950. நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான (அன்னை) உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம், அவரின் தந்தை அபூ சுஃப்யான் இப்னு ஹர்ப் (ரலி) (ஷாம் நாட்டில்) இறந்துவிட்ட சமயம் சென்றேன். அப்போது (மூன்றாவது நாள்) உம்மு ஹபீபா (ரலி) மஞ்சள் நிறமுடைய ஒருவகை நறுமணப் பொருளைக் கொண்டு வருமாறு கூறி அதனை (அங்கிருந்த) ஒரு சிறுமியின் மீது தடவினார்கள். பிறகு தம் இரண்டு கன்னங்களிலும் தடவினார்கள். பின்னர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கும் எந்தப் பெண்ணும், இறந்த ஒருவருக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிப்பதற்கு அனுமதியில்லை. ஆனால், கணவருக்காக நான்கு மாதம் பத்து நாள்கள் தவிர!’ என்று கூறக்கேட்டுள்ளேன். (எனவேதான் இப்போது நறுமணம் பூசினேன்.)” என்றார்கள்.
(அன்னை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களின் சகோதரர் இறந்த சமயம் அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள் நறுமணப் பொருள் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி பூசிக்கொண்டார்கள். பிறகு, ‘இதோ! (பாருங்கள்.) அல்லாஹ்வின் மீதாணையாக எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு) மேடையில் இருந்தபடி ‘அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்த ஒருவருக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை. ஆனால், தன் கணவருக்காக நான்கு மாதம் பத்து நாள்கள் தவிர!’ என்று கூறக் கேட்டுள்ளேன்” என்றார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என் மகளுடைய கணவர் இறந்துவிட்டார். (‘இத்தா’விலிருக்கும்) என் மகளின் கண்ணில் அஞ்சனம் (சுர்மா) இட்டுக் கொள்ளலாமா?’ என்று கேட்டதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘வேண்டாம்’ என இரண்டு அல்லது மூன்று முறை கூறினார்கள். ஒவ்வொரு முறையும் வேண்டாம்’ என்றே கூறினார்கள். பிறகு, ‘(கணவனை இழந்த ஒரு பெண்ணின்) ‘இத்தா’க் காலம் நான்கு மாதங்களும் பத்து நாள்களும் தாம். (ஆனால்,) அறியாமைக் காலத்தில் (கணவன் இறந்தபின்) மனைவி (ஓராண்டு ‘இத்தா’ இருப்பாள்.) ஆண்டின் முடிவில் (‘இத்தா’ முடிந்ததன் அடையாளமாக) ஒட்டகச் சாணத்தை எறிவான். (அந்த நிலை இப்போது இல்லை)” என்றார்கள். நான் ஸைனப் பின்த் அபீ ஸலமா (ரலி) அவர்களிடம், ‘ஆண்டின் முடிவில் ஒட்டகச் சாணத்தை எறிவாள்” என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (அறியாமைக் காலத்தில்) ஒரு பெண்ணின் கணவன் இறந்துவிட்டால் அவள் ஒரு சிறிய குடிசைக்குள் நுழைந்துகொண்டு தன் ஆடைகளிலேயே மிகவும் மேசாமானதை அணிந்துகொள்வாள். ஓராண்டு செல்லும் வரை எந்த நறுமணத்தையும் தொடமாட்டாள். (ஓராண்டு கழிந்த) பிறகு கழுதை, ஆடு போன்ற கால்நடை ஒன்று, அல்லது பறவை ஒன்று அவளிடம் கொண்டுவரப்படும். அதன் மீது (அழுக்கடைந்த தன் உடலைக்) கடுமையாகத் தேய்த்துக்கொள்வாள். அவ்வாறு அவள் தேய்க்கும் எந்த உயிரினமும் (அவளுடைய உடல் அசுத்தத்தால்) சாகாமல் இருப்பது அரிதேயாகும். பிறகு அவள் (அந்தக் குடிசையிலிருந்து) வெளியே வருவாள். அப்போது அவளிடம் ஒட்டகச் சாணம் கொடுக்கப்படும். உடனே அவள் அதை (தனக்கு முன்பக்கத்தில்) தூக்கி எறிந்துவிடுவாள். (இதுவே ‘இத்தா’ முடிந்ததற்கு அடையாளமாகும்.) பிறகு அவள் தான் விரும்பிய நறுமணத்தையோ மற்றவற்றையோ பழையபடி உபயோகித்துக்கொள்வாள்.
951. ‘இறந்தவர்களுக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு தடுக்கப் பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்த பின்னர் அவனுடைய மனைவி நான்கு மாதம் பத்து நாள்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த நாள்களில் நாங்கள் சுருமா இடவோ, மணப் பொருட்களைப் பூசவோ, சாயமிடப் பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம். எங்களில் ஒருத்தி மாதவிடாயிலிருந்து நீங்கக் குளிக்கும்போது மணப் பொருளைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது.