முஃமின்களிடம் இருக்க வேண்டிய பண்புகளில் மிக முக்கியமானது
ஒற்றுமை. ஒரு முஃமின் தனது மற்ற சகோதரனுடன் மூன்று நாளைக்கு மேல் பேசாமல் இருப்பதை இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது. விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், கோபத்தை அடக்கிக் கொள்ளல் போன்ற பண்புகளை சுவனவாதிகளின் பண்பாக இஸ்லாம் அடையாளப்படுத்தி உள்ளது.
தான் விரும்பும் ஒன்றை தனது சகோதரனுக்கும் விரும்பாதவரை உங்களில் ஒருவர் உண்மையான முஃமினாக முடியாது என்ற அளவுக்கு சகோதரத்துவத்தைப் பேணுவதை நபிகளார் (ஸல்) அவர்கள் வலியுறுத்திப் பேசியுள்ளார்கள்.
முஃமின்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ اِخْوَةٌ فَاَصْلِحُوْا بَيْنَ اَخَوَيْكُمْوَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ
நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் நல்லினக்கத்தை ஏற்படுத்துங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். (அல்குர்ஆன் : 49:10)
இறை நிராகரிப்பாளர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:
تَحْسَبُهُمْ جَمِيْعًا وَّقُلُوْبُهُمْ شَتّٰى ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْقِلُوْنَ
அவர்கள் யாவரும் ஒன்று பட்டிருப்பதாக நீர் எண்ணுகிறீர்; (ஆனால்) அவர்களுடைய இதயங்கள், சிதறிக் கிடக்கின்றன – இதற்குக் காரணம்: மெய்யாகவே அவர்கள் அறிவற்ற சமூகத்தார் என்பதுதான். (அல்குர்ஆன் : 59:14)
இறை நிராகரிப்பாளர்கள் ஈமானுக்கு எதிராக ஒன்று திறல்வதில் தோழமை கொண்டாலும் அவர்கள் தங்களுக்குள் உண்மையில் பல முரண்பாடுகளைக் கொண்டுள்ளனர். அவர்களின் இதயங்கள் சிதறிக் கிடப்பதாக படைப்பாளன் கூறுகின்றான்.
நாம் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய பிரார்த்தனை :
وَالَّذِيْنَ جَآءُوْ مِنْ بَعْدِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَـنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِىْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ
அவர்களுக்குப்பின் வந்தோர் (முஹாஜிர்கள், அன்ஸாரிகளுக்கு பின்வந்தோர்) அவர்கள் (நாம்) “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக!
மேலும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஏற்படுத்திவிடாதே!
எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.
(அல்குர்ஆன் : 59:10)
அன்பார்ந்த ஈமானிய உறவுகளே..! மேற்படி பிரார்த்தனை செய்ய வேண்டிய நாம் எப்படி நமக்குள் பகைமை பாராட்டலாம்..? உள்ளத்தால் ஒன்றுபடுவது தான் ஈமானியப் பண்பே ஒழிய, உலக இலாபங்களை அடைந்து கொள்ள, கூடிக்கலைவதென்பது முஃமின்களின் பண்பில்லை.
வாருங்கள் சொந்த விருப்பு, வெறுப்புக்களுக்கு அப்பால்
அல் குர்ஆன், அஸ் ஸுன்னாவில் ஒன்றுபடுவோம்.
நட்புடன்:
அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ
இலங்கை
10/08/2020