– அஸ்ஷேக் அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி
இன்று சிலர், அந்நிய கலாச்சார நிகழ்வுகளை ஆதரிப்பதையும், அவற்றுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதையும் நியாயப்படுத்த கையிலெடுத்துள்ள ஆயுதமே சகவாழ்வு, சிறுபான்மைச் சூழல், இஸ்லாத்தின் நற்பெயரைப் பாதுகாத்தல் போன்ற இன்னோரன்ன பொய்ப் பிரச்சாரங்களாகும்.
முஸ்லிம்களை அழிப்பதற்கு பயங்கவார எதிர்ப்பு என்ற கோஷத்தை சர்வதேசம் எவ்வாறு கனகச்சிதமாகப் பயன்படுத்தியதோ அது போன்றே, முஸ்லிம்களின் தனித்துவங்களை அழித்து அந்நிய சமுதாயங்களுடன் ஒன்றரக் கலக்கச் செய்வதற்கான கோஷங்களே நான் மேலே குறிப்பிட்டவையாகும்.
இவர்கள் கூறுவது போன்று இஸ்லாம் கூறும் சில விடயங்களில் நாம் நெகிழ்வுத் தன்மையுடன் நடந்துகொண்டால் உண்மையில் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழலாமா, இஸ்லாத்தின் நற்பெயர் பாதுகாக்கப்படுமா என்றால், நிச்சயமாக இல்லை என்பதே பதில்.
ஒரு கிறிஸ்மஸ் வாழ்த்தின் மூலமோ நமது இஸ்லாமிய உடையில் நெகிழ்வுத் தன்மையைக் கடைபிடிப்பதன் மூலமோ அந்நிய கலாச்சார நிகழ்வுகளில் மறுப்பின்றி கலந்து கொள்வதன் மூலமோ அந்நியர்களின் உள்ளங்களை வெல்லலாம் எனப் பகல் கனவு காண்கின்றனர் சிலர்.
ஒரு முஸ்லிம் அந்நிய மத நிகழ்வுகளில் கலந்து கொண்டதனால் அல்லது அவர்களது பண்டிகைக்கு வாழ்த்துக் கூறியதனால் இஸ்லாத்தைத் தழுவிய ஒருவரையாவது காட்டமுடியுமா? மாறாக “இஸ்லாமும் எமது மதத்ததைப் போன்று எம்மதமும் சம்மதம் எனக் கருதும் மார்க்கம்” என்ற ஒரு பிம்பமல்லவா அவனது உள்ளத்தில் தோன்றும்.
அது போன்றே சிறுபான்மைச் சமுதாயத்தில் வாழ்வோரும் வெறும் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூறுவதன் மூலம், தமது மார்க்க விடயங்களில் நெகிழ்வுத் தன்மையுடன் நடந்துகொள்வதன் மூலம் எதனையும் சாதித்துவிட முடியாது. ஏனெனில் சிறுபான்மையினர் அதிகாரமற்றவர்கள் அவர்கள் அடங்கியே செல்ல வேண்டும் என்பதே உலக நியதி. இவ்வாறு அடங்கிச் செல்லவேண்டிய ஒருவன் தனக்கு வாழ்த்துத் தெரிவிப்பதை பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவன் அடங்கிப் செல்வதாக நினைப்பானா? அல்லது நமது பெருந்தன்மை என நினைப்பானா? என்றால் இரண்டாவதே விஞ்ஞானபூர்வமான பதிலாக இருக்கும். உண்மையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களுக்கே இவர்களது வாதம் ஓரளவு விஞ்ஞானரீதியாகப் பொருந்தும். மார்க்கரீதியாக அவர்களுக்கும் பொருந்தாது என்பதே நமது கருத்து.
குறிப்பாக கிறிஸ்மஸ் வாழ்த்தைப் பொருத்தவரை, அது குர்ஆனின் போதனைக்கு நேரடியாக முரண்படும் ஈஸா (அலை) அவர்களுக்குத் தெய்வீகத் தன்மையை வழங்கும் மாபெரும் கொள்கைப் பிறழ்வை அடிப்படையாகக் கொண்டதாகும். தனது அற்ப உலக வாழ்வுக்காக குர்ஆனைப் புறக்கணிப்பதற்கு நாமொன்றும் இளித்தவாயர்கள் கிடையாது. அல்லாஹ்வுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியதே கிறிஸ்தவர்களின் ஈஸா (அலை) அவர்கள் பற்றிய கொள்கையாகும். அல்லாஹ் வெறுக்கும் ஒன்றுக்கு வாழ்த்துச் சொல்பவனை விட இளித்தவாயர்கள் வேறு யாராக இருக்க முடியும்? ஆனால் தோல்வி மனப்பான்மையும் முஸ்லிம் என்ற கண்ணிய உணர்வும் இல்லாமல் சென்றதன் விபரீத விளைவே இது. இப்னு கல்தூன் குறிப்பிடும் “தோல்வியுற்றவன் வென்றவனையே பின்பற்றுவான்” என்ற சமூகவியல் கோட்பாட்டின் நவீன வடிவமே இதுவாகும்.
அப்படியென்றால் சகவாழ்வு நமக்குச் சாத்தியமற்றதா என்றால், முழுமையான சகவாழ்வு சாத்தியமற்றது என்பதே அல்குர்ஆனின் பதிலாகும். நீங்கள் அவர்களது மதத்தைப் பின்பற்றும் வரை யூதர்களும் கிறிஸ்தவர்களும் உங்களைப் பொருந்திக்கொள்ளவேமாட்டார்கள் என்ற அல்குர்ஆனிய வசனம் இதனைத் திட்டவட்டமாகக் குறிப்பிடுகிறது.
இருந்தாலும் நடுநிலைச் சிந்தனையுள்ளவர்களுடனாவது ஓரளவு சகவாழ்வு ஏற்பட வேண்டுமென்றால் அதற்கான வழி மார்க்க ரீதியான விட்டுக்கொடுப்புகளல்ல. மாறாக நீண்ட காலத் திட்டத்துடன் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புக்களே சரியான தீர்வாகும்.
மனிதர்களின் உள்ளங்களில் ஒரு கருத்தையோ எண்ணத்தையோ விதைப்பதற்கு உளவியல் விற்பன்னர்களின் ஆலோசனையுடன் பல கோடிகளைச் செலவு செய்யும் நவீன உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதெப்படி நாம் மாத்திரம் ஒரு பண்டிகை வாழ்த்தின் மூலம் மாட்டுக்குப் பதிலாக கோழியை அறுப்பதன் மூலம் பெண்களின் முகத்திரையை அகற்றுவதன் மூலம் உள்ளங்களை மாற்ற முடியும்?
எனவே, உங்களது இவ்வாதங்களைக் கேட்டுச் செயற்பட கொள்கையுறுதியுள்ள முஸ்லிம்கள் ஒன்றும் இளித்தவாயர்களல்ல. நாமும் நீண்டகாலத்திட்டத்துடன் செயற்படுவதன் மூலமே இச்சகவாழ்வையும் நம்மைப் பற்றிய நற் பெயரையும் ஏற்படுத்த முடியும். முஸ்லிம்கள் தமது அனைத்து விதமான நடவடிக்கைகளையும் இஸ்லாம் கூறும் விதத்தில் அமைத்துக் கொண்டால் அந்நிய மதத்தைச் சார்ந்த நடுநிலைவாதிகள் நிச்சயமாக இஸ்லாத்தைப் புரிந்துகொள்வார்கள்.
அந்நியர்களுடன் எவ்விதத் தொடர்பும் இன்றி அவர்களுக்கு எவ்வித உதவியும் செய்யக்கூடாது என நாம் கூறவில்லை. மாறாக மார்க்கத்துக்கு முரணற்ற விதத்தில் நமது பணத்தாலும் உடலாலும் அவர்களுக்குத் தாராளமாக உதவலாம். பெரும்பாலும் இவ்வாறான பாரிய வேலைத் திட்டங்களைச் செய்யமுடியாதவர்களே ஒரு கிறிஸ்மஸ் வாழ்த்துடனும் சில மார்க்கரீதியான நெகிழ்வுத்தன்மையின் மூலமும் சகவாழ்வை ஏற்படுத்த முனைகின்றனர். இது வெறும் பகற் கனவாகும்.
உண்மையில் நீங்கள் சகவாழ்விலும் முஸ்லிம்களின் இருப்பிலும் அக்கறையுள்ளோராக இருந்தால் கொள்கையுறுதியுள்ள முஸ்லிம்களை எள்ளி நகையாடுவதை விட்டுவிட்டு அந்நியர்களது அத்தியவசிய தேவைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவுவதற்கும் இஸ்லாத்தைப் பற்றிய தவறான பிரச்சாரங்களுக்கு தக்க பதில்களை வழங்குவதற்கும் முன்வாருங்கள். இல்லாவிட்டால் குழம்பிய குட்டையில் நீங்கள் மீன் பிடிப்பதாகவே கருத வேண்டியேற்படும்.
அல்லாஹ் நம்மனைவரையும் நன்மையின் பால் ஒன்றுசேர்த்து வைப்பானாக!..