Featured Posts

சரியான அகீதாவில் வாழ்வதன் அவசியம் (தொடர்-1)

Click here to download திருத்தம் செய்து வெளியிடப்பட்ட மூன்று தொடர்களின் மின் புத்தகம்

முன்னுரை:

الحمد لله وحده، والصلاة والسلام على مَن لا نبيَّ بعده، وعلى آله وصحبه.

அனைத்து புகழும் துதியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. அவனது அருளும் சாந்தியும் நமது தூதரும், தலைவருமாகிய முஹம்மத நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் வழி நடந்த நபித்தோழர்கள், இமாம்கள், உலக முஸ்லிம் மக்கள் அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக.

மனிதன் அல்லாஹ்வுக்கு கீழ்படிந்து நடப்பதன் அவசியம்:
இந்த உலகத்தையும் அதில் உள்ள ஆயிரக்கணக்கான உயிரினங்களயும் அல்லாஹ் மனித நன்மைக்காகவே படைத்துள்ளான். ஆகவே மனிதன் தனக்காக இந்த உலகைப் படைத்த அல்லாஹ்வுக்கு தனது முழுமையான கீழ்படிதலை வெளிப்படுத்தி வாழ வேண்டும்.

அது மாத்திரமின்றி, அவன் தனது இரட்சகனாகிய அல்லாஹ்வை மாத்திரம் தனது رب ரப்பாக இறட்சிப்பாளனாக முழுமனதுடன் அங்கீகரித்து, வணக்க வழிபாடுகள், ஆட்சி அதிகாரங்கள், படைப்பாற்றல்கள் என அவனுக்குரிய தனித்தவம் வாய்ந்த அனைத்து பண்புகளிலும் அவனைப் படைப்பினங்களில் இருந்து தனிமைப்படுத்துவதோடு , தூய முறையில் அந்த இரட்சகனை வணங்கி, வழிபட வேண்டும். அதில் அவனுக்கு மனிதன் எந்த வகையிலும் குறைகள் செய்யக் கூடாது.

அதற்காகவே இந்த உலகில் மனிதன் படைக்கப்பட்டுள்ளான். அதில் அவன் சிறுதுளி அளவேனும் அல்லாஹ்வுக்கு அநீதி செய்யக் கூடாது. அல்லாஹ்வுக்கு மனிதர்கள் செய்கின்ற மிகப் பெரும் அநீதி அவனை வணங்கி வழிபடும் போது அவனோடு அவனுடைய மற்றொரு படைப்பை இணைத்து வணங்குவதாகும்.

மனிதன் இந்த உலகில் நிம்மதியாக வாழ அவனுக்கு தேவையான நீர், காற்று, மழை, உணவு, உடல்நலம், ஓய்வு, வீடு, வாகனம் போன்ற சகல விதமான வசதிவாய்ப்புக்களையும் அல்லாஹ் ஏற்படுத்தி தந்திருக்கின்றான்.

அதுமாத்திரமின்றி, மனிதனை அவன் அழகிய தோற்றத்தில் உலகில் ஒரு அதிசய படைப்பாக பிறர் துணை இன்றி அவனைப் படைத்துள்ளான்.

எனவே ஆற்றல், வல்லமை நிறைந்த அந்த அல்லாஹ்வுக்கு மனிதன் முழுமையாகக் கட்டுபட்டு நடப்பது கடமையாகும்.

இது அவன் அல்லாஹ்வுக்கு அவசியம் செய்ய வேண்டும் என அல்லாஹ்வால் நிர்பந்திக்கப்பட்ட முதன்மைக் கடமைகளில் ஒன்றாகும்.

அதனால் அவன் அதை மீறுவது அல்லாஹ்வை நிராகரிப்பதற்கு ஒப்பானதாகும்.

அதன் காரணமாகவே மனிதன் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ள வேண்டும் என அவனது தூதர்கள் மூலமாக அல்லாஹ் கட்டாயப்படுத்தியவைகளை அவன் உதாசீனம் செய்வதால் அவன் நிரந்தர நரகத்தை தேடிக் கொள்ளக் கூடாது என்பதற்காக அல்லாஹ் மனிதர்கள் பேரில் கருணை கொண்டு தனது தூதர்களை அனுப்பி நேரிய வழியும் காட்டி விட்டான்.

அந்த வழியை விட்டும் தூர விலகி, தான் படைக்கப்பட்ட உயர்ந்த இலக்கை தொலைத்து, மிருக வாழ்க்கை வாழும் மனிதனை கால் நடைகளை விடவும் கெட்ட படைப்பாக அல்குர்ஆன் குறிப்பிடுவதை நினைவில் கொள் வேண்டும் .

அதனால்தான் கோடிக்கணக்கு பெறுமதி வாய்ந்த உடல் உறுப்புக்களை அவனுக்கு
வழங்கியும் அதற்கு மாறு செய்து நடப்பவர்களை அஅல்லாஹ் காஃபிர்கள், இறை மறுப்பாளர்கள், பிறதெய்வங்களைக் கொண்டு அவனுக்கு இணைவைப்போர் போன்ற இழிவான பெயரில் மனிதர்களை அழைக்கின்றான்.

அகீதா என்பதன் பொருள் என்ன?

மொழி வழக்கில்: அகீதா என்ற சொல் அரபியில் اعتَقَد இஃதகத என்ற சொல்லில் இருந்து பிறந்த ஒரு கிளைச் சொல்லாகும். அதற்கு இறுக்கமாக முடிச்சுப் போடுவது, இறுகக் கட்டுவது, உறுதியாக பிணைப்பது போன்ற பொருள் கொள்ளப்படும்.

இந்த சொல்லில் இருந்துதான் அன்றாட நடைமுறையில் உள்ள கொடுக்கல் வாங்கல் மற்றும் வர்ததகம் போன்ற நடவடிக்கைகளில் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய عقد உடன்படிக்கை என்ற சோற்பிரயோகம் என்ற சொல்லும் எடுக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை கொண்டோரே!

ஷரீஆ வழக்கில்: ஒரு மனிதனது உள்ளம் சந்தேகம் வராத அளவுக்கு எதை சமயமாகவும், நம்பிக்கை சார்ந்த போக்காகவும் எடுத்துக் கொண்டதோ அதற்கு அகீதா என்று கூறப்படும்.

அல்லது, ஒரு நம்பிக்கையைக் குறிக்கும். அதன் மூலம் கொள்கை உறுதி வேண்டப்படும் , மேலும் அதன் உள்ளடக்கம் சொல் செயல் சார்ந்த அம்சங்களை ஒருவர் அவரது வாழ்வில் உறுதியோடு கடைப்பிடிப்பதையும் வேண்டி நிற்கும்

ஒரு முஸ்லிமின் வாழ்வில் அகீதாவின் அவசியம்

மார்க்கத்தில் உள்ள கல்விகளில் இது மிகவும் பிரதானமானது. வணக்கம், அக்லாக் , கொடுக்கல் வாங்கல் போன்ற அனைத்தையும் விட அகீதாவே முதன்மையானது. அகீதா இல்லாமல் ஒரு மனிதன் செய்கின்ற எந்த அமலும் அல்லாஹ்விடம் அங்கீரிக்கப்படுவதில்லை.

சீரான அகீதா இன்றி மனிதம் என்ற பண்பாடு கொண்ட எந்த மனிதனாலும் மறுமை நாளில் அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. ஜாஹிலிய்யாக் கால ஒரு மனிதர் தொடர்பாக பின்வரும் ஹதீஸில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

عَنْ عَائِشَةَ قُلْتُ: يَا رَسُولَ اللهِ، ابْنُ جُدْعَانَ كَانَ فِي الْجَاهِلِيَّةِ يَصِلُ الرَّحِمَ، وَيُطْعِمُ الْمِسْكِينَ، فَهَلْ ذَاكَ نَافِعُهُ؟ قَالَ: ” لَا يَنْفَعُهُ، إِنَّهُ لَمْ يَقُلْ يَوْمًا: رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ ” (أخرجه مسلم في صحيحه برقم/٣٦٥ )

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே ! இப்னு ஜுத்ஆன் என்பவர் ஜாஹிலிய்யா காலத்தில் உறவுகளை சேர்ந்து நடப்பவராகவும் ஏழை எளிய மக்களுக்கு உணவு அளிப்பவராகவும் இருந்தாரே! அது அவருக்கு பயனளிக்குமா? எனக் கேட்டார்கள். அது அவருக்கு எந்த பயனும் தராது. ஏனெனில் அவர் ” எனது இரட்சகனே! எனது பாவங்களை மறுமை நாளில் மன்னிப்பாயாக எனக் கூறவில்லை எனக் கூறினார்கள். ( முஸ்லிம்).

தூய அகீதா கொள்கை இறைத் தூதர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் போதித்த ஒரே வழிமுறையாகும்:

சரியான அகீதாவில் மனிதர்கள் வாழ வேண்டும் என்பது இறைத் தூதர்கள் பூமியில் போதித்த தூய வழியில் உள்ளதாகும். அது தூய கலிமாவின் சரியான பொருள் மீது கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதாவது உண்மையாக வணங்கி வழிபடத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒருவரும் இல்லை என்பதை لَا إِلَهَ إِلَّا اللهُ “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற அந்தக் கலிமா உணர்த்துகின்றது. அது இறைத்தூதர்களின் பிரச்சாரத்தின் அடிப்படைத் திறவு கோலாகும்.

அதுவே அனைத்து நபிமார்களின் பிரச்சார எடுகோலுமாகும். அதுதான் அல்லாஹ் அல்லாது மனிதர்கள், ஜின்கள் என்போர் வணங்கி வழிபடும் சகல தெய்வங்களையும் முழுமையாக மறுக்கும் மாபெரும் அற்புத வார்த்தையாகும்.

அது மனிதர்கள் சுவனம், நரகம் ஆகிய இரண்டில் ஒன்றில் நிரந்தரமாக நுழைவதற்கு தீர்ப்பளிக்கும் நீதிபதியாகும்.

அது மனிதனின் செயல்கள் அல்லாஹ்விடம் ஏற்கப்பட அல்லது மறுக்கப்பட அமைந்த ஆணிவேராகும்.

இறை தண்டனையில் இருந்து மனிதனைக் காக்கும் ஆணி வேரும், அஸ்திவாரமும் அதுவே.

எனவே அதன் சரியான பொருளை விளங்கி அதன் நிழலில் மனிதன் வாழ்ந்து மரணிக்கின்ற போதுதான் அவனது சுவனத்து வாழ்வை அவன் அடைந்து கொள்ள முடியும்.

அந்தக் கலிமாவை ஒரு மனிதன் மொழிந்து அல்லாஹ்வுக்கு அடிபணிந்த பின்புதான் இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களையோ, அக்கால இறைத் தூதர்களையோ அவன் நம்பிக்கை கொள்வதில் நன்மை, பயன் கிடைக்கும்.

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்ற பின்வரும் நபி மொழி இதனை தெளிவுபடுத்துகின்றது.

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعَاذًا رَضِيَ اللَّهُ عَنْهُ إِلَى اليَمَنِ، فَقَالَ: «ادْعُهُمْ إِلَى شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنِّي رَسُولُ اللَّهِ، فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ، فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ قَدِ افْتَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ….( أخرجه البخاري في صحيحه برقم/ ١٣٩٥)

நபி (ஸல்) அவர்கள், முஆத் பின் ஜபல் (ரழி) அவர்களை எமன் பிரதேசத்திற்கு அழைப்பாளராக அனுப்பிய போது முஆத் (நீ வேதம் கொடுக்கப்பட மக்களிடம் செல்கின்றாய்). அவர்களை உண்மையாக வணங்கி வழிபடத் தகுதியானவன் அல்லாஹ் வைத் தவிர வேறு எவரும் கிடையாது, நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்ற அடிப்படைக் கலிமாவின் பக்கம் அழைப்பீராக! அதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினசரி ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கி உள்ளான் எனக் கூறும், அதற்கும் அவர்கள் செவிசாய்த்தால் அவர்களின் செல்வத்தில் இருந்து “ஸகாத்” எடுக்கப்பட்டு அவர்களில் உள்ள ஏழை மக்களுக்கு விநியோகிக்கப்படும் எனக் கூறுவீராக …( புகாரி /1395 )

ஒருவர் கலிமாவை தனது வாழ்க்கை நெறியாக அங்கீகரித்த பின்பே மற்ற கடமைகள் அவர் மீது கடமையாகும் என்பதை இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது. இதன் மூலம்

?அவ்லியா, மற்றும் தர்கா வழிபாடு,

?விக்ரக ஆராதனைகள்,

?இணை தெய்வ வழிபாடுகள்,

?சிலை, சிலுவை வழிபாடு,

?தனி மனித வழிபாடுகள்,

?இறை சட்டங்களுக்கு நேர் எதிரான சட்டங்களை அங்கீகரிப்பது

போன்ற அனைத்தும் ஓரிறைக் கொள்கைக்கு எதிரான செயற்பாடுகளாகும்.

மறுமை வரை மாறாத முதன்மைப் போதனை

ஆதம் நபி (அலை) அவர்கள் முதல் இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வரை வந்த இறைத் தூதர்கள் அல்லாஹ், அவனது பெயர்கள் , பண்புகள், அவனது செயற்பாடுகள், ஆற்றல்கள், வல்லமைகள், மண்ணறை வாழ்வு, மறுமை, சொர்க்கம், நரகம் , மஹ்ஷர் வாழ்வு போன்ற கால, சமூக மாற்றங்களால் மறுமையில் அல்லாஹ்வை சந்திக்கும் வரை மாற்றம் அடையாத கொள்கையாகும்.

சின்ன உதாரணம்:

?நபி ஆதம் (அலை) அவர்களின் ஆண், பெண் பிள்ளைகள் மத்தியில் நடை பெற்ற திருமண முறை,

?நபி நூஹ் மற்றும் லூத் (அலை) ஆகிய இருவரும் காஸபிரான பெண்களை திருமணம் முடித்தமை.

?முன்பு வந்த நபிமார்களுக்கு கனீமத் பொருட்களை பங்கு வைப்பது ஹராம், அவற்றை உடனே எரித்து விட வேண்டும் என்பது கட்டளையாகும்.

?அவ்வாறே, நாம் சுத்தமான ஒவ்வொரு பூமியிலும் தொழ தாராள அனுமதி உண்டு.

ஆனால் இந்த அனுமதி முன்பு சென்ற எந்த சமூகத்தாருக்கு வழங்கப்படவில்லை. இது சட்டம் தொடர்பான கால சூழலுக்கு மாறுபடும் அம்சங்களைக் குறிக்கும்.

பின் வரும் நபி மொழி இந்தக் கருத்தை இன்னும் உறுதி செய்கின்றது.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا أَوْلَى النَّاسِ بِعِيسَى ابْنِ مَرْيَمَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَالْأَنْبِيَاءُ إِخْوَةٌ لِعَلَّاتٍ، أُمَّهَاتُهُمْ شَتَّى وَدِينُهُمْ وَاحِدٌ» أخرجه البخاري في صحيحه برقم/٣٤٥٣)

நான் மர்யமின் மகன் ஈஸாவுக்கு இம்மையிலும் மறுமையிலும் மிகவும் உரித்துடையவன். நபிமார்கள் என்போர் ஒரு தந்தைவழித் தோன்றலாகும். ஆனால் அவர்களின்அன்னையரோ பல்வேறுபட்டவர்கள். இருந்தும் அவர்களின் (தீன்) மார்க்கம் ஒன்றாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரழி) அவர்கள். (புகாரி/ 3453) .

நபிமார்களின் காலத்தில் வழக்கில் இருந்து வத்த சட்டங்களில் பல நமது மார்க்கத்தில் அமுலில் இல்லாத நிலையில் அவர்களின் மார்க்கம் ஒன்றாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறுவதன் அர்த்தம் சட்டங்களில் அவர்கள் வேறுபட்டிருந்தனர் என்பதாகும்.

அர்ரப் சொற்பிரயோகம்

அல்குர்ஆரில் இடம் பெறும் “அர்ரப்” என்ற சொற்பிரயோகம் இரு அடிப்படைகளில் கட்டமைகக்கப்பட்டு காணப்படுவதாக குர்ஆன் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர் .

وحقيقةُ معنى الربوبية في القرآن تقوم على رُكْنَين اثنين وَرَدَا في آياتٍ كثيرة:أحدُهما: إفرادُ اللهِ بالخلْقِ.

1)படைப்பைக் கொண்டு அல்லாஹ்வைத் ஒருமைப்படுத்தல். (அதாவது படைப்பில் அவன் யாரையும் கூட்டுச் சேர்த்து படைப்பதில்லை)

والثاني: إفرادُه بالأَمْرِ وتدبير ما خلقَ.

2) கட்டளைகளைக் கொண்டும் அவன் படைத்தவகளை நுணுக்கமாக நிருவகிப்பதிலும் அவனை தனிமைப் படுத்தி நம்புதல்.

உதாரணமாக மூஸா (அலை) அவர்களோடு ஃபிர்அவ்ன் உரையாடியதைக் குறிப்பிட முடியும்.

﴿ قَالَ فَمَنْ رَبُّكُمَا يَا مُوسَى * قَالَ رَبُّنَا الَّذِي أَعْطَى كُلَّ شَيْءٍ خَلْقَهُ ثُمَّ هَدَى ﴾ [طه: 49، 50]

மூஸாவே! உம்மிருவரினதும் இரட்சிப்பாளன் யார்? என அவன் கேட்டான். அவர், தனது படைப்புக்களுக்கு அனைத்தையும் வழங்கி, பின்னர் (அதற்கு) வழிகாட்டிய அந்த எமது இரட்சகன் எனப் பதில் கூறினார். ( தாஹா: 49-50)

மூஸா (அலை) அவர்கள் பிர்அவ்னின் கேள்விக்கு அளித்த பதிலில் அல்லாஹ் படைப்பதிலும் அவனது படைப்புக்களை தனியாக நிருவாகம் செய்வதிலும் யாரோடும் இணைந்து செய்யத் தேவையற்றவன் என்ற ம
இரு அம்சங்களும் மேற்படி வசனத்தில் உள்ளடங்கி இருக்கின்றன.

இணைவைத்தலால் ஏற்படும் விபரீதங்கள்

மனிதர்கள் தம்மீது கடமையான தமது இரட்சகனுக்குரிய கடமைகளில் மிக முக்கியமான கடமையாகக் கொள்ளப்படும் நம்பிக்கையை மற்றும் அது தொடர்பான நடைமுறைகளை பரிசுத்தமானதாக்கி வாழ்வது கடமையாகும் .

அந்த அடிப்படையில், ஒரு முஸ்லிம் தனது வாழ்வில் இணைவப்புச் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுவதனால் சுவனம் அவன் மீது ஹராமாகாகப்பட்டு விடும்.

لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ ۖ وَقَالَ الْمَسِيحُ يَا بَنِي إِسْرَائِيلَ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ ۖ إِنَّهُ مَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ ۖ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ (المائدة/٧٢)

அல்லாஹ்தான் மஸீஹ் பின் மர்யம் எனக் கூறியோர் காஃபிரானார்கள். அந்த மஸீஹ் (ஈஸா) அவர்களோ இஸ்ரேலின் சந்திதியினரே! எனது இரட்சகனும் , உங்கள் இரட்சகனுமாகிய அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள் எனப்போதித்தார். நிச்சயமாக அல்லாஹ்வைக் கொண்டு யார் இணை கற்பிக்கின்றானோ அவன் மீது நிச்சயமாக அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்கி விடுவான். அவனது ஒதுங்கு தளம் நரகமாகும். அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்கள் எவரும் இல்லை. ( அல்மாயிதா : 72).

இங்கு ஈஸா நபி (அலை) அவர்களை அல்லாஹ் என்றும் அவனது வெளிப்பாடு என்றும் சொன்னவர்கள் காஃபிர்கள், இணவைப்பாளர்கள் , இணைவைப்போரின் கூலி நரகமாகும் என அறிவிப்பதன் மூலம் அவ்லியாக்கள் மூலமே அல்லாஹ்வை நெருங்க முடியும், அனைத்தும் அல்லாஹ்வே, அனைத்தும் அல்லாஹ்வின் வெளிப்பாடு போன்ற கொள்கை கோட்பாடுகள், அனைத்தும் ஷிர்க் சார்ந்தவைகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ ۖ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ (لقمان /١٣)

“எனது அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே! நிச்சயமாக இணைவைத்தல் (அல்லாஹ்வுக்குச் செய்யும்) மிகப் பெரும் அநீதியாகும் என லுக்மான் அவர்கள் தனது மகனுக்கு உபதேசித்துக் கூறியதை நினைவு கூர்வீராக! (லுக்மான்.13)

அமல்கள் அழிக்கப்படுதல்

أَشْرَكُوا لَحَبِطَ عَنْهُم مَّا كَانُوا يَعْمَلُونَ (الأنعام / 88)

(நபிமார்களான) அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தாலும் அவர்கள் செய்து கொண்டிருந்தது அழிந்து விடும். (அல்அன்ஆம்-88).

وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ (الزمر /65)

(நபியே!) நீ அல்லாஹ்வுக்கு இணைவைத்தாலும் உமது அமலும் பாழாகி விடும். நீர் நஷ்டவாளர்களில் உள்ளவராகவும் ஆகிவிடுவீர் என்று உமக்கும் உமக்கு முன்னர் வந்தவர்களுக்கும் (நபிமார்களுக்கும்) வஹி அறிவிக்கப்பட்டு விட்டது. ( அஸ்ஸுமர்-65)

என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கை அல்லாஹ்வுக்கு இணைவைக்காத உயர்ந்த நபிமார்களுக்கு செய்யப்பட்டாலும் அது நமக்குரிய எச்சரிக்கையாகும் .

பொய்யான தெய்வங்களை எவ்வாறு அறிந்து கொள்ளலாம்?

அல்லாஹ்அல்லாது வணங்கப்படும் அனைத்தும் பொய்யான தெய்வங்கள் என்பதாக குறிப்பிடுகின்றான். அது பற்றி இங்கு சுருக்கமாக பார்ப்போம்.

1. அல்லாஹ்வுடன் இணைத்து பிரார்த்திக்கப்படும் شركاء என்ற இணையான தரகர்கள்/ தெய்வங்கள்

இவைகள் அல்குர்ஆனில் شركاء கூட்டாளிகள், இணை தெய்வங்கள் போன்ற பொருள்களில் இடம் பெறுகின்றன.

أَمْ لَهُمْ شُرَكَاءُ شَرَعُوا لَهُمْ مِنْ الدِّينِ مَا لَمْ يَأْذَنْ بِهِ اللَّهُ (الشورى / ٢١)

அவர்களுக்கு அல்லாஹ் உத்தரவிடாததை மார்க்கமாக்கும் இணை தெய்வங்கள் உண்டா? எனக் குர்ஆன் கேள்வி எழுப்பி இருப்பதன் மூலம் இதனைப் புரிந்து கொள்ளலாம்.

இணையான கடவுள் கோட்பாட்டை குர்ஆன் நிராகரிப்பதோடு மற்றோர் இடத்தில் இவ்வாறு கேள்வியும் எழுப்புகின்றது.

قلْ هَلْ مِنْ شُرَكَائِكُمْ مَنْ يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ ﴿٣٤ يونس)

உங்கள் இணை தெய்வங்களில் யாராவது படைப்பைத் தொடக்கத்தில் படைத்து, (மரணத்தின்) பின்னால் மீண்டும் (உயிர் கொடுத்து) எழுப்புவோர் உண்டா? ( யூனுஸ். 34) இந்தக் கேள்விக்கு மறுமையிலும் கூட பதில் கூற முடியாது. நமது சிறு பராயத்தில் பொருள் அறியாது கற்றுத் தரப்படும் திக்ர் வரிகளில் لا شريك له அந்த அல்லாஹ்வுக்கு இணைதுணை யாருமில்லை எனக் கூறியும் நமது முஸ்லிம் மக்கள் பிற்காலங்களில் இணைவைப்பாளர்களாக மாறக்காரணம் தான் என்ன?

2. أندادا அல்லாஹுவுக்கு ஈடான/ நிகரான தெய்வங்கள்.

இந்தப் பிரயோகம் அல்குர்ஆனில் அல்லாஹ் அல்லாது அவனுக்கு நிகராக நிறுத்தப்படும் சிலைகள், அவ்லியாக்கள் ஜின்கள், ஷைத்தான்கள் போன்ற எந்த ஒன்றை ஒருவர் தனது கடவுளாக சிபாரிசு செய்தாலும் அதுவும் பொய்யான தெய்வமே!

إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ ﴿١٩٤ الأعراف﴾

நீங்கள் அல்லாஹ்வை அன்றி யாரை அழைத்து பிரார்த்தனை செய்கின்றீர்களோ நிச்சயமாக அவர்களும் உங்களைப் போன்ற (சாதாரண) அடியார்களே! ( அல்அஃராஃப் :194)

வேதம் கொடுக்கப்பட மக்கள் தமது மதகுருக்கள், மற்றும் அறிஞர்கள் போதிப்பதை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றியதால் பின்வரும் இறை வசனம் இறங்கியது.

اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ وَالْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا إِلَٰهًا وَاحِدًا ۖ لَّا إِلَٰهَ إِلَّا هُوَ ۚ سُبْحَانَهُ عَمَّا يُشْرِكُونَ (التوبة – ٣١ )

அவர்கள் தமது அல்லாஹ்வை விடுத்து தமது மத குருமார்கள் மற்றும் துறவிகளை மற்றும் ஈஸா மஸீஹ் அவர்களையும் கடவுளர்களாக எடுத்துக் கொண்டனர். தனித்த வணங்கி வழிபடத்தகுதியான ஒரே அல்லாஹ்வை மட்டுமே அன்றி, வேறு யாரையும் வணங்க அவர்கள் கட்டளையிடப்படவுமில்லை. அவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன். (அத்தவ்பா: 31)

மேற்படி வசனம் அவ்லியா வழிபாடு, கப்ரு வணக்கம் செய்வோரைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

அவ்லியாக்களிடம் துஆக் கேட்கவும், கஷ்டங்களை அகற்றும்படி பிரார்த்திக்கவும் ஆலிம் உலமாக்கள் தானே சொல்கின்றனர். அவர்கள் மார்க்கம் படித்த மேதைகள்தானே என்ற அசமந்தப் போக்கில் நடப்பவர்கள் நிச்சயமாக சில போது நரகம் செல்லவும் நேரலாம்.

இறைவிசுவாசிகளின் பண்புகளில் ஒன்றாக,

وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ ( الفرقان: ٦٩)

இன்னும் அவர்கள் எத்தகையவர்கள் என்றால் அல்லாஹ்வோடு பிற தெய்வத்தை/ கடவுளை அழைத்து பிரார்த்தனை செய்யாதவர்கள் என அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.( அல்ஃபுர்கான் : 69)

3. பரிபாலிக்கும் இரட்சகன் – இரட்சகர்கள் என்ற பொருள் தரும்

ரப்/அர்பாப் رب / أرباب என்ற பிரோகத்தால் உணர்த்துதல்.

“ரப்” رب பக்குவமாக, ஒழுங்காக, பரிபாலிப்பவன், பராமரிப்பவன், இரட்சகன், உரிமையாளன் போன்ற விரிவான பொருள் கொள்ளப்படும் மேற்படி வாசகம் அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வை அன்றி வேறு இரட்சகனை ஒரு மனிதன் தேர்வு செய்யக் கூடாது என்பதை உணர்த்திப் பேசுகின்றது.

யூசுஃப் நபி (அலை) அவர்கள் எகிப்தில் பொய்க் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்ட போது அவர்களோடு வேறு இருவர் சிறைவாசம் அனுபவித்தனர். அவ்விருவரும் யூசுஃப் நபி (அலை) அவர்களிடம் அவர்கள் கண்ட கனவுக்கான விளக்கமளித்த யூசுஃப் நபி (அலை) அவர்கள் பின்வருமாறு உரையாடினார்கள்.

يَا صَاحِبَيِ السِّجْنِ أَأَرْبَابٌ مُّتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ (39) مَا تَعْبُدُونَ مِن دُونِهِ إِلَّا أَسْمَاءً سَمَّيْتُمُوهَا أَنتُمْ وَآبَاؤُكُم مَّا أَنزَلَ اللَّهُ بِهَا مِن سُلْطَانٍ ۚ (يوسف : ٣٩-٤٠)

எனது இரு சிறைத் தோழர்களே! பிரிந்து பல்கிக் காணப்படும் பல தெய்வங்கள் சிறந்ததா? அல்லது தனித்தவனும் அடக்கி ஆள்பவனுமாகிய அல்லாஹ்வா?(சிறந்தவன்) நீங்கள் அவனை அன்றி எவற்றை வணங்குகின்றீர்களோ அவை அனைத்தும் நீங்களும் உங்கள் மூதாதையர்களும் பெயர் சூட்டிக் கோண்டதே அன்றி அதற்கு எவ்வித ஆதாரச் சான்றையும் அல்லாஹ்
இறக்கி வைக்கவில்லை. (யூசூஃப் : 39-40)

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *