எம்.ஏ.ஹபீழ் ஸலபி MA
حدثنا مسدد حدثنا يحيى عن عبيد الله قال حدثني خبيب بن عبد الرحمن عن حفص بن عاصم عن أبي هريرة رضي الله عنه : عن النبي صلى الله عليه و سلم قال ( سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عدل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ) صحيح البخاري
‘அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலும் இல்லாத கியாமத் நாளில் அல்லாஹ் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அவர்கள்:
1. நீதமிகு தலைவர்
2. அல்லாஹ்தஆலாவை வணங்குவதில் வளர்ந்த ஒரு வாலிபர்.
3. மஸ்ஜித்களுடன் இதய பூர்வத் தொடர்பு கொண்ட மனிதர்.
4. அல்லாஹ்வுக்காக நேசித்து, அவனுக்காகப் பிரியும் இரு மனிதர்கள்.
5. அழகும், கவர்ச்சியுமிக்க பெண் (விபச்சாரத்திற்காக) அழைக்கும் போது, நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன் என்றுரைக்கும் மனிதன்.
6. தனது வலக்கரம் தர்மம் செய்வதை, இடக்கரம் அறியாதளவு இரகசியமாக செலவு செய்யும் மனிதன்.
7. தனிமையில் தியானத்தில் ஈடுபடும்போது, அல்லாஹ்வின் அச்சத்தால் அழும் மனிதன்.’
அறிவிப்பவர்: அபூஹுரைறா (ரலி) நூல்: புகாரி 6806
மறுமை நாளில், மஹ்ஷர் மைதானத்தில் அனைவரும் ஒன்று திரட்டப்பட்டு, சூரியன் மிக அண்மையில் கொண்டு வரப்படும் போது, அல்லாஹ் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான். அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் அங்கு இருக்காது. ஒவ்வொரு மனிதனும் தனக்காகப் போராடிக் கொண்டிருக்கும் போது, மேலே கூறப்பட்டுள்ள நபிமொழியில் சிலாகிக்கப்பட்ட ஏழு பேரும் எந்தக் கவலையுமின்றி, நிம்மதியாக இருப்பார்கள். இங்கு ஏழுபேர் என்று ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. அதனால், ஏழுபேர் மட்டும்தான் அல்லாஹ்வின் நிழல் பெறுவார்கள் என்று புரிந்து கொள்ளக்கூடாது.அந்த ஏழுபேர் அந்தஸ்தில் எத்தனை ஆயிரம் பேரும் இணையலாம் என்றே புரிந்து கொள்ளவேண்டும். எழுவர் மட்டும்தான் என்று புரிந்து கொண்டால், அல்லாஹ்வின் அருட்கடாட்சங்களை குறைத்து மதிப்பிட்டதாகிவிடும். எனவே, ஏழு வகையான கூட்டத்தினர் என்றே இந்த ஹதீஸைப் புரிந்து கொள்ள வேண்டும். இனி அந்த ஏழுவகைக் கூட்டம் பற்றி விரிவாக நோக்குவோம்.
நீதிமிகு தலைவர்:
தலைமைத்துவமானது செல்வாக்குச் செலுத்துகின்ற ஒரு செயல்முறையாகவும் கடமைக் கூறாகவும் உள்ளது. இஸ்லாம் நீதிமிகு தலைமையையே வேண்டி நிற்கிறது. பொறுப்புக்களையும், பதவிகளையும் அது அமானிதமாகவே கருதுகின்றது. பக்கச் சார்பற்று தீர்ப்புக் கூறப் பணிக்கிறது. நீதிமிக்க தலைமையின் இலக்கணமாக நபி (ஸல்) அவர்கள் திகழ்கிறார்கள். அண்ணலாரின் நீதிமிகு தலைமை போன்றதோர் தலைமையை உலகம் இனிமேல் அதன் இறுதி மூச்சுவரை சந்திக்கவே முடியாது. அந்தளவு நபியவர்கள் இனம், நிறம், மதம் போன்ற அனைத்தையும் கடந்து நீதியாகவும் நேர்மையாகவும்; நடந்து கொண்டுள்ளார்கள்.
இந்த உலகத்தில் அளப்பெரிய செல்வாக்குடன் மாபெரும் தாக்கத்தை உண்டு பண்ணியவர்களின் நெடிய பெயர்ப்பட்டியலில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன்மையானவர்கள். ஏனெனில் ஆன்மீக, அரசியல், சமூக, பொருளியல், அறிவியல் போன்ற துறைகளில் மகத்தான வெற்றிபெற்றவர், உலக வரலாற்றில் அவர் ஒருவர் மட்டுமே, அவர்களின் தலைமைத்துவ ஆளுமை ஈட்டிய ஈடிணையற்ற செல்வாக்குதான், மனித இன வரலாற்றின் போக்கிலேயே மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது சமயம், உலகியல் ஆகிய துறைகளில் ஒரே நேரத்தில் வெற்றி பெற்ற ஒரே தலைவர் எனும் தனித் தகுதிக்கு அவர்களை உரித்துடையவராக்குகிறது. ‘அறிவுரை கூறுவோர் அவர்போல் நடக்கவும்., இவர்கள் போல் நடக்கவும் என்று கூறுவதையே காண்கின்றோம். என்னைப் போல் நட என்று சொன்ன பெருமைக்குரியவர் பெருமானார் ஒருவரே!’ என டாக்டர் சிலம்பொலி கூறுகின்றார்.
‘மனிதர்களிடையே நீங்கள் தீர்ப்புக் கூறினால், நீதத்துடன் தீர்ப்புக் கூற வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்.’ (4: 58) சமூகத்தின் தலைமைப்பொறுப்பேற்போர் நீதமாக நடந்து கொள்ள வேண்டும். பக்கச் சார்பாக, அல்லது பிறர்மீது கொண்ட அதிருப்தி , வெறுப்புக் காரணமாக நீதி வழங்கும் விடயத்தில் தவறிழைத்து விடக்கூடாதென அல்லாஹ் அறிவுரை கூறுகின்றான்.
‘…ஒரு கூட்டத்தார் (மீதுள்ள) பகை, நீங்கள் (அவர்களுக்கு) நீதி செலுத்தாமல் இருந்துவிட உங்களைத் தூண்டிவிட வேண்டாம். நீங்கள் நீதி செலுத்துங்கள், அது தக்வாவுக்கு மிக நெருக்கமானதாகும். (அல்குர்ஆன் -5 : 8)
எவர் உள்ளத்தில் இறைவன் மீது அச்சம் அதிகமாக உள்ளதோ, அவரால்தான் நீதமான தலைவராகத் திகழ முடியும். அதற்கான கூலியாகவே அல்லாஹ் தனது நிழலை வழங்கக் காத்துள்ளான். அதேவேளை, பொறுப்புக்களைப் பெற்றுவிட்டு மோசடி செய்தால், சுவர்க்கம் அவருக்கு ஹராமாகிவிடும்.
‘எந்த மனிதருக்கேனும் சிலரை நிருவகிக்கும் பொறுப்பை இறைவன் வழங்கி, அவன் அவர்களுக்கு மோசடி செய்தவனாக மரணித்துவிட்டால், சுவனத்தை அவனுக்கு இறைவன் ஹராமாக்கி விடுவான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகரி – முஸ்லிம்)
தலைமைப் பண்பைப் பயன்படுத்தி, மக்களுக்குத் தொல்லைகூட கொடுக்கக்கூடாது. நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி, மிகவும் இரக்கமாகவும் பணிவுடனும் நடந்துகொள்ள வேண்டுமே தவிர, கடின சித்தத்துடன் ஆணவமாக நடக்கக் கூடாது. இதுபற்றி திருமறை வசனமொன்று பின்வருமாறு பேசுகிறது.
‘நீர் கடுகடுப்பானவராக – கடின சித்தமுடையவராக இருப்பீரானால், உம்மை விட்டும் அவர்கள் பிரிந்து போயிருப்பார்கள்.’ (3: 159)
தலைமைப் பண்புக்கு கண்டிப்புடன் கூடிய மென்மைத் தன்மையும் அவசியமாகவுள்ளது. இஸ்லாம் இயம்பும் மென்மைத் தன்மையோடு, நடுநிலை தவறாத நீதிமிக்க தலைவர்களுக்கே அல்லாஹ் தனது நிழலை வழங்குவான்.
‘இறைவா! என் சமுதாயத்தில் ஏதேனும் ஒரு விடயத்துக்கு ஒருவன் பொறுப்பேற்றுக் கொண்டு, அவர்களுக்குச் சிரமம் தருபவனுக்கு நீயும் சிரமத்தைக்கொடு! என் சமுதாயத்தில் ஏதேனும் ஒரு விடயத்திற்குப் பொறுப்பேற்று, அவர்களிடம் இனிமையாக நடப்பவனிடம் நீயும் இனிமையாக நடப்பாயாக! என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)
அல்லாஹ்தஆலாவை வணங்குவதில் வளர்ந்த ஒரு வாலிபர்.
உலகில் வாழும் ஒவ்வொரு நிமிடமும் புவியில், இறை அடிமைத் தனத்தை நிலைநாட்ட வந்தவன் என்ற உணர்வுடன் மனிதன் தனது பொறுப்புக்களைப் உளப்பூர்வமாக அல்லாஹ்வை நினைவு கூரவேண்டும் வணங்க வேண்டும் துதிக்கவேண்டும்.
சமூகத்தின் ஜீவநாடிகளான இளைஞர்கள், தங்களது இஸ்லாமிய பொறுப்புக்களை மறந்து, அகஃவய உணர்வுகளுக்கு உட்பட்டு நிற்பது ஆரோக்கியமானதல்ல. சூழலுக்கு அடிமையாகிப் போய், அல்லாஹ்வை மறந்து வாழ்வது அல்லாஹ்வின் நிழலை விட்டும் அப்புறமாக்கிவிடும். அல்குர்ஆனை அதிகமாக பொருளறிந்து ஓதுதல், உபரியான தஹஜ்ஜத் தொழுகையில் கூடிய கவனம் செலுத்துதல் , ஹலால் – ஹராம் பேணி வாழ்ந்து, வட்டியை விட்டும் தூரமாகுதல் போன்ற ஆழ்ந்த ஆன்மீகப் பண்புகளோடு சத்தியத்தை பிரசாரப்படுத்துதல், தீமையைத் தடுத்தல் ஆகிய இஸ்லாத்தின் அனைத்து வணக்க வழிபாடுகளிலும் ஈடுபடுதல் மூலம், ஓர் இளைஞன் அல்லாஹ்வின் அருளை நெருங்க முடியும். அல்குர்ஆன் இத்தகு ஆன்மீக கோட்பாடுகளுக்கு பல உதாரண புருஷர்களாக, வரலாற்று வாலிபர்களை அடையாளப்படுத்துகின்றது. (மேலதிக தகவல்களுக்கு பார்க்க: இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்)
இறை இல்லங்களுடன் இதயபூர்வ ஈடுபாடு கொண்ட மனிதர்:
அல்லாஹ்வின் இல்லமான மஸ்ஜித்துடன் ஒரு முஃமின் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். இத்தொடர்பு இறையச்சத்துடன் கூடிய இதயப்பூர்வமானதாக அமைய வேண்டும். ஒரு தொழுகையை நிறை வேற்றி விட்டு, அடுத்த தொழுகை நேரத்தை எதிர்பார்த்து, அல்லாஹ்வின் இல்லம் சென்று, அவனுடன் உரையாட ஆவலாக இருக்க வேண்டும்.
தொழுகை அல்லாஹ்வுடனான உரையாடலாக உள்ளது. பிரார்த்தனையாகத் திகழ்கிறது. பள்ளியில் சென்று, அல்லாஹ்வைக் காண்பது போன்று வணங்கவும், தனது இதயக் கிடக்கைகளையும் உளக் குமுறல்களையும் அவனிடம் இறக்கிவைத்து, இறைஞ்சவும் ஒரு சாதனமாக அமைகிறது. பள்ளியுடன் நெருக்கமான தொடர்பு ஒரு முஃமினின் வாழ்வில் அதி முக்கியமானதாகிவிடுகிறது. உண்மையான முஃமின் பள்ளியுடனான தொடர்பை துண்டித்து வாழ முடியாது. எந்த நிலையிலும் பள்ளியுடன் தொடர்பு துண்டிக்கப்படலாகாது. அவ்வாறு, துண்டிப்பவருக்கு இறையருள் எட்டாக் கனியாகிவிடும். எனவே, ஒவ்வொரு மனிதனும் இறையில்லங்களான மஸ்ஜித்களுடன் இதயப் பூர்வமான – ஆத்மார்த்தமான தொடர்புகளை வைத்துக் கொள்வது அவசியமாகும்.
அல்லாஹ்வுக்காக நட்புப்பாராட்டும் அவனுக்காகப் பிரியும் இரு மனிதர்கள்:
நட்பு, இஸ்லாமிய சமூகவாழ்வின் அடிப்படைகளுள் மிக முக்கியமானதாக அமைந்து காணப்படுகின்றது. இஸ்லாம் இதற்கான ஆழமான வழிகாட்டலையும் வழங்கியுள்ளது. நல்ல நட்பின் நலன்கனையும் தீய நட்பின் பாதக விளைவுகளையும் நபி மொழி ஒன்று இவ்வாறு பிரிகோடிட்டுக் காண்பிக்கிறது.
‘நல்ல நண்பன் கஷ்தூரி வியாபாரியைப் போலாவான். தீய நண்பன் துருத்தி ஊதுபவன் போலாவான். கஷ்தூரி விற்பவன் உனக்கு இலவசமாக எடுத்துத் தரக்கூடும். அல்லது உனக்கு அதை விற்கவும் கூடும். அல்லது அதன் நறுமணத்தை நீ நுகரக்கூடும். துருத்தி ஊதுபவன் உனது ஆடையை எரித்துவிடக்கூடும். அல்லது அவனிடமிருந்து துர்வாடையை நீ நுகர நேரும்’ என நபி (ஸல்) கூறினார்கள். (புகரி -முஸ்லிம்)
மேலும், இன்னொரு நபிமொழி இவ்வாறு நட்புப் பற்றிப் பேசுகிறது. ‘எனது ஆத்மா எவன் கையில் உள்ளதோ,அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் ஈமான் கொள்ளும் வரை சுவர்க்கம் நுழையமாட்டீர்கள். பரஸ்பரம் அன்பு கொள்ளும் வரை, ஈமான் கொள்ளமாட்டீர்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
நட்புப் பாராட்டுவதை வலியுறுத்திய இஸ்லாம், தீய நட்பை துண்டிக்கவும் பணித்துள்ளது. இஸ்லாத்தை ஏற்று நடப்பவனே அல்லாஹ்வின் நிழலுக்குத் தகுதியானவன் என்பதை நாம் விளக்கப் புகுந்துள்ள ஹதீஸின் இப்பகுதி தெளிவுபடுத்துகிறது. (மேலதிக விளக்கத்திற்காக நமது ‘நட்புக்கு இலக்கணம்’ நூலைப் பார்க்கவும்.)
விபச்சாரத்திற்கான அழைப்பு விடுக்கும்போது, அல்லாஹ்வை அஞ்சி ஒதுங்கும் மனிதன்:
ஒரு பெண் தனது அழகு, கவர்ச்சி, செல்வச் செழிப்புப் போன்றவற்றைக் காண்பித்து, விபச்சாரத்திற்காக அழைக்கும் போது, அக்கொடிய பாவத்திலிருந்து தன்னை இறையச்சத்தின் மூலமாகக் காத்து, ஒதுங்கிவிடுகின்ற மனிதனும் அல்லாஹவின் நிழலுக்கு உரித்தானவனாக ஆகிவிடுகின்றான். விபச்சாரத்திற்கு அழைத்த பெண்ணின் பிடியிலிருந்து அல்லாஹ்வுக்கு அஞ்சி, தன் கற்பகை; காப்பாற்றிக் கொண்ட ஆதர்ஷ புருஷராக நபி யூசுப் (அலை) அவர்கள் திகழ்கிறார்கள் என்ற வரலாற்றுப் பேருண்மையை சூறா யூசுப் மிக விரிவாக விபரிக்கின்றது.
‘மேலும், அவர் எவளுடைய வீட்டிலிருந்தாரோ, அவள் அவர் மீது காதல் கொண்டு, தன் விருப்பத்திற்கிணங்குமாறு எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு, அவரை ‘வாரும்’ என்றழைத்தாள்; அ(தற்க)வர், அல்லாஹ் (இத்தீய செயலிருந்து) காத்தருள்வானாக! . நிச்சயமாக என் எஜமானாகிய (உன் கண)வர் என் தங்குமிடத்தை அழகாக்கி வைத்திருக்கிறார். நிச்சயமாக (இத்தகைய நன்மை செய்வோருக்கு துரோகம் செய்யும்) அநியாயக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள் என்று கூறினார்.
அவள், அவரை (அடைய ) திட்டமாக ஆசை கொண்டு விட்டாள். அவர் தன் இரட்சகனுடைய சான்றைக் கண்டிராவிடில், அவரும் அவள் மீது ஆசைகொண்டே இருப்பார். தீமையையும், மானக்கேடான செயல்களையும் அவரை விட்டும் நாம் திருப்பிவிடுவதற்காக (அவருக்கு) இவ்வாறு (எச்சரிக்கை செய்தோம்.) நிச்சமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் அடியார்களில் உள்ளவராவார். (12 :23 – 24)
இரகசியமாக தர்மம் செய்தல்:
தர்மம் செய்வதை வலியுறுத்தியுள்ள நபியவர்கள், ‘வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்யுறம் மனிதன்’ என வர்ணித்துள்ளார்கள். அத்தோடு, ‘தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாக உள்ளது எனவும் ஒரு முறை கூறியுள்ளார்கள். செல்வ மிக்கவர்கள் புகழுக்காக – தர்மசீலன் என உலகில் பெயர் பெற நினைத்து தர்மம் செய்தால், அது மறுமையில் எந்தப் பயனையும் தராது. நகரத்திற்கே கொண்டு செல்லும் என்று எச்சரிக்கும் நபிமொழிகள் அதிகமாக உள்ளன.
‘நீ கொடைவள்ளல் என்று சொல்லப்படுவதற்காக தர்மம் செய்தாய், அவ்வாறு, (உலகில்) சொல்லப்பட்டுவிட்டது என்று (அல்லாஹ்) கூறுவான். பின்னர், இவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு, இறுதியில் நரகில் தூக்கி எறியப்படுவார்’ என நபியவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
எனவே, புகழ் விரும்பாது, பகிரங்கப்படுத்தாது, இரகசியமாக தர்மம் செய்வது அல்லாஹ்வின் நிழலைப் பெற்றுத்தர வழிகோலும் செயலாகும்.
‘ஒரு மனிதர் இரவில் யாருக்கும் தெரியாமல் (வேறு) மனிதர் ஒருவருக்கு ‘ஸதகா’ வழங்கினார். அது ஒரு திருடனின் கையில் கிடைத்திருந்தது. மனிதர்கள், இதனை மறுநாள் பேசிக் கொண்டார்கள். இதனை அறிந்த அம்மனிதர், மீண்டும் ஒரு முறை ஒரு பெண்ணுக்கு ‘ஸதகா’ வழங்கினார். அப்பெண் ஒரு விபச்சாரியாக இருந்தாள். விபச்சாரிக்கு ‘ஸதகா’ வழங்கப்பட்டதாக மக்கள் பேசிக் கொள்ளலானார்கள். இதனையும் அறிந்த அம்மனிதர், அன்றிரவு ஒரு கனவு காண்கிறார். அக்கனவில் ஒருவர் வந்து, நீ திருடனுக்கு (இரவில் இரகசியமாக) வழங்கிய ‘ஸதகா’வானது அவன் தன் திருட்டுத் தொழிலிருந்து ஒதுங்கி திருந்தக் காரணமாகிவிட்டது. விபச்சாரத்திலிருந்து திருந்தி வாழ்வதற்கு வழியமைத்துவிட்டது’ என்று கூறிச் சென்றார்.(ஹதீஸின் சுருக்கம் புஹாரி -முஸ்லிம்.)
தனிமையில் தியானத்தில் ஈடுபடும்போது, அல்லாஹ்வின் அச்சத்தால் அழும் மனிதன்.’
இரவு நேரத்தில் தஹஜ்ஜுத் வேளையில், அல்லது தனித்திடும் போது அல்லாஹ்வை நினைத்து, தான் செய்த பாவத்திற்காக அழுது, கண்ணீர் வடித்து, மன்றாடிப் பாவமன்னிப்புக்கோரும் அடியானை அல்லாஹ் தனது நிழலில் இளைப்பாற வைத்துக் கண்ணியப்படுத்துவான் என நாம் விளக்கிவரும் ஹதீஸின் இறுதிப் பகுதி சிலாகிக்கின்றது.
உண்மையில், இந்நிலையை உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் போது, இரவில் எழுந்து நின்று, தொழுது அல்லாஹ்விடம் தான் செய்த தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்டு, அழுகின்ற போது அனுபவிக்கலாம். இப்படியான நேரத்தில் மன்றாடுவது எவ்வளவு பெரிய அருளையும் அந்தஸ்தையும் மனிதர்களுக்கு அல்லாஹ்விடத்தில் அதிகப்படுத்துகின்றது. இத்தகைய பாக்கியம் பெற்றவர்களாகவும், அவனது நிழல் பெறும் ஏழு கூட்டத்தில் எம்மையும் இணைத்துக் கொள்ள நாம் அனைவரும் முயற்சிப்போமாக!