Featured Posts

முகலாய மன்னர் அக்பரின் தீனே இலாஹி – ஒரு விமர்சனப் பார்வை தொடர் – 1

எம்.ஏ.ஹபீழ் ஸலபி  (M.A)

அறிமுகம்:

இந்திய உபகண்டத்தை (1526-1858) காலப்பிரிவில் சுமார் 300 வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்த ஒரு பேரரசையே வரலாற்றாசிரியர்கள் முகலாய சாம்ராஜ்யம் என அழைக்கின்றனர். இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் ஆட்சியின் பொற்காலம், முகலாயர் ஆட்சிக் காலப் பகுதியாகும் என அந்நிய ஆய்வாளர்களால் சிறப்பித்துக் கூறப்படுகிறது. குறிப்பாக இப்பேரரசு 1526 முதல் 1707 வரை சுமார் 150 வருட காலம் அக்பர், ஜஹாங்கீர், ஸாஜஹான், அவ்ரங்கஸீப் ஆகிய மன்னர்களின் கீழ் செழித்தோங்கிக் காணப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் சுட்டி நிற்கின்றன. ஆப்கானிஸ்தானிலிருந்து இந்திய உபகண்டத்தின் பெரும் பகுதியையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்த முகலாயர்கள் அரசியல், பொருளாதார, சமய, சமூக மாற்றங்களுக்குப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர். இன்றுவரை அதன் செல்வாக்குத் தொடர்கிறது.

மத்திய ஆசியாவைச் சேர்ந்த துருக்கிய இனத்தவரான பாபர் என்பவரே 1526இல் முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார். மங்கோலியத் தளபதி ஜெங்கிஸ்கானின் வழித்தோன்றலான இவர், ஸமர்கந்தை ஆட்சி செய்த ஸுல்தான் மஹ்மூத் மிர்ஸா என்பவரின் நெருங்கிய உறவினராவார். ஆட்சிப் பீடமேற விரும்பிய பாபர், ஸமர்கந்தைக் கைப்பற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு, தோல்வி அடைந்தார். பின்னர், ஆப்கானிஸ்தானில் பல வெற்றிகள் அவருக்குக் கிடைத்தன. 1504இல்-தனது 21வது வயதில் அவர் காபூல் நகரைக் கைப்பற்றிக் கொண்டார்.

ஆப்கானிய லோதி சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியான டில்லியை ஆட்சி செய்து வந்த, இப்றாஹீம் லோதி என்பவரை 1526ல் தோற்கடித்த பாபர், தலைநகரான ஆக்ராவைக் கைப்பற்றிக் கொண்டார். இதுவே முகலாய சாம்ராஜ்யத்தின் ஆரம்பமாக அமைந்தது. 1527இல் தனது படைப் பலத்தைக் கொண்டு, இந்து ராஜபுத்திரர்களின் கூட்டாட்சியை வெற்றி கொண்ட அவர், தனது பேரரசை நிலை நிறுத்திக் கொள்வதற்குப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். வங்காளம், பீஹார் ஆகியனவும் அவரின் செல்வாக்கின் கீழ் கொண்டுவரப்பட்டன. முகலாயர்களின் ஆட்சிக்காலப் பிரிவு இந்திய உபகண்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்திருந்தது. பதினாறாம் நூற்றாண்டிலிருந்து அவர்கள் செல்வாக்குடன் இந்தியாவில் ஆட்சி செய்தனர்.

முகலாய மன்னர்கள் வரலாற்றில் குறிப்பிட்டுச் சிலாகிக்கப்படும் அளவு முக்கியத்துவம் பெற்றுத் திகழ்கின்றனர். முஸ்லிம் உலக வரலாற்றில் பதினாறாம் நூற்றாண்டு முக்கிய காலப்பகுதியாகும். மேற்காசியாவிலும் ஆபிரிக்காவிலும் போல்கன்-ஐரோப்பிய நாடுகளிலும் உதுமானியர்கள் தங்கள் அரசியல் செல்வாக்கைப் பெற்றிருந்தனர். மத்திய ஆசியாவில் ஸபவிக்களின் செல்வாக்குக் காணப்பட்டது. தென்னாசியாவில் முகலாயர்களின் பரம்பரையில் முக்கியத்துவம் வாய்ந்த பல ஆட்சியாளர்கள் ஆட்சி புரிந்தனர்.

முகலாயர்களின் ஆட்சியின் கீழ் அனைத்து மதப் பிரிவினரும் சுதந்திரத்துடன் வாழ வழிவகுக்கப்பட்டது. மூன்று நூற்றாண்டு கால நீண்டதொரு ஆட்சி முறையை முகலாயர்கள் தொடர்வதற்கு, சமய சகிப்புத் தன்மையே காரணமாகக் கொள்ளப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். ஜனநாயக நாட்டில் கூட, பல கட்சிமுறை ஆதிக்கம் செலுத்தும் நவீன அரசியல் பாரம்பரியத்தில் கூட நீண்டகால ஆட்சி முறைமை சாத்தியமாகாத போது, எப்படி ஒரு சிறுபான்மை இனம், பெரும்பான்மையாக இந்துக்களையும் இன்னும் பல சமயப் பிரிவுகளையும் பல மொழி பேசும் மக்களைக் கொண்ட ஒரு நாட்டை ஆட்சி செய்தது என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகும்.

இஸ்லாம், பலவந்தமாக மார்க்கத்தைப் பரப்புவதை அனுமதிக்கவில்லை. எனவே, முகலாயர்கள் சமயப் பொறுமையைக் கையாண்டார்கள். அவர்களது வணக்க வழிபாடுகளுக்குப் பூரண சுதந்திரத்தை வழங்கினார்கள். முகலாயப் படைகளில் இணைந்த இந்திய இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், விதிவிலக்கு அளித்தனர். அரசாங்கத்தின் பாதுகாப்புடன் வாழ்ந்த முஸ்லிம் அல்லாதவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டியிருந்தது. அதிலும், வயது குறைந்தோர், வயோதிபர் ஆகியோருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

முகலாய ஆட்சியில் இஸ்லாமிய கலாசாரப் பண்பாடுகள் ஓரளவு குறிப்பிடத்தக்க வகையில் பின்பற்றப்பட்டது. எனலாம். முஸ்லிம் அல்லாதவர்களும் கலாசார நடைமுறைகளிலும் பண்பாடுகளிலும் இஸ்லாமிய நடைமுறைகளைப் பின்பற்ற ஆரம்பித்தனர். இஸ்லாமியத்திற்குள் தங்களை ஐக்கிப்படுத்துவதை ஒரு கெளரவமாகவும் கருதினர். இன்றுவரை அதன் தடையங்கள் இந்துக்களிடம் காணப்படுகிறது. இந்துப் பெண்கள், முஸ்லிம் பெண்கள் போன்று முக்காடு அணிகின்றனர். தமது சேலையால் தலையை மூடிக்கொள்கின்றனர். இஸ்லாமும் இந்துத்துவமும் இணைந்த ஒரு கலப்புக் கலாசாரமே உருவாயிற்று எனக் கருதப்படுகிறது.

இனமாச்சாரியமும், ஜாதி வேறுபாடும், குல வேற்றுமையும் மொழிவெறியும் நிறைந்த இந்திய உபகண்டத்தில், இஸ்லாமிய சமத்துவத்தை  நிலைநாட்டுவதில் அதிக பங்களிப்பினைச் சட்ட ரீதியாக ஏற்படுத்தியவர்கள், முகலாய மன்னர்களே எனலாம். இதனால், பல இன மக்களும் இஸ்லாத்தில் காணப்பட்ட சமத்துவ நல்லம்சங்களால் கவரப்பட்டு, இஸ்லாத்தைத் தழுவினர்.

இந்தியாவில் இஸ்லாம் நிர்பந்த-தந்திர உபாயங்கள் மூலமாகப் பரவவில்லை. இஸ்லாத்தை விளங்கி ஏற்றுக் கொண்ட பின்னர், மதம் மாறியவர்களை அறிவது மிக அரிதாகும். இஸ்லாத்தின் சமத்துவம் அதி உன்னதமானது என்பதை பல இன மக்களும் நன்கு அறிந்திருந்தனர். முகலாய மன்னர்கள், குறிப்பாக அக்பர் சமத்துவம் என்பதற்காக இஸ்லாத்தையே அதன் உயிர் நாடியான ஏகத்துவக் கொள்கையையே, விட்டுக் கொடுத்தார் என்ற கடுமையான விமர்சனத்திற்கு உட்பட்டார்.

அக்பர் (1556 – 1605)

ஜலாலுத்தீன் முஹம்மது அக்பர் 1556இல் அரசரானார். நிர்வாகத் திறமை, தற்துணிவு, அரசியல் ஆளுமை, தந்திரோபாயங்கள், அரசனுக்குரிய வீராண்மைக் குணாம்சங்கள் என்பன இவரிடம் மிகுதியாகக் காணப்பட்டன. இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு சமயங்களையும் ஒன்றிணைத்து ஆட்சி செய்ய முனைந்தார். இந்துக்களைம் முஸ்லிம்களையும் இணைக்கும் நோக்குடன், பல புதிய திட்டங்களை தமது சுய விருப்புக்கேற்ப அவற்றை நடைமுறைப்படுத்த முனைந்தார். அவ்வாறான திட்டங்களில் ஒன்றாக விளங்கியதே. ‘தீனே இலாஹி’ எனும் அக்பரின் முக்கிய, புதிய சமய நோக்காகும். இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டைத் தகர்த்தெறியும், முற்றிலும் அதற்கு விரோதமான, முரணாக அமைந்த அவரது சமய நடைமுறைகளால் ஹிந்துக்கள் முகலாய ஆட்சியுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முனைந்தனர். அவர், இந்துக்களைத் திருப்தப்படுத்துவதற்காக இஸ்லாத்தை விட்டுக் கொடுத்து ஆட்சியை ஸ்திரப்படுத்தினார். எனவே, முஸ்லிம்கள் அக்பரின் புதிய சமயக் கோட்பாட்டை ஏற்கவில்லை. மறுத்து கடுமையாக விமர்சித்தனர்.

அக்பர் மன்னரின் ‘தீனே இலாஹி’ எனும் புதிய சமயக் கோட்பாடுகளுக்கு எதிராக செய்க் அஹ்மத்  அவர்களின் பிரசாரம் சிர்ஹிந்திப் பகுதியில் பெரும் வரவேற்பையும் செல்வாக்கையும் பெற்றது. அக்பரின் புதிய கொள்கைக்கும் முஸ்லிம்களிடத்தில் காணப்பட்ட தவறான சமய விளக்கங்களுக்கும் எதிராகப் பிரசாரப் பணியில் அவர் ஈடுபட்டார். அவரது அபார துணிவு, மன்னனையே எதிர்த்துக் கருத்துச் சொல்லும் தற்துணிவு, அபார வாத ஆற்றல்,  சமய அறிவு என்பன ஏனைய முஸ்லிம்களையும், மற்ற சமூகத்தினரையும் சிந்திக்கத் தூண்டிற்று.

அக்பரின் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் பல உள்நாட்டுக் கலவரங்களும் கிளர்ச்சிகளும் இடம்பெற்றன. எனினும், விரைவில் இந்தியா மலைத் தொடருக்கு வடக்கே உள்ள முழு இந்திய உப கண்டப் பிரதேசத்தையும் அவர் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.

மகா அக்பர் எனப் பின்னர் அழைக்கப்பட்ட அவரையே முகலாயப் பேரரசின் உண்மையான ஆரம்பகர்த்தா எனச் சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். எனினும், இஸ்லாமிய அறிஞர்களாலும், மக்களாலும் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார். இஸ்லாத்தைப் பின்பற்றவோ, வளர்க்கவோ இவர் முனையவில்லை. மாறாக இஸ்லாமியப் போதனைகளை இந்துக்களின் திருப்திக்காக விட்டுக் கொடுத்தார்.

                  மாமிச உணவுகளை இந்துக்கள் புசிப்பதில்லை என்பதற்காக தானும் ஒதுக்கி வாழ்ந்தார்.

                  முஸ்லிம்கள் இணை கற்பிப்போரை மணக்கக் கூடாது. எனினும், அக்பர் 1562ல் பீகாரிமாலின் இந்து மகளை கலப்புத் திருமணம் செய்து கொண்டார்.

                  தனது வீட்டில் இந்து மத வழக்கங்களையும், சடங்கு சம்பிரதாயங்களையும் பின்பற்றியதோடு, நாட்டு மக்களையும், பின்பற்றச் செய்தார்.

                  அவர் இறுதித் தீர்ப்பு நாள், இறுதித் தீர்ப்பு நாளில் இறந்த உயிர்கள் மீண்டும் எழுதல் போன்றவைகளை மறுத்தார்.

மறுமையை நம்பாத காரணத்தினால் ‘தீனே இலாஹி’ என்ற மதத்தை உருவாக்கி, இஸ்லாத்தை அவமதித்தார். ‘தீன் இலாஹி’யில் புதிதாக இணைந்தவர்கள், பிரதி ஞாயிறு தோறும் வணக்கம் புரிவார்கள். இவர்கள் தம் வணக்கச் சடங்கின் போது, கைகளில் தலைப்பாகை ஏந்தியவர்களாக அரசனின் காலில் விழ வேண்டும். அரசன் அவர்களிடம் தன்னுடைய உருவப்படத்தைக் கொடுப்பார். அக்பர் தன் காலில் விழுந்து வணங்குவதையும், தன் புதிய மதச் சடங்காகவே ஆக்கினார்.

பல விதிகளையும் சடங்குகளையும் இவருடைய ‘தீன் இலாஹி’யில் சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது.

அவை:

                  அரசன் காலில் விழுந்து வணங்க வேண்டும்.

                  பிறந்த நாளில் விருந்தளிக்க வேண்டும்.

                  பிறந்த மாதத்தில் இறைச்சி உண்ணக்கூடாது.

                  இறந்தவரின் உடலை எரிக்கவோ, புதைக்கவோ செய்யலாம்.

                  எரிக்கும்போதோ, புதைக்கும் போதோ தலை கிழக்கு நோக்கி இருக்கவேண்டும்.

                  இறைச்சிக் கடைக்காரர், மீனவர், பறவைகளைப் பிடிப்போர் ஆகியோரின் பாத்திரங்களை பயன்படுத்தக் கூடாது.

இவ்வாறு, பல கோட்பாடுகளை உள்ளடக்கியதாக ‘தீனே இலாஹி’ காணப்பட்டது.

அரசியல், சமூகப் பங்களிப்பு:

அக்பர் மன்னராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதும், உள்நாட்டுக் கலவரங்களையும் கிளர்ச்சிகளையும் அடக்கி, அமைதியை நிலை நாடினார். அவர் கால ஆட்சியில் பல அரசியல், சமூக மாற்றங்கள் ஏற்பட்டன. அவர் மேற்கொண்ட பணிகளை பின்வருமாறு நோக்கலாம்.

                  பாதைகள் பலவற்றை அமைத்து, வர்த்தகத்தை விருத்தி செய்தார்.

                  வரி அறவிடும் முறைகளை முற்றாகச் சீர்திருத்தினார்.

                  முஸ்லிமல்லாதவரை சகிப்புத்தன்மையோடு அனுசரித்து நடந்த அவர், தன் அரச சபையில் விஞ்ஞானம், இலக்கியம், நுண்கலைகள் முதலியவற்றிற்கு முக்கிய இடம் வழங்கி, அவற்றின் வளர்ச்சிக்கு வழிகோலினார்.

                  அடிமைத்தனத்தை இல்லாதொழித்தார்.

                  விதவைகள் உடன் கட்டையேறும் கொடூர வழக்கத்தை தடை செய்தார்.

                  விதவைகள் மறுமணம் செய்ய வழிவகுத்தமை முதலியன அக்பர் செய்த மிக முக்கியமான பணிகளாகும்.

அத்தோடு பனாராஸிலும், பிருந்தாவனத்திலும், இரண்டு அழகிய கோயில்களை அக்பர் அமைத்தார். கோயில் கட்டிக் கொடுத்ததுடன் இவர் இஸ்லாம் தடை செய்த சிலை வணக்கத்தை ஆதரித்தார். அக்பர் காலத்தில் அமைக்கப்பட்ட ஆக்ரா கோட்டையின் ஜஹாங்கீர் மஹாலில் இந்துக்களின் சிற்பக்கலையும் இடம்பெற்றிருந்தது. இவரின் ஆட்சிக் காலத்தில்தான் இந்துஸ்தானி இசை முக்கியத்துவம் பெற்றது. இன்னும், இவர் காலத்தைப் போன்று, ஏனையோர் காலத்தில் இசைக் கலை முக்கியத்துவப்படுத்தப்பட வில்லை.

கல்வி பெறாத பாமரனாக இருந்த போதிலும், அக்பர் தனது அனுபவ புத்தி, கூர்மையான சிந்தனை என்பவற்றின் மூலம், அபார திறமையுடன் ஆட்சி புரிந்தார். அவரது ஆட்சி சுமார் 49 வருடங்கள் நீடித்தது. அவர் 1605இல் தனது 63வது வயதில் காலமானதும், அவரது மூத்த மகனான ஸலீம் என்பவர் ஜஹாங்கீர் என்ற பெயரில் அரசரானார்.

49 வருடங்கள் ஆட்சி செய்த அக்பர், பல்வேறு அரசியல் சமூகப் பங்களிப்புக்களை மேற்கொண்டாலும், அவரது செயற்போக்கு, கொள்கை என்பன கடுமையான கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகின. செய்க் ஸிர்ஹிந்தி பற்றி மௌலானா செய்யித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) குறிப்பிடும்போது, அக்பரின் மறுபக்கத்தையும், அதனை ஸிர்ஹிந்தி எதிர் கொண்ட பாங்கினையும் அவரது நூலில் விரிவாக விளக்கியுள்ளார்.

இன்னும் வளரும் – இன்ஷா அல்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *