938. இப்னு அப்பாஸ் (ரலி) ‘(ஒருவர் அனுமதிக்கப்பட்ட ஒன்றை சத்தியமிட்டு) விலக்கிக்கொள்ளும் பட்சத்தில், (சத்தியத்தின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறுவதற்கான) பரிகாரத்தை அவர் செய்யவேண்டும்” என்று கூறிவிட்டு, ‘உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது” எனும் (திருக்குர்ஆன் 33:21 வது) இறைவசனத்தை ஓதினார்கள்.
939. நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (அவர்களின் அறையில் அதிக நேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். எனவே, (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள் ‘நபி (ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா? என்று கூறிட வேண்டும்” என்று கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம். எங்களில் ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசி வைத்திருந்தபடி கூறினோம். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘(அப்படியெல்லாம்) ஒரு குறையும் நடந்திடவில்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரின் அறையில்) தேன் அருந்தினேன். (அவ்வளவுதான் சத்தியமாக) இனிமேல் ஒருபோதும் இவ்வாறு செய்யமாட்டேன்” என்று கூறினார்கள். எனவே, ‘நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கிறீர்கள்?’ என்று தொடங்கி ‘நீங்கள் இருவரும் – இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே நன்று)” என முடியும் (திருக்குர்ஆன் 66:1-4) வசனங்களை அல்லாஹ் அருளினான். (இந்த 66:4 வது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) ‘நீங்கள் இருவரும்’ என்பது ஆயிஷா (ரலி) அவர்களையும், ஹஃப்ஸா (ரலி) அவர்களையுமே குறிக்கிறது. (திருக்குர்ஆன் 66:3 வது வசனத்தில்) ‘நபி தம் துணைவியரில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகச் சொல்லியிருந்தார்” என்பது ‘இல்லை. நான் தேன்தான் அருந்தினேன். (சத்தியமாக இனி நான் அதனை அருந்தமாட்டேன். இது குறித்து யாரிடமும் சொல்லிவிடாதே)” என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதையே குறிக்கிறது.
940. இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குத் தேனும் இனிப்பும் மிக விருப்பமானவையாக இருந்தன. அஸ்ர் தொழுகையை முடித்ததும் நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் செல்வார்கள்; அவர்களில் சிலருடன் நெருக்கமாகவும் இருப்பார்கள். இவ்வாறு (ஒரு முறை) தம் துணைவியரில் ஒருவரான ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் சென்று வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்துவிட்டார்கள். எனவே, நான் ரோஷப்பட்டேன். அது குறித்து நான் விசாரித்தேன். அப்போது ஹஃப்ஸாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு (தாயிஃப் நகரத்த)த் தேன் உள்ள ஒரு தோல் பையை அன்பளிப்பாக வழங்கினாள் என்றும், அதிலிருந்து தயாரித்த பானத்தை நபி (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது. உடனே நான் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இதனை நிறுத்துவதற்காக இதோ ஒரு தந்திரம் செய்வோம்” என்று கூறிக்கொண்டு (நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரான) சவ்தா பின்த் ஸம்ஆவிடம், (ஹஃப்ஸா வீட்டில் தேன் அருந்திவிட்டு) நபி (ஸல்) அவர்கள் உங்கள் அருகில் வருவார்கள். அப்போது கருவேல பிசின் சாப்பிட்டீர்களா? என்று கேளுங்கள்! ‘இல்லை’ என்று நபியவர்கள் கூறுவார்கள். உடனே தங்களிடமிருந்து ஏதோ துர்வாடை வருகிறதே அது என்ன? என்று கேளுங்கள்! அதற்கு நபி அவர்கள் ‘எனக்கு ஹஃப்ஸா தேன் பானம் புகட்டினார்’ என்று கூறுவார்கள். உடனே நீங்கள் ‘இதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்துவிட்டு (தேனை உறிஞ்சிக் கொண்டு) வந்திருக்கலாம். (எனவேதான் வாடை வருகிறது)’ என்று சொல்லுங்கள்! நானும் இவ்வாறே சொல்கிறேன். ஸஃபிய்யாவே! நீங்களும் இவ்வாறே சொல்லுங்கள் என்று (மற்றொரு துணைவியாரான ஸஃபிய்யாவிடமும்) கூறினேன். (நான் கூறியவாறு செய்துவிட்டு) சவ்தா அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் என் வீட்டு வாசலில் வந்து நின்றவுடன் உங்களுக்கு பயந்து நீங்கள் என்னிடம் கூறியபடி நபியவர்களிடம் சொல்ல விரைந்தேன். என்னை நபி (ஸல்) அவர்கள் நெருங்கியதும், இறைத்தூதர் அவர்களே! கருவேலம் பிசினைச் சாப்பிட்டீர்களா?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை’ என்றார்கள். ‘தங்களிடமிருந்து ஏதோ துர்வாடை வருகிறதே அது என்ன? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் ‘ஹஃப்ஸா எனக்குத் தேன் பானம் புகட்டினார்’ என்றார்கள். உடனே நான் ‘இதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (தேன் உறிஞ்சி)விட்டு வந்திருக்கலாம். (எனவேதான் தேனில் வாடை ஏற்பட்டது போலும்.) என்று சொன்னேன். (தொடர்ந்து ஆயிஷா (ரலி) கூறினார்:) என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தபோது நானும் அவ்வாறே கூறினேன். ஸஃபிய்யாவிடம் நபியவர்கள் சென்றபோதும் அவரும் அவ்வாறே கூறினார். பிறகு (மறுநாள்) ஹப்ஸாவிடம் சென்றபோது ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் அருந்துவதற்குச் சிறிது தேன் தரட்டுமா?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘அது எனக்குத் தேவையில்லை” என்று கூறினார்கள். (இது குறித்து) சவ்தா (ரலி) ‘அல்லாஹ்வின் மீதணையாக! நபி (ஸல்) அவர்களை அதைக் குடிக்கவிடாமல் தடுத்துவிட்டோமே’ என்று கூறினார்கள். உடனே அவரிடம் நான் , ‘சும்மா இருங்கள்! (விஷயம் பரவிவிடப்போகிறது!)” என்று சொன்னேன்.