1176. நபி (ஸல்) அவர்கள் கழுதையொன்றில் சேணம் விரித்து, அதில் ‘ஃபதக்’ நகர் முரட்டுத் துணி விரித்து, அதில் அமர்ந்தவாறு பயணமானார்கள். என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டார்கள். இப்னு கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல் நலமில்லாமல்) இருந்த ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். – இது பத்ருப் போர் நிகழ்ச்சிக்கு முன்னால் நடந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அந்த அவையில் முஸ்லிம்களும் சிலை வணங்கிகளான இணைவைப்போரும் யூதர்களும் கலந்து இருந்தார்கள். அவர்களிடையே (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூலும் இருந்தார். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களும் இருந்தார்கள். (எங்கள்) வாகனப் பிராணியின் (காலடிப்) புழுதி அந்த அவையைச் சூழ்ந்தபோது அப்துல்லாஹ் இப்னு உபை தம் மேல் துண்டால் தம் மூக்கைப் பொத்திக்கொண்டு, ‘எங்களின் மீது புழுதியைக் கிளப்பாதீர்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள் அந்த அவையோருக்கு சலாம் சொன்னார்கள். பிறகு, தம் வாகனத்தை நிறுத்தி இறங்கி, அவர்களை அல்லாஹ்வின் (மார்க்கத்தின்) பால் அழைத்தார்கள். அவர்களுக்குக் குர்ஆன் (வசனங்களை) ஓதியும் காட்டினார்கள். அப்போது அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூல், ‘மனிதரே! நீர் கூறுகிற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனாலும்,) அதை எங்களுடைய (இது போன்ற) அவைகளில் கூறி எங்களுக்குத் தொல்லை கொடுக்காதீர். உம்முடைய இருப்பிடத்திற்குச் செல்லும். எங்களில் யார் உம்மிடம் வருகிறார்களோ அவர்களுக்கு (இதை) எடுத்துச் சொல்லும்” என்றார். (இதைக் கேட்ட) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள், ‘(ஆம். இறைத்தூதர் அவர்களே! இதை) எங்கள் அவைகளில் வெளிப்படுத்துங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகிறோம்” என்றார்கள். இதையடுத்து முஸ்லிம்களும் இணைவைப்போரும் யூதர்களும் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டே ஒருவர் மீதொருவர் பாய்ந்து (தாக்கிக்) கொள்ள முனைந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்கள் அனைவரும் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள். (அமைதி ஏற்பட்ட) பிறகு தம் வாகனத்திலேறி (உடல் நலமில்லாமல் இருந்த) ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்களிடம் சென்று, ‘சஅதே! அபூ ஹுபாப் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?’ என்று கூறி, ‘அப்துல்லாஹ் இப்னு உபை இப்படி இப்படிக் கூறினார்” என்று தெரிவித்தார்கள்.
அதற்கு ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்கள், ‘அவரை மன்னித்துவிட்டு விடுங்கள், இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (மதீனா) நகர வாசிகள் அவருக்குக் கீரிடம் அணிவித்து அவருக்கு முடி சூட்டிட முடிவு செய்திருந்த நிலையில் தான் அல்லாஹ் தங்களுக்கு இ(ந்த மார்க்கத்)தை வழங்கினான். அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய சத்தியத்தின் மூலம் அவர்களின் முடிவை அவன் நிராகரித்தபோது அதனால் அவர் பொருமினார். அதுதான் தாங்கள் பார்த்தபடி அவர் நடந்து கொண்டதற்குக் காரணம்” என்று கூறினார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்தார்கள்.
1177. நபி (ஸல்) அவர்களிடம், ‘தாங்கள் அப்துல்லாஹ் இப்னு உபையிடம் வந்தால் நன்றாயிருக்கும்” என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அவனிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம்களும் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது. அவனை நபி (ஸல்) அவர்கள் சென்றடைந்தபோது அவன், ‘தூர விலகிப் போ! அல்லாஹ்வின் மீதாணையாக! உன் கழுதையின் துர்நாற்றம் என்னைத் துன்புறுத்திவிட்டது” என்று கூறினான். அப்போது அவர்களிடையே இருந்த அன்சாரி (தோழர்) ஒருவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய கழுதை உன்னை விட நல்ல வாசனையுடையதாகும்” என்று கூறினார். அப்துல்லாஹ்வுக்காக அவனுடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஆத்திரமடைந்து அந்த அன்சாரியை ஏசினார். அந்த இருவருக்காகவும் அவரவருடைய நண்பர்கள் கோபமடைந்தார்கள். தங்களுக்கிடையே ஈச்சங் (கிளையின்) குச்சியாலும், கைகளாலும் செருப்புகளாலும் அடித்துக் கொண்டார்கள். அப்போது, ‘மேலும், இறைநம்பிக்கையாளர்களில் இரண்டு குழுவினர் தங்களுக்குள் சண்டையிட நேர்ந்தால் அவர்களிடையே சமாதானம் செய்து வையுங்கள்” (திருக்குர்ஆன் 49:09) என்னும் வசனம் அருளப்பட்டிருக்கிறது என்னும் செய்தி எங்களுக்கு எட்டியது.