கேள்வி : அல்லாஹ்விடத்தில் செயல்கள் அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள் என்ன?
பதில் : அல்லாஹ்விடத்தில் செயல்கள் அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன.
இக்லாஸ் செயல்களில் (அமல்) நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல்.
இக்லாஸ் ஆதாரம் என்ன?
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. ஆகவே, எவரது ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகவே இருக்கும்.
இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி அறிவித்தார்கள்.
நூல் : புகாரி ஹதீஸ் நம்பர் : 1
கேள்வி : உண்மை சொல்வதின் இறுதி நிலை என்ன?
பதில் : சுவர்க்கமாகும்.
கேள்வி : பொய்யின் இறுதி நிலை என்ன?
பதில் : நரகமாகும்.
விளக்கம் : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மை
நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ (சித்தீக்லி எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் ‘பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 6094
கேள்வி : மக்களில் நன்மை செய்வதற்கும் மற்றும் நல்லுறவு கொள்வதற்கு மிகத் தகுதியானவர்கள் யார்?
பதில் : தாய் பின்பு தந்தை
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ”அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ”உன் தாய்” என்றார்கள். அவர், ”பிறகு யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ”உன் தாய்” என்றார்கள். அவர், ”பிறகு யார்?” என்றார். ”உன் தாய்” என்றார்கள். அவர், ”பிறகு யார்?” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”பிறகு, உன் தந்தை” என்றார்கள்.
நூல் : முஸ்லிம் 5871
கேள்வி : ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன,
பதில் : ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து.
ஸலாத்திற்கு பதில் சொல்லுதல்.
நோயுற்றால் சந்திக்க செல்வது.
மரணித்தால் ஜனாஸாவை பின்தொடர்தல்.
விருந்துக்கு அழைத்தால் பதிலளிப்பது.
தும்பி அல்ஹம்துலில்லாஹ் சொன்னால் யர்ஹகுமுல்லாஹ் என்று பதிலுரைப்பது.
ஆதாரம்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை: சலாமுக்குப் பதிலுரைப்பது, நோயாளியை நலம் விசாரிப்பது, ஜனாஸாவைப் பின் தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது, தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும்”.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 1240
கேள்வி : முனாஃபிக்குடைய அடையாளம் என்ன?
பதில் : முனாஃபிக்குடைய அடையாளம் மூன்றாகும்.
பேசினால் பொய் பேசுவான்.
வாக்குறுதி அளித்தால் மாறு செய்வான்.
நம்பினால் மோசடி செய்வான்.
ஆதாரம்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும்போது பொய் பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 33
கேள்வி : மிகப் பெரும் பாவங்கள் என்ன?
பெரும்பாவங்கள் மூன்று.
அல்லாஹ்விற்கு இணைவைத்தல்
தாய் தந்தையரை நோவினை செய்தல்.
பொய் சாட்சியம் சொல்லுதல்.
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) ”பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், ”ஆம், அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங்கள்)” என்று சொன்னார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், ”அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை)” என்று கூறிவிட்டு, சாய்ந்துகொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, ”அறிந்துகொள்ளுங்கள்: பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்) தான்” என்று கூறினார்கள். ‘நிறுத்திக்கொள்ளக் கூடாதா’ என்று நாங்கள் சொல்கின்ற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டேயிருந்தார்கள்.
நூல் : புகாரி 2654.
கேள்வி : புறம் என்றால் என்ன?
உன்னுடைய சகோதரன் வெறுக்கின்றவற்றைக் கூறுதல்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), ”புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ”அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்” என்று பதிலளித்தார்கள்.
அப்போது, ”நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? (புறம் பேசுதலாக ஆகும்), கூறுங்கள்” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ, நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர்” என்று கூறினார்கள்.
கேள்வி : கோள் என்றால் என்ன? அதற்கான தண்டனை என்ன?
ஒருவருடைய சொல்லை மற்றவரிடம் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்வதாகும். இதன் தண்டனை நரகமாகும்.
அபூ வாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (மக்கள்) பேசிக்கொள்வதை (ஆட்சியாளர் வரைக் கொண்டுபோய்) கோள் சொல்லிக்கொண்டிருக்கிறார் எனும் செய்தி ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர் களுக்கு எட்டியது. அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், ”கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்லமாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்” என்றார்கள். நூல் : முஸ்லிம் 168.
கேள்வி : அண்டை வீட்ரை நோவினை செய்பவனை நபி ஸல் அவர்கள் எவ்வாறு சொல்லியுள்ளார்கள்?
ஈமான் பூரணமாக இல்லாதவன் என்று சொல்லியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவருடைய நாச வேலைகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
நூல் : முஸ்லிம் 73
கேள்வி : பெருமையடிப்பவனின் குணம் என்ன, அவனுக்குரிய தண்டனை என்ன?
சத்தியத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பவன் மக்களை இழிவாகக் கருதுபவன். அவனுடைய தண்டனை நரகமாகும்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ”யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், ”தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்” என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 131
கேள்வி : நபியவர்கள் நல்ல நண்பர்களுக்கும் கெட்ட நண்பர்களுக்கும் எதை உதாரணமாகக் கூறினார்கள்?
கஸ்தூரியைச் சுமப்பவன்.
உலை ஊதுபவன்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது கஸ்தூரியைச் சுமக்கின்றவனின் நிலையையும், (உலைக் களத்தில்) உலை ஊதுகின்றவனின் நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரியைச் சுமப்பவன் ஒன்று அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக்கொள்ளலாம். அல்லது அதிலிருந்து நீ நறுமணத்தையேனும் பெறலாம். ஆனால் உலை ஊதுபவனோ ஒன்று உனது ஆடையை எரித்துக் கரித்துவிடுவான்; அல்லது (அவனிடமிருந்து) நீ துர்வாடையையாவது அடைந்தே தீருவாய்.
நூல்: புகாரி 5534.
கேள்வி : முஸ்லிம்களின் தேவைகளை நிறைவேற்றுவதைப்பற்றியும் கல்வியைப்பற்றியும் குர்ஆன் ஓதுவதற்கு ஓன்று சேர்வதைப்பற்றி வந்துள்ள ஒரு ஹதிஸை கூறு?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் இம்மையில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ அவருடைய மறுமைத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அகற்றுகிறான். யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி செய்கிறான். யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் மறைக்கிறான். அடியான் தன் சகோதரன் ஒருவனுக்கு உதவி செய்துகொண்டிருக்கும்வரை அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்துகொண்டிருக்கிறான்.
யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக் கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவு கூறுகிறான்.
கேள்வி : விருந்தாளிகளை கண்ணியப்டுவதைப்பற்றி வந்துள்ள செய்தியையும் சொந்தங்களைச் சேர்ந்து வாழ்வதைப் பற்றி வந்துள்ள ஒரு செய்தியையும் கூறு?
பதில் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 6018
கேள்வி : மோசடியைப்பற்றி வந்துள்ள செய்தியை கூறு?
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்துசென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் ”உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ”இதில் மழைச் சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அப்போது அவர்கள், ”ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டுவிட்டு, ”மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 164.
நூல் பெயர் : கிதாபு தர்பிய்பிய்யத்தி திப்ல் முஸ்லிமி (அரபு).
வெளியீடு : இப்னுகுஸைமா கல்வி பிரிவு.
மொழியாக்கம். : எஸ். யூசுப் பைஜி.