Featured Posts

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் – 2.

அம்மா வீட்டை விட்டுப்போன இரண்டாவது வாரத்தில் அப்பா புதிய மனைவியை அழைத்து வந்து வீட்டில் குடும்பம் நடத்தத் தொடங்கிவிட்டார். அப்போது நான் நான்காம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். உணணவுக்காக மேல் ஜாதி இனத்தைச் சார்ந்த தேவர்களின் வீட்டு மனையை மிதிப்பதற்குக்கூட எங்களுக்கு அனுமதியில்லை. ஏனென்றால் நான் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவன்.

பசி பொறுக்க முடியாமல் நானும் எனது பாட்டியுமாக[அப்பாவின் அம்மா] முஸ்லிம்கள் வீட்டில் ஏதாவது திருமணம் மற்றும் சடங்குகள் நடந்தால் அங்கு செல்வோம். அவர்கள் சாப்பிட்டுவிட்டு வெளியே வீசுகின்ற அந்த எச்சில் மாமிசத்திற்காக நாங்கள் காத்து நிற்போம். இந்த எச்சிலை சாப்பிடுவதற்காக காகமும் நாயும் எங்களது நண்பர்களாக அங்கே நின்று கொண்டிருக்கும். எச்சில் இலையை அப்படியே எடுத்து அவர்கள் கடித்துத் துப்பின எலும்பில் ஏதாவது மாமிச துண்டுகள் இருக்கிறதா என்று ஆவலோடு எடுத்து, இருப்பதை சந்தோஷமாக சாப்பிட்டுவிட்டு மீதியை அப்படியே எடுத்து எனது பாட்டியின் மடியில் கட்டி சந்தோஷமாக வீட்டிற்கு எடுத்துச் செல்வோம்.

அன்று மிகவும் சந்தோமான நாளாக இருக்கும். இரவு சப்பாடு கிடைத்துவிட்டதே என்ற சந்தோஷம் தான். எச்சில் இல்லாத நல்ல சாப்பாடு கிடைக்காதா? என்று நாங்கள் ஆவலுடன் இருந்த நாட்கள் பலப்பல.

விடிந்தவுடன் நானும்,எனது பாட்டியும் சாப்பாட்டிற்காக பல இல்லங்கள் ஏறி இறங்குவோம். அதிகமாக முஸ்லிம் வீடுகளில் இருந்துதான் எங்களுக்கு திருப்தியான சாப்பாடு கிடைக்கும். நோன்பு நாட்களில்தான் எங்களுக்கு திருப்தியான சாப்பாடு கிடைத்தது.

சாப்பாட்டிற்காக வீடு வீடாக செல்லும்போது எனது பள்ளி நண்பர்களின் வீட்டை அடையும் போது அவர்கள் என்னைப் பார்த்து விடாமல் நான் மறைந்து நின்று பாட்டியை மட்டும் அனுப்பிவிடுவேன்.

6-ம் வகுப்பு வரை எனது படிப்பு நீடித்தது. பள்ளிக்கு செல்வதற்கு அப்பா கட்டாயப்படுத்தினதும் கிடையாது. பள்ளியில் படிக்கின்ற காலத்தில்,சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அப்பா என்னை கல் வெட்டுகின்ற வேலைக்கு அழைத்துச் செல்வார். அப்பாவிற்கு எடுபிடியாக வேலை செய்வேன். காலை 10 மணி ஆகும் போது நல்ல கிழங்கும்,சுண்டல் கடலையும் கிடைக்கும். அதன் சுவை தனி ருசிதான். மதிய நேரம் வீட்டில் இருந்து கொண்டுவந்த சோற்றை சாப்பிடுவேன். மாலைவேளையில் நல்ல ஒரு டீ கிடைக்கும்.

இறைவன் நாடினால் வளரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *