‘ரியா’ அல்லது ‘ரிஆ’ என்ற அரபிச் சொல்லுக்கு கவனித்தான், பார்த்தான் என்று பொருள். இன்னும் ரியா என்பதற்கு பாசாங்கு செய்தல், பகட்டுத்தனம், பாவனை காட்டுதல், நயவஞ்சகம் போன்ற பொருள்களும் உண்டு. அல்லாஹுவை வணங்குவது முதல் வழியில் தொல்லைதரும் பொருட்களை அகற்றுவது வரை நல்ல காரியங்கள் அனைத்தையும் மற்றவர்களை திருப்திப்படுத்தும் நோக்கிலும் அவர்களின் பாராட்டுக்களை பெரும் நோக்கில் செய்யப்படுவதற்கு ரியா என்று சொல்லப்படும்.
இந்த ரியா மனிதனின் உள்ளத்தில் தோன்றும் ஒரு நோயாகும். வணக்க வழிபாடுகளில் ரியா வருவதை போன்று அதிகமாக தொண்டு செய்பவர்களையும், நற்பணியாற்றுபவர்களையும், சமூக ஆர்வளர்களையும் இந்த ரியா கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக்கொண்டிருக்கின்றது.
இதுபோன்ற ரியா வருவதற்கு போட்டியும், பொறாமையும் ஒரு காரணமாக அமைகின்றது. நல்ல எண்ணத்தை மாற்றி நமது நற்செயல்களை பாழாக்குவதுதான் மனிதர்களின் விரோதி ஷைத்தானின் நோக்கமாகும்.
قَالَ فَبِمَاۤ اَغْوَيْتَنِىْ لَاَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيْمَۙ
ثُمَّ لَاَتِيَنَّهُمْ مِّنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ اَيْمَانِهِمْ وَعَنْ شَمَآٮِٕلِهِمْؕ وَلَاٰ تَجِدُ اَكْثَرَهُمْ شٰكِرِيْنَ
(அதற்கு இப்லீஸ்) ‘நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன். பின்னர் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்” (திருக்குர்ஆன் 7:16,17)
قَالَ رَبِّ بِمَاۤ اَغْوَيْتَنِىْ لَاُزَيِّنَنَّ لَهُمْ فِى الْاَرْضِ وَلَاُغْوِيَـنَّهُمْ اَجْمَعِيْنَۙ
اِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِيْنَ
என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் (தீமைகளை) அழகாக்கி காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர அனைவரையும் வழி கெடுப்பேன். (திருக்குர்ஆன் 15:39,40)
மனிதன் திட்டமிட்டுச் செய்யும் எல்லா செயல்களின் பின்னணியிலும் ஒரு எண்ணம் உள்ளது. மனிதன் எதை எண்ணினானோ அதன் கூலியைத்தான் அவன் அடைந்து கொள்வான்.
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: ‘”செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எண்ணியது தான் கிடைக்கிறது. ஒருவரது ஹிஜ்ரத் (துறத்தல்) உலகைக் குறிக்கோளாகக் கொண்டிருத்தல் அதையே அவர் அடைவார். அல்லது ஒரு பெண்ணைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அவளை மணப்பார். ஒருவரது ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்” இதை உமர் பின் கத்தாப் (ரலி) மேடையில் இருந்து அறிவித்தார்கள். நூல்: புகாரி (1), முஸ்லிம், அபூதாவூத்
அல்லாஹுவின் தூதரின் தோழரும், இஸ்லாத்தை ஆரம்ப காலத்தில் திட்டமாக ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவருமான அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் சொல்கின்றார்கள்.
‘பேச்சைத் தொடர்ந்து செயல் இல்லையெனில், அந்தப் பேச்சு பயனற்றதாகும். நல்ல எண்ணம் இல்லாப் பேச்சும், செயலும் பயனற்றதாகும். நபிவழியுடன் ஒத்துப் போகாத பேச்சும், செயலும், நல்லெண்ணமும் பயனற்றதாகும்.”
__________
S.A.Sulthan
06/10/2018
#Jeddah