராமோடு நெருங்கிய மக்ரூஹ் என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால் இவர்களின் இக்கூற்று பலவீனமானது. ஹராம் என்பதுவே பலமான அபிப்பிராயமாகும். இப்னு மஸ்வூத், இப்னு உமர், இப்னு அப்பாஸ் (ரலி) போன்ற ஸஹாபிகள் ஒவ்வொருவருமே ‘அல்லாஹ் அல்லாத இதர சிருஷ்டிகளைக் கொண்டு மெய்யாக சத்தியம் செய்வதைக் காட்டிலும், அல்லாஹ்வைக் கொண்டு பொய் சத்தியம் செய்வதை நான் விரும்புகிறேன்’ என கூறியிருக்கிறார்கள். ஏன் தெரியுமா? சிருஷ்டிகளைக் கொண்டு ஆணையிடுதல் இறைவனுக்கு இணை வைப்பதற்கு சமமான குற்றம். ஆனால் அல்லாஹ்வைக் கொண்டு பொய் சத்தியம் செய்தல் இணை வைப்பது போன்ற குற்றமல்ல. பொய் சொன்னதின் குற்றத்திற்கு ஆளாகிறான். இணை வைத்தலை (ஷிர்க்கை) விட பொய் சிறிய குற்றம் தானே. எனவேதான் இப்னு அப்பாஸும், இதர ஸஹாபிகளும் இப்படிக் கூறினார்கள்.

நபிமார்களைக் கொண்டு சத்தியம் செய்வதால், குறிப்பாக நபி (ஸல்) அவர்களைக் கொண்டு சத்தியம் செய்து விட்டு அதற்கு மாறு காட்டினால் தண்டனையுண்டா? இல்லையா? இத்தகைய சத்தியம் நிறைவேறுமா? நிறைவேறாதா? என்பதில் இமாம்கள் அபிப்பிராயப் பேதம் தெரிவித்துள்ளனர். மத்ஹபுடைய இமாம்களான அபூ ஹனீபா, ஷாபிஈ, மாலிக் (ரஹ்) ஆகியோருடையவும், இமாம் அஹ்மதின் ஒரு அபிப்பிராயமும் இத்தகைய சத்தியம் நிறைவேறாது என்று தீர்ப்பு வழங்குகிறது. பெரும்பாலான அறிஞர்களின் தீர்ப்பும் இதுவே. ஆனால் இமாம் அஹ்மத் பின் ஹன்பலின் இன்னுமோர் அபிப்பிராயத்தில் குறிப்பாக நபி (ஸல்) அவர்களைக் கொண்டு சத்தியம் செய்தால் அதற்கொப்ப செயல்பட வேண்டுமென்று கூறியிருக்கிறார்களாம்.

இமாம் அஹ்மதின் தோழர்களான காழி இயாழ் போன்ற வேறு சில அறிஞர்கள் இவ்வபிப்பிராயத்தை ஆமோதிக்கின்றனர். ஆனால் இப்னு முன்திர் இவ்வபிப்பிராயங்களை நபியவர்களின் விஷயத்தில் மட்டும் சொல்கிறார்கள். இப்னு அகீல் எல்லா நபிமார்கள் விஷயத்திலும் இதைக் குறிப்பிடுகிறார். இந்த ஆணைக்கு மாறு செய்தால் கப்பாரா (குற்றப்பரிகாரம்) கொடுப்பதை கடமையாக்குவது பலமற்றதும் இஸ்லாமிய அடிப்படைக்கு மாற்றமான சொல்லாகும். இவர்களின் இக்கருத்து இஸ்லாமிய அடைப்படைக் கொள்கைகளுக்கு மாறுபட்டிருப்பதனால் இதைத் தவறான அபிப்பிராயமென்றே தீர்ப்புக் கூற வேண்டியிருக்கிறது. அல்லாஹ்விடமே எதையும் கேட்க வேண்டும். அவனுடைய திருநாமங்களின் பொருட்டாலும், அவனுடைய தன்மைகள், குணங்கள் இவற்றையெல்லாம் பொருட்டாகவும் கொண்டு கேட்கப்படும் பிரார்த்தனைகள் அனைத்துமே விரும்பத் தக்கவை.

இதற்கு உதாரணமாக கீழ்வரும் துஆவை எடுத்துக் கொள்ளலாம். ‘இறைவா! புகழனைத்து உனக்கே உரித்தாகுக. இப்புகழின் பொருட்டால் கேட்கிறேன். நீதான் பெரிய பேருபகாரம் செய்பவன். தானசீலனான அல்லாஹ்வும் நீதான். வானம் பூமிகளை முன்மாதிரியின்றி நூதனமான முறையில் படைத்திருக்கிறாய். கம்பீரத்துக்கும், கண்ணியத்திற்கும் உரிய நாயனே! நீ ஏகன். பிறரிடம் தேவையற்றவன். எவரையும் பெறாதவன். எவராலும் பெறப்படாதவன். யாரோடும் ஒப்புவமையற்ற அல்லாஹ்வும் நீயே. உன் திருநாமத்தைக் கொண்டு கேட்கிறேன். நீயே அவற்றைக் கொண்டு உனக்குப் பெயர் வைத்தாய். அவற்றை உன் வேதத்தில் இறக்கி அருள் பாலித்தாய். அடியார்களில் சிலருக்கு அதைக் கற்றுக் கொடுத்திருக்கிறாய். இறைவா! இத்தகைய உன் தன்மைகளை முன்வைத்து அவற்றின் பொருட்டால் உன்னிடம் கேட்கிறேன்’ என்பன போன்ற பிரார்த்தனைகளால் யாராவது பிரார்த்தித்தால் அது மிக்க நன்மை தரவல்ல பிரார்த்தனையாகக் கருதப்படும்.

ஏனெனில் இங்கு மனிதன் இறைவனின் திருநாமங்களையும், அவன் தன்மைகள் குணங்கள் அனைத்தையும் முன்னிறுத்தி அவற்றின் பொருட்டால் பிரார்த்திக்கிறான். இதனால் எவ்வித குற்றமும் இல்லை. இறைவன் செய்கைகளெல்லாம் அவனின் தன்மைகளுடையவும், திருநாமங்களுடையவும் பிரதி பலனல்லவா? மன்னிப்பாளன் என்ற அவனின் திருநாமத்திலிருந்து மன்னித்தல் என்ற செய்கை பிரதிபலிக்கிறது. புகழுக்குரியவனாக, பேருபகாரியாக இறைவன் இருப்பதால் தன் அடியார்கள் கேட்கின்ற வேளையில் உதவி புரிய வேண்டுமென்பதை காட்டுகின்றது. தன் அடிமைகளுக்காக புகழுக்குரிய பற்பல பேருதவிகளைச் செய்து காட்டினான். இதனால் அவன் புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான். மனிதன் தன் இரட்சகனை புகழ்ந்து பாராட்டுவதனால் தன் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட ஏதுவாகிறது. நாம் தொழுகையில் கூறுகின்ற ‘ஸமியல்லாஹு லிமன் ஹமித’ என்ற சொற்றொடரும் இதைக் காட்டுகிறதே. ஏனெனில் இவ்வார்த்தையின் தாத்பரியம் ‘தன்னைப் புகழ்ந்துரைப்பவனின் பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொண்டான்’ என்பதாகும். தொழுகிறவன் இதைச் செய்ய வேண்டுமென்று பணிக்கப்பட்டிருக்கிறான். ‘ஸமிஅ’ என்ற வார்த்தை ஏற்றுக் கொண்டான், அங்கீகரித்தான் என்று பொருள்படும். இந்த அர்த்தத்திற்கு ஹதீஸிலும், திருமறையிலும் பல இடங்களில் ‘ஸமிய’ என்ற வார்த்தை உபயோகிக்கப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இறைவா! பயனற்ற கல்வியை விட்டும் அடங்காத ஆத்மாவை விட்டும் ஏற்றுக் கொள்ளாத பிரார்த்தனையை விட்டும் (மின் துஆஇன் லா யஸ்மஉ) நான் உன்னிடம் காவல் தேடுகிறேன்’.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது பிரார்த்தனையின் கடைசியில் “(இன்ன ரப்பீ ஸமீஉத் துஆஉ) நிச்சயமாக என்னுடைய இறைவன் பிரார்த்தனைகளை அதிகம் அங்கீகரிப்பவன்’ என்றார்கள்” (14:39) இன்னோர் இடத்தில் இறைவன் கூறினான்: “அவர்களை அங்கீகரிப்போரும் உங்களில் பலர் உள்ளனர்” (9:47). “அவர்கள் பொய்யான விஷயங்களையே அதிகமாகக் கேட்கின்றனர். அன்றி, உம்மிடம் வராத மற்றொரு கூட்டத்தினருக்கு வேண்டி அதிகமாகப் பதிலளிக்கின்றனர்”. (5:41)

இறைவனைப் புகழுதல், பாராட்டுதல் என்றால் அவனின் தன்மைகளையும், குணங்களையும், திருநாமங்களையெல்லாம் எடுத்துரைப்பதல்லவா? அவன் தன்மைகளை எடுத்துக் கூறி பிரார்த்திப்பதனால் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படலாம். அருள் பாலித்தல் இறைவனின் செய்கை. இது அருளாளன் என்ற அவனது திருநாமத்தின் பிரதிபலிப்பாகும். இதுபோலவே இறைவனுடைய எல்லாச் செய்கைகளும், அவை அவனது திருநாமங்களுடையவும், அவன் குணங்களுடையவும் விளைவாகும். நபியவர்களிடம் ஒருநாள் ஆயிஷா (ரலி) அவர்கள் நாயகமே, ரமழானில் லைலத்துல் கத்ர் இரவில் நான் எதைக் கூற வேண்டும்? என்று வினவினார்கள். அதற்கு ‘இறைவா, நீ மன்னிப்பாளன், மன்னிப்பை பிரியப்படுகிறவன், ஆகவே என்னை மன்னித்தருள்வாயாக!’. எனக் கூற வேண்டுமென நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள். ‘அஃபுவ்வுன்’ என்ற அல்லாஹ்வின் திருநாமத்தையும், அவன் தன்மைகளையும் முன்னர் மொழிந்து விட்டு அதன்பிறகு அத்தன்மைக்குத் தோதுவான ஒரு செய்கையை (அஃப்வை) கேட்கப்படுகிறது. இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்களைப் பற்றி அறிவிக்கப்படும் ஒரு சம்பவத்தில் ‘அவர்கள் ஒரு மனிதரிடம் கீழ்வருவதை எடுத்துக் கூறிப் பிரார்த்திக்கச் சொன்னார்கள்: ‘தட்டழிந்து நிற்பவர்களுக்கும், வழி தெரியாமல் திணறி அலைபவர்களுக்கும் வழிகாட்டுகின்றவனே! மெய்யானவர்களின் பாதையைஎனக்குக் காட்டித் தந்தருள்வாயாக! உன் நேர்மையான அடியார்களில் என்னையும் சேர்ததருள்வாயாக!’

அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்று (அல்ஹாதீ) நேர்வழி நடத்துபவன். இறைவன் மக்களுக்கு நேரான வழியைக் காட்டுவதெல்லாம் மேற்கூறிய அத்திருநாமத்தின் விளைவாகும். எனவே தான் அன்றிலிருந்தே அறிஞர்கள் அல்லாஹ்வின் திருநாமங்களையும், அவன் குணங்களையும், தன்மைகளையும் பொருட்டாக வைத்துப் பிரார்த்திக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார்கள். இன்னும் விளக்கமாக கூறினால் இறைவன் தன் அடியார்களுக்குப் புரிகின்ற நன்மைகள் அனைத்துமே அகில உலகைப் படைத்துக் காத்துப் பரிபாலிப்பவன் (ரப்புன்) எனும் அவனுடைய திருநாமத்தின் தேட்டமாகுமென்று கூறலாம்.

ஆகவே நபிமார்கள், ரஸுல்மார்கள், அவர்களைப் போன்ற பெரியார்கள், நாதாக்கள் எல்லோருமே தத்தம் பிரார்த்தனைகளில் அல்லாஹ்வை அழைக்கும் போது அதிகமாக ‘யா ரப்பீ’ என்று அழைத்துப் பிரார்த்திக்கின்றனர். பிரார்த்தனையின் போது ‘யா ரப்பீ’ அகிலமனைத்தையும் படைத்துப் பரிபாலிப்பவனே! எனும் சொற்றொடர் மிகப் பொருத்தமாக இருப்பதைக் காண்கிறோம். நபி ஆதம் (அலை) அவர்கள் ‘ரப்பனா’ என்று சொல்லித்தான் இறைவனை அழைத்தார்கள். தமது பிரார்த்தனையில் ‘எங்களைப் படைத்து பரிபாலிக்கும் நாயனே, எங்களுக்கு நாங்கள் தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்து விடுவோம்’ என்று கூறினார்கள். (7:23)

இவ்வாறுதான் நபி நூஹ் (அலை) அவர்களும் தமது பிரார்த்தனையின் போது கூறினார்கள். “என்னைப்படைத்து பரிபாலிக்கின்ற நாயனே! நான் அறியாத விஷயங்களைப் பற்றி இனி நான் உன்னிடம் கேட்காதுஎன்னை இரட்சித்தருளுமாறு நான் உன்னிடம் பிரார்த்திக்கிறேன். நீ என்னை மன்னித்து எனக்கு கிருபை செய்யாவிடில் நிச்சயமாக நானும் நஷ்டமடைந்தோரில் ஆகி விடுவேன் என்று கூறினார்” (11:47)

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனையை நாம் கவனிப்போமென்றால் அவர்களும் ‘(ரப்பனா) எங்களைப் படைத்து காத்து பரிபாலிக்கின்ற இரட்சகனே, என்று கூறித்தான் தமது பிரார்த்தனையை ஆரம்பித்தார்கள். எங்களை படைத்துப் பரிபாலிப்பவனே, திட்டமாக நான் என் சந்ததிகளை கண்ணியம் வாய்ந்த உன் வீட்டில் சமீபத்தில் வசித்திருக்கச் செய்திருக்கிறேன். அது விவசாயமில்லாத பள்ளதாக்கு… என்று கூறினார்கள்’ (14:37)

இப்படியே நபிமார்களின் பிரார்த்தனையைப் பற்றி நாம் ஆராய்ந்தால் அவர்கள் ரப்பீ, யாரப்பீ, யா ரப்பனா என்ற வார்த்தைகளைத்தான் உபயோகித்துத் தம் தேட்டங்களை இறைவனிடம் வேண்டியிருக்கிறார்கள். எனவேதான் சட்ட மேதைகளில் பலரும், மத்ஹபுடைய இமாம்களில் இமாம் மாலிக், இமாம் அபூ ஹனீபா, இவர்களின் தோழரான இப்னு அபீ இம்ரான் போன்ற இன்னும் சிலரும் பிரார்த்தனையின் போது மனிதன் தன் இறைவனை யா ஸய்யிதீ (என் தலைவனே) எனக்கூறி அழைக்கக்கூடாது அப்படி அழைப்பது அருவறுக்கத்தக்கதென்றும் கூறியுள்ளனர். அன்பியாக்கள், ரஸுல்மார்கள் தம் பிரார்த்தனையில் அல்லாஹ்வை யா ரப்பீ, யா ரப்பீ என்று கூப்பிட்டது போல நாமும் அப்படியே கூப்பிட வேண்டுமென்று இவர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள்.

‘அல் ஹய்யுல் கய்யூம்’ நித்தியமாக என்றும் உயிரோடு இருப்போன் என்ற அல்லாஹ்வின் திருநாமம் அவனுடைய எல்லா குணங்களையும், தன்மைகளையும், அனைத்துத் திருநாமங்களின் தாத்பரியத்தையும் அடக்கிய ஒரு சொற்றொடராக இருப்பதைக் காணலாம். எனவே அறிஞர்கள் இதையும் எடுத்துக் கூறி துஆ கேட்பதை விரும்பியிருக்கின்றனர். நபிகளின் துஆவின் போது இதை அதிகமாக எடுத்துரைப்பார்கள் என்று கூறப்படுகிறது. வேறு சில நூற்களில் இது பற்றி சான்றாக விளக்கப்பட்டுள்ளது.

இனி நாம் முந்திய தலைப்புக்கு வருவோம். ஆம் அல்லாஹ் புகழுக்குரியவன். அவனைப் புகழ்ந்து பாராட்டியதற்கப்பால் கேட்கப்படும் துஆக்கள் பெரிதும் ஏற்றமானது. அது அங்கீகரிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. அல்லாஹ்வையும் பாராட்டையும், புகழையும் கொண்டு கேட்கப்படும் பிரார்த்தனையை அவன் ஏற்றருள்வான். ஆகவேதான் மனிதன் தம் தொழுகையின் போது அத்தஹிய்யாத்தில் இறைவனைப் புகழ்ந்து விட்டு தனக்காக பிரார்த்திக்க வேண்டுமென பணிக்கப்பட்டிருக்கிறான். அல்லாஹ்வை புகழாமலும், அவனை வாழ்த்தாமலும், நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லாமலும், தொழுது முடித்தவுடன் தனக்காகத் துஆ மட்டும் கேட்டு விட்டுச் சென்ற ஒரு மனிதரைப் பார்த்து நபியவர்கள் ‘இவர் அவசரப்பட்டு விட்டார்’ என்று கூறினார்கள். பின்னர் அம்மனிதரை அழைத்து ‘உங்களில் யாராவது ஒருவர் பிரார்த்திக்க நினைத்தால் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவன் மீது துதிகள் சொல்லி பிறகு நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துகளையும் கூற வேண்டும். பின்னர் தமக்குத் தேவையானவற்றை இறைவனிடம் கேட்க வேண்டுமென்று சொன்னார்கள். (அபூதாவூத், திர்மிதி)

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாயகத்துடன் தோழர்களான அபூபக்கர், உமர் ரலியவர்கள் இருவரும் அமர்ந்து கொண்டிருக்கையில் நான் தொழுது கொண்டிருந்தேன். தொழுகையில் நான் அமர்ந்தபோது முதலில் அல்லாஹ்வை வாழ்த்தினேன். பிறகு நபியவர்கள் மீது ஸலவாத்துக் கூறினேன். அதன்பின் எனக்காக துஆக் கோரினேன். இதைக் கேட்டுக் கொண்டிருந்த நபியவர்கள் என்னை நோக்கி ‘நீர் அல்லாஹ்விடம் கேளும். அள்ளி வழங்குவான்’ என்றார்கள். (திர்மிதி)

அல்லாஹ்வை முன்னிறுத்திக் கேட்கிறேன் என்று ஒருவன் மற்றவனிடம் ஒரு தேவையை வேண்டினால் அதனால் குற்றமொன்றும் வரப்போவதில்லை. இது அனுமதிக்கப்பட்ட அமைப்பிலான வேண்டுதலல்லவா? ஏனெனில் இந்த வேண்டுதலின் தாத்பரியம் அல்லாஹ்வை நம்பியிருக்கிறேன். இந்த நம்பிக்கையின் பெயரால் அதன் பொருட்டால் கேட்கிறேன் என்று விளக்கம் கொடுக்கப்படும். இப்படி அல்லாஹ்வைக் கொண்டும், அவன் ரஸூலைக் கொண்டும் விசுவாசம் கொண்ட காரணத்தினால் அந்த ஈமானை முன்னிறுத்தி அதன் பொருட்டால் கேட்கப்பட்ட இத்தகைய வேண்டுதல்கள் அங்கீகரிக்கப்படுவதற்கு அருகதையுண்டு. நம்மிடமிருக்கும் விசுவாசம், நாம் புரிகின்ற நற்கிரியைகள் இவற்றின் பொருட்டால் பிரார்த்தனைகள் வேண்டலாம். இஸ்லாத்தில் அதற்கு அனுமதியும் உண்டு.

*சிருஷ்டிகளைக் கொண்டு ஆணையிட்டுக் கேட்கப்பட மாட்டாது. அவைகளை பொருட்டாக வைத்துப் பிரார்த்தித்தலும் கூடாது. இறைவா! உன் அன்பியாக்களின் பொருட்டால் நான் உன்னிடம் கேட்கிறேன் என்று கேட்கப்பட மாட்டாது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *