Featured Posts

அல்குர்ஆனை ஓதியதன் பின் என்ன கூறப்பட வேண்டும்?

அல்குர்ஆனை ஓதியதன் பின் ‘ஸதகல்லாஹுல் அளீம்’ என்ற வார்த்தை பலரும் கூறுவதை நாம் பார்த்து வருகிறோம். இதற்கு நபிகளாரின் வழிகாட்டலில் எந்த ஆதாரமும் இல்லை என்பது மிகத் தெளிவானது. அல்குர்ஆன் ஓதியதன் பின் நபிகளார் காட்டிய வழிமுறை மறக்கடிக்கப்பட்டு புதிய வழிமுறையை மக்கள் உருவாக்கியமை பெரும் கவலைக்குரிய விடயமாகும்.

நபியவர்கள் அல்குர்ஆன் ஓதியதன் பின்

“سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك” என்றுதான் கூறியுள்ளார்கள்.

ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு சபையில் உட்கார்ந்தால் அல்லது குர்ஆன் ஓதினால் அல்லது தொழுதால் அவற்றை சில வார்த்தைகளைக் கொண்டு முடிக்காமல் இருக்கமாட்டார்கள். நான் அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் ஒரு சபையில் உட்கார்ந்தால் அல்லது குர்ஆன் ஓதினால் அல்லது தொழுதால் இந்த வார்த்தைகளைக் கொண்டு அவற்றை முடித்துக் கொள்கிறீர்களே, காரணம் என்ன?’ என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள் ‘ஆம், யார் நல்லதைக் கூறினாரோ அவருக்கு அந்த நலவின் மீது ஒரு முத்திரையிடப்படும். யார் தீயவற்றைக் கூறினாரோ இவ்வார்த்தைகள் அவற்றுக்குப் பரிகாரமாக அமையும்’ என்றார்கள். அந்த வார்த்தைகள் سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك என்பதாகும்.

இமாம் நஸாஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அவருடைய ‘அஸ்ஸுனனுல் குப்ரா’ எனும் நூலில் இந்த ஹதீஸை பதிவு செய்துள்ளார். இந்த ஹதீஸுக்கு அவர் ‘குர்ஆன் ஓதுவது எதைக் கொண்டு முடிக்கப்பட வேண்டும்?’ என்று தலைப்பிட்டுள்ளார்கள்.

இந்த ஹதீஸுடைய அறிவிப்பாளர் வரிசை சரியானதாகும். இப்னு ஹஜர் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: இதனுடைய அறிவிப்பாளர் வரிசை சரியானதாகும். (நுகத்: 2/733)

ஷெய்ஹ் அல்பானீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: இமாம் முஸ்லிம் அவர்களுடைய நிபந்தனையின் படி இதன் அறிவிப்பாளர் வரிசை சரியானதாகும். (அஸ்ஸஹீஹா: 7/495)

ஷெய்ஹ் முக்பில் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: இது ஒரு ஆதாரபூர்வமான ஹதீஸாகும். (அல்ஜாமிஉஸ் ஸஹீஹ்: 2/128)

அல்குர்ஆன் ஓதியதன் பின் கூறப்பட வேண்டிய இவ்வார்த்தைகள் ஹதீஸில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பினும் பலரும் ‘ஸதகல்லாஹுல் அளீம்’ என்றே கூறிவருகின்றனர். உண்மையில் இவர்கள் நபிவழியைப் புதைத்து புதுவழியை வளர்த்து வருகின்றனர். இன்னும் சிலர் அறியாமையில் சிக்கி இதனைச் சரிகண்டு வருகின்றனர்.

சஊதி அரேபியாவைச் சேர்ந்த ஷெய்ஹ் இப்னுபாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் தலைமையில் இருந்த ‘அல்லஜ்னதுத் தாஇமா’ அறிஞர்கள் இது விடயமாக பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்:
குர்ஆனை ஓதி முடிப்பதற்கு ‘ஸதகல்லாஹுல் அளீம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது பித்அத்தாகும். ஏனெனில், நபியவர்கள் குர்ஆன் ஓதியதன் பின் அவ்வாறு கூறியதாக ஹதீஸ்களில் இடம்பெறவில்லை.

இவ்வாறு கூறுவது மார்க்கத்தின் ஓரம்சமாக இருப்பின் நபியவர்கள் குர்ஆன் ஓதியதன் பின் இவ்வாறு கூறியிருப்பார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யார் எமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகிறாரோ அது நிராகரிக்கப்படும். (புஹாரீ, முஸ்லிம்)

(அல்லஜ்னதுத் தாஇமா லில்புஹூஸில் இல்மிய்யா வல்இப்தாஃ, பத்வா இலக்கம்: 7306)


அஸ்கீ அல்கமீ (பலகத்துறை, நீர்கொழும்பு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *