Featured Posts

[பாகம்-18] முஸ்லிமின் வழிமுறை

முஸ்லிமுக்குரிய கடமைகள்

ஒரு முஸ்லிம் தன் சகோதர முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் ஒழுக்கங்களையும் நம்ப வேண்டும். இதனை அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய வணக்கமாகவும் அவனை நெருங்குவதற்குரிய வழியாகவும் கருதி முறையாக நிறைவேற்ற வேண்டும். காரணம் இவற்றைப் பேணி நடக்குமாறு அல்லாஹ் கடமையாக்கியிருக்கிறான். அவை வருமாறு:

1. அவரைச் சந்தித்தால் பேச்சை தொடங்கும் முன் அவருக்கு ஸலாம் சொல்ல வேண்டும். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு என்று கூறி அவரிடம் முஸாஃபஹா- கைலாகு செய்ய வேண்டும். இதற்கவர் வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு என்று பதில் கூற வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: உங்களுக்கு(ஸலாம்) எனும் வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையில் அல்லது (குறைந்தபட்சம்) அதை போன்றாவது பதில் வாழ்த்துக் கூறுங்கள். (4:86)

நபி (ஸல்) கூறினார்கள்: வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும் நடந்து  செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும் சிறிய கூட்டம் பெருங்கூட்டத்திற்கும் ஸலாம் சொல்ல வேண்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) புகாரி, முஸ்லிம்

அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் நீ ஸலாம் சொல் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லஹ் பின் அம்ர்(ரலி), நூல்: புகரி, முஸ்லிம்

2. அவர் தும்மி அல்ஹம்துலில்லஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறினால் யர்ஹமுகல்லஹ் (அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக) என்று இவர் கூற வேண்டும். அதற்குப் பதிலாக அவர் யஹ்தீகு முல்லாஹ் வயுஸ்லிஹு பாலகும் (அல்லாஹ் உனக்கு நேர்வழி காட்டுவானாக! உனது நிலையைச் சீர்படுத்துவானாக!) என்று கூற வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்களில் யாரேனும் தும்மி அல்ஹம்து லில்லாஹ் எனக் கூறினால் மற்ற சகோதரர் யார்ஹமுகல்லாஹ் எனக் கூறட்டும். அவர் யார்ஹமுகல்லாஹ் எனக் கூறினால் தும்மியவர் அவருக்காக யஹ்தீகு முல்லஹ் வயுஸ்லிஹு பாலகும் என்று கூறட்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி

நபி(ஸல்) அவர்கள் தும்மினால் தமது கையை அல்லது ஆடையை வாயில் வைத்து சப்தத்தைத் தாழ்த்திக் கொள்வார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்: அபூதாவூத்

3. அவர் நோயுற்றால் அவரை நோய் விசாரிக்கச் சென்று அவர் குணமடைய துஆச் செய்ய வேண்டும்.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு ஐந்து விஷயங்களில் கடமைப்பட்டிருக்கிறான். அவை, ஸலாமுக்கு பதில் சொல்வது, நோய் விசாரிப்பது, ஜனாஸாவில் பங்கேற்பது, விருந்தழைப்பை ஏற்பது, அவர் தும்மி அல்ஹம்து லில்லாஹ் எனக் கூறினால் யர்ஹமுல்லாஹ் எனக் கூறுவது ஆகியவையாகும். (நபிமொழி) புகாரி, முஸ்லிம்

4. அவர் இறந்துவிட்டால் அவரது ஜனாஸாவில் கலந்து கொள்ள வேண்டும்.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு ஐந்து விஷயங்களில் கடமைப்பட்டிருக்கின்றான். அவை, ஸலாமிற்கு பதில் சொல்வது, நோய் விசாரிப்பது, ஜனாஸாவில் கலந்து கொள்வது விருந்தழைப்பை ஏற்பது, தும்மி அல்ஹம்துலில்லாஹ் எனக் கூறினால் யர்ஹமுகல்லாஹ் என்று கூறுவது ஆகியவையாகும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்

5. அவர் ஒரு விஷயத்தில் சத்தியம் செய்தால் அதை நிறை வேற்றுவதற்கு உதவ வேண்டும். சத்தியதை அவர் முறித்து விடாமல் இருப்பதற்காக.

நோயாளியை நோய் விசாரித்தால், ஜனாஸாவில் கலந்து கொள்ளுதல், தும்மியவருக்கு பதில் கூறல், சத்தியம் செய்தவருக்கு அதை நிறைவேற்ற உதவுதல், அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவுதல், விருந்தழைப்பை ஏற்றுக் கொள்லுதல், சலாமிற்குப் பதில் கூறல் ஆகியவற்றை நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏவியுள்ளார்கள் என பர்ராவு பின் ஆஸிஃப்(ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி, முஸ்லிம்

6. ஒரு பொருளில் அல்லது ஒரு காரியத்தில் அறிவுரை வழங்குமாறு கோரினால் அவருக்கு அறிவுரை வழங்க வேண்டும். அதாவது அவ்விஷயத்தில் எது சரியாகவும் நன்மை பயப்பதாகவும் இருப்பதாக தான் கருதுகின்றானோ அதை அவருக்குத் தெளிவுபடுத்த வேண்டும். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தன் சகோதரரிடம் அறிவுரை கேட்டால் அவருக்கு அறிவுரை வழங்கட்டும். (புகாரி)

7. தனக்கு விரும்புவதையே அவருக்கும் விரும்ப வேண்டும். அதுபோல தனக்கு விரும்பாததை அவருக்கும் விரும்பக்கூடாது.

தான் விரும்புவதையே தன் சகோதரனுக்கும் விரும்பாதவரை உங்களில் யாரும் முஃமினாக முடியாது என நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) புகாரி,முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: கட்டடங்களில் ஒரு பகுதி இன்னொரு பகுதியை இறுக்கிப் பிடித்து உதவியாக இருப்பதுபோல ஒரு முஃமின் பிற முஃமினுக்கு உதவியாக இருப்பான். அறிவிப்பவர்: அபூமுஸா(ரலி), புகாரி, முஸ்லிம்

8. அவருக்கு உதவி செய்ய வேண்டும். அவருக்கு உதவி, ஒததாசை தேவைப்படக்கூடிய எந்த இடத்திலும் நிராதரவாக அவரை விட்டுவிடக் கூடாது.

உனது சகோதரன் அநியாயம் செய்பவனாக இருந்தாலும் அநீதியிழைக்கப்பட்டவனாக இருந்தாலும் அவனுக்கு நீ உதவி செய் என நபி(ஸல்) கூறியபோது ஒரு மனிதர், ‘அல்லாஹ்வின் தூதரே! அநீதியிழைக்கப்பட்டவனுக்கு உதவி செய்யலாம். அநியாயம் செய்பவனுக்கு எப்படி உதவுவது?’ என்று கேட்டார். அதற்கவர்கள், ‘அநியாயம் செய்வதிலிருந்து அவனைத் தடுக்க வேண்டும். அதுவே நீ அவனுக்கு உதவுவதாகும்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

தன் சகோதர முஸ்லிமுடைய மானமரியாதையை யார் காப்பாற்றுகின்றாரோ மறுமையில் அவருடைய முகத்தை அல்லாஹ் நரகிலிருந்து காப்பாற்றுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்தா(ரலி)நூல்: அஹ்மத், திர்மிதி

9. அவருக்கு ஏதேனும் தீங்கிழைப்பதோ துன்பம் கொடுப்பதோ கூடாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமுடைய இரத்தம், பொருள், மானம், மரியாதை ஆகிய அனைத்தும் பிற முஸ்லிமின் மீது ஹாராமாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்:முஸ்லிம்.

எந்த முஸ்லிமும் பிற முஸ்லிமைப் பயமுறுத்தக் கூடாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா(ரலி), நூல்: அபூதாவூத், அஹ்மத்

எவருடைய நாவை விட்டும் கரத்தை விட்டும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்களோ அவரே உண்மையான முஸ்லிம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்

10. அவரிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அவரிடம் பெருமை அடிக்கக் கூடாது. மார்க்கம் அனுமதிக்கின்ற சபையில் அவரை எழுப்பி விட்டு அவருடைய இடத்தில் அமரவும் கூடாது.

அல்லாஹ் கூறுகிறான்: மக்களை விட்டும் உன் முகத்தை (பெருமையோடு) திருப்பாதே! பூமியில் செருக்காய் நடக்காதே! அகந்தையும் ஆணவமும் கொண்ட எவனையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.(31:18)

அல்லாஹ்வுக்காக பணிவை மேற்கொள்ளக்கூடிய அடியாரை அல்லாஹ் உயர்த்தாமலில்லை என நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), முஸ்லிம், திர்மிதி

அதுபோல நபி(ஸல்) அவர்கள் அவனைவரிடமும் பணிவுடன் நடந்து கொள்வார்கள். விதவைகள் மற்றும் ஏழைகளுடன் சென்று அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதைக் குறையாக எண்ணி கர்வம் கொள்ள மாட்டார்கள். ‘உங்களில் ஒருவர் மற்றவரை அவருடைய இடத்தை விட்டும் அகற்றிவிட்டு அவ்விடத்தில் அமர வேண்டாம். மாறாக விசாலமாக இருங்கள்’ எனவும் நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னுஉமர்(ரலி), முஸ்லிம்.

11. மூன்று நாட்களுக்கு மேல் அவரை வெறுக்கக் கூடாது. நபி(ஸல்) கூறினார்கள்: ஒரு முஸ்லிம் தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுக்கக் கூடாது. இருவரும் சந்தித்தால் ஒருவரை ஒருவர் புறக்கணித்துச் செல்லக்கூடாது. அவர்களில் முதலில் ஸலாம் சொல்பவரே சிறந்தவர். அறிவிப்பவர்: அபூஅய்யூப்(ரலி), புகாரி,முஸ்லிம்

…நீங்கள் ஒருவரையொருவர் வெறுத்துச் செல்லாதீர்கள் அல்லாஹ்வின் அடியார்களாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்களாக இருங்கள் என நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரரா(ரலி), -முஸ்லிம்

12. அவரைப் பற்றி புறம் பேசுவது, இழிவாகக் கருதுவது, குறை கூறுவது, அவரைக் கேலி செய்வது, மோசமான பட்டப்பெயர் சூட்டி அழைப்பது, கோள் சொல்வது ஆகிய அனைத்தும் கூடாது.

அல்லாஹ் கூறுகிறான்: உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்து விட்ட தன் சகோதரனின் இறச்சியை உண்ண விரும்புவாரா என்ன? நீங்களே அதை வெறுப்பீர்கள்.(49:12)

‘ஈமான் கொண்டவர்களே! எந்த ஆண்களும் மற்ற எந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒரு வேளை அவர்கள் இவர்களை விடச் சிறந்தவர்களாக இருக்கலாம். எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் பரிகாசம் செய்யவேண்டாம். ஒரு வேளை இவர்கள் அவர்களை விடச் சிறந்தவர்களாக இருக்கலாம். நீங்கள் ஒருவரையொருவர் குத்திப் பேசாதீர்கள். ஒருவருக்கொருவர் மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள். இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமான பெயர்களைச் சூட்டுவது மிகவும் கெட்ட விஷயமாகும். எவர்கள் இந்த நடத்தையைக் கைவிடவில்லையோ அவர்கள்தாம் கொடுமைக்காரர்கள். (49:11)

புறம்பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? என நபி(ஸல்) அவர்கள் கேட்டதும் ‘அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிந்தவர்கள்’ என நபித்தோழர்கள் கூறினர். உடனே நபி(ஸல்)அவர்கள் (புறம் பேசுதல் என்பது) ‘உன் சகோதரனைப் பற்றி அவன்  விரும்பாததை நீ கூறுவதாகும்’ என்று கூறினார்கள். அப்போது நான் கூறும் விஷயம் என் சகோதரனிடததில் இருந்தாலுமா? என்று கேட்கப்பட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், நீ கூறும் விஷயம் உன் சகோதரனிடத்தில் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசி விட்டாய்! நீ கூறும் விஷயம் உன் சகோதரனிடத்தில் இல்லையென்றால் நீ அவனைப் பற்றி அவதூறு கூறிவிட்டாய் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்:முஸ்லிம்.

கோள் சொல்லித் திரிபவன் சுவர்க்கத்தில் நுழையமாட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா(ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்.

அவரைத் திட்டக் கூடாது. அவன் இறந்த பிறகும் சரியே. நபி(ஸல்) கூறினார்கள்: ஒரு முஸ்லிமைத் திட்டுவது பாவமாகும். அவனைக் கொலை செய்வதோ இறை நிராகரிப்பாகும். அறிவிப்பவர்: இப்னு முஸ்வூத்(ரலி) புகாரி, முஸ்லிம்.

இறந்தவர்களை திட்டாதீர்கள். ஏனெனில் அவர்கள் செய்ததற்கான கூலியை அடைந்து விட்டார்கள் (நபிமொழி) அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), புகாரி, முஸ்லிம்

14. அவர் மீது பொறாமைப்படுவது, குரோதம் கொள்வது, அவரைப் பற்றி தவறாக எண்ணுவது, துருவி துருவி ஆராய்வது ஆகியவை கூடாது.

அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கை கொண்டவர்களே! அதிகமாக சந்தேகம் கொள்வதைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன. மேலும் (பிறரைத்) துருவித்துருவி ஆராயாதீர்கள். (49:12)

15. அவரை ஏமாற்றுவோ அவருக்கு துரோகம் செய்வதோ கூடாது. அவரைப் பொய்ப்படுத்தவும் கூடாது.

அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு (அவர்கள் குற்றம் புரியாதிருக்கவே எவர்கள் துன்பம் அளிக்கின்றார்களோ அவர்கள் ஒரு மாபெரும் அவதூரையும் வெளிப்படையான பாவத்தின் விளைவையும் தம்மீது சுமந்து கொள்கிறார்கள். (33:58)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு பண்புகள் எவனிடத்தில் இருக்கின்றனவோ அவன் வடிகட்டிய நயவஞ்சகனாவான். எவனிடத்தில் அந்த நான்கு பண்புகளில் ஏதேனும் ஒரு பண்பு இருக்கின்றதோ அவன் அதைக் கைவிடாதவரை நயவஞ்சகத்தினுடைய ஒரு பண்பு அவனிடத்தில் இருந்து கொண்டே இருக்கும்.(அவை வருமாறு) அவனை நம்பினால் துரோகம் செய்வான். பேசினால் பொய்யுரைப்பான், ஒப்பந்தம் செய்தால் அதற்கு மோசடி செய்வான், விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்.

16. அவரிடம் அழகிய முறையில் நடந்துகொள்ள வேண்டும். அதாவது அவருக்கு நன்மை செய்ய வேண்டும். தீமைசெய்யக் கூடாது. மலர்ந்த முகத்துடன் அவரைச் சந்திக்க வேண்டும். அவர் செயயும் நல்லுபகாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவருடைய தவறுகளை மன்னிக்க வேண்டும். அவரால் முடியாத காரியங்களைச் செய்யும்படி ஏவக்கூடாது

நபி(ஸல்) அவர்கள் கூறினாகள்: நீ எங்கிருந்த போதிலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள். தீமை செய்தால் தொடர்ந்து நன்மை செய்துவிடு. அது அத்தீமையைத் துடைத்துவிடும். மக்களிடம் நல்லமுறையில் நடந்து கொள். அறிவிப்பவர்: அபூதர்(ரலி), நூல்: திர்மிதி, ஹாகிம்.

17. அவர் தன்னை விட மூத்தவனாக இருந்தால் அவரிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். சிறியவராக இருந்தால் அன்புடன் நடந்து கொள்ள்வேண்டும்.

பெரியவர்களை மதிக்காதவர்களும் சிறியவர்களுக்கு இரக்கம் காட்டாதவர்களும் நம்மைச் சார்ந்தவர்களல்ல என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: அபூதாவூத், திர்மிதி

நூல்: முஸ்லிமின் வழிமுறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *