அல்லாஹ்வுடன்…
அல்லாஹ்வுடன் நடந்து கொள்ளவேண்டிய ஒழுங்குகள்:
ஒரு முஸ்லிம் தன் தாயின் கருவறையில் இந்திரியத் துளியாக இருந்ததிலிருந்து அல்லாஹ் அவனுக்கு அருளிய அருட்கொடைகளை (இவ்வருட்கொடைகள் நாளை மறுமையில் அவன் இறைவனைச் சந்திக்கும்வரை அவனுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும்) எண்ணிப் பார்த்து அதற்காக வல்ல நாயனுக்கு, அவனை தனது நாவால் புகழ்ந்து, துதிபாடி, தன் அவயங்களை அவனுடைய வழிபாட்டில் ஈடுபடுத்துவதன் மூலம் நன்றி செலுத்தவேண்டும்.
இதுதான் அல்லாஹ்வுடன் நடந்து கொள்ள வேண்டிய ஒழுக்கமாகும். காரணம், அருட்கொடைளை அள்ளித் தந்தவனுடைய சிறப்பை மறுப்பதும் அவற்றுக்கு நன்றி கொல்வதும் ஒழுங்கல்லவே!
அல்லாஹ் கூறுகிறான்: உங்களுக்குக் கிடைத்துள்ள அருட்கொடைகள் எல்லாம் அல்லாஹ்விடமிருந்து வந்தவைதாம். (16:52)
அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் எண்ணி முயன்றால் அவற்றை உங்களால் எண்ணவே முடியாது. (16:18)
மேலும் கூறுகிறான்: என்னை நீங்கள் நினைவு கூருங்கள். நானும் உங்களை நினைவு கூறுகின்றேன். (2:152)
தன்னையும் தன்னுடைய எல்லா நிலைமைகளையும் அல்லாஹ் சூழ்ந்தறிபவனாய் இருக்கின்றான் என்பதை ஒரு முஸ்லிம் உணர வேண்டும். அப்போதுதான் அவனுடைய உள்ளத்தில் அல்லாஹ்வைப் பற்றிய பயம், மதிப்பு மற்றும் கண்ணியம் ஏற்படும். அதனால் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதற்கும் அவனுக்கு கட்டுப்படாமல் இருப்பதற்கும் அவன் வெட்கப்படுவான்.
இது அல்லாஹ்வுடன் நடந்துகொள்ள வேண்டிய ஒழுக்கமாகும். ஏனெனில் ஒரு அடிமை தன் எஜமானுக்கு (அவனோ தன்னைச் சூழ்ந்தறிந்து கொண்டிருக்கிற நிலையில்) பகிரங்கமாக மாறுசெய்வதும் தீமைகளை, மோசமான காரியங்களைச் செய்வதும் ஒழுக்கமாக இருக்க முடியாதல்லவா?
அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் இரகசியமாய்ச் செய்வதையும் வெளிப்படையாய்ச் செய்வதையும் அல்லாஹ் நன்கறிகின்றான். (16:19)
அல்லாஹ் தன் மீது முழு ஆற்றல் பெற்றிருக்கிறான். அவனை விட்டால் தனக்கு வேறு புகலிடமோ, ஒதுங்குமிடமோ, தப்பிக்குமிடமோ கிடையாது என்பதையும் ஒரு முஸ்லிம் உணர வேண்டும். தனது காரியங்களை அவனிடமே ஒப்படைத்து அவன் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும். இதுவும் அவன், அவனைப் படைத்த இறைவனுடன் நடந்து கொள்ள வேண்டிய ஒழுக்கமே. ஏனெனில் புகலிடம் அளிக்க முடியாதவரிடம் புகலிடம் தேடுவதும் தவக்குல் வைக்க முடியாதவரிடம் தவக்குல் வைப்பதும் ஒழுங்காக இருக்க முடியாது.
அல்லாஹ் கூறுகிறான்: எந்த உயிரினமானாலும் அதன் குடுமி அவனுடைய பிடியிலேயே உள்ளது. (11:56)
நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வின் மீதே தவக்குல் வையுங்கள். (5:23)
தனக்கும் ஏனைய படைப்பினங்களுக்கும் அல்லாஹ் அருளிய அருட்கொடைகளை சிந்தித்துப் பார்த்து மென்மேலும் அவை தனக்குக் கிடைக்க வேண்டும் என ஆவல் கொள்ளவேண்டும்.
நூல்: முஸ்லிமின் வழிமுறை.