579.நான் குறைஷிகள் நிறைந்திருந்த இடத்திற்குச் சென்று அமர்ந்தேன். அப்போது பரட்டை முடியுள்ள சொரசொரப்பான ஆடையணிந்த முரட்டுத் தோற்றமுள்ள ஒருவர் அவர்களிடம் வந்து ஸலாம் கூறிவிட்டு, ‘(ஜகாத் கொடுக்காமல்) பொருளைப் பதுக்கி வைப்பவர்களுக்காக, நரக நெருப்பில் சூடாக்கப்பட்ட ஒரு கல் உண்டு. அக்கல் அவர்களின் மார்புக் காம்பில் வைக்கப்படும். உடனே அக்கல் புஜத்தின் மேற்பகுதி எலும்பின் வழியாக வெளியாகும். பிறகு அது புஜத்தின் மேற்பகுதி எலும்பில் வைக்கப்படும். உடனே அது மார்புக் காம்பின் வழியாக வெளியாகி உருண்டோடும்” என்று கூறினார். பிறகு திரும்பிவிட்ட அவர் ஒரு தூணுக்கருகில் போய் உட்கார்ந்தார். நான் அவரைப் பின்தொடர்ந்து சென்று அவருக்கருகில் அமர்ந்தேன். அவர் யார் என்று எனக்கு (அப்போது) தெரியவில்லை. பிறகு நான் அவரிடம் ‘தாங்கள் கூறியதை மக்கள் வெறுக்கிறார்களோ!” என்று கேட்டேன். அதற்கவர், ‘அவர்கள் விவரமற்றவர்கள்’ எனக் கூறினார்.”என் தோழர் என்னிடம் சொன்னார்…” என அந்தப் பெரியவர் மேலும் தொடர்ந்து, கூறும் போதே நான் (குறுக்கிட்டு) ‘உம்முடைய தோழர் யார்?’ எனக் கேட்டேன். ‘நபி (ஸல்) அவர்கள் தாம்’ எனக் கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்கள் ‘அபூதர்ரே! உஹது மலையை நீர் பார்த்திருக்கிறீரா?’ எனக் கேட்டார்கள். தம் வேலை ஏதோ ஒன்றுக்காக நபி (ஸல்) அவர்கள் என்னை அங்கு அனுப்பப் போகிறார்கள் என எண்ணி பகல் முடிய இன்னம் எவ்வளவு நேரம் உள்ளது என அறிந்து கொள்வதற்காக சூரியனைப் பார்த்துவிட்டு. ‘ஆம்” என்றேன். ‘உஹது மலையளவுக்குத் தங்கம் என்னிடம் இருந்து அதில் மூன்று தீனார்களைத் தவிர வேறு எதையும் செலவிடாமலிருப்பதை நான் விரும்பவில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். இவர்களோ இதை அறியாதவர்களாயிருக்கிறார்கள். இவர்கள் உலக ஆதாயங்களையே சேகரிக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை இவ்வுலகப் பொருட்களை இவர்களிடம் கேட்க மாட்டேன். மார்க்க விஷயங்களைப் பற்றியும் இவர்களிடம் தீர்ப்பு கேட்க மாட்டேன்” எனக் கூறினார்.
ஜகாத் கொடுக்காதவர் நிலை.
புஹாரி : 1407 அல் அன்ஹாஃப் பின் கைஸ் (ரலி)