அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ் ஸலபி,ரியாதி (M.A.)
இலங்கை ஏகத்துவ மதுரசாக் கல்வி வளர்ச்சியில் ஆழமான பதிவுகளை விட்டுச் சென்றவர்களில் ஒருவர், அஷ்ஷைக் பாசில் எஸ்.எம்.முஸ்தபா மவ்லானா ஜமாலி அவர்கள். என்றும் மறக்காத, மறக்க முடியாத, நான் அதிகம் நன்றிக்கடன் பட்ட ஆசான்களில் இவரும் ஒருவர். எனது எழுத்தாற்றலில் இவருக்குப் பெரும் பங்குண்டு. ஸலபிய்யாவின் துணை அதிபராக இருந்தார். மாணவர்களின் ஆக்கத் திறனை வளர்ப்பதிலும் வாசிப்பார்வத்தை அதிகரிப்பதிலும் பெரும் பங்காற்றினார்.
பள்ளியில் தொழுவிக்கவும் ஜூம்ஆ உரை நிகழ்த்தவும் மட்டும்தான் ஆலிம்களால் முடியும் என்ற அன்றைய மந்த நிலையை மாற்றி, ஏகத்துவ ஆலிம்களால் பாடசாலைப் படிப்பையும் கற்று இரண்டு துறைகளிலும் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்று, பல்கலைக்கழகம் சென்று, ஆலிமாகவே உயர் பதவிகளை வகிக்க முடியும் என்ற சிந்தனையை மதுரசா கல்வியில் புகுத்தி, ஸலபிய்யாக் கலாபீடத்தை ஓர் உயர் நிலைக்குக் கொண்டுவந்தவர்களில் இவர் முக்கிய இடத்தைப் பெறுகிறார்.
இன்று பல்துறைப் பதவியில், ஸலபிய்யாவில் கற்றவர்கள் அமர்வதற்கு அரும் பணியாற்றிய ஒருவர், அஷ்ஷைக் பாசில் எஸ்.எம்.முஸ்தபா மவ்லானா ஜமாலி அவர்கள். இவரது காலத்தில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய பறகஹதெனிய ரபீக் ஆசிரியர் அவரும் ஸலபிய்யாவின் நவீன கல்வியில் முக்கிய பங்களிப்பை செலுத்தியுள்ளார்.
நூல்களை எப்படிப் படிக்க வேண்டும் என்று பக்குவமாக எங்களை ஆர்வப்படுத்தினார் என்பதை, எனக்கு அவரோடு உள்ள ஓர் அனுபவத்தை இங்குப் பதிய ஆசைப்படுகின்றேன்.
எனது எழுத்தாற்றலில் இவரின் பங்கு மிகமுக்கியமானது. இவர் இந்தியாவில் கற்கும் காலத்தில் இவர் இலங்கைக்குச் சுமந்து வந்த முக்கிய நூல்களில் ஒன்று எரிமலை. இந்த அரிய நூல் பிரித்தானிய அரசால் தடைசெய்யப்பட்டது. இந்தியச் சுதந்திரப் புரட்சியாளர்களை அடையாளப்படுத்தி, புதிய புரட்சி செயற்பாட்டாளர்களை விதைக்கும் தன்மைகொண்ட விறுவிறுப்பான நூல் அது.
இந்த அரிய நூலைப் பற்றி ஒரு தடவை வகுப்பில் குறிப்பிட்டார். அதை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் மேலிட்டது. இரவல் பெற முனைந்தேன். தரமறுத்தார். பல தடவைகள் கேட்டேன். தரவே இல்லை.
நான் ஸலபிய்யாவில் 3ம் ஆண்டு படிக்கும் போது, ஒருநாள் என்னை அழைத்து, 5 ரூபாய் முத்திரை வாங்கிக் கொண்டு எனது அறைக்கு வா என்றார். வாங்கி கொண்டு சென்ற போது, இரண்டு வாரத்தில் இந்த நூலை வாசித்துவிட்டு, எந்த சேதமும் இன்றி திருப்பி ஒப்படைப்பேன் என்று கடிதம் எழுதி, முத்திரைக்கு மேல் கையொப்பமிட்டுத்தருமாறு கேட்டார். அவ்வாறு எழுதிக் கொடுத்தேன். நூலைத் தந்தார். அது மிகவும் பழைமையான, தாள்கள் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டது. அதைப் பாதுகாப்பதும் சேதமின்றி வாசிப்பதும் மிகவும் சவாலானது. எனினும், இரண்டு வாரங்களில் அதை நேசித்துப் பாதுகாத்து, வாசித்து, குறிப்பு எடுத்து கொண்டு, அவர் தந்ததுபோல் திரும்ப ஒப்படைத்தேன். வகுப்பில் வந்து அந்த நூலில் உள்ள சில விடயங்கள் பற்றி கேள்விகள் கேட்டார். பதில் சொன்னேன்.
அந்த நூல் காலனித்துவ பிரித்தானியாவுக்கு எதிரான இந்திய சுதந்திரப் போராட்டம் தொடர்பானது. அதில் ஒரு பகுதி இந்திய முஸ்லிம்களின் சுதந்திரத்திற்கான பெரும் பங்களிப்பைப் பற்றி மிகத் தெளிவாக பேசுகிறது. அந்தக் குறிப்புக்கள் சில, எனது பங்களிப்பால் உணர்வு வார இதழில் தொடர்ந்து வெளிவந்தது.
ஒரு நூலின் பெறுமானம், அந்த நூலை அவர் பாதுகாத்த விதம், நூல்களை இரவல் கொடுத்த பாங்கு, வாசித்துப் பெற்ற பயனை அவர் பரிசீலித்துப் பார்த்த பரீட்சை முறைமை அனைத்தும் எனக்கு இன்று வரை நூலின் மேல் பெருங் காதலை ஏற்படுத்தியது.
இரவல் பெற்ற முதல் நூலை நான் ஒப்படைத்த விதம் அவருக்கு என்மீது அன்பை அதிகரித்தது. எனக்கு அவர் மீது அன்பையும் வாசிப்பில் ஆர்வத்தையும் அதிகரித்தது. அடுத்து எனக்கு மறுமலர்ச்சி ஆசிரியர், நாவலர் யூஸூப் அவர்கள் எழுதிய உமர் முக்தர் என்ற நாவலை அதே இரவல் முறையில் தந்தார். அதையும் அவ்வாறு இரண்டு வாரங்களில் வாசித்துவிட்டு, திரும்ப ஒப்படைத்தேன். அதன் பின்னர் நான் மதுரசா கல்வியைப் பூரணப்படுத்திய பின்னரும் பெறுமதியான நாவல்கள் சிலதை தந்து வாசிக்கத் தூண்டினார். அதற்காக முக்கிய பல நூல்களை மருத முனையிலிருந்து பறகஹதெனியவிற்கு சுமந்து வந்து தந்தார். தோப்பில் முகம்மது மீரானின் இஸ்லாமிய விரோதப் போக்கு நாவல்களைக் கண்டித்து எழுதுமாறும் விமர்சிக்குமாறும் எனக்குக் கடிதங்கள் எழுதினார். அவரது அந்த வேண்டுகோளில் தான் ”இஸ்லாமியப் பார்வைக்குள் படைப்பிலக்கியம்” என்ற எனது கட்டுரை இந்திய – இலங்கைப் பத்திரிகைகளில் வெளிவந்தது.
அவர் இறையடி சேரும் வரை எனது எழுத்தாற்றலில் மிக அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தினார். ”எழுதிப் பழகிய கை பேனாவைக் கைவிடுவதில்லை” என்று அடிக்கடி சொல்லும் அவர், தனது மரணம் வரை நூல்கள் கொள்வனவு செய்து கற்பதிலும் எழுதுவதிலும் அவர் ஈடுபட்டார்.
நான் திருமணமான பின்னர், ஒரு தடவை எனது வீட்டிற்கு வந்தார். எனது புத்தகம் கபட்டில் ஒரு புதிய அரபுப் புத்தகத்தைக் கண்டார். அதில் பெற்றோருக்காக அவர்கள் தவறிவிட்ட தொழுகைகளைப் பிள்ளைகள் தொழலாமா? என்ற மஸ்அலா விவாதிக்கப்பட்டிருந்தது. இது புதிய விடயமாக உள்ளது. இதை நான் வாசிக்க வேண்டும் என்று நூலை எடுத்துச் சென்றார். வயது முதிர்ந்த காலத்திலும் மஸாயில்களை ஆராய்வதில் ஆர்வமாக இருந்தார். நான் சவுதியிலிருந்த பொழுது, ஒரு தடவை என்னிடம் முக்கிய சில கிதாபுகளை வாங்கி அனுப்புமாறு வேண்டினார். அவற்றை நான் வாங்கி அனுப்ப முன்னர் எனது ஆசான் இறையடி சேர்ந்துவிட்டார்கள். என்னால் அவரது ஜனாஸாவில் கூட கலந்து கொள்ளமுடியவில்லை.
அறிவுத் தாகமும் ஆன்மிக செழுமையும் நிறைந்த மவ்லானாவை அல்லாஹ் பொருந்திக் கொள்ளவேண்டும் என்று நான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன்.
நீண்ட காலம் அரச பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றி, அதிலிருந்து ஓய்வு பெற்று, தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யாவின் ஆசிரியர் குழாமில் இணைந்து, மிகுந்த மரியாதையும் அன்பும் மிக்க ஆசானாகத் திகழ்ந்தார். எந்த சுயநல, வஞ்சக உணர்வும் அற்றவர். அனைவராலும் மவ்லானா என்று செல்லமாக அழைக்கப்பட்டு, நேசிக்கப்பட்ட ஒருவராகத் திகழ்ந்தார்.
பறகஹதெனிய மக்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டார். 01-06-1981ல் ஸலபிய்யாவில் இணைந்து, பிரதி அதிபராகக் கடமையாற்றி, ஸலபிய்யாவை நவீனமயப்படுத்தி, மார்க்கக் கல்வியோடு உலகக் கல்வியையும் இணைத்துக் கற்பித்து, புகழ்பெற்ற கலாபீடமாக அதைத் தரம் உயர்த்த அயராது உழைத்து 01.01.1996-ல் ஓய்வு பெற்றார். 1984 முதல் 1996 வரை உண்மை உதயத்தின் ஆசிரியராகக் கடமையாற்றினார்.
பிக்ஹ் – சட்டக்கலை, சீறா – வரலாறு போன்ற பாடங்களை அவரிடம் கற்றுள்ளேன். ஹதீஸ் பாடத்தையும் விரும்பிக் கற்பிப்பார். வயதான காலத்திலும் கரும் பலகையில் வளையாமல் அழகாகவும் நேராகவும், நேர்த்தியாகவும் எழுதுவார். அவர் எனக்கு எழுதிய கடிதங்களையும் அவரது சில பெறுமதியான ஆக்கங்களின் கையெழுத்துப் பிரதிகளையும் இன்றுவரை பாதுகாத்துவருகின்றேன். அவர், ஹதீஸ் மேதை அறிஞர் முகம்மது நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்) அவர்கள் மீது அதிக அன்பு கொண்டிருந்தார். அவரது அஹ்காமுல் ஜனாயிஸ் என்ற நூலை எளிய தமிழில் மொழிபெயர்த்தார். அது அச்சுவாகனம் ஏறியது. அதே போல் ஹிஜாபுல் மர்அத்தில் முஸ்லிமாவையும் – (முஸ்லிம் மாதர் திரை) எளிய தமிழில் மொழிபெயர்த்தார். துரதிஸ்டவசமாக அது வெளிவரவில்லை. அதை வெளியிடுவதற்காகப் பல முயற்சிகள் செய்தார். இது வரை அது வெளிவரவில்லை என்பது துயரம் நிறைந்த நிகழ்வாகவே தொடர்கிறது. அவர் யாரிடமாவது அந்த மொழிபெயர்ப்பைத் தந்திருந்தால், அதை என்னிடம் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
வெள்ளிக்கிழமை துஆக்கள் அங்கீகரிக்கப்படும் சொற்ப நேரம் உண்டு என்பதால், அந்நாளில் அதிக ஆன்மிகச் செயற்பாடுகளில் ஈடுபடுவார். அமல்களில் அதிக ஆர்வம் காட்டுவார். தொழுகையில் மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்தார். தஹஜ்ஜூத் கூட தவறவிடமாட்டார். பள்ளியைப் பெருக்கி, துப்பரவு பண்ணிய ஒரு பெண்மணிக்காக, நபி (ஸல்) அவர்கள் பிரத்தியேகப் பிரார்த்தனை செய்தார்கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது காலத்தில் மதீனாவைச் சேர்ந்த ஒரு கறுப்பின பெண் அவ்வப்போது மஸ்ஜிதுந் நபவியை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டுட்டு வந்தாள். அந்தப் பெண்ணுடைய பெயர் உம்மு மிஹ்ஜன். ஒரு நாள் நபியவர்கள் அந்தப் பெண்ணைக் காணாததனால் அவரைப் பற்றி விசாரித்தார்கள். “மஸ்ஜிதுன் நபவியை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்கின்ற அந்தப் பெண்ணைக் காணவில்லையே?” என ஸஹாபாக்களிடம் வினவியபோது “சில நாட்களுக்கு முன் அந்தப் பெண் மரணித்து விட்டாள்” என அவர்கள் பதிலளித்தார்கள். அந்த செய்தியைக் கேட்டு கவலையடைந்த நபிகளார் ஆத்திரப்பட்டார்கள். “ஏன் அந்தப் பெண்ணுடைய மரணச் செய்தியை என்னிடம் அறிவிக்கவில்லை?” என கடிந்து கொண்டார்கள். பின்னர் “அந்தப் பெண்ணின் கப்ரை எனக்குக் காண்பியுங்கள்” எனக் கூறிய நபியவர்கள் அந்தப் பெண்ணுக்காக விஷேடமாக ஜனாஸா தொழுகையை நிறைவேற்றினார்கள். அந்த சம்பவம் அவரது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருந்ததை அறிய முடிந்தது. தனக்கும் அந்த அந்தஸ்துக் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் யாருமில்லாத நேரம் பார்த்து பள்ளியை துப்பரவு செய்வார். அதைக் கண்டு நாம் உதவ முனைந்தால், அதை அங்கீகரிக்கமாட்டார். நன்மை வேண்டுமென்றால், வேறு நேரத்தில் செய்து கொள்ளுமாறும், தனது நற்காரியத்தில் இடையூறு செய்ய வேண்டாம் என்றும் கண்டிப்பார்.
மாணவர்கள் அவரது ஆக்கங்களைப் பிரதி பண்ணிக் கொடுத்தால் அதற்குப் பிரதி உபகாரம் செய்வார். இரகசிய தர்மங்கள் செய்வார். நட்பை எப்போதும் பேணுவார். நாரம் மலையில் அவருக்கு ஒரு நண்பர் இருந்தார். பறகஹதெனிய வரும் ஒவ்வொரு தடவையும் அவரை சந்திக்கச் செல்வார். ஓய்வு பெற்ற பின்னர், மருத முனையிலிருந்து பஹகஹதெனிய வந்து என்னையும் அழைத்துக் கொண்டு, நண்பரைச் சந்திக்க அங்கு செல்வார். பறகஹதெனிய வரும் போது, புத்தகக் கடையில் புதிய நூலைக் கண்டால், உடனே வாங்கிவிடுவார். ஆக்கத் திறனை எங்களில் வளர்ச்சியுறச் செய்த, பன்முக ஆளுமையுள்ள அந்த ஆசான் என்றும் மறக்க முடியாதவர்.
தமிழ் உலக தவ்ஹீத் எழுச்சியில் அவரின் பணியை மதிப்பீட்டுக்கு உட்படுத்தி, புதிய தலைமுறைக்கு அறிமுகப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு அவரது மாணவர்களுக்கு உண்டு என்று நான் கருதுகின்றேன்.
இன்ஷா அல்லாஹ் அவரது மகத்தான ஆக்கப் பணிகளை விவரித்து, விரைவில் ஓர் ஆக்கம் எழுத எண்ணியுள்ளேன்.
அல்லாஹ், அவரது பாவங்களை மன்னித்து, அவரது நற்பணிகளை அங்கீகரித்து, அவருக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர் சுவனப் பூங்காவை வழங்கி அருள் புரிவானாக என்று நாம் அனைவரும் அவருக்காகப் பிரார்த்திப்போம்.
(2004ம் ஆண்டு, டிசம்பர் மாதம் சுனாமி தாக்கிய போது, நான் நிவாரணப் பணிக்காக மருத முனை சென்ற வேளை, அவரது கலாப வனத்தில் வைத்து அவரை சந்தித்து நீண்ட நேரம் உரையாடினேன். அத்தோடு, புகைப்படமும் எடுத்துக் கொண்டேன்.)