முக்கிய பிரிவுகளின் பெயர்கள்
பொய் நபித்துவத்தை வாதிட்ட (முஸைலமாக்கள்) தற்போதைய காதியானிகள், ஹவாரிஜ், முர்ஜிய்யா, கத்ரிய்யா, ஷீஆ (ராபிழா), முஃதஸிலா, ஜஹ்மிய்யா, அஷாயிரா (அஷ்அரிய்யா), மாத்ரூதிய்யா, கர்ராமிய்யா, முஷப்பிஹா, முஅத்திலா, புகைரிய்யா, ளராவிய்யா, ஹர்பிய்யா, அத்திஜானிய்யா,அல்குர்ஆனுக்கும், நபிமொழிகளுக்கும் உள், மற்றும் வெளி அர்த்தங்கள் உண்டு என வாதிடும் பாதினிய்யா.
இவற்றில் ஜஹ்மிய்யா, கத்ரிய்யா, ஹவாரிஜ், முஃதஸிலா ஆகிய பிரிவுகள் இவை அனைத்துக்கும் தலையான பிரிவுகள் என இமாம் இப்னு (ரஹ்) அவர்களால் வர்ணிக்கட்டுள்ளது.
பாதினிய்யாக்கள் ஷீஆக்களில் இருந்து பிரிந்த ஒரு பிரிவாகும். இஸ்லாமிய அடிப்படைக்கு மாற்றமான பல சித்தாந்தங்களை தோற்றுவிக்க அது வழிகோலியது. இமாமத்தைப் பிரதிபலித்தே இவர்களின் செயற்பாடுகள் அமைந்தன. இவர்கள் இஸ்மாயீலிய்யா, கராமித்தா, இஹ்வானுஸ்ஸபா, ஹஷ்ஷாஷுன், சுலைஹிய்யூன், பாதிமிய்யா, அல்லது பாதிமிய்யூன், நுஸைரிய்யா, துரூஸ் போன்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.இஸ்லாமிய உலகில் தமெக்கென உறுப்பினர்ளைக் கொண்ட இந்தப்பிரிவுகள் முஸ்லிம் உலகை திகில் கொள்ளச் செய்கின்ற நிகழ்வுகளை உண்டு பண்ணியுள்ளனர்.
இந்தப் பிரிவில் இருந்தே பாபிய்யா, பஹாயிய்யா, காதியானி, போரா போன்ற பிரிவுகள் உண்டாகின. இவர்கள் இன்தோனேஸியா, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் காணப்படுகின்றனர். இந்தப்பிரிவினர் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒரு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றனர் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். ஆனால் பாதினிய்யா என்பது இந்தப் பிரிவுகளின் மொத்தமான பெயராகும்.
இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகளில் ஷீஆக்களில் விபரமற்றவர்கள் அதிகம் காணப்படுவதால் ஷீஆ இஸ்லாத்தில் உள்ள இமாமத்தைக் காரணம் காட்டியே இவ்வளவு பல பிரிவுகள் அதற்குள்ளிருந்தே தோன்றியுள்ளதாக இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இவை ஒவ்வொரு பிரிவும் பல பிரிவுகளாயின. எனினும் இவைகள் அனைத்தும் இப்போது இல்லை. என்றாலும் இவற்றின் கோட்பாடுகள் ஏனைய பிரிவுகள் மத்தியில் ஊடுருவிக் காணப்படுவதைப் பார்க்கின்றோம்.
உதாரணமாக ஒரு மனிதன் முக்தி நிலையை அடைகின்ற போது கடமைகள் கடமையற்றவனாக மாறுவான் என்ற கற்பனைக் கோட்பாட்டை உருவாக்கிய பாதினிய்யாக்களுக்கும், சூபிகள், அல்லது தப்லீக் இயக்கத்தினர் ஆகிய பிரிவுகளுக்கும் மத்தியில் காணப்படும் நெருங்கிய உறவுகளையும், ஷீஆக்களுக்கும், கப்று வணங்கிகளுக்கும் இடையில் காணப்படும் கருத்தொற்றுமைகளையும், முஃதஸிலா, ஹவாரிஜ் ஆகியோருக்கும், இரு எழுத்து அழைப்பாளரைப் பின்பற்றும் தவ்ஹீத்வாதிகளுக்கும் இடையில் காணப்படும் உறவையும் பொய்யன் பின் முஸைலமாவுக்கு வால்பிடித்தவர்களுக்கும், காதியானிகளுக்கும் இடையில் காணப்படும் உடன்பாட்டையும் குறிப்பிடலாம்.
இவற்றில் இஸ்லாத்தை சீர் குலைக்கின்ற முக்கிய பிரிவுகளாக நாம் கருதியவைகளை மாத்திரம் இனம் கண்டு இங்கு எடுத்தெழுகின்றோம். சுன்னத் ஜமாத் பெயரில் வழிகெட்ட கப்று வணங்கிகள், காதியானிகள், ஷீஆக்கள், ஹவாரிஜ், முஃதஸிலா, அஷ்அரிய்யா, ஜஹ்மிய்யா, போரா ஆகிய முக்கிய சில பிரிவுகள் பற்றி மாத்திரம் இங்கு எடுத்தெழுதப்படுகின்றன.
நமது நாட்டு அரசாங்கப் பாடசாலைகளில் கல்வி கற்கும் கல்விப் பொதுத்தராதர உயர் தர முஸ்லிம் மாணவர்களையும், முஸ்லிம் சமூகத்தினையும் இணைத்த ஒரு நூலாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே இவ்வாறு செய்யக்காரணமாகும். அல்லாஹ் அந்த எண்ணத்தை நிறைவேற்றி வைப்பானாக!
நமது இந்த தொடரில் பைஅத் (உமர் அலி) ஜமாத், அஹ்லுல் குர்ஆன், வஹ்தததுல் உஜுத், அஹ்லுல் ஹுலூல், வல் இத்திஹாத், சூபிய்யா, தரீக்காக்கள் போன்ற வழிகெட்ட பிரிவுகள் பற்றிய எவ்வித பேச்சும் இன்றி அவை சுதந்திரமாக விட்டு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் தப்லீக் ஜமாத்தும் இணைக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் இரண்டாவது பகுதியில் வெளிவர இருக்கின்றன. அதில் நீங்கள் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ்