1285. நான் (துல் ஹுலைஃபாவில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது) ‘இறைத்தூதர் அவர்களே! (நம்மிடம் உள்ள கத்திகளால் ஒட்டகங்களை இன்று அறுத்துவிட்டால் அவற்றின் முனை மழுங்கி) நம்மிடம் கத்திகளே இல்லாத நிலையில் நாளை நாம் எதிரியைச் சந்திக்க நேருமே!” என்று சொன்னேன். அப்போது அவர்கள், ‘விரைவாக’ அல்லது ‘தாமதமின்றி’ (எதைக் கொண்டாவது அறுத்திடுங்கள்) இரத்தத்தை சிந்தச் செய்யும் (ஆயுதம்) எதுவாயினும் அதைக் கொண்டு அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டிருந்தால் அதை நீங்கள் உண்ணலாம். பல்லாலும் நகத்தாலும் அறுக்கப்பட்டதைத் தவிர! அவற்றைக் குறித்து உங்களுக்கு இதோ கூறுகிறேன்: பல்லோ எலும்பாகும்; நகங்களோ அபிசீனியர்களின் கத்திகளாகும்” என்று கூறினார்கள்.(அப்போது) நாங்கள் போர்ச் செல்வமாக ஒட்டகத்தையும் ஆட்டையும் பெற்றோம். அவற்றிலிருந்து ஒட்டகம் ஒன்று வெருண்டோடியது. அதன் மீது ஒருவர் ஓர் அம்பை எய்து அதை (ஓடவிடாமல்) அவர் தடுத்து (நிறுத்தி)விட்டார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘வன விலங்குகளில் கட்டுக்கடங்காதவை சில இருப்பதைப் போன்றே இந்த ஒட்டகங்களிலும் கட்டுக் கடங்காதவை உண்டு. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (அம்பெய்து தடுத்து நிறுத்தச்) செய்யுங்கள்” என்று கூறினார்கள்.
1286. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் துல் ஹுலைஃபாவில் தங்கியிருந்தோம். மக்களுக்குப் பசி எடுத்தது. அவர்கள் போரில் கிடைத்த செல்வங்களிலிருந்து சில ஒட்டகங்களையும் ஆடுகளையும் பெற்றார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்களின் பின்வரிசையில் இருந்தார்கள். மக்கள் அவசரப்பட்டு (அவற்றைப் பங்கிடுவதற்கு முன்பாகவே) அறுத்துப், பாத்திரங்களை (அடுப்பில்) ஏற்றி (சமைக்கத் தொடங்கி) விட்டனர். நபி (ஸல்) அவர்கள் (இந்த விஷயம் தெரிய வந்தவுடன்) பாத்திரங்களைக் கவிழ்க்கும் படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்டு (அவற்றிலிருந்தவை வெளியே கொட்டப்பட்டு) விட்டன. பிறகு, அவற்றை அவர்கள் பங்கிட்டார்கள். பத்து ஆடுகளை ஓர் ஒட்டகத்திற்குச் சமமாக வைத்தார்கள். அப்போது ஓர் ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டது. மக்கள் அதைத் தேடிச் சென்றார்கள். அது (அவர்களிடம் அகப்படாமல்) அவர்களைக் களைப்படையச் செய்துவிட்டது. மக்களிடம் குதிரைகள் குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்தன. ஒருவர் (நபித் தோழர்) அந்த ஒட்டகத்தைக் குறிவைத்து ஓர் அம்பை எறிந்தார். அல்லாஹ் அதை (ஓட விடாமல்) தடுத்து நிறுத்தி விட்டான். பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘காட்டு மிருகங்களில் கட்டுக்கடங்காதவை இருப்பது போல் இந்தப் பிராணிகளிலும் கட்டுக் கடங்காதவை சில உள்ளன. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே செய்யுங்கள் (அம்பெறிந்து தடுத்து நிறுத்துங்கள்)” என்று கூறினார்கள். நான், ‘(ஒட்டகத்தை அறுக்க வாட்களை இன்று நாங்கள் பயன்படுத்திவிட்டால், அதன் கூர்முனை சேதமடைந்து) நாளை எங்களிடம் வாட்கள் இல்லாத நிலையில் பகைவர்களை (சந்திக்க நேரிடுமோ என்று) நாங்கள் அஞ்சுகிறோம். எனவே, நாங்கள் (கூரான) மூங்கில்களால் (இந்த ஒட்டகத்தை) அறுக்கலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்), அவர்கள், ‘இரத்தத்தை ஓடச் செய்கிற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை உண்ணுங்கள்; பற்களாலும் நகங்களாலும் அறுக்கப்பட்டதைத் தவிர, அதைப் பற்றி (‘அது ஏன் கூடாது’ என்று) நான் உங்களுக்குச் சொல்கிறேன்; பல்லோ எலும்பாகும்; நகங்களோ அபிசீனியர்களின் (எத்தியோப்பியர்களின்) கத்திகளாகும்” என்று கூறினார்கள்.