வழிகேடுகளை வரவழைப்பவை:
மனோ இச்சை
நேர்வழிக்கு பிரதான தடைக்கல்லாக உள்ளதும், உலகில் வழி கெட்ட கொள்கைகள் விரிவடைவதற்கும் மனோ இச்சைகளும் ஒரு காரணமாகும். வழிகேடுகளும், சீரழிவுகளும் நிகழ பெரிதும் பங்காற்றும் இந்த ‘மனோ இச்சை’ பற்றிய தெளிவும், எச்சரிக்கையும் ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டும்.
நபியே நீர் அவர்களது மனோ இச்சைகளைப்பின்பற்ற வேண்டாம். நாம் உங்கள் ஒவ்வொருவருக்கும் மார்க்கத்தையும், வழிமுறையையும் ஏற்படுத்தியுள்ளோம்.
(அல்மாயிதா. வச: 48)
உமக்கு அறிவு ஞானம் வந்த பின்னரும் நீர் அவர்களது மனோ இச்சைகளைப் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து எந்த உதவியாளனோ, பாதுகாவலனோ உமக்கில்லை.
(அத்: அர்ரஃத். வச: 37).
சத்தியம் அவர்களது மனோ இச்சைகளைப் பின்பற்றினால் வானங்களும், பூமியும், அவற்றில் இருப்பவையும் கெட்டிருக்கும்.
(அத்: அல்முஃமினூன். வச: 71)
அவை நீங்களும், உங்கள் மூதாதையரும் சூட்டிக் கொண்ட பெயர்களே அன்றி வேறில்லை. அல்லாஹ் இதற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவுமில்லை. அவர்கள் வெறும் யூகங்களையும், மனம் விரும்புவதையுமே பின்பற்றுகின்றனர்.(எனினும்) இவர்களது இரட்சகனிடமிருந்து நேர்வழி இவர்களுக்கு வந்தேயுள்ளது. (அத்: அந்நஜ்ம். வச:23)
மனோ இச்சையில் இருந்து தூர விலகி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் இது போன்ற பொருளில் அமைந்த பல வசனங்கள் அல்குர்ஆனில் இடம் பெறுவதைப்பார்க்கின்றோம்.
இஸ்லாத்தில் தோன்றிய குழுக்களை எடுத்துக் கொண்டால் மனோ இச்சை முதன்மைக்காரணிகளில் ஒன்றாக இருப்பதை அவதானிக்கலாம். மனோ இச்சை காரணமாகவே ஹவாரிஜ்கள், ராபிழாக்கள், (ஷீஆக்கள்) தோன்றினர். ஜஹ்மிய்யாக்கள் முளைத்தனர், முஃதஸிலாக்கள் வெளிப்பட்டனர். முர்ஜியாக்கள், (ஈமான் மட்டும் போதும் என்போர்) கத்ரிய்யாக்கள், (கத்ரை மறுப்போர்); பரவினர். ஜப்ரிய்யாக்கள் (அடியானுக்கு சுய தெரிவு இல்லை என்போர்) வழிகெட்டனர். சமுதாயம் பல்வேறு பிரிவுகளாகவும், குழுக்களாகவும் மாறியது. ஒவ்வொரு குழுவும் தான் கொண்டதைக் கொண்டு மகிழ்ச்சியுறுகின்றனர். மனோ இச்சையினால் எத்தனை மார்க்கங்கள்தான் திரிபுபடுத்தப்பட்டும், மாற்றப்பட்டும், மனிதனை வழிகேட்டில் தள்ளியும் விட்டன!
இன்ஷா அல்லாஹ் தொடரும்..