தன்னைப் பற்றியே சிந்தித்தல், சுயநலம், வறட்டுக் கௌரவம், தற்பெருமை, தலைக்கனம், உயர்வு மனப்பான்மை, பணிவின்மை ஆகிய அனைத்தும் மனிதனுக்கு ஷைய்தான் தூண்டும் குணங்களாகும். இந்த குணங்களுக்கு ஆங்கிலத்தில் Ego – ஈகோ என்று சொல்லப்படும். சிறியவர் முதல் பெரியவர் வரை யாரையும் விட்டுவைக்காத பண்புதான் இந்த ஈகோ! ஈகோ வந்துவிட்ட ஒருவரிடம் இந்த பண்புகளை வெளிப்படையாகவே காணமுடியும்.
ஈகோ வந்தவரின் அடையாளம்:
ஈகோ வந்தவர் நமக்கு நன்கு அறிந்தவர் என்றாலும், கண்டும் காணாதது போலவே இருப்பார், அதிகம் பேச மாட்டார், தம் இனத்தோடு மட்டும் பழகுவார், தம்மை நாடியே மற்றவர் வரவேண்டும் என்பதையே அதிகம் விரும்புவார், தன்னை விட யாரும் மற்றவருக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என எதிர்பார்ப்பார், தான் மட்டும் சிறந்தவர் என தன்னையே நம்புவார், அவரது உரையிலும் பேச்சிலும் ஈரமும், இரக்க குணமும் இருக்காது, சில சமயம் வெளிப்படும் இரக்க குணத்தை தன்னிடம் உள்ள ஈகோவை அதிகப்படுத்த பயன்படுத்திக் கொள்வார். மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டும், புகழவேண்டும் என்பதில் அதீத ஆசை கொள்வார், நடந்து செல்வதிலும், உயர்ந்து போவதிலும் தன்னை முந்தி செல்வோர் மீது பொறாமைபடுவார். தன் சுயநலத்திற்காக பிறரை சுரண்டுவார், வறியவர்கள் தம் அருகில் வருவதைகூட இழிவாகக் கருதுவார்.
தன்னைவிட குறைந்த படிப்பு, பதவி, அந்தஸ்து உள்ளவர்களிடம் அதிகம் பேச மாட்டார். தவறு செய்தால் மன்னிப்பு கேட்க மாட்டார். அவர் தன்னை சாதாரண மனிதனாய் கற்பனையிலும் நினைத்துப் பார்க்கமாட்டார்.
பிறர் தன்னை மிகவும் குறைத்து மதிப்பிடுவார்கள் என்ற எண்ணத்தில் தங்களை பெரிய ஆளாகக் காண்பிப்பதற்கு முயல்வார். ‘ஈகோ’ இன்னார் என்று இல்லாமல் யாருக்கும் வரலாம், நம் உறவினர்களுக்கு வரலாம், நம் வாழ்க்கை துணைகளுக்கு வரலாம், நாம் பணி புரியும் இடத்தின் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகளுக்கு வரலாம். ஒருவரின் அறிவுக்கும் – தகுதிக்கும் ஏற்றவாறு ஈகோவின் மோதல்கள் அமையும்.
ஈகோவினால் ஏற்படும் பாதிப்பு:
இரண்டு ஆசிரியர்களுக்கு மத்தியில் ஈகோ மோதல் ஏற்பட்டால் அது பல மாணவ, மாணவிகளின் கல்வியை பாதிக்கிறது. கணவன் மனைவி இடையே ஈகோ தகராறு ஏற்பட்டு வாழ்க்கை விரிசலடைந்தால் அது பிள்ளைகளைப் பெரிதும் பாதிக்கிறது. சொந்த பந்த உறவுகளுக்குள் வந்த ஈகோ தன் வினைகளை பெரும்பாலும் திருமணம் போன்ற வைபவ நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்திக் கொள்ளும். ஒரு சிறு பிழையையும் பெரிதாக்கி தன்னை திருப்தியடைவதையே குடும்ப உறவுக்குள் வந்த ஈகோ விரும்பும்.
ஆனால் ஈகோ வந்தவருக்கு எதிராக இன்னொருவர் செயல்பட்டால் அதை அவரால் தாங்கிக்கொள்ள முடியாது. அது அவரின் ஈகோவை அதிகப்படுத்திவிடும். கணவன் – மனைவிக்கிடையில் ஏற்படும் ஈகோ, அவர்களை (தலாக்) விவாகரத்து வரை கொண்டு செல்வதும் உண்டு. ஈகோ பிரச்சினையால் வாழ்க்கையை தொலைக்கும் பெண்கள் பலர் உண்டு. தன் சொந்த பந்தம், உற்றார் உறவினர் என பலர் இருந்தும், இந்த ஈகோ நோயால் அனாதையான பெண்களும் பலர் உண்டு. அதிகமான குடும்ப உறவுக்கு ஈகோதான் வேட்டு வைக்கின்றது. உறவுகள் இயற்கையாய் முறிவதில்லை ஈகோவால் சிதைக்கப்படுகின்றது. ஈகோதான் மனிதனின் மோசமான எதிரியாகும்.
யாருடைய தலையில் ஷைத்தான் வந்து குடிகொண்டு விட்டானோ அவரிடம் ஈகோ வந்துவிடும். ஈகோவின் அடித்தளம் ஷைத்தான். அவன் முதலில் தூண்டுவது பெருமையடிப்பதை, ஈகோவின் துவக்கம் பெருமை. பெரும்பாலும் அதன் முடிவு மனநோய் அல்லது மன அழுத்தம்.
ஈகோ வருவதற்கு அடிப்படை காரணம்:
ஈகோ வருவதற்கு முக்கிய காரணம் பெருமையாகும். ஈகோ வருவதற்கு முன்னால், உள்ளத்தில் பெருமைதான் முதலில் வருகின்றது. பெருமை வந்தவன் தன் பெருமையை தன் நடையில்கூட காட்டிவிடுவான். அதற்குத்தான் படைத்த அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:
وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًا ۚ اِنَّكَ لَنْ تَخْرِقَ الْاَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْلًا
மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல்குர்ஆன்: 17:37)
பெருமை வந்தவனுக்கு அவனுடைய பகட்டை உணர்த்துவதற்கு, அவனுடைய பெருமையை உடைத்தது நொறுக்குவதற்கு இந்த ஒரு வசனம் (அல்குர்ஆன்: 17:37) போதுமானது.
وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًا ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍۚ
(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன்: 31:18)
நன்கு அறிந்தவரை கண்டும் காணாததுபோல் இருப்பது, பெருமையாக நடப்பது, அல்லாஹ் வழங்கிய செல்வதில் பெருமையடிப்பது, ஆணவம் கொள்வது போன்ற முழு ஈகோ வந்தவானின் பண்புகளை இந்த வசனம் (31:18) குறிப்பிடுகின்றது.
وَاِذَاۤ اَنْعَمْنَا عَلَى الْاِنْسَانِ اَعْرَضَ وَنَاٰ بِجَانِبِهٖۚ وَاِذَا مَسَّهُ الشَّرُّ كَانَ يَـــٴُـوْسًا
நாம் மனிதனுக்கு அருட்கொடைகளை வழங்கினால் அவன் (நன்றி செலுத்தாமல்) புறக்கணித்து(த் தோளை உயர்த்திப்) பெருமை கொள்கிறான்; அவனை (ஏதேனுமொரு) தீங்கு தொடுமானால் அவன் நிராசை கொண்டவனாகி விடுகிறான். (அல்குர்ஆன்: 17:83)
உள்ளத்தில் பகட்டு வந்தவன் படைத்த இரட்சகனுக்கும் நன்றி செலுத்தமாட்டான், மனிதர்களுக்கும் நன்றி செலுத்தமாட்டான். மாறாக பெருமையின் பிரிவுகளாகிய ஆணவம், தலைக்கனம், உயர்வு மனப்பான்மை, பணிவின்மை ஆகிய பண்புகளுக்கு ஆட்பட்டு ஈகோ நிறைந்துள்ள ஒருவனுக்கு ஏதாவது ஒரு (முஸீபத்) தீங்கு வந்துவிட்டால், அல்லது அல்லாஹ் அவனுக்கு வழங்கிய வாழ்க்கை வசதிகளுக்கு ஏதாவது ஒரு ஆபத்து வந்துவிட்டால் அதை அவனால் தாங்கிக்கொள்ள முடியாது! அடுத்த நிமிடமே அவரை ICU வார்டில்தான் கொண்டு சேர்ப்பார்கள் அந்த அளவுக்கு நிராசையாகிப் போவான் அவன்.
ஈகோவின் பாதிப்பு எதுவரை:
இந்த ஈகோவின் பாதிப்பு இந்த உலகத்தோடு மட்டும் முடிவதில்லை, மறுமையில் சுவனம் செல்வதற்கும் அது தடையாக அமைகின்றது.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் “யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்” என்று கூறினார்கள். ஸஹீஹ் முஸ்லிம். 147
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
சொர்க்கமும் நரகமும் தம் இறைவனிடம் வாக்குவாதம் செய்தன. அப்போது சொர்க்கம், ‘என் இறைவா! எனக்கென்ன ஆயிற்று? மக்களில் பலவீனர்களும் சாமானியர்களும் தானே எனக்குள் நுழைகிறார்கள்!’ என்று கேட்டது. நரகம் ‘நான் தற்பெருமைக்காரர்களுக்கு மட்டுமே உரியவனாம் விட்டேனே!’ என்று முறையிட்டது. அப்போது அல்லாஹ் சொர்க்கத்திடம், ‘நீ என்ன கருணை(யின் பரிசு) ஆவாய்’ என்று சொன்னான். நரகத்திடம் நீ நான் அளிக்கும் வேதனை ஆவாய். நான் விரும்புகிறவர்களை உன் மூலம் தண்டிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு -இரண்டையும் நோக்கி – ‘உங்கள் ஒவ்வொருவரையும் நிரப்புபவர்கள் (மக்களிடையே) உள்ளனர்’ என்று கூறுவான்.
மேலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கம் இருக்கிறதே (அதில் தகுதியானோர் நுழைவார்கள்). அல்லாஹ் தன் படைப்புகளில் யாரும் அநீதி இழைப்பதில்லை. அவன், தான் நாடியவர்களை நரகத்திற்காகப் படைக்கிறான். நரகத்தில் அவர்கள் போடப்படும்போது, ‘இன்னும் இருக்கிறதா?’ என அது மும்முறை கேட்கும். இறுதியில் இறைவன் அதில் தன்னுடைய பாதத்தை வைக்க, அது நிரம்பிவிடும்; அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். போதும்; போதும்; போதும் என அது கூறும்.
என அபூ ஹுரைரா(ரலி) ஸஹீஹுல் புகாரி: 7449.
பெருமை என்றால் என்ன, அந்த பண்பு உள்ளவர் யார், ஏன் அவர் நரகம் சொல்லுகின்றார், சுவனவாசிகள் யார்? அவர்கள் ஏன் சுவனம் செல்லுகின்றனர் அந்த பண்பு உள்ளவர்கள் யார்? போன்றவற்றை இந்த நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.
ஈகோவின் பண்புகளை தவிர்ப்பது எப்படி?
பதவியும், பணமும், செல்வச் செழிப்பும், வசதியான வாழ்க்கையும், நிரந்தரமானது அல்ல! என்பதை முதலில் உணரவேண்டும். பதவியோ பொறுப்போ கிடைத்ததும் அதை வைத்து அதிகப்படியான அதிகாரம் செலுத்துவதை விடவேண்டும். மற்ற மனிதர்களையும் மதிக்கவேண்டும். தவறுகள் சுட்டிக்காட்டப்படும்போது அதை தயங்காமல் ஏற்றுக் கொள்ளவேண்டும். எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் சாதாரண வேலைகளை தயங்காமல் செய்யவேண்டும். குடும்ப உறவுகளைவிட்டு பிரிந்து தனித்து வாழ்வதை விட்டு அவர்களோடு ஒட்டி உறவாடி வாழவேண்டும்.
நமக்குள்ள அறிவும், திறமையும், சக்தியும், பலமும் நாமாக உருவாக்கிக் கொண்டதல்ல! அது இறைவன் தந்த அருட்கொடை என்பதை உணர்ந்தால் ஈகோ என்ற நோயிலிருந்து தன்னை காத்துக்கொள்ளலாம்.
அத்துடன் எதெல்லாம் நம்மிடம் இல்லையோ, எது நமக்கு கிடைக்கவில்லையோ அதைப்பற்றி பேராசைகொண்டு துக்கப்படுவதையும், எதெல்லாம் நம்மிடம் இருக்கின்றதோ அதைப்பற்றி அதிகம் மகிழ்ச்சிகொண்டு, கர்வம் கொண்டு பெருமையடிப்பதையும் விட்டுவிட்டால் ஈகோ இல்லாத வாழ்வை சுவைத்துப்பார்க்கலாம்.
لِّـكَيْلَا تَاْسَوْا عَلٰى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوْا بِمَاۤ اٰتٰٮكُمْؕ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرِۙ
உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்: 57:23)
ஈகோ இல்லாத வாழ்வு மிகவும் இலகுவான வாழ்க்கையாகும். (அல்லாஹுவே மிக அறிந்தவன்)
____
S.A.Sulthan
23/09/2018
Jeddah