Featured Posts

அபூபக்கர் ஸித்திக் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1540. நபி (ஸல்) அவர்களுடன் நான் (ஸவ்ர்) குகையில் இருந்தபோது அவர்களிடம், ‘(குகைக்கு மேலிருந்து நம்மைத் தேடிக் கொண்டிருக்கும்) இவர்களில் எவராவது தம் கால்களுக்குக் கீழே (குனிந்து) பார்த்தால் நம்மைக் கண்டு கொள்வார்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘இந்த இரண்டு நபர்களுடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கிறானோ அவர்களைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள், அபூபக்ரே!”என்று கேட்டார்கள்.

புஹாரி :3653 அபூபக்கர் (ரலி).

1541. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் மரண நோயின் போதும்) மிம்பரின் மீதமர்ந்து, (மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அதில்), ‘அல்லாஹ் தன் அடியார் ஒருவருக்கு உலகச் செல்வத்தில் அவர் விரும்புவ(து எதுவாயினும் அ)தைக் கொடுப்பதாகவும் அல்லது தன்னிடமுள்ள (மறுமைப் பெரு வாழ்வு)தனை எடுத்துக் கொள்ளும்படியும் (இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள) வாய்ப்பளித்தான். அப்போது அந்த அடியார் அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்தார்” என்று கூறினார்கள். உடனே, அபூபக்ர் (ரலி) அழுதார்கள். மேலும் (நபியவர்களை நோக்கி), ‘தங்களுக்கு எங்கள் தந்தையரும் அன்னையரும் அர்ப்பணமாகட்டும்” என்று கூறினார்கள். நாங்கள் அபூபக்ரு(டைய அழுகை)க்காக வியப்படைந்தோம். மக்கள், ‘இந்த முதியவரைப் பாருங்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் தன் அடியார் ஒருவருக்கு உலகச் செல்வத்தில் அவர் விரும்புவதைக் கொடுப்பதாகவும் அல்லது தன்னிடமிருப்பதை எடுத்துக் கொள்ளும்படியும் இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கிய (மகிழ்ச்சியான விஷயத்)தைத் தெரிவித்துக் கொண்டிருக்க இவர், ‘தங்களுக்கு என் தந்தையரும் தாய்களும் அர்ப்பணமாகட்டும்’ என்று (அழுதபடி) கூறுகிறாரே” என்று கூறினார்கள் – இறைத்தூதர் (ஸல்) அவர்களே இப்படி வாய்ப்பு வழங்கப்பட்டவராவார் – அபூபக்ர் (ரலி) தாம் எங்களில் அல்லாஹ்வின் தூதரைப் பற்றி அதிகம் அறிந்தவராக இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘தம் தோழமையாலும் தம் செல்வத்தாலும் எனக்குப் பேருபகாரம் புரிந்தவர் அபூ பக்ர் அவர்கள் தாம். என்சமுதாயத்தாரிலிருந்து எவரையேனும் என் உற்ற நண்பராக நான் ஆக்கிக் கொள்வதாயிருந்தால் அபூ பக்ரையே ஆக்கிக் கொண்டிருப்பேன்; எனினும், இஸ்லாத்தின் (காரணத்தால் உள்ள) நட்பே (சிறந்ததாகும்) போதுமானதாகும். (என்னுடைய இந்தப்) பள்ளிவாசலில் உள்ள சாளரங்களில் அபூபக்ரின் சாளரம் தவிர மற்றவை நீடிக்க வேண்டாம்” என்று கூறினார்கள்.

புஹாரி : 3904 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).

1542. நபி (ஸல்) அவர்கள் ‘தாத்துஸ் ஸலாஸில்’எனும் போருக்கான படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘மக்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர்கள் யார்?’ என்று கேட்டேன். அவர்கள், ‘ஆயிஷா” என்று பதிலளித்தார்கள். நான், ‘ஆண்களில் மிகப் பிரியமானவர்கள் யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆயிஷாவின் தந்தை (அபூபக்ர்)” என்று பதிலளித்தார்கள். ‘பிறகு யார் (பிரியமானவர்)?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘பிறகு உமர் இப்னு கத்தாப் தான் (எனக்கு மிகவும் பிரியமானவர்)” என்று கூறிவிட்டு, மேலும் பல ஆண்க(ளின் பெயர்க)ளைக் குறிப்பிட்டார்கள்.

புஹாரி : 3662 அம்ர் பின் அல் ஆஸ் (ரலி).

1543. நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி (தேவை ஒன்றை முறையிடுவதற்காக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியைத் திரும்பவும் வரும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மணி, ‘நான் வந்து தங்களைக் காண (முடிய)வில்லையென்றால்..?’ என்று, – நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்டால் (என்ன செய்வது?) என்பது போல் – கேட்டாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நீ என்னைக் காணவில்லையென்றால் அபூபக்ரிடம் செல்” என்று பதில் கூறினார்கள்.

புஹாரி :3659 ஜூபைர் பின்முத்இம் (ரலி).


1544. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகை தொழுதார்கள். பிறகு மக்களை நோக்கி, ‘(பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில்) ஒருவர் ஒரு பசுமாட்டை ஓட்டிச் சென்று கொண்டிருக்கையில் அதில் ஏறிச் சவாரி செய்து அதை அடித்தார். அப்போது அந்தப் பசுமாடு, ‘நாங்கள் இதற்காக (மனிதர்களாகிய உங்களைச் சுமந்து செல்வதற்காகப்) படைக்கப்படவில்லை. நாங்கள் படைக்கப்பட்டது (நிலத்தில்) உழுவதற்காகத் தான்” என்று கூறியது. எனக் கூறினார்கள். மக்கள் ‘சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) பசுமாடு பேசுமா?’ என்று (வியந்து போய்க்) கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘நானும் அபூ பக்ரும் உமரும் இதை நம்புகிறோம்” என்று கூறினார்கள். அப்போது அங்கே அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் இருக்கவில்லை. தொடர்ந்து, நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவர் தன் ஆடுகளுக்கிடையே (அவற்றை மேய்த்துக் கொண்டு) இருந்தபோது ஓநாய் (ஆட்டு மந்தைக்குள் புகுந்து) ஓடி, ஆட்டை(த் தாக்கிக் கவ்விக் கொண்டு சென்றது. அந்த ஆட்டைத் தேடி, ஓநாயிடமிருந்து அவர் காப்பாற்றி விட்டார். உடனே, அந்த ஓநாய் அவரைப் பார்த்து, ‘இவனே! இதை என்னிடமிருந்து இன்று நீ காப்பாற்றி விட்டாய். ஆனால், கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதற்கு (பாதுகாவலர்) யார் இருக்கிறார்கள்? அந்நாளில் இதற்கு என்னைத் தவிர பாதுகாவலர் யாரும் இல்லையே’ என்று கூறியது’ .இதைக் கேட்ட மக்கள், ‘சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்) ஓநாய் பேசுமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள்,’நானும் அபூ பக்ரும், உமரும் இதை நம்புகிறோம்” என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அங்கே அப்போது இருக்கவில்லை.

புஹாரி 3471 அபூஹூரைரா (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *