எம்.ஏ.ஹபீழ் ஸலபி.ரியாதி (M.A.)
சீர்திருத்தப் பணிகள்
முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 1115ல் (கி.பி1703) உயைய்னா என்ற பாலைவனக் கிராமத்தில் பிறந்தார்கள். இவர் அன்றைய அரேபியாவில் புகழ் பெற்ற பனூ தமீம் குலத்தைச் சேர்ந்தவராவார். இவரின் பாட்டனார், சுலைமான் இப்னு அலி உயைய்னா நீதவானா(காழியா)கவும் நஜ்த் மாகாணத்தின் ஷெய்குல் இஸ்லாமாகவும் இருந்தார். முஹம்மதின் தந்தை ஷெய்க் அப்துல் வஹ்ஹாப் உலமாவாகவும் உள்ளுர் காழியாக(நீதவானா)வும் விளங்கினார்.
இமாம் முஹம்மதின் தந்தையின் பெயரே அப்துல் வஹ்ஹாப். எனினும், முஹம்மது என்ற பெயருக்குப் பதிலாக, வரலாற்று அறிவற்ற பலர் அப்துல் வஹ்ஹாப் என்ற பெயர் கொண்டு அழைத்ததோடு, உலகில் எங்கும் யாரும் உருவாக்காத வஹ்ஹாபிஸம் என்ற கோட்பாட்டுடன் அவரைத் தொடர்புப்படுத்தி, அவரை அழைத்தனர்.
இளைஞர் முஹம்மத் 20 வயதாகும் போது இஸ்லாமியக் கலைகளில் பாண்டித்தியம் பெற்ற அறிஞராக விளங்கினார். அவரது குடும்பம் அறிவு வாழும் குடும்பமாக அமைந்தமையே இதற்கான முக்கிய காரணமாகும். அன்று இமாமவர்களின் தந்தை, அப்துல் வஹ்ஹாப் இஸ்லாமியக் கலைகளைக் கற்றுத் தேர்ந்த அறிஞராகப் பிரசித்தி பெற்றிருந்தார். இமாமின் பாட்டனார் சுலைமான் அவர்கள் நஜ்த் மாகாணத்திலேயே தலைசிறந்த அறிஞராக மதிக்கப்பட்டார். இவ்வாறான அறிவுச் சூழலில் வளர்ந்ததன் காரணமாக 10 வயதை அடைய முன்னரே அல்குர்ஆனை மனனமிட்ட, இமாம் முஹம்மது அவர்கள், இஸ்லாமியக் கலைகளிலும் ஆழ்ந்த புலைமையைப் பெற்று விளங்கினார். இருபது வயது இளைஞராக இருக்கும் போதே அடுத்த அறிஞர்களை மிஞ்சும் புலைமை அவரிடம் மிகுதியாகக் காணப்பட்டது.
பலதெய்வக் கொள்கைகளாலும், ஷிர்க் – பித்அத்களாலும் மாசுபடுத்தப்பட்டிருந்த இஸ்லாத்தை, தனிமனிதனாக நின்று மீண்டும் உயிர்ப்பித்து, தூர்ந்து போயிருந்த ஏகத்துவ கொள்கைப் புரட்சியை மீண்டும் உருவாக்கிய நவீன இஸ்லாமிய எழுச்சியின் முன்னோடியாக இமாம் முஹம்மது இப்னு அல்துல் வஹ்ஹாப் (ரஹ்) கருதப்படுகின்றார்.
நவீனகால இஸ்லாமியச் சீர்திருத்த இயக்கங்களின் கொள்கை ஊற்றாக அன்னாரின் சிந்தனைகள் விளங்குகின்றன. இஸ்லாத்தின் மூலாதாரத்திற்குத் திருப்பவேண்டும் என்றும் அல்குர்ஆனுக்கும் அஸ்சுன்னாவுக்கும் முஸ்லிம்கள் தம்மை முற்றாக அர்ப்பணிக்க வேண்டும் என்றும் அவர் குரல் எழுப்பினார்கள். மற்ற எந்த சிந்தனைக்கும் எந்த அறிஞரின் கருத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பதைவிட அல்குர்ஆனுக்கும் அஸ்சுன்னாவுக்கும் முக்கியத்துவம் அளித்து பின்பற்றுவதுதான் நபியின் பாரம்பரியம். அவர்களே பாரம்பரியம் முஸ்லிம்கள் என்று அவர் ஆணித்தரமாக வாதிட்டார். அல்குர்ஆன் – சுன்னா இவை இரண்டிற்கும் மாற்றமாக இடையில் புகுத்தப்பட்ட எந்த ஒன்றைப் பின்பற்றுபவனும் பாரம்பரிய – சம்பிரதாய முஸ்லிம் என்று உரிமை கோர முடியாது என்று அவர் பரப்புரை செய்து தூய இஸ்லாத்திற்கு மக்களை மீட்டெடுத்தார்.
இஸ்லாத்த்தின் அடிப்படை தவ்ஹீத் என்பதை விளக்கப்படுத்துவதற்குத் தமது சக்தி அனைத்தையும் அவர் செலவிட்டார். இறுதித்தூதரின் பிரசார அணுகுமுறையை கடைப்பிடித்து அதே வழிமுறையில் இஸ்லாத்தின் மறுமலர்ச்சியை தவ்ஹீத்வாதத்தின் எழுச்சியாக அவர் மீள வடிவமைத்தார்.இஸ்லாமிய அரசியல் விஸ்தரிப்பில் ஏகத்துவக் கோட்பாட்டை ஒன்று கலப்பதிலும் அவர் வெற்றி பெற்றார். ஆனால், அவர் கட்சி அரசியல் பதவி ஆட்சியலுக்குள் நுழையாத தூய வாழ்வை மேற்கொண்டார்.
கிறிஸ்தவ ஐரோப்பாவின் ஆதிக்கத்தினால், துருக்கிப் பேரரசு வீழ்ச்சியை எதிர்நோக்கியிருந்த காலத்தில் அரேபியாவில் மிகவும் பின் தங்கிய பழங்குடிகளின் கிராமத்திலிருந்து, முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் தமது ஏகத்துவப் பிரசாரத்தை ஆரம்பித்தார். அவர் பிறந்த கிராமம், அரேபியாவில் மிகவும் ஒதுக்கமாக இருந்த நஜ்த் மாநிலத்திலிருந்தது. இன்று அப்பகுதி மன்னர் சவூத் என்ற வளைகுடாவின் இரண்டாவது மிகப் பெரிய பல்கலைக்கழகத்தை தன்னகத்தே கொண்டு மிளிர்கிறது.
இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய சீர்திருத்தவாதிகள் எல்லோரும் ஒத்த குணவியல்புகளுடனேயே காணப்பட்டுள்ளனர். இத்தகைய சீர்திருத்தவாதிகளிடம் வெறும் மூளை மட்டுமல்ல, உணர்ச்சிப்பூர்வமான உள்ளமும் காணப்படுவது இயல்பு. வரலாற்றில் அறிவுக்குப் பங்களிப்புச் செய்து, பல நூல்களை எழுதிப் பிரசித்தி பெற்ற அறிஞர்களைக் காண்கிறோம். அவர்கள் பெரும்பாலும் தம் மூளையிலேயே வாழ்ந்துவிட்டுச் சென்றிருப்பார்கள். அல்லது இயக்கம் உருவாக்கி அதன் மூலம் பொருளாதாரம், அரசியல் தலைமை என பல்வகை இலாபம் அடைந்திருப்பார்கள் ஆனால், சீர்திருத்தவாதிகள் அறிவுப் பணியோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அவர்கள் உள்ளத்தில் எரியும் உணர்ச்சி வேகம் அவ்வாறு நின்றுவிட அவர்களை விடுவதில்லை. தம்மைச் சூழவுள்ள தீமைகள். அநியாயங்கள் கொடூரங்களைப் பார்த்துச் சகிக்க அவர்களால் முடிவதில்லை.
கொள்கையை மூளையில் சுமந்தால் மட்டும் போதாது நடைமுறை வாழ்விலும் பூமியிலும் அது வாழ வேண்டும் என்ற உணர்ச்சிப் பூர்வமான வேகம் அவர்களிடம் காணப்படும். எனவே, தம் உயிரையும் மதிக்காது அவர்கள் கொள்கைக்காகப் போராடுவார்கள். அந்தப் பாததையில் செய்யும் தியாகம், அர்ப்பணிப்பு அவர்களைப் பொறுத்தவரையில் சுவைமிக்கவாழ்வாகவே அவர்களுக்குத் தோன்றும். எனவேதான், அவர்கள் செயற்கையாக அன்றி இயல்பாகவே தியாகிகளாக வாழ்வார்கள். மிகச்சாதாரணமாகவே மிகப்பெரும் தியாகங்களைப் புரிவார்கள்.
இத்தகைய உணர்வுப்பூர்வமான, நடைமுறை வாழ்வைக் கொண்ட சீர்திருத்தவாதிகளைச் சேர்ந்தவரே இமாம் முஹம்மது, 20 வயது இளைஞர், தன்னைச் சூழ உள்ள ‘ஜாஹிலிய்யத்தின் இருளைக் காணும் போது.கொதித்தெழுந்தார்; பெரும்பாவங்களாலும் ஷிர்க்குகளாலும் பித்அத்களாலும் சமூக வாழ்வு நிறைந்திருப்பதை அவதானிக்கிறார்; உள்ளம் கொதிக்கிறதுளூ உத்வேகம் மேலெழுகிறதுளூ தான் படித்த அறிவை மூளையோடும் பிறகு புத்தகங்களோடும் மட்டுப்படுத்திக் கொள்ள அவரால் முடியவில்லை. களத்திற்கு வருகிறர். தான், தனியாக இருக்கின்றேன் என்பதைக் கூட அவர் பொருட்படுத்தவில்லை. அறிஞர்களில் மிகப் பெரும்பாலானோர் நடக்கும் தீமைகளைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கிறார்களே! நமக்கென்ன வந்தது என அவர் நினைக்கவில்லை. சீர்திருத்தவாதிகளால் அப்படி நினைக்க முடியாது. அவ்வாறு நினைக்க அவர்களது உள்ளம் விடாது. மவ்;டீகக் கருத்துக்களும் விக்கிரக ஆராதனைகளும் மார்க்கமாகி. அநியாயமும் கொலையும் கொள்ளையும் பயங்கரப் பெரும்பாவங்களும் சரளமாகிவிட்ட தன் சமூகத்தைப் பார்த்து சகித்துக்கொண்டிருக்க அவரால் முடியவில்லை.
இளைமைத்துடிப்பும் இஸ்லாமிய உணர்வும் சீர்திருத்தவாதிக்கு இயல்பாக அமைந்திருக்கும் உயிருள்ள உள்ளம், ஆகியவற்றோடு அவர் களத்துக்கு வந்து, தீமைகளை எதிர்க்க ஆரம்பிக்கின்றார். சோதனைகள் அலை அலையாக மூழ்கடிக்க முனைகின்றன.
போராட்ட ஆரம்பமும் அறிஞர்களுடனான கருத்தாடலும்
இமாம் அவர்கள் தனியே தனது பணியை மேற்கொண்டாலும் அன்னவரது பணி, ஆரம்பத்திலேயே அறிஞர்களோடு உரையாட வேண்டிய நிலையை ஏற்படுத்திவிடுகிறது. அறிஞர்களைத் தூண்டிப்பார்த்தார்கள், அவர்களோடு கலந்துரையாடினார்கள். சிலர் அவர்களின் முயற்சிகளுக்கு மானசிக, சடரீதியான பங்களிப்புக்களை வழங்கி, துணைபுரிய முன்வந்தனர். பலர் இணங்க மறுத்தனர்.
ஆனால், தந்தை அப்துல் வஹ்ஹாப் மகன் முஹம்மதுவின் போக்கை ஆதரிக்கின்றார். சிலபோது மகனின் கருத்துக்கள் சில சூடான கருத்தாடலுக்கு உட்படுத்தப்பட்டது. அது, உண்மையை அறிந்துகொள்ள முயலும் கருத்துப்பரிமாறலாகவும் அமைந்தது. ‘மகன் முஹம்மதிடமிருந்து நான் நிறையக்கற்றுக்கொண்டேன் எனத் தந்தை அப்துல் வஹ்ஹாப் கூறும் அளவுக்கு இக்கருத்தாடல் விவேகமாக இருந்துள்ளது. மகனின் பாண்டித்தியம், வாதத்திறன், சத்தியத்தைப் புரிந்துகொள்வதில் காட்டும் ஈடுபாடு, மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற ஆர்வம், இவை கண்டு தந்தை வியக்கிறார். மகனின் பிரசாரத்திற்கு முழுமையாக உதவிட முனைகிறார்.
பொதுமக்களின் நிலை சீர் பெற வேண்டுமானால், அறிஞர்களும் அவர்களது மாணவர்களும் சீர் பெற வேண்டும் என இனம் அவர்கள் கருதுகிறார்கள். எனவேதான் அவர்களிடம் சென்று தனது பிரசாரப்பணிக்கு தார்மீகப் பங்களிப்பாவது தருமாறு உதவி கோருகிறார். எனினும், அக்கால அறிஞர்கள் மனோயிச்சை, மோசமான சமூக சூழல், இத்துப்போன அதன் பாரம்பரியங்களிலிருந்து விடுபடாது, அவற்றிற்கு அடிமைப்பட்டுப் போயிருந்தனர். பொது மக்களுக்கு முகஸ்துதி செய்து, அவர்களது செல்வத்தைச் சுவைத்து வாழ்ந்த அறிஞர்களால், இளைஞர் முஹம்மதின் சீர்திருத்தப் பணிகளோடு இணங்கிப்போக முடியவில்லை.
இவ்வாறான ஒரு நிலையில் முஹம்மதுவின் பிரசாரத்திற்கு ஆதரவாக இணைந்தோர் மிகச்சிறிய ஒரு தொகையினராகவே காணப்பட்டனர். அப்போது, போராட்டம், பலவகையில் இருந்தது. படாடோப வாழ்வை விட்டு சத்தியத்திற்குச் செவிசாய்க்க மறுக்கும் போலி ஆன்மீகவாதிகளின் சூழ்ச்சி, பொதுமக்களின் பாமரத்தன்மை தூண்டப்பட்டு, கிளறிவிடப்படும் வன்முறை வெளியாட்டங்கள், குடும்பத்திற்கு மத்தியிலிருந்து ஆர்த்தெழும் எதிர்ப்பலைகள் போன்ற அனைத்தையும் தனிமனிதனாக நின்று கொண்டு, அனைத்துவித விமர்சனக் கணைகளையும் அறிவுக் கேடயத்தால் முனை மழுங்கச்செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும், இமாமவர்கள் அயராமல், சளைக்காமல் தன்னைச் சூழ துணிகரமான ஓர் இளைஞர் குழுவை உருவாக்கிக் கொண்டு, அவர்களைத் தூய இஸ்லாத்தின் நிழலில் பயிற்றுவித்து, பண்படுத்தி தனது பிரகாசப் பணியை முனைப்புடன் முடுக்கிவிட்டார்கள்.
கொள்கைப் புனரமைப்பு:
நடைமுறை வாழ்வில் முஸ்லிம்கள் இஸ்லாத்தைவிட்டும் வெகுதூரம் சென்று, ஷிர்க்கிலும் பித்அத்களிலும் ஆபாசத்திலும் மேற்கத்தியச் சிந்தனை அடிமைத்தனத்திலும் அறியாமையிலும் மடமையிலும் ஒழுக்கச்சீரழிவிலும் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்ததை இமாமவர்கள் கண்டார்கள். தனது சமூகத்தைச் சீர்திருத்துவது என்பது மேலோட்டமான, இலேசான ஒரு காரியமல்ல என்பதையும் அது, ‘அகீதா’ எனும் ஏகத்துவக் கொள்கை, வணக்க வழிபாடுகள் என்ற ஆரம்ப நிலையிலிருந்து ஆரம்பிக்கப்படல் வேண்டும் என்பதையும் உணர்ந்து கொண்டார்கள்.
மக்கள் புரிந்து வந்த செயல்களை, அல்குர்ஆன் – ஹதீஸ் ஆகியவற்றின் துலாக்கோலில் எடைபோட்டுப் பார்த்தபோது, அம்மக்கள் இஸ்லாத்தை விட்டு வெகுதொலைவில் இருக்கக் கண்டார்கள். முஹம்மது நபி (ரஹ்) அவர்களை அல்லாஹ் நபியாக ஏன் அனுப்பினான் என்பதை மக்கள் அறியாமலிருப்பதையும் உணர்ந்தார்கள். எனவே, இமாம் அவர்கள் கொள்கைப் புனர்நிர்மாணம் செய்ய ஏகத்துவப் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.
முதன்முதலில் ஹரிமலா என்ற ஊரில் தம்குடும்பத்தினருக்கிடையே பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்கள் அப்போதனைகளில்
- அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாரையும் அழைத்து, உதவி தேடக்கூடாது.
- அல்லாஹ் ஒருவனுக்கே பிராணிகளை அறுத்துப்பலியிட வேண்டும்.
- அவன் ஒருவனுக்கே நேர்ச்சை செய்ய வேண்டும்.
- கப்ருகள், மரங்கள், கற்கள், மீது நம்பிக்கைகொள்வதும் அவற்றிடமிருந்து உதவி தேடுவதும் அவற்றுக்கு நன்மை – தீமை செய்கின்ற ஆற்றல் இருக்கின்றது என நம்புவதும் மாபெரும் வழிகேடாகும். இந்த நம்பிக்கைகளை விட்டுவிடுவது அவசியமாகும் என்று மக்களுக்குப் போதித்தார்கள்.
தம்முடைய கூற்றுகளுக்கு குர்ஆன் ஹதீஸ் ஆகிய அடிப்படை மூலாதாரங்களிலிருந்து மட்டும் தகுந்த சான்றுகளை எடுத்துக் காட்டினார்கள். இப்பணியைப் பேச்சாலும் எழுத்தாலும் அறிவுரைகளாலும் தொடர்ந்து செயற்படுத்தினார்கள். ஒரு போதும் அவர் வன்முறையைக் கடைப்பிடிக்கவில்லை.
தொடரும் இன்ஷா அல்லாஹ் …