1783. (குறைஷியருக்கு ஏற்பட்ட) இந்தப் பஞ்சத்திற்குக் காரணம், குறைஷியர் நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சத்தைப் போன்று இவர்களுக்கும் ஏற்படட்டும்’ எனக் குறைஷியருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். அதையடுத்து அவர்களுக்குப் பஞ்சமும் கஷ்டமும் ஏற்பட்டது. எலும்புகளை அவர்கள் சாப்பிடும் அளவிற்கு(ப் பஞ்சம் கடுமையாக இருந்தது.) அவர்களில் ஒருவர் (கடும் பசியினால் கண் பஞ்சடைந்து) களைப்படைந்து தமக்கும் வானத்திற்கும் இடையே புகை போன்ற ஒன்றையே காணலானார். அப்போது அல்லாஹ், ‘(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானிலிருந்து வரும் நாளை நீங்கள் எதிர்பார்த்திருங்கள். அது மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அது துன்புறுத்தும் வேதனை ஆகும்” எனும் (திருக்குர்ஆன் 44:10, 11ஆகிய) வசனங்களை அருளினான். அப்போது ஒருவர் (அபூசுஃப்யான்) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! முளர் குலத்தாருக்கு மழை வேண்டிப் பிரார்த்தியுங்கள். அவர்கள் அழிவுக்குள்ளாகி விட்டார்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘முளர் குலத்தினருக்கா? நீங்கள் துணிவு மிக்கவர் தாம்” என்று கூறிவிட்டு, (அவர்களுக்காக) மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். உடனே, அவர்களுக்கு வானம் பொழிந்தது. அப்போது, ‘மெய்யாகவே (நீங்கள் உணர்வு பெறக்கூடுமென்று) அவ்வேதனையை இன்னும் சிறிது காலத்திற்கு நீக்கி வைத்தோம். எனினும், நீங்கள் (பாவத்திற்கே) திரும்பச் செல்கிறீர்கள்” எனும் (திருக்குர்ஆன் 44:15 வது) வசனம் அருளப்பட்டது. (பிறகு அவர்களுக்குப் பஞ்சம் விலகி,) வளமான வாழ்வு ஏற்பட்டபோது, பழைய (இணைவைக்கும்) நிலைக்கே திரும்பிச் சென்றனர். அப்போது வல்லவனும் மாண்பாளனுமாகிய அல்லாஹ், ‘மிக பலமாக அவர்களை நாம் பிடிக்கும் நாளில் நிச்சயம் நாம் பழிவாங்கியே தீருவோம்” எனும் (திருக்குர்ஆன்44:16 வது) வசனத்தை அருளினான். அந்நாள் பத்ருப்போர் நாளாகும்.
புகை.
புஹாரி : 4821 இப்னு மஸ்ஊத் (ரலி).