Featured Posts

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் சிறப்பு.

1597. நானும் என் சகோதரரும் யமன் நாட்டிலிருந்து வந்து சில காலம் (மதீனாவில்) தங்கினோம் . அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களும் அவர்களின் தாயாரும் நபி (ஸல்) அவர்களிடம் (அடிக்கடி) செல்வதைக் கண்டு, அவர் நபி (ஸல்) அவர்களின் வீட்டாரில் ஒருவர் என்றே நாங்கள் கருதினோம்.

புஹாரி : 3763 அபூமூஸா (ரலி).

1598. எங்களிடையே அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) உரையாற்றினார்கள். அப்போது, ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து எழுபதுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களைக் கேட்டறிந்துள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக, தங்களிலேயே அல்லாஹ்வின் வேதத்தை (குர்ஆனை) நன்கறிந்தவன் நான் என பிற நபித்தோழர்கள் நன்கறிவார்கள். (அதற்காக எல்லாவகையிலும்) நான் அவர்களில் சிறந்தவன் அல்லன்” என்று குறிப்பிட்டார்கள். (இது குறித்து) மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைச் செவிமடுத்தவாறே அந்த அவையில் நான் அமர்ந்திருந்தேன். இப்னு மஸ்வூத் (ரலி) சொன்னதை மறுத்து வேறுவிதமாகப் பேசியதை யாரிடமிருந்தும் நான் கேட்கவில்லை.

புஹாரி : 5000 ஷகீக் பின் ஸலாமா (ரலி).

1599. எவனைத் தவிர வேறு இறைவன் யாருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் வேதத்தில் ஓர் அத்தியாயம் அருளப்பட்டால், அது எங்கே அருளப்பட்டது என்பதை நான் நன்கு அறிவேன். அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு வசனம் அருளப்பட்டால் அது யார் விஷயத்தில் அருளப்பட்டது என்பதையும் நான் நன்கறிவேன். என்னை விட அல்லாஹ்வின் வேதத்தை நன்கு அறிந்தவர்கள், ஒட்டகம் சென்றடையும் தூரத்தில் இருந்தால் நான் (அவரிடமிருந்து அதைக் கற்றுக் கொள்வதற்காக) அவரை நோக்கி நிச்சயம் பயணம் புறப்பட்டு விடுவேன் என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5002 மஸ்ரூக் இப்னு அஜ்தஉ (ரஹ்).

1600. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி), ‘அவர் எத்தகைய மனிதரென்றால், இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்” என்று சொல்லி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதைக் கேட்ட பிறகு அவரை நிரந்தரமாக நான் நேசிக்கலானேன்” என்று கூறினார்கள்.

புஹாரி : 3758 மஸ்ரூக் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *