1172. ‘நபி (ஸல்) அவர்கள் கஅபதுல்லாஹ்வில் தொழுது கொண்டிருந்தபோது அபூ ஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அங்கே அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து ‘இன்ன குடும்பத்தினரின் அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப்பையைக் கொண்டு வந்து முஹம்மத் ஸஜ்தாச் செய்யும்போது அவருடைய முதுகின் மீது போடுவதற்கு உங்களில் யார் தயார்?’ என்று கேட்டனர். அப்போது அக்கூட்டத்தில் மிக இழிந்த ஒருவன் அதைக் கொண்டு வந்தான். நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்வதைப் பார்த்ததும் அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் போட்டுவிட்டான். அதை நான் பார்த்துக் கொண்டுதானிருந்தேன். ஆனால், அதைத் தடுத்து நிறுத்த எனக்கு அன்று சக்தி இருக்கவில்லை. இந்நிகழ்ச்சியைப் பார்த்து அங்கு அமர்ந்திருந்த இறைமறுப்பாளர்கள் ஒருவரின் மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். நபி (ஸல்) அவர்களோ தலையை உயர்த்த முடியாதவர்களாக ஸஜ்தாவிலேயே இருந்தார்கள். அப்போது ஃபாத்திமா (ரலி) அங்கே வந்து, நபி (ஸல்) அவர்களின் முதுகின் மீது போடப்பட்டிருந்ததை எடுத்து அப்புறப்படுத்தினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் தங்களின் தலையை உயர்த்தி ‘யா அல்லாஹ்! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்வாயாக’ என்று மூன்று முறை கூறினார்கள். அவர்களுக்குக் கேடாக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது குறைஷிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஏனெனில், ‘அந்நகரில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும்’ என அவர்களும் நம்பியிருந்தார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் (அங்கிருந்தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, ‘யா அல்லாஹ்! அபூ ஜஹ்ல், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, உமய்யா இப்னு கலப், உக்பா இப்னு அபீ முயீத் ஆகியோரை நீ கவனித்துக் கொள்வாயாக!’ என்று கூறினார்கள். ஏழாவது ஒரு நபரின் பெயரை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அதை நான் மறந்துவிட்டேன். என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் ‘கலீப்’ என்ற பாழ் கிணற்றில் செத்து வீழ்ந்து கிடந்ததை பார்த்தேன்”.
1173. (ஒரு முறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘(தாங்கள் காயமடைந்து) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்துண்டா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்து விட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது ‘அகபா (தாயிஃப்) உடைய நாளில் சந்தித்த துன்பமேயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் இப்னி அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை. எனவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். ‘கர்னுஸ் ஸஆலிப்’ என்னுமிடத்தை நான் அடையும்வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல்(அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, ‘உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்” என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு மீது சலாம் சொல்லி, பிறகு, ‘முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரண்டு மருங்கிலுமுள்ள) இந்த இரண்டு மலைகளையும் அவர்களின் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)” என்று கூறினார். உடனே, ‘(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நம்புகிறேன் (எனவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)” என்று சொன்னேன்.
1174. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் போர் ஒன்றில் பங்கு கொண்டபோது அவர்களின் விரலில் (காயம் ஏற்பட்டு) ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அப்போது அவர்கள், ‘நீ இரத்தம் சொட்டுகிற ஒரு விரல் தானே? நீ அடைந்த (பழு)தெல்லாம் இறைவழியில் தானே!” என்று (ஈரடிச் சீர் பாடல் போன்ற வடிவில்) கூறினார்கள்.
1175. (ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது ‘இரண்டு இரவுகள்’ அல்லது ‘மூன்று இரவுகள்’ (இரவுத் தொழுகைக்காகக் கூட) அவர்கள் எழவில்லை. அப்போது ஒரு பெண் வந்து, ‘முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டுவிட்டான் என நினைக்கிறேன். (அதனால்தான்) ‘இரண்டு இரவுகளாக’ அல்லது ‘மூன்று இரவுகளாக’ உம்மை ஷைத்தான் நெருங்கி வந்ததை நான் பார்க்கவில்லை” என்று கூறினாள். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், ‘முற்பகலின் மீது சத்தியமாக! மேலும் இருண்டுவிட்ட இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உங்களுடைய இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை கோபங்கொள்ளவும் இல்லை” எனும் (திருக்குர்ஆன் 93:1-3) வசனங்களை அருளினான்.