1182. அகழ்ப் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மண்ணைச் சுமந்து கொண்டு செல்வதை பார்த்தேன். மண் அவர்களின் வயிற்றின் வெண்மையை மறைத்(துப் படிந்)திருந்தது. அப்போது அவர்கள் இவ்வாறு (பாடிய வண்ணம்) கூறிக்கொண்டிருந்தார்கள். (இறைவா!) நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்க மாட்டோம்” தருமம் செய்திருக்கவும் மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும்போது எங்களின் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இவர்கள் (குறைஷிகள்) எங்களின் மீது அக்கிரமம் புரிந்துவிட்டார்கள். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தர மாட்டோம்.
1183. நாங்கள் அகழ் தோண்டிக் கொண்டும் எங்கள் தோள்களின் மீது மண்ணைச் சுமந்து எடுத்துக் சென்று கொண்டும் இருந்தபோது எங்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள், ‘இறைவா! மறுமை வாழ்க்கையத் தவிர வேறு வாழ்க்கை எதுவுமில்லை. எனவே, முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் மன்னிப்பருள்வாயாக!” என்று (பாடியபடி) கூறினார்கள்.
1184. ”மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு (நித்தியமான) வாழ்க்கை இல்லை. அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் (அந்த நிரந்தர மறுமை வாழ்விற்காக) செம்மைப்படுத்துவாயாக” என்று (பாடியபடி) நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
1185. அகழ்ப் போரின்போது (மதீனா வாசிகளான) அன்சாரிகள், ‘நாங்கள் (எத்தகையவர்கள் எனில்) ‘நாங்கள் உயிராயிருக்கும் வரை (தொடர்ந்து) அறப்போர் புரிந்து கொண்டிருப்போம்’ என்று முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்திருக்கிறோம்” என்று பாடிய வண்ணம் (அகழ்தோண்டிக் கொண்டு) இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், ‘இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர (நிரந்தரமான பெரு) வாழ்க்கை வேறெதுவுமில்லை. எனவே, (அதை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கிக் கொள்ள உழைக்கிற மதீனாவாசிகளான) அன்சாரிகளையும் (மக்காவாசிகளான) முஹாஜிர்களையும் கண்ணியப்படுத்துவாயாக!” என்று (பாடலிலேயே) பதிலளித்தார்கள்.