Featured Posts

அர்ஷின்நிழல் நோக்கி… அர்ஷின் கீழ் நிழல் பெறும் ஏழு கூட்டத்தார் பற்றிய நடைமுறை வாசிப்பு

நூலாய்வுரை – Ash-Sheik M.A.Hafeel Salafi,Riyadi (M.A)

அஷ்ஷைக் எம்.ஐ.எம். அன்வர் (ஸலபி, மதனி) அவர்கள் எழுதிய

“அர்ஷின்நிழல் நோக்கி… அர்ஷின் கீழ் நிழல் பெறும் ஏழு கூட்டத்தார் பற்றிய நடைமுறை வாசிப்பு” என்ற நூல் 14-12-2024 அன்று அந்நூர் கேட்போர் கூடம், ஓட்டமாவாடி-03 இல் இஸ்லாமிய ஆய்வுக்கான இப்னு குதாமா நிறுவகத்தினால் வெளியிடப்பட்டது. இதன் போது Ash-Sheik M.A.Hafeel Salafi,Riyadi (M.A) அவர்களால் நூல் மதிப்பாய்வு செய்யப்பட்டது. அதன் தொகுப்பு இங்கு எழுத்து வடிவில் …

الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد وسائر إخوانه المرسلين، وعلى آله وصحبه ومن دعا بدعوته وتمسك بسنته، وجاهد في سبيل الله إلى يوم الدين

அர்ஷின் நிழல் நோக்கி… அர்ஷின் கீழ் நிழல் பெறும் ஏழு கூட்டத்தார் பற்றிய நடைமுறை வாசிப்பு என்ற இந்த நூல் வெளியீட்டில் கலந்து, சிறப்பிக்க வருகை தந்துள்ள பெருந்தகைகளான உங்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருளும் சாந்தியும் நித்தமும் நின்று நிலவட்டுமாக…!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ…

முஹம்மத் (ஸல்) அவர்களின் ஒரு பொன்மொழியைத் தேர்வு செய்து, அதனை ஒரு தனி நூலாக வெளிக் கொண்டுவந்துள்ளார், அஷ்ஷைக் எம்.ஐ.எம். அன்வர் ஸலபி.

இவர், ஸலபிய்யாவின் பட்டதாரிகளில் ஒருவர். அங்கு கற்கும் போதே வாசிப்பிலும் எழுத்துத்தாக்கத்திலும் அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். உண்மை உதயம், எங்கள் தேசம், விடிவெள்ளி ஆகியவற்றில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்வாரி மாணவராக இவர் இணைந்திருந்த போது, சவூதி அரேபியா, மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்குப் புலமைப் பரிசில் பெற்றுச் சென்று, ஹதீஸ் துறையில் தனது இளங்கலைமாணிப் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.

லிசானுல் அரப் என்ற online அரபு மொழிக் கற்பித்தல் செயற்பாட்டின் மூலம் நூற்றுக்கும் அதிகமான மாணவர்களிடம் அரபு மொழிப் பரிட்சியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி வருகிறார். 

இஸ்லாமிய ஆய்வுக்கான இப்னு குதாமா நிறுவகத்தின் பணிப்பாளராகச் செயற்படும் இவர், பல சமூக சேவைச் செயற்பாடுகளையும் மேற் கொண்டுள்ளார். அவ்வப்போது சமூகம் எதிர்கொள்ளும் அரசியல், ஆன்மிகப் பிரச்சினைகள் தொடர்பாக ஜூம்ஆ சொற்பொழிவுகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார். 

இஸ்லாமியப் பிரசாரப் பணியில் ஆர்வமும் ஈடுபாடும் உடைய இவரின் கன்னி முயற்சியாக இந்த நூல் வெளிவருகிறது.

இது, அறிவு சார்ந்த ஆன்மிக வாழ்வியல் ஒழுங்கையும்; ஒழுக்க நெறியைக் கடைப்பிடிப்பதனால் ஏற்படும் இகபர இன்பங்கள் பற்றியும் வலியுறுத்திப் பேசுகிறது.

மனித வாழ்வு ஒழுக்க விழுமியத்தால் மேம்பட வேண்டும் என்பதை அல்குர்ஆன் – அல் ஹதீஸ் நிழலில் தலைப்புகளுக்கு ஏற்ற ஆதரவான சில அறிஞர்கள் கருத்துக்களையும் ஒன்றிணைத்து காலத்துக்கு ஏற்ற வகையில் சமகாலப் பிரச்சினைகளான 

* முஸ்லிம் சமூகத்தில் நிலவும் தலைமைத்துவ வெற்றிடம்.

* போதைப் பொருள் பாவனை,

* பாலியல் துஷ்பிரயோகம், 

* தற்கொலை முயற்சி, 

* மன அழுத்தம், 

* வறுமைப் பிரச்சினை

* ஆன்மிக வறுமை எனப் பல சமூகப் பிரச்சினைகள் பற்றி தற்கால மொழி நடையில் எளிய தமிழில, ஒரு சாதாரண வாசகனும் புரியும் வகையில் நூலாசிரியர் விடயங்களைப் பேசுகின்றார்.

* ஒரு மவ்லவித்துமான எழுத்து நடையிலிருந்து இந்த நூல் முற்றிலும் வேறுபட்டுச் செல்கிறது. 

* இதன் மொழி நடை வரவேற்றத் தக்கதாக உள்ளது.

* நூலில் விடயங்களை முன்வைக்கும் நடைப் பாங்கு முன்னேற்றகரமானதாகக் காணப்படுகிறது. 

* ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த எழுத்துப் பிழைகளே காணப்படுகின்றன.

* நிறுத்தக்குறிகள் பெருமளவு சரியாக உள்ளன. சிற்சில இடங்களைத் தவிர.

* எழுத்துப் பிழைகள் வராமல், சரவை பார்ப்பதில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. 

* இலக்கண ஒழுங்குகள் அதிகம் கவனிக்கப்பட்டுள்ளன.

* பல்வேறு இயக்கச் சிந்தனை முகாம்களின் எழுத்துக்களை வாசித்துள்ளார். அதன் தாக்கம் நூலில் வெளிப்படுகிறது. முன்னுரையில் அது பற்றிப் பேசியுள்ளார்.

* நூலாசிரியரின் மொழி நடை பழைமைத்துவ சிந்தனை மரபிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, சுவாரஸ்ய வாசிப்பார்வத்தை ஏற்படுத்துமாப் போல் உள்ளது. இவ்வாறு மொழி நடை காணப்படும் போது ரசித்து வாசிப்பார்கள்.

* இதை மற்றவர்களும் பயன்படுத்ததலாம் என்பது எனது கருத்து.

* எழுத்தர் பின்பற்ற வேண்டிய சில நெறி முறைகள் உள்ளன. அந்த நெறி முறைகளைப் பின்பற்றினால், எழுத்துச் சீராகவும் கருத்தை வெளிப்படுத்தும் பாங்கு தெளிவாகவும் இருக்கும். 

நூலின் சாரம்சம் பற்றிய கருத்துக்கள் மதிப்புரை, அணிந்துரை, முன்னுரை ஆகியவைகளில் பொதுவாகப் பேசப்பட்டுள்ளன. Overall ஆக இது ஒழுக்க விழுமியம் பற்றிப் பேசும் ஒரு நூல் என்பதை வாசகனால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். 

இதுவரை தமிழில் குறிப்பாக இலங்கையில் தனி ஒரு ஹதீஸை மையப் பொருளாகக் கொண்டு நூல் வெளிவந்ததாக அறிய முடியவில்லை. அந்த வகையில் ஒழுக்கப் பெறுமானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் 7 முக்கிய அம்சங்கள் பொருந்திய பின்வரும் ஹதீஸை விளக்கி, அதனை ஒரு தனி நூலாக எழுதி வெளியிட்டுள்ளார்.

سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله، إمام عادل، وشاب نشأ في عبادة الله، ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه، ورجلان تحابا في الله اجتمعا على ذلك وافترقا عليه، ورجل ذكر الله خالياً ففاضت عيناه، ورجل دعته امرأة ذات منصب وجمال فقال: إني أخاف الله رب العالمين، ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ‘ رواه البخاري

அர்ஷின் நிழல் பெறுவோர் பற்றிப் பேசும் இந்த நபிமொழியை கருப் பொருளாகக் கொண்டு பின்வரும் தலைப்புகளில் 7 இயல்களில் விரிவாக ஆராய்ந்துள்ளார்.

01.நீதியான தலைவன் 

02. இளமையை இபாதத்தில் கழித்த இளைஞன் 

03. மஸ்ஜிதுடன் இதயப்பூர்வமாக உறவு வைத்திருந்த மனிதன் 

04. அல்லாஹ்வுக்காக இணைந்து பிரிந்த நண்பர்கள் 

05. கற்பொழுக்கம் பேணிய மனிதன் 

06. உளத்தூய்மையுடன் தர்மம் செய்தவன் 

07. அல்லாஹ்வை தனிமையில் சிந்தித்து கண்ணீர் சிந்தியவன் 

‘தனிநபர்களிடம் காணப்படும் பிழையான பண்புகளைக் களைந்து, சரியான பண்பாடுகளின்பால் அவர்களை வழிகாட்டி, மானுடப் பெறுமானங்களை உறுதிப்படுத்தும் போதுதான் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கலாம். இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் இதற்கு அடித்தளமிடுகின்றன. தனிமனிதனின் சுய சீர்திருத்தம், குடும்ப மேம்பாடு, சமூக முன்னேற்றம், நாட்டின் வளர்ச்சி, பூகோள அபிவிருத்தி என அனைத்திலும் ஒரு மனிதனை, குறிப்பாக ஒரு முஸ்லிமை இயக்குவிக்கும் ஆற்றலை இறைவிசுவாசமும் இறைவழிபாடும் பெற்றுள்ளன. ஒரு தனிமனிதனை தனது சமூகத்துக்கும் தனது தேசத்துக்கும் முன்மாதிரிப் பிரஜையாக மாற்றுவதில் பின்;னணியாக ஈமான் தொழிற்படுவது போன்று, இபாதத்களும் உந்து சக்தியாகத் திகழ்கின்றன’ என்று மதிப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘பணிகளில் சிறந்தது இறைபணியே. அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மக்கள் மன்றில் சேர்க்க வேண்டுமெனும் உன்னத நோக்கத்தோடு, இந்நூலை அவர் எழுதியிருக்கிறார். மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் கீழ் நிழல் பெற நாம் எவ்வாறு எம்மைத் தயார்படுத்தலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களையும்; அதில் ஏற்படும் சவால்களையும் நவீன காலத்தில் எவ்வாறு நாம் அவற்றை எதிர்கொள்ளலாம் என்பதற்கான தீர்வுகளையும்; நண்பர் அருமையாக விளக்கியி ருக்கிறார். அல்குர்ஆன், அஸ்ஸூன்னா ஆதாரங்கள் மற்றும் நடைமுறை ரீதியான பல பயனுள்ள தகவல்களோடு விளக்கியிருப்பதாக அணிந்துரையில் குறிப்பிடுகின்றார்.

‘…உண்மையில் இந்நூல், குறித்த ஹதீஸ் தொடர்பில் ஷரீஆவின் நிலைக்களனில் அமைந்த முழு அளவிலான தெளிவுரையோ, அல்லது ஓர் ஆய்வுத் தொகுப்போ அல்ல. மாறாக, குறித்த ஹதீஸில் தெளிவுபடுத்தப்பட்டுள்ள ஏழு கூட்டத்தார் பற்றிய ஒரு நடைமுறை வாசிப்பாகவே அமைந்துள்ளது. இதற்காக அல்குர்ஆன், ஸ§ன்னா ஆகியவற்றிலிருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளன…’ என்று முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். 

மேலும்,

‘…பல்வேறு வகையான அறிஞர்களின் கருத்துக்களும் சிந்தனைகளும் நான்வாசித்து, கேட்டறிந்துகொண்ட தகவல்களுமே இந்நூலை எழுதுவதற்கு, துணையாக நின்றன. தவிர, இந்நூலில் உள்ள தலைப்புக்களில் அவ்வப்போதுகுத்பா உரைகளும் நிகழ்த்தியுள்ளேன். அவற்றை எழுத்துருவில் கொண்டு வர முயற்சித்தும் உள்ளேன். எனது எழுத்துக்களில் தவறுகள் இருக்கலாம், அல்லது எனது சிந்தனைகளில் குறைகள் இருக்கலாம். எவரேனும் பெருமனதுடன் சுட்டிக்காட்டினால் அதனை திறந்தமனதுடன்ஷ திருத்திக்கொள்கின்றேன்…’ என்று குறிப்பிடுவதன் மூலம் தனது பணிவுப் பண்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

புதிய கண்ணோட்டத்தில் காலத்திற்குத் தேவையான தலைப்புகளில் பொருத்தமான அல்குர்ஆன் வசனங்களையும், ஹதீஸையும் தேடி எடுத்து, அர்ஷின் கீழ் நிழல் பெறுவோர் என்ற கட்டமைப்புக்குக் கீழ் கொண்டு வந்து பல புதிய விடயங்களை நவீன கண்ணோக்கில் விளக்கப்படுத்தியுள்ளார். இதற்கு முன்னர் இலங்கைச் சூழலில் இவ்வாறான நோக்கில் விடயங்களைப் பேசுகின்ற நூல்கள் போதுமான அளவுக்கு வெளிவந்திருக்கவில்லை என்ற வெற்றிடத்தை இதன் மூலம் நிறைவேற்ற எத்தினித்துள்ளார்.

இன்று நம்மைச் சூழப் பல மாற்றங்கள் வேகமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒழுக்கப் பிரச்சினை, திருமணம், ஒரு பால் திருமணம் இந்த மாதிரியான பல்வேறு விஷயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

அந்தவகையில், நவீன வாழ்வியல் முறையையும் மாற்றங்களையும் கவனத்தில் கொண்டு, இஸ்லாமியப் பின்னணியில் ஒழுக்க நெறி சார்ந்த வாழ்வியல் ஒழுங்கை விளக்கப்படுத்துகிறது இந்த நூல்.

ஒழுக்க நெறி தான் இதனுடைய சாரம்சமாகவும் கருப்பொருளாகவும் காணப்படுகிறது.

* தனி மனித ஒழுக்கம்

* சமூக ஒழுக்கம் 

* அரசியல் ஒழுக்கம் 

* ஆன்மீக ஈடற்றத்திற்கான முடிவான, இறுதியான ஒழுக்கம் பற்றியும் மறுமை விமோசன அடைவைப் பெற்றுக் கொள்வதற்கான ஒழுக்க நெறிகள் மிக அவசியம் என்பதையும் அர்ஷின் நிழல் நோக்கி… என்ற நூல் ஆழமாக வலியுறுத்துகிறது. 

தலைமைத்துவம்

தற்கால முஸ்லிம் உலகில் தலைமைத்துவம் என்பது சர்ச்சைக்குரிய விவகாரமாக அமைந்துள்ளது. உலகளவிலான தலைமைத்துவத்திலிருந்து உள்வீட்டுத் தலைமைத்துவம் வரை இந்நெருக்கடி தொடர்கிறது. எனவேதான், இஸ்லாத்தில் தலைமைத்துவம் குறித்தான நிலைப்பாடு பற்றி முதல் பகுதியில் ஆராயப்பட்டுள்ளது. 

இளமைப் பருவம்

மனித வாழ்வில் மிக முக்கியமான பருவமாகக் கருதப்படும் இளமைப் பருவம் பற்றி இரண்டாம் பகுதி பேசுகிறது. இளைஞர்களை நெறிப்படுத்தாத சமூகம் வெற்றி பெற முடியாது என்பதை அழுத்தமாக முன்வைக்கிறார். அதற்கான சில ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளன.

மஸ்ஜித் பெறும் முக்கியத்துவம் 

ஒரு முஸ்லிமின் வாழ்வில் மஸ்ஜித் பெறும் முக்கியத்துவம் அளப்பெரியது. ஒரு முஸ்லிம் தனது வாழ்வை மஸ்ஜிதோடு முழு அளவில் தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கிறது. அதுவே மஸ்ஜித் மைய மனிதர்களை உருவாக்கத் துணைபுரியும் என இஸ்லாம் கருதுகிறது. அவ்வகையில், மஸ்ஜிதுடன் இதயப்பூர்வமாகத் தொடர்புபட்டவன் என்ற தலைப்பில் மூன்றாம் பகுதியில் அதற்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

நட்பு 

நட்பு என்பது ஒருவரது வாழ்வில் மிகவும் முக்கியமானதாகும். வாழ்வில் நம்பிக்கை, பாதுகாப்பிற்கு நட்பு அவசியமாகின்றது.

ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய வாழ்க்கையில் நம்பகமான ஆலோசகர் தேவைப்படுகிறார் அதற்கும் நட்பு முக்கியமாகும். முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு என்ற குறளில் வள்ளுவர் நட்பு பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாம் இதை விட விரிந்த நோக்கில் நட்புப் பற்றிப் பேசியுள்ளதை இந்த இயல் ஆராய்கிறது.

கற்பொழுக்கத்தைப் பேணும் வழிகள் 

கற்பொழுக்கத்தைப் பாதுகாக்கும் வகையில் இஸ்லாத்தின் போதனைகள் அமைந்துள்ளமை பற்றி ஐந்தாம் பகுதியில் விளக்கியுள்ளார்.

தர்மமும் இறை நினைவும் 

ஆறாம் மற்றும் ஏழாம் பகுதிகள் இறை பாதையில் தர்மம் புரிதல் தொடர்பிலும் இறை நினைவு, தியானம் பற்றியும் ஆராய்ந்துள்ளார்.

மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் விறுவிறுப்பாகவும் வாசிப்பில் சடைவு நிலையின்றியும் இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரணில்லாதவாறும் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

அறிவு சார்ந்த ஈடேற்றத்திற்கு வாசிப்பு வழிவகுக்கும். விளங்கி வாசிக்கின்ற ஒரு சமுதாயமாக எம் சமுதாயம் மாற வேண்டும். 

வாசிப்பை சுவாசிப்பாகவும் அதன் மீதான விசாலமான நேசிப்பும் சிந்தித்தல் எனும் உணர்வைத் தூண்டும் வகையிலும் வெளிவரும் இது போன்ற நூல்களை நாம் வரவேற்க வேண்டும். 

வாசிப்பு மிக முக்கியமானது. அது, எம் சமுதாயத்தில் ஒரு மந்த நிலையில் தான் காணப்படுகின்றது. அதற்கு இலங்கைச் சமூகத்தின் கட்டமைப்பு குறைநிலைத் தன்மை நியதிகளுடன் காணப்படுவதும் ஒரு காரணமாக இருக்கின்றது என்பதை அவதானிக்க முடிகின்றது.

அனைத்து நல்ல நூல்களுக்கும் ஆதரவளிப்பதும் பணம் கொடுத்து வாங்கி வாசிப்பதும் நூல்களை வரவேற்பதும் அதற்கான பங்களிப்பை நல்குவதும் மிக அவசியம்.

இன்று பொது வெளியில், வெளிப்படையாகப் பேசப்பட வேண்டிய, முக்கியமாக இளைஞர்கள் மத்தியில் பகிரப்பட வேண்டிய, தற்காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தைத் தெரிவு செய்து, இந்த ஹதீஸ் முன்வைக்கும் கருத்தாக்கத்தை முடிந்தவரையில் அளிக்கை செய்துள்ள நூலாசிரியிர் சகோதரர் அன்வர் அவர்களின் முயற்சி பயன் உள்ளதும் பாராட்டத்தக்கதுமாகும் என்று கூறி, வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து, நிறைவு செய்கின்றேன். வஸ்ஸலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *