574.குதிரை வைத்திருப்பது மூன்று பேருக்கு மூன்றுவகையான விளைவுகளைத் தருவதாகும். ஒருவருக்கு நற்கூலி பெற்றுத் தருவதாகும். மற்றொரு மனிதருக்குப் (பொருளாதாரப்) பாதுகாப்பளிக்கக் கூடியதாகும். இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும். அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காக பசுமையான ஒரு வெட்டவெளியில் அல்லது ஒரு தோட்டத்தில் ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கும் மனிதருக்கு அது (மறுமையில்) நற்பலனைப் பெற்றுத்தரும். அந்த குதிரை, தன்னைக் கட்டி வைத்திருக்கும் கயிற்றின் நீளத்திற்கேற்ப எந்த அளவிற்குப் பசும்புல் வெளிகளில் அல்லது தோட்டங்களில் மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நற்பலன் கிடைக்கும். அதன் கயிறு துண்டிக்கப்பட்டு, அது ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால் அதனுடைய (குளம்பின்) சுவடுகள் அளவிற்கும் அதனுடைய விட்டைகளின் அளவிற்கும் அவருக்கு நற்பலன்கள் எழுதப்படும். அந்த குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து தண்ணீர் குடித்தால், அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அதன் உரிமையாளருக்கு இல்லாமலிருந்தாலும் அதுவும் (அவர் புகட்டியதாகவே கருதப்பட்டு) அவர் செய்த நன்மைகளின் கணக்கில் எழுதப்படும். குதிரை பாவச் சுமையாக மாறும் மனிதன் யாரெனில், அதைப் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் முஸ்லிம்களுடன் பகைமை பாராட்டுவதற்காகவும் கட்டி வைத்துப் பராமரிக்கும் மனிதனாவான். அது அவன் மீதுள்ள பாவச் சுமையாகும். நபி (ஸல்) அவர்களிடம் கழுதைகளின் ஜகாத் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அவற்றைக் குறித்து எந்த இறைகட்டளையும் எனக்கு அருளப்படவில்லை. ‘எவன் அணுவளவு நன்மை செய்திருந்தானோ அவன் அதனை (அதன் நற்பலனைக்) கண்டு கொள்வான். மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அதனை (அதற்கான தண்டனையைக்) கண்டு கொள்வான்” என்னும் இந்த ஒருங்கிணைந்த, தனித்தன்மை வாய்ந்த திருக்குர்ஆன் வசனத்தைத் தவிர” என்று கூறினார்கள்.
ஜகாத் கொடுக்காவிட்டால் பாவம்.
புஹாரி: 2860 அபூஹுரைரா (ரலி)